குருவின் தனிமை

dronacharya_by_saryth-1ஜெ,

வண்ணக்கடல் விட்ட அத்தியாயங்களை எல்லாம் சேர்த்து இப்போதுதான் வாசித்து முடித்தேன். புத்தகமாக வாசித்தாகவேண்டும் என்றும் தோன்றியது. ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஏராளமான உள்ளோட்டங்கள் தெளிவடைகின்றன

இதில் எனக்குள்ள ஒரு பார்வை என்னவென்றால் இந்நாவலின் மையமே துரோணர்தான் . ஒரு பண்பாட்டின் ஆன்மாவே குருநாதர்தான். அவர் corrupt ஆகிவிட்டால் அது அங்கிருந்து எல்லா கேடுகளுக்கும் கொண்டுசெல்கிறது. கர்ணன் ஏகலைவன் எல்லாருடைய வன்மத்துக்கும் காரணம் அவர்தான்

ஆனால் அவரது குருவான பரத்வாஜர்தான் இன்னும் ஆதிகாரணம். இப்படியே யோசித்துக்கொண்டு போனால் விதை எங்கேயோ ஒளிந்து கிடப்பது போலிருக்கிறது

பாலசுப்ரமணியம்

அன்புள்ள பாலா,

இது வண்ணக்கடலுக்கு நான் எழுதிய பின்னட்டை வாசகம்:

வண்ணக்கடல் மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவதுபோல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் செல்கின்றன.

இந்த பெருநாடகத்தின் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலைவன். நால்வருமே அவர்களை மீறிய வாழ்க்கையின் விசைகளால் பழிவாங்கப்பட்டவர்கள். அந்த ஆறா ரணத்தை ஆன்மாவில் ஏந்தியவர்கள். அவ்வகையில் இந்நாவல் ஒன்றோடொன்று பிணைந்து பெருகிச்செல்லும் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத திசையை சித்தரிக்கிறது

இன்னொருசரடாக இதில் ஓடுவது அந்த வாழ்க்கைப்பெருக்கைப்பற்றிய இந்திய ஞானமரபின் தரிசனங்கள் என்னென்ன என்ற வினா. இந்தியாவின் பெருநிலம் வழியாகச் செல்லும் இளநாகன் அந்தக் கேள்விகள் வழியாகச் சென்று இன்னொரு புள்ளியைச் சென்றடைகிறான்

வாழ்க்கையும் தத்துவஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒன்றுக்கு ஒன்று அர்த்தம் கொடுத்து செல்லும் சித்திரத்தை அளிக்கும் நாவல் இது

சுருக்கமாக நாவலை இப்படித் தொகுத்துக்கொள்ளலாம்

ஜெ

வெண்முரசு விவாதங்கள்

வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36
அடுத்த கட்டுரைமகாபாரதம் கேள்விகள்