ஜெ,
இன்றைய நீலம் 35 உணர்வுகளின் இன்னொரு உச்சம். ஊடலின் அந்த உச்சத்தில் இருந்து வேண்டுமென்றே கீழே கொண்டுவந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தூக்குகிறீர்கள். காலையில் வந்து எழுப்புகிறது அந்த நீலப்பறவை. ராதையும் கிருஷ்ணனுமாக ஆன பறவை [கீழே பொன்னிறம், மேலே நீலம்] அதுவரை அவள் நீலநிறமான யமுனையில் ஆடையில்லாமல் ஆடிக்கொண்டிருந்த கனவில் இருந்தாள் என்ற இடம் மிகச்சரியான தொடக்கம்.
இளந்ததளிர்மேல் விழுந்த இடிமழை இந்நாள். நிறைந்த சிமிழ்மீது பொழியும் பேரருவி போல மனசு நிறைந்து வழியும் நாள்.
அப்படியே பறவைகள் வழியாக செல்கிறது அநநாள். இனி அவளுக்கு எல்லைதாண்டிபோவது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை
நீ சொல்லும்போது மட்டும் என் பெயருக்கு சிறகு முளைப்பதேன்? நீ நோக்கும் இடத்தில் என் தோல்சிலிர்ப்பதேன்? உன் விழி தொட்ட இடத்தை என் விரல் சென்று தொடும் விந்தைதான் என்ன? உடலே ஒரு விழியாக உனைப்பார்க்கிறேன்
-என்னும் வரிகலில் உள்ள பெண்ணைப்பற்றிய observation அற்புதம். அதிலும் விழிதொடும் இடங்களில் அவள் கை சென்று தொடுவதை எத்தனை முறை பார்த்திருப்போம் இல்லையா?
வெள்ளை யானையின் துதிக்கை அவன் இடையை வளைக்கும் இடம். நுனிக்காலில் நின்று அவள் படரும் இடம். நீலத்தோளில் அமர்ந்து அங்கே சிவந்த சிறகுத்தடம் விட்டுச்செல்லும் பட்டாம்பூச்சி. அசையாத நிழலாக அதைக்கண்டு திகைப்பது. அசையும் நிழலைக் கண்டு அதில் அமர்வது. குங்குமம் அணிந்தது குங்குமம். அந்த புறாக்களை வெண்புறா என்று சொல்லியிருக்கலாமே ஏன் மணிப்புறா? அதன்பிறகுதான் மணிப்புறாவின் கழுத்தின் நிறத்தை நினைத்துக்கொண்டேன். அழகு.
கவனமில்லாமல் போட்டுச்செல்லும் [செல்வதுபோன்ற] வரிகளில் தான் உச்சமே நிகழ்ந்திருக்கிறது. முலைதவழ்ந்த முத்தாரம் முத்தமிட்டு நீக்கினான்.மேகலை அகற்றிய மெல்விரல் தீண்டி பொன்புனல் சுனையொன்று புதுச்சுழி கண்டது.
திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டிருக்கையிலே ஒன்று தோன்றியது. இரண்டு விஷயங்களை எழுதுவதுதான் இலக்கியத்துக்கே சவால். ஒன்று சாவு இன்னொன்று காமம். இரண்டுமே யதார்த்தங்கள். அதை கனவாக ஆக்குவதற்குத்தான் இலக்கியம். இரண்டுக்கும் பெரிய அர்த்தமெல்லாம் இல்லை. எல்லா அர்த்தங்களுக்கும் அதை குறியீடாக ஆக்குவதற்குத்தான் காமம். காமம் ஒருவகையான சாவுதான். கிளாஸிக்குகள் இந்த இரண்டு விஷயங்களையும்தான் பேசுகின்றன. காமம் வீரம். வேறு ஒன்றுமே முக்கியம் கிடையாது
சண்முகம்
அன்புள்ள சண்முகம்
உங்கள் பூனை வழக்கம்போல கடைசியில் நாலுகாலில் ஓஷோமேல் போய் விழுந்துவிட்டது ))). வாழ்த்துக்கள்
ஜெ
ஜெ
இன்றைய நீலம் 35 ஸ்வாதீனஃபர்த்ருகை. கூடலும் கூடல் நிமித்தமும் கொண்ட குறிஞ்சி நிலம். நேற்று வந்த அத்தியாயங்களை வைத்து இதை ஓர் அதீத நிலையிலே கொஞ்சம் எதிர்பார்த்திருந்தேன் )). ஆனால் கவித்துவமாக மிள எளிமையாக அதை தாண்டிச்சென்றுவிட்டீர்கள்
கண்ணனை மொய்த்து முத்தமிடும் அந்த சிவந்த பட்டாம்பூச்சியும், சிவந்த அலகுகள் கொண்ட இரு வெள்ளைப்புறாக்களும், மென்மையான அன்னத்தூவியும் எல்லாம் கிளாஸ். கற்பனையில் விரியும் குறிஞ்சி மிக அழகானது.
ண்ணச் சிறகசைத்துச் சொல்லும் ஒரு சொல் வானிலேற்றி நிறுத்தும் வகை அறிந்தது. அந்த வண்ணத்துப்பூச்சி இல்லையா? அஞ்சி அலகுபுதைத்த அணித்தூவல் புறாக்கள் அவன் கன்னக்கதுப்பில் அலகு தீட்டுவது அழகு. இந்த இடத்தை மட்டும் பலமுறை மீண்டும் மீண்டும் வாசித்தேன்
ஆனால் இங்கிருந்து திடீரென்று வேறெங்கோ செல்லத்தொடங்கியது நீலம். தெய்வம் வந்து ஒரு பெண்ணை தெய்வமாக்குகிறது. பதினாறு வகை பணிவிடைகள். 1 இருக்கை கொடுத்தல், 2 கை கால்கழுவுதல் 3 நீர்தருதல், 4 குடிநீர் அளித்தல், 5 நீராட்டுதல், 6 ஆடைசார்த்துதல்,7 முப்புரி நூல் அளித்தல், 8 சந்தனம் பூசுதல், 9 மலர்சார்த்துதல்,10 அட்சதை தூவுதல், 11 தூபம் காட்டுதல், 12 தீபம் காட்டுதல், 13 குங்கிலியம் ஏற்றுதல், 14தாம்பூலம் அளித்தல், 15 அமுதப்படையல்,16 மந்திர அர்ச்சனை . ஒவ்வொன்றாய் செய்து கண்னன் அவளை பீடத்தில் தெய்வமாக நிறுத்துகிறான்
ராதை கண்ணனுக்கு அருள் செய்கிறாள். அற்புதம். ராதா ராணியை புஷ்டிமார்க்கிகள் திருவின் வடிவமாகவே வழிபடுகிறார்கள். கொட்டிக்கொட்டி குளவியாக்கிய கதைதான்
சுவாமி
அன்புள்ள ஜெ,
பதினாறு உபச்சாரங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். அதிகாலையின் அம்மன் போல ‘நிர்மால்யம்’ கொள்ளச்செய்வதில் தொடங்குகிறது. விழிசுடர்ந்து கை அருளி அவள் நிற்கும் இடம் வரை தெய்வத்தின் முன் அவன் அர்ச்சகன். அதன்பின் தலை எடுத்து தாம்பூலத்தில் வைக்கிறான். அமுதப்படையல் அவனே தான். அதன்பின் தாம்பூலம் என்பது அவனும் தெய்வமாக அவளுக்கு சமானமாக நின்று அளிப்பது. செவியில் விண் ஏற்றும் மந்திரம் சொல்கிறான்.
நம்முடைய நீண்ட மரபில் இருந்து வரும் இந்த உணர்வுநிலையை ஒருவகை divine erotica என்றுதான் சொல்லவேண்டும்
கருணாகரன்