பகுதி பதினொன்று: 4. அழிதல் [தொடர்ச்சி]
உடல்தழுவி உளமழிந்து மலைச்சுனைக்கரையில் மலர்ந்தோம். பொன்மீது படிந்த நீலம். பகல்மேல் அமைந்தது இரவு. தத்தும் கால்கொண்டு நடந்தது நீலக்குருவி. சிறகடித்து மண்ணில் சுழன்றது. சிற்றுகிர்கள் படிந்த சதுப்பு. பெருமுரசத் தோலாக புவிப்பரப்பு ஓசையிட பெருநடையில் எழுந்தது பெண்புரவி. பொற்கொன்றைப் பூக்குலைமேல் அமர்ந்தது நீலமயில். மலையிழிந்த பெருநதி பேரொலி எழுப்பி கரம்நூறு பரப்பி கொப்பும் கிளையும் குமிழியும் மலரும் சேறும் நுரையுமாய் அலைபுரண்டு கடல் சேர்ந்தது. மண்செம்மை கடல்நீலத்தில் கலந்தது. துள்ளி முடிவில் சேர்ந்தன மீன்கணங்கள். நாற்புறமும் எல்லை திறக்க நின்று தவித்தது நீங்காத பெருந்தனிமை.
உடல் கவ்வி உண்ணும் உதிரச்சுவை கண்ட மிருகம். உகிரெழுந்த கைகளால் அள்ளிப்பற்றி ஊன்சுவை வாயால் கவ்விமென்று குருதி குடிக்கிறது. தன்னை உண்ணும் வாயை பின் திரும்பி நோக்கி பிரமித்தது மடமான். ஒருநூறு வாயில்களை ஓங்கி உடைத்து உட்புகுந்து சுழன்றது காற்று. உள்ளே படபடத்து கிழிந்து பறக்கின்றன திரைகள். எங்கெங்கோ ஒலித்துச்சரிகின்றன உலோகப்பொருட்கள். மூடித்திறந்து மோதி அறைகின்றன சாளரங்கள். அடுமனையின் இருளில் சினந்தெழுந்து நின்றது செஞ்சுடர். கரும்புகை சூடிய நீள்தழல். நெற்றிக்கண். கண்நடுக்கண். கண்கரந்த கண்.
இரண்டு பெரும்பசிகள். அன்னத்தைக் கண்டடைந்த அன்ன உருவங்கள். அன்னத்தினூடே ஆழத்தை அறிகிறது அன்னம். வலப்பக்கம் இரையைக் கிழித்துண்டு உறுமியது பொற்பிடரிச் சிம்மம். மென் தசையை கடித்தது. எலும்பு அடுக்குகளை விலக்கியது. குருதி ஊற்றுகளில் முகம் நனைத்தது. உள்ளறைகளில் நா நுழைத்தது. எரிந்த நெருப்பை சுவைத்தது. உடல் விலக்கி மறுபக்கம் சென்று திகைத்தது. அங்கே எழுந்த இருள்நிறைந்த பாதையில் கால்தயங்கி நடந்தது. இருளில் அதன் உறுமல் எதிரொலித்தது. எரிவிழிகள் மின்னி மின்னிச்சென்றன. மின்னும் ஒராயிரம் கோடி விண்மீன்களில் கலந்தமைந்தன.
இடப்பக்கம் மகவை நக்கிநக்கி துவட்டியது அன்னைப்பசு. அகிடில் அமுதம் கனக்கும் பசு. ஐந்து காம்புகளில் வெண்குருதி கசிந்த பசு. நாவின் நீரலை. நாவின் தழல்கதிர். அன்பெழுந்த சொல்லெல்லாம் அவிந்தமைந்த வெந்நாக்கு. நவிலாத நாக்கு. நக்கி உரையாடும் நாக்கு. புன்மயிர்தலையை பிடரிச்சரிவை கருமென் மூக்கை கால்களை கைகளை இடையை வயிற்றை எங்கும் தொட்டுத் தவழ்ந்தது எச்சில். நனைந்து நடுங்கியது கன்று. மயிர் சிலிர்த்து பெருத்தது. மீண்டும் கருக்குழி சென்றதுபோல் உணர்ந்தது. இமைசரிந்து செவிநிலைத்து இங்கில்லை நான் என்பதுபோல் நின்றது. தேடித்தேடி அலைந்தது ஈரத்தொடுகை. எங்குளது எங்குளது என்று தவித்து இங்குளது என்றறிந்தது. இதுவாகி என் முன் உளது. நான் சுமந்த கரு. என்னை உண்டு எழுந்த உரு. நானிது நானிது என்று நெளிந்தது நாடியதைக் கண்டறிந்த நாக்கு.
நடுவே விழித்து திகைத்துக்கிடக்கும் இவள் யார்? விண்ணுதித்த போதே தானுதித்த மண்ணா? கோடிமுறை மழை கொட்டியும் அனலடங்கி அமையாதவள். விண்ணின் ஒரு விதையும் தீண்டாதவள். எதைத் திகைத்து நோக்குகிறாள்? யாரிது என்கிறாளா? இவையென்ன என்று மலைக்கிறாளா? உண்பதும் உண்ணப்படுவதுமாய் நடிக்கும் இதுவறிந்த எதுவும் தானறிந்ததில்லை என்று அறிந்து விரிந்திருக்கிறாளா?
விண் படலம் கிழித்து மண்ணில் அறைந்தது எரிவிண்மீன். எங்கோ இடியோசை நகைத்தது. மின்னல் வெட்டி வெட்டி அதிர்ந்தது. கண்ணுக்குள் மெல்லத்திரும்பியது ஒரு வலிக்கொப்புளம். அதன் வண்ணஒளிச்சுவர் விம்மி விம்மி அதிர்ந்தது. மின்னல்களின் மௌனம். மின்னல்களின் பிடிவாதம். கருவறைக்குள் தலையெழுந்தது குழவி. நிணநீரில் நீந்தியது. நெஞ்சை கைதொட்டு நான் என்றது. மூடிய அறைவாயை முட்டித் தவித்தது. கைகளால் கால்களால் தோள்களால் மோதிக் கொப்பளித்தது. உருண்டெழும் வலிக்குமிழிகள். சுழன்று மோதும் கொப்புளங்கள். சினம் கொண்டு சிரமெடுத்து முட்டி இருள்வாயில் திரைகிழித்தது. குருதிச்சுனை கரை கடந்தது. நழுவி வழிந்தோடி வெளிவந்து விண் அறிந்தது. மூச்சுத் தவித்து திளைத்தது. முதற்சொல் எடுத்து அழுதது.
மந்திரமெழுந்தது மனக்குகை இருளில். மின்னிஎழுந்தன என் முந்தையர் விழிகள். கடுவெளி நிறைத்த காரிருளானேன். காலமென்றான துடியொலி கேட்டேன். வெறுமை மிதித்து வெறிநடமிட்டேன். கிழிபடும் திசைகளில் இடியொலி கேட்டேன். கீழ்த்திசை வானில் ஒரு சொல் கேட்டேன். எரிவிழி இறைவனை காலடி சேர்த்தேன். அனலெழு குழலை அலையென விரித்தேன். துடியெழு தாளம். கடுந்துடிதாளம். தததக தத்திமி தததக தத்திமி தாளத்தின் நாதம். அடிமுதல் முடிவரை வெடிபடு தாளம். காளி காளி காளி கங்காளி. நீலனை உண்டு நிறைவுறும் நீலி. வெறியொடு பேய்க்கணம் சூழ்ந்து நின்றாட, வெளியினில் வெறுமையில் களிகொடு பூதம் பாட, இருள்படு முழுமையில் எழுக கங்காளி!
கானகப் பசும் இருளில் கரந்த சிற்றாலயக் கதவு திறந்து அலறி எழுந்தது அன்னைப்பெருந்தெய்வம். காடெங்கும் பறவைகள் கலைந்து வானேறின. கிளை விதிர்த்து சிலைத்தன மரங்கள். பின் சுழன்றடித்த காற்றில் வெறிநடமிட்டமைந்தன. பீடமேறி நின்று பெருங்குரல் கொடுத்தாள் தேவி. பலிக்குருதி அள்ளி தழலுடல் நனைத்தாள். நீர் விழுந்தணைந்த எரிதழல் போல நின்ற இடத்தில் குறுகி மறைந்தாள். வெண்புகையென எழுந்தாள். வெட்கி வளைந்தாடினாள். இளங்காற்றில் இல்லை எனக் கரைந்தழிந்தாள்.
தன் உந்தி மலர்ந்த தாமரையில் உறைபவனைத் தொட்டான் பாற்கடலோன். “எழுக காலம்!” என்றான். நான்முகமும் திகைக்க “ஆணை” என்றான். தன் நாவிலுறையும் இறைவியிடம் சொன்னான் “எழுக சொல்!” அவள் தன் கைதிகழ்ந்த வீணையிடம் சொன்னாள் “எழுக நாதம்!” அது தன் குடத்தில் உறைந்த இருளிடம் சொன்னது “எழுக இன்மை!” இன்மை எழுந்த இனிமை. இனிமை மலர்ந்த நாதம். நாதமாகிய சொல். “ராதை” ஆம் என்னிடம் சொன்னது காலம். நான் இருக்கிறேன் என்றது. “ம்?” என்றேன். ஆயிரம்பல்லாயிரம் கோடி இதழ்கள் விரிந்து என்னைச்சூழ்ந்தன என்னை ஆக்கிய எல்லாம்.
“குளிர்பெய்யும் இரவு” என்றான் கண்ணன். “ஆம்” என்றேன். “உன் மேல் மலர்பெய்திருக்கிறது அது” என்றான். ஆம் என்ற சொல்லன்றி ஏதுமற்ற மொழிகொண்டிருந்தேன். என் மேல் விழுந்த மலர் ஒவ்வொன்றாக தன் இதழால் கவ்வி எடுத்தான். மழைத்துளிகள் மெல்லச் சொட்டி மண் நெளிந்தது. நிலா நிறைந்த வானை நோக்கிக் கிடந்தேன். ஒவ்வொரு இலைநுனியிலும் இறங்கி அமர்ந்திருந்தது ஒரு துளி நிலவு. கனவில் மிதந்து கலைந்துகொண்டிருந்தன முகில்கள். வடிவிலா வடிவங்கள். ஒருபொருளும் திரளாத ஒளிமிக்க சொற்கள். இன்னும் ஏனிருக்கிறது இப்பிரபஞ்சம்?
அங்கே ஒரு அலையறியாக் கடல். அதன் கரையிலொரு வெண்தாழை மரம். விரிசடையன் தலையணிந்த வெண்பிறைபோல் அதிலொரு மலரிதழ். வழியும் நறுமணம். உதிக்காத ஓயாத இளஞ்சூரியன். நிலவுப்பரப்பே விண்ணானதா? வெண்பனி உறைந்தொரு பெண்ணுடலானதா? அங்கே இருந்தேன். நானன்றி எவருமிலா நிறைத்தனிமையில். என்னுடன் நானுமில்லா எளிமையில். ஒரு காலடியும் இல்லாத மணல். ஒருபறவையும் இல்லா வானம். ஒருமீனும் துள்ளாத நீராழம். ஒருவருமே அறியாத என் இடம்.
திடுக்கிட்டு விழித்தேன். “எங்கிருந்தாய்?” என்றான். “நானொருத்தி மட்டும் நின்றிருக்கும் ஓர் இடம்” என்றேன். “நானும் வரமுடியாததா?” என்றான். “ஆம், நீயும் அறியமுடியாதது” என்றேன். புன்னகையுடன் “உன் தனிமைக்கு நூறு பூக்கள். அங்கு நீ அறிந்த முழுமைக்கு நூறு நிலவுகள். அங்கு இப்போது எஞ்சும் வெறுமைக்கு நூறு கதிரவன்கள்” என்றான். நாணி விழிதாழ்த்தி நகையொன்று இதழ்சூடி உடல்பூத்தேன். நுனிவிழியால் அவனை நோக்கி “எப்போதும் சிறிது எஞ்சுவேன். உன் லீலைக்கு மலராக மீண்டு வருவேன்” என்றேன். அவன் நகைப்பைக் கண்டு நானும் நகைத்தேன்.
என் நெஞ்சமைந்த நினைவெல்லாம் நீள்மூச்சில் பறக்கவைத்தேன். ஆடை எடுத்து அரைசுற்றி அமர்ந்தேன். என் குழலெங்கும் சருகும் புல்லும் செறிந்திருந்தன. முல்லைமலர்கள் போல் சிதறிக்கிடந்தன என் சங்குவளைத் துண்டுகள். அணியாக மலராக ஆடையாக அங்கெல்லாம் சிதறிக்கிடந்தேன். எழுந்து ஒவ்வொன்றாய் திரட்டி என்னை உருவாக்கினேன். “என்ன செய்தாய்? என் கால்சிலம்பொன்றைக் காணேன். என்னவென்று சொல்வேன் என் அகத்தார் வினாவுக்கு?” என்று சிணுங்கினேன். “பார் மணியாரம் அறுந்துவிட்டது. மேகலை ஒரு முத்திழந்திருக்கிறது.”
புல்லில் படுத்து தலையடியில் கைவைத்தான். புன்னகைத்து என்னிடம் “அணியெல்லாம் சூடி ஆடைமறைத்து நீ மீண்டு செல்லும் இடம் ஏது?” என்றான். பொய்ச்சினம் பொலிந்து “ஏன்? எனக்கென்ன வீடில்லையா? குடியும் குலமும் இல்லையா?” என்றேன். “அவ்வுலகில் உனக்குள்ளதெல்லாம் அத்தனை முதன்மையா சொல்?” என்றான். “ஆம், இவ்விரவில் இங்கேயே வாழ்ந்துவிடலாகுமா? விண்ணளக்கும் புள்ளும் மண்அமையும் இரைகொள்ள” என்றேன். “ஆம், அங்கிருந்து வந்தால்தான் இந்தக் காட்டில் நிலவொழுகும்” என்றான்.
“எழுந்து வா கரியவனே, என் மணிகளை தேடித்தா” என்று கொஞ்சி திரும்பினேன். அவன் முழுதுடல் கண்டு நாணி முகம் திருப்பி “என்ன இது? நாணென்று ஒன்றில்லையோ?” என்று ஆடை ஒன்றை எடுத்து அவன் இடைமேல் போட்டேன். அதைப்பற்றித் திரும்பி எழுந்தான். அவன் காலடிகள் என்னை அணுகும் ஒலிகேட்டு விதிர்த்தேன். அவ்வடியோசை ஒன்றிலேயே அவனடைந்த மாற்றம் உணர்ந்தேன். என் குழல்பற்றி இழுத்து “என்ன நாணம்?” என்றான்.
“நாணமா?” எனத் திரும்பி நகைத்து வாய் மூடினேன். “ஏன்?” என்று பொய்ச்சினம் கொண்டான். அவன் இடையணிந்த உடைசுட்டி “எப்போது பெண்ணானாய்?” என்றேன். என் இடையாடை தொட்டு “நீ ஆணாக ஆன பொழுதில்” என்றான். குனிந்து என் ஆடை நோக்கி “அய்யய்யோ” என்றேன். “அது என் தலைப்பாகை” என்றான். என் அருகே வந்து இடைசுற்றி “அதில் சூடிய மயில்பீலி உள்ளே இருக்கிறது. கண் விழித்து காத்திருக்கிறது” என்றான். “விலகு” என அவனைத் தள்ளினேன்.
“பெண்ணென்ன ஆணென்ன, ஒன்றுகொள்ளும் ஓராயிரம் பாவனைகள் அல்லவா?” என்றான். “ஒன்று இன்னொன்றால் நிறைவடைகிறது. ஒன்றாகி தன்னை உணர்கிறது.” ஆம், தேடுவது ஆண், அடைவது பெண். திமிறுவது ஆண், திகழ்வது பெண். குவிவது ஆண், அகல்வது பெண். “ஆடையிலா உள்ளது ஆண்மையும் பெண்மையும்?” என்று என் செவியில் சொன்னான்.”ஆகத்திலும் இல்லை. அகத்திலும் இல்லை. ஆழத்தில் உள்ளது அந்த பாவனை.”
நான் அவன் தோள்வளைத்து “சொல்லிச் சொல்லியே கொல்லும் கலை தெரிந்தவன் நீ” என்றேன். “சொல்லெனும் கிளையில் வந்தமரும் கிள்ளை அல்லவா பெண்?” என்றான். “சீ” என அவன் கன்னத்தில் அறைந்தேன். “கண்ணனென்றால் வாய்ச்சொல்லில் மன்னன் என்றே தோழியர் சொல்கின்றனர்” என்றேன். “கண்ணன் வெறும் களிப்பாவை. கன்னியர் ஆடும் அம்மானை” என்றான். நகைத்து என் உந்திக்குழியில் முகம்புதைத்துக்கொண்டான்.
கண்ணன் என்ற கன்னி. உண்ண இனிக்கும் கனி. மதவேழ மருப்பில் எழுந்தது மலர்க்கிளை. நீலக்கடம்பில் மலர்ந்தது கொடிமுல்லை. என் உலகை நான் ஆண்டேன். என் புவிமேல் வானமானேன். கோடிக்கால்களால் நடந்தேன். கோடிக்கரங்களால் அணைத்தேன். அப்புரவியில் அடிவான் வரை சென்றேன். பாயும் அலைகளில் பாய்புடைத்தெழுந்தது படகு. கருங்கல் மண்டபத்தை அள்ளி நொறுக்கியது பசுமரத்து விழுது. பெய்தொழிந்த பெருமழைக்குள் இடியொலிக்க மின்னிக் கிழிந்தது இரவு.
விண்ணில் சுரந்து மண்ணில் நிறைந்தது எரி. மண்ணிலிருந்து விண்பொழியும் மாழை. நீரில் சுடர்ந்த நெருப்பு. நெருப்பில் நெளிந்த நீர். இரண்டானவன். இரண்டானவள். இரண்டழிந்து ஒன்றானது. என்றுமிருந்தது. குளம்பொலிக்க நடந்தது முன்னுடலில் திமிலெழுந்த எருது. பின்னுடலில் முலைகனத்த பசு. பாலூறும் சுகம் அறிந்தது எருது. திமிலசையும் திமிரறிந்தது பசு. நீலப்பசு. பொன்னிறக்காளை. இங்கிருக்கிறான் பெண்ணன். அவனை ஆளும் ஆடவி. ராதன் முயங்கிய கண்ணை. இருபெரும் குறைகள். இரண்டழிந்த நிறைகள். மார்பான திரு. இடம் எடுத்த பாதி. சொல் வாழும் நா. தெய்வம் அறிந்த முழுமை. எரிகுளம் நிறைய எழுந்தது தென்சுடர்.
இல்லாதிருந்தது
இருந்தது விண்ணில்
அதிதியின் முலைமேல்
தட்சனின் குறிமேல்
அவனே அக்கினி
எங்கள் குலமுதல்வன்
முன்முதல்நாளில்
அவனிருந்தான்
காளையும் பசுவுமாய்.
வேய்மரக் காட்டில் காற்று கடந்தது. வேதக்குரல் எழுந்து சூழ்ந்தது. காளைநடையிட்டு வந்தது கனிந்த முலைப்பசு. குனிந்து நீலத்தடாகத்தில் தன்னை நோக்கியது. நீர் விட்டெழுந்தது பசுமுகம் கொண்ட ஏறு. காமம் கொண்டு தன் நிழல் மேல் கவிந்தது காளைப்பசு. தன்னைத்தான் புணர்ந்தது பசுக்காளை.
இங்கு மீண்டேன். இனியிவன் விழிநோக்க மாட்டேன் என்றுணர்ந்தேன். என்னவென்றாக்கிவிட்டான் என்னை. எஞ்சுவதேது என்னில்? முத்து அகன்ற சிப்பியின் முழுமுதல் வெறுமை. குளிர் இரவின் புறாவைப்போல் குறுகிக்கொண்டேன். விழி வழிய மொழியழிய முழங்காலில் முகம்புதைத்து அமர்ந்தேன். என் விசும்பல் ஒலிகேட்டு எழுந்து பார்த்தான். என்னைத் தொடலாகாது என்ற இதமறிந்திருந்தான். அங்கெல்லாம் பரந்த என் அணிபொறுக்கிச் சேர்த்தான். கொடியை நூலாக்கி என் மணியாரம் கோத்தமைத்தான். ஒற்றைச்சிலம்பை கண்டெடுத்து மற்றைச்சிலம்பை ஒருங்கமைத்தான்.
என் முன்வந்து அமர்ந்து இருகாலைப் பற்றி அதை அணிவித்தான். இருகால் பற்றிக்குலுக்கி “இருந்த இடத்திலேயே இத்தனை தொலைவு ஓடலாமோ?” என்றான். பால்குடத்தின் பனிநுரைபோல என் இதழ்மீறியது இளநகை. “நகைத்துவிட்டாய். இனி விழிநீர் பொருந்தாது. இதோ உன் மார்பணிந்த முத்தாரம். உன் இடையணிந்த மேகலை” என்றான். என் உடலில் அணிவித்து “எழில் மீண்டு விட்டாய். இனி ஏதும் குறையில்லை” என்றான். “என் மேகலையின் மணி எங்கே?” என்றேன். “அது இனிமேல் மீளாது” என நகைத்தான் “அழுகைவேண்டாம். இன்னொரு மணிமுத்தை நான் கொண்டு தருவேன்”என்றான்.
முள்ளடுக்கி சீப்பாக்கி என் கூந்தல் கோதி இழையாக்கினான். மூவிழை எடுத்து பின்னி முடிந்தான். பூவிதழ் சேர்த்து குச்சம் வைத்தான். “வந்ததை விட புதியவளானாய். சென்றதுமே நீ மீண்டு வரலாகும்” என நகைத்தான். அவன் தோளில் அடித்தேன். “எஞ்சியுள்ளது இரவு. இன்னும் மலரவில்லை பாரிஜாதம்” என்றான். எழுந்து “இப்பசும்புல்வெளியில் எத்தனை மலர்மரங்கள். எத்தனை சுனைவிழிகள்” என்றான். கைநீட்டி “என்னை எழுப்பு” என்றேன்.
நீலக்கடம்பின் நிழல் நின்று நோக்கினேன். நிறைநிலவு நின்றிருந்த வானின் கீழ் நிலமே மலரென்று விரிந்திருந்தது விருந்தாவனம். அதன்மேல் வழிந்தோடியது இளந்தென்றல். அதன் விரல்கள் தொடாத மலரில்லை. கால்பட்டு கலையாத சுனையில்லை. உடல்கொண்டதனாலேயே ஓரிடத்திலமையும் விதிகொண்டிருக்கிறேன். விரிந்து எழுந்து இந்த விருந்தாவனத்தை நிறைக்கலாகுமா? உடைந்து சிதறி இந்த உலகெங்கும் ஒளிரமுடியுமா?
தன் வேய்குழல் எடுத்து அவன் இதழ்சேர்த்தான். இசையெழுந்து ஏழுவண்ணங்களாகியது. ஒளியாகி வழிந்தது. நிலவிலெழுமா வண்ணங்கள்? இரவிலெழுமா பறவைக்குலங்கள்? அப்பால் ஒரு செண்பகத்தின் பின்னிருந்து லலிதை எழுந்து வந்தாள். அவளுக்கு அப்பால் விசாகையும் சுசித்ரையும் வந்தனர். சம்பகலதையும் ரங்கதேவியும் சுதேவியும் வந்தனர். கண்ணுக்குத்தெரியாத நீர்ப்பெருக்கில் ஒழுகிவரும் மலர்க்குவைகள் என வந்து சூழ்ந்தனர் கோபியர். குழலாடி நிலவாடி குளிராடி நின்றனர். நீலமலர் ஒன்று அல்லிக்குளம் நடுவே பொலிந்தது. விருந்தாவனத்தில் நிறைந்தது ராஸலீலை.