பெரிதினும் பெரிது

abhimanyu

மறைந்த மலையாள திரைக்கதை ஆசிரியர் லோகிததாஸ் எனக்கு அண்ணனின் இடத்தில் இருந்தவர். பெரும்புகழ்பெற்ற அவரது சினிமாக்கள் மீதெல்லாம் யாரேனும் அது தன் கதை என்று சொல்லி வழக்கு தொடுப்பதுண்டு. சமரசத்துக்கு வந்தால் பைசா கேட்கலாமே என்ற எண்ணம்தான். அப்படி ஒரு வழக்கு பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெற்றது. லோகிததாஸிடம் நீதிபதி கேட்டார் ‘இந்தக் கதை உங்களுடையதா?’

லோகிததாஸ் சொன்னார் ‘இல்லை’

நீதிமன்றத்தில் அதிர்ச்சி. ‘அப்படியென்றால் யாருடைய கதை?’ என்றார் நீதிபதி

லோகிததாஸ் சொன்னார் ‘வியாசனின் கதை. நான் மகாபாரதத்தில் எடுத்து விரிவாக்கினேன்’

அந்த மகாபாரதக் கதையை லோகிததாஸ் சொன்னார். ஆர்வமடைந்த நீதிபதி கேட்டார் ’அப்படியென்றால் இதற்கு முன்னர் வந்த உங்கள் கதை? அது அசலா?’

லோகிததாஸ் சொன்னார் ‘இல்லை அதுவும் மகாபாரதம்தான். நானெழுதிய எல்லாக்கதைகளும் மகாபாரதக்கதைகள்தான்’ வழக்கு தள்ளுபடி ஆகியது

சிரித்துக்கொண்டு லோகிததாஸ் என்னிடம் சொனனர் ‘வியாஸோச்சிஷ்டம் ஜகத்சர்வம்’!’ வியாசனின் எச்சில்தான் இவ்வுலகில் இதுவரை சொல்லப்பட்ட மனிதகதைகள் அனைத்தும் என்று அதற்குப்பொருள். ‘இதுவரை எழுதப்பட்ட எந்த சினிமாவின் கதையை வேண்டுமானாலும் சொல்லுங்கள். அல்லது நாவலின் கதை சொல்லுங்கள். மூலக்கதையை மகாபாரதத்தில் இருந்துஎடுத்துக்காட்டுகிறேன்’ என்றார் லோகிததாஸ்

லோகிததாஸ்
லோகிததாஸ்

வியாசமகாபாரதத்தில் இல்லாதது இல்லை. உலக அளவில்கூட வியாசபாரதத்தின் அளவுக்கு விரிவும் ஆழமும் கூடிய ஒரு பெருங்காப்பியம் வேறேதும் கிடையாது. அதில் மனிதவாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களும் ஏதோ ஒருவகையில் சொல்லப்பட்டிருக்கும். தத்துவம்,அரசியல், நீதி,கலைகள் என எல்லாமே அதில் உண்டு. இந்து ஞானத்தின் கலைக்களஞ்சியம் அது.

எப்போது தமிழகப் பண்பாடு ஆரம்பிக்கிறதோ அப்போதே இங்கே மகாபாரதம் அனைவரும் அறிந்த கதையாக இருந்திருக்கிறது. புறநாநூறில் மகாபாரதம் பற்றிய குறிப்பு வருகிறது. சங்கப்பாடல்களுக்கு பாயிரம் எழுதிய புலவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்று அழைக்கப்பட்டார். அவர் எழுதிய பாரதம் இன்று கிடைக்கவில்லை. சின்னமனூர் செப்பேடு பாண்டியர்கள் மதுராபுரிச் சங்கம் வைத்து மகாபாரதத்தை தமிழ்ப்படுத்தியதாகச் சொல்கிறது. அதுவும் கிடைப்பதில்லை. முழுமையாகக் கிடைப்பவை பதிநான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வில்லிப்புத்தூராரின் வில்லிபாரதமும் பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும்தான்.

ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து என்ற சுருக்கமான அறிமுகம்தான் தமிழில் அதிகம்பேர் வாசித்த மகாபாரதமாக இருக்கிறது. அ.லெ.நடராஜன் நான்குபாகங்களாக எழுதிய ‘வியாசா அருளிய மகாபாரதம்’ இன்று கிடைப்பதில்லை. இவை எல்லாமே முழுமையான மகாபாரதங்கள் அல்ல. ம. வீ. இராமானுஜச்சாரியார் தலைமையில் 1903 முதல் 1931 வரை தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு 9000 பக்கங்களில் வெளியிடப்பட்ட மகாபாரதம்தான் முழுமையானது.பழைமையான சம்ஸ்கிருதக் கலப்பு நடையில் உள்ள இந்நூலை அதிகம்பேர் வாசிக்கமுடியாது.

உண்மையில் மகாபாரதம் தமிழில் எவராலும் வாசிக்காத நூலாகவே இன்று உள்ளது என்றால் அது மிகையல்ல. ராஜாஜியின் வியாசர் விருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் புழங்கிய நூல். கும்பகோணம் மகாபாரதம் 1950க்குப்பின் 2008ல்தான் மறுபதிப்பு வந்தது. வெறும் 200 பிரதிகள் அச்சிடப்பட்டன. தமிழக மக்கள் மகாபாரதத்தை பெரும்பாலும் மறந்தே போனார்கள். பி.ஆர். சோப்ராவின் மகாபாரதத் தொலைக்காட்சித் தொடர்தான் தமிழர்களுக்கு மகாபாரதத்தை மீட்டுக்கொடுத்தது.

கேரளத்தில் கொடுங்கல்லூர் குஞ்சுகுட்டன் தம்புரான்,வித்வான் பிரகாசம் ஆகியோர் மொழியாக்கம் செய்த மகாபாரதங்கள் முழுமையானவை. அவை ஏராளமான பதிப்புகள் கண்டுள்ளன. அங்கே அவற்றை வாசிக்காத நல்ல இலக்கிய வாசகர்களோ பண்பாட்டு ஆய்வாளர்களோ குறைவு. இந்தியாவின் பிறமொழிகளிலும் இதுதான் நிலைமை.

மகாபாரதத்தை இந்துமதம் சார்ந்தோ, பக்தி நோக்கிலோ வாசிக்கவேண்டிய அவசியம் இல்லை. அதை ஓர் உலக இலக்கியமாக வாசிக்கலாம். தத்துவநூலாகவும் பண்பாட்டுநூலாகவும் வாசிக்கலாம். அதை வெறும் பக்திநூலாக மட்டுமே முன்வைத்த புராணச் சொற்பொழிவாளர்கள் அதை குறுக்கினார்கள். அந்த மாபெரும் நூலை வெறும் மூடநம்பிக்கைத் தொகுதி என்றும் ஆரியச்சதி நூல் என்றும் வாசிக்காமலேயே முத்திரை குத்திய நாத்திகர்கள் அதைமேலும் குறுக்கினார்கள்.

மகாபாரதத்தை பெரும் பண்பாட்டு ஆவணமாகவே நாம் காணவேண்டும். அதில் ஆதிக்கசாதியினரின் கதைகள் மட்டும் சொல்லப்படவில்லை. அத்தனை அடித்தளமக்களின் கதைகளும் அதில் உண்டு. அம்பேத்கர் அவர்கள் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இ.எம்.எஸ் போன்ற மார்க்ஸிய அறிஞர்கள் அதை ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள்.

விளைவாக மகாபாரதம் நமக்கு அன்னியமாகியது. அதன் இழப்பு நமக்கே. இந்தியாவின் மாபெரும் பண்பாட்டுக் களஞ்சியம் நமக்கு இல்லாமல் போயிற்று. முன்னோர் சேர்த்து வைத்த செல்வத்தை இழந்தோம்.

சென்ற முக்கால்நூற்றாண்டுக்காலம் இங்கே நிகழ்ந்த முதிர்ச்சியற்ற நாத்திகப்பிரச்சாரத்தின் விளைவு இது. அந்தப்பிரச்சாரம் செய்தவர்களில் ஈ.வே.ராமசாமி சி.என் அண்ணாத்துரை உட்பட எவருமே அம்பேத்கர் போலவோ ஈ.எம்.எஸ் போலவோ ஆழமாக படித்தவர்கள் அல்ல. எழுத்தாளர்களோ சிந்தனையாளர்களோ அல்ல. சும்மா செவிவழிச்செய்தியைக்கொண்டு பேசிய பேச்சாளர்கள அவர்கள்.அந்தப் பிரச்சாரத்தின் விளைவாக நாம் நம் பண்பாட்டை இகழக் கற்றோம். வேறெந்த நவீனப்பண்பாட்டையும் கற்றுக்கொள்ளவும் இல்லை.

வியாசர்
வியாசர்

இந்துமதத்திற்கு மூன்று அடிப்படைக் கட்டுமானங்கள் உண்டு. ஒன்று அதன் தத்துவ ஞானம். இரண்டு அதன் பக்திமனநிலை. மூன்று அதன் சடங்குசம்பிரதாயங்கள். நாத்திகப்பிரச்சாரம் காரணமாக இந்துமதத்தின் மகத்தான தத்துவமரபை நாம் முழுக்கவே கைவிட்டோம். உலகம் முழுக்க சிந்தனையாளர்களால் கற்கப்படும் அந்த ஞானமரபுக்கு தமிழகத்தில் இடமில்லாதநிலை வந்தது. உள்ளார்ந்த பக்தி நம்மிடமிருந்து விலகியது

எஞ்சியது வெறும் சடங்குகள். சடங்குகள் என்பவை வருமானம் வரும் தொழில் என்பதனால் அவை அப்படியே நீடித்தன. அவற்றை எவரும் அழியவிடவில்லை.மக்கள் தங்கள் வாழ்க்கையின் துன்பங்கள் இருக்கும் வரை மதத்தையும் கடவுளையும் கை விட மாட்டார்கள். தமிழகத்தில் அரைசதவீதம் நாத்திகர்கள் இருந்தாலே அதிசயம். துன்பம் வரும்போது மதம் நோக்கித்தான் செல்வார்கள். தமிழர்களுக்கு மதம் என்று இன்று இருப்பது வெறும் சடங்குகள்தான்

சென்ற அரைநூற்றாண்டில் இங்கே இந்துமதம் என்பது சோதிடம் -பரிகாரம்-சடங்குகள் என்றுமட்டுமே ஆகிவிட்டிருப்பதற்குக் காரணம் இதுதான். அதாவது நாத்திகவாதம் கடவுள்நம்பிக்கையை அழிக்கவில்லை. மதநம்பிக்கையை குறைக்கவில்லை. ஞானத்தையும் தத்துவத்தையும் பக்தியையும் மட்டும் அழித்தது

இந்து ஞான மரபை சரியாக ஒரே நூலில் கொண்டு வர மகாபாரதம்தான் ஒரே வழி என்று எண்ணி மொத்த மகாபாரதத்தையும் ஒரே நூலாக நான் எழுதத் தொடங்கினேன். வெண்முரசு என்ற பொதுத்தலைப்பில் 30 பெரியநாவல்கள். 25000 பக்கம் வரும். எழுதி முடித்தால் உலகிலேயே பெரிய நூல்வரிசை இதுதான். இன்றைய வாசகனுக்கு உரிய நடை. அதில் இந்துஞான மரபின் அத்தனை புராணங்களும் அத்தனை தத்துவங்களும் வரும். இப்போது ‘முதற்கனல் ‘மழைப்பாடல்’ ‘வண்ணக்கடல்’ ;நீலம்‘ என்று நான்கு நாவல்கள் வெளிவந்துவிட்டன.

அதை எழுதத்திட்டமிட்டபோது நான் மதிக்கும் ஓர் ஆன்மீகப்பெரியவர் சொன்னார். ‘எளிமையா எழுதச்சொல்லி எல்லாரும் கேப்பாங்க. எளிமையா எழுதினா வெறும் கதைதான் சொல்லமுடியும். தத்துவமும் மெய்ஞானமும் இருக்காது. அதையெல்லாம் எழுதினா தமிழன் வாசிக்கமாட்டான். புரியலை புரியலைன்னு சொல்லிட்டே இருப்பான். என்ன செய்யப்போறே?’

நான் சொன்னேன். ‘மூன்று தலைமுறையா நடக்காம உக்காந்திட்டிருக்கிற ஜனங்க நாம. இப்ப வாசலுக்குப் போகவே வண்டி தேவைப்படுது. ஆனா அதுக்காக வண்டியிலேயே அவங்கள போகச்சொல்லமுடியுமா? தமிழில இதெல்லாம் வந்தாகணுமே. முடிஞ்சவரைக்கும் எழுதறேன். தத்துவமும் மெய்ஞானமும் கொஞ்சம் உழைக்காமல் வராது. மலையாளியும் கன்னடனும் உழைக்கிறதை விட நாம ரெண்டுமடங்கு உழைச்சாகணும். ஏன்னா நமக்கு பழக்கம் விட்டுப்போச்சு. ஆனா அதுக்கும் கொஞ்சபேரு இருப்பாங்க’

வழக்கம்போலவே ‘எளிமையா எழுதலாமே? எளிமையாச் சொல்றவன்தான் அறிவாளி’ என்றும் ‘நூறு பக்கத்தில எழுதமுடியாத ஆயிரம் பக்கத்தில உபதேசங்கள். ’மூல வியாசபாரதம் எளிமையானது கெடையாது. அது பத்தாயிரம் பக்கம். வியாசன் என்ன மூடனா?’ என்று பதில் சொன்னேன். ‘இந்தக்காலம் அவசர யுகம்ல?’ என்றனர். ‘தினம் ஒருமணிநேரம் மெகாசீரியல் பாக்கிறவங்க ரெண்டுகோடிபேர் இங்க இருக்காங்க’ என்று பதில் சொன்னேன்

என் இணையதளத்தில் ஐம்பதாயிரம்பேர் இதை இப்போது வாசிக்கிறார்கள். தமிழகத்தில் இது பெரிய எண்ணிக்கைதான். ஆனால் ஒட்டுமொத்தமாகச் சிறிய எண்ணிக்கையும் கூட. சிறுதுளிப்பெருவெள்ளம். ஐம்பதாண்டுக்காலம் பின்னால் இருந்து ஓட ஆரம்பிக்கவேண்டும். நம் அப்பா அம்மாக்கள் மறந்ததையும் சேர்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்

அடிக்கடி சோர்வு வரும். அப்படிப்பட்ட ஒருநாளில் ஒரு கடிதம். கிறிஸ்டோபர் என்ற நண்பர் அமெரிக்காவிலிருந்து ஒரு நுட்பமான பிழையைச் சுட்டிக்காட்டியிருந்தார். உடனே திருத்திக்கொண்டேன். ‘மகாபாரதம் எப்படித் தெரியும்?’ என்றுகேட்டேன். தீவிரக் கத்தோலிக்கரான அவரது அப்பா கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது மகாபாரதக்கதையை மாசக்கணக்கில் சொன்னார் என்றார். நான் நம்பிக்கை கொண்டேன். வியாசரும் ஒரு மீனவர் அல்லவா?

[தினமலர் தீபாவளி மலர் ]

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

மழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி


வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்

முந்தைய கட்டுரைரத்தம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 7