அம்புபட்ட பறவை

Dhani-Dhani_Radhika_ke_Charan1a

ஜெ,

நீலம் பெருகிப்பெருகி உச்ச நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இனி என்ன, இதுக்குமேலே சாத்தியமா என்றெல்லாம் தோன்றும். உடனே அடுத்த அத்தியாயம். இன்றைய மருதம் ஒரு அற்புதமான மலர்

ராதை கிருஷ்ணன் லீலை என்று வைக்காவிட்டாலும் கூட ஆண் பெண் உறவின் ஒரு இடத்தை மிக நுட்பமாக பிடித்துவிட்டது இந்த அத்தியாயம். பெண் மனம் ஆண் வந்து தன்னை வென்று கைப்பற்றவேண்டுமென்று விரும்புகிறது. தன்னை சுருட்டி கொண்டுசெல்லவேண்டும் என்று கனவுகாண்கிறது

ஆனால் அது நிகழும்போது தான் அவமதிக்கப்பட்டுவிட்டதாகவும் சிறியதாக ஆகிவிட்டதாகவும் உணர்கிறது. அதைத்தான் பாம்பு மிதிபட்டதாக சொல்லியிருக்கிறீர்கள்

கைப்பற்றப்பட ஆசைப்படுவது பயாலஜிக்கல் உண்மை. சீண்டப்படுவது சோஷியல் உண்மை. முதலில் உள்ளது பெண் என்ற இயல்பு. இரண்டாவது சொன்னது ஈகோ. இந்த விளையாட்டில்தான் பெண் ஊசலாடுகிறாள். காதலிக்கும் எவருக்கும் தெரிந்த விஷயம் இது. பெண்ணின் மாய்மாலம் என்று சொல்வது இதைத்தான். பொம்புளை மனசு ஆழம் என்று சொல்வது இதைத்தான்

கொற்றவை மாதிரி ராதை கண்ணன் தலைக்குமேல் காலைத்தூக்கும் இடத்தை வாசித்து உறைந்து போனேன். அது எப்போதுமே நிகழ்வது. அங்கே அப்படி மேலெழுந்து தலையில் கால்வைக்காமல் ஒரு பெண் அடங்கமாட்டாள். அதன்பின்னர் காலடியில் கிடப்பாள்

நான் ஒரு காலகட்டத்தில் அந்த ஊசலிலே ஆடியிருக்கிறேன். அப்படி காலெடுத்து சூடியிருக்கிறேன். அந்த உக்கிரமான நினைவுளில் சென்று பெருமூச்சுவிட்டு மீண்டு வந்தேன்

சண்முகம்

r-k

ஜெ சார்

காமத்தின் முகங்களை மாறிமாறிச் சொல்லிச்செல்கிறது நீலம். ஊடுவதும் கூடுவதும் இரண்டுமே அதன் இரண்டு பாவனைகள் என்பதை பல வரிகளில் சொல்லிவிட்டீர்கள். திரும்பத்திரும்ப ‘இது என்ன லீலை’ என்ற எண்ணம்தான் மனசுக்குள் வந்தபடியே இருந்தது. கண்ணனைக் காண அவ்வளவு ஏங்கியவள், கண்டதும் ஏன் சண்டைபோடுகிறாள்? அதுதானே மனுஷமனசின் இயல்பு என்று உடனே நினைத்தேன்

ஆனால் இன்றைய அத்தியாயம் மிக நுணுக்கமான ஒரு மர்மத்தைத் தொட்டுக்கொண்டு போனது. ராதையின் அந்தக் கோபம் உண்மையானது. அது காமத்தின் பாவனை கிடையாது. எனக்கு என்ன தோன்றியது என்றால் அது அகங்காரத்தின் வெளிப்பாடு என்று. அதாவது கடைசி அகங்காரம் விலகுவது. சுடர் அணையும்போது எழுந்து மேலே நிற்குமே அதைமாதிரி

பெண்ணுக்கு அவளுடைய அழகின் பரிசுத்தி ஒரு virtue. அது அவளுக்கும் தெரியும். அவள் அந்நிலையில் காமத்தைவிட மேலானவள். ஒரு பூ கரு அடைந்து கனியாகி மாறுவதற்குத்தான் அத்தனை அழகைக் கொண்டிருக்கிறது என்று சொல்லமுடியாது தானே?

காமத்துக்கு ஆட்படுகிற அந்த சமயத்திலே அவள் ஒரு வீழ்ச்சியையும் அறிகிறாள். The great fall என்றே சொல்லலாம். பெண் வாழ்க்கையில் அதுதான் பெரிய வீழ்ச்சி. அதன்பிறகு அவளுக்கு அந்த தெய்வீகம் இல்லை.

அதனால்தான் தன்னை ‘அனுபவிக்க’ வருபவம் மேல் அவளுக்கு கடுமையான கோபம் வருகிறது. அது தன் மேலே உள்ள கோபம். தன்னுடைய காமத்தை பயப்படுகிறாள். அதன்பிறகு அந்த பயத்தை அவன்மேல் கோபமாக ஆக்கிக்கொள்கிறாள்

கற்றதெல்லாம் மறந்தேன். கற்பென்றும் பொற்பென்றும் கன்னிமை எழிலென்றும் சொன்னதெல்லாம் உதிர்த்தேன். இலையுதிர்த்து மலர்சூடி மலைமீது நிற்கும் மரமானேன்.

என்று ராதை உணர்கிறாள். அந்த வெளிப்படையான காமம்தான் அவளையே கூச்சம் அடையவைக்கிறது. ஒரு divine entity அவள். ஒருவகையிலே அவள் ஒரு deity . காமம் அவளை வெறும் சரீரமாக ஆக்கிவிடுகிறது ஆகவேதான் கோபம்

எங்கோ மிதியுண்டது நாகம். சீறிப் படமெடுத்தது. கல்விழுந்து மறைந்தன சுனை நிறைந்த மீன்கள். வில்பட்டு சிறகடித்து விழுந்தது வெண்பறவை.

ரத்தம் சிந்த விழும் அந்த பறவை என்ன? அந்த அம்பு என்ன?

சாமிநாதன்

madhur (1)

ஜெ,

நம்முடைய மரபில் சிருங்கார ரசத்துக்கு ஒரு இலக்கணம் உண்டு. அது எங்கே நிற்கவேண்டும் என்று எவரும் சொல்லிவிடமுடியாது. சுகப்பிரம்ம ரிஷியே கொஞ்சம் அத்துமீறிப்போய்விட்டர் என்று வ.உ.சி சொல்லியிருக்கிறார். ஜெயதேவர் மிகவும் கடந்துபோனார் என்பார்கள்.

ஆனால் அது ஒரு குதிரை. அதற்கு கடிவாளம் என்பது அதை மறைப்பதுதான். அழகியவார்த்தைகளால் அதை மறைத்துகொண்டுசெல்கிறார் ஜெயதேவர் . இயற்கைவர்ணனைகளில் அதை மூடிவைக்கிறார் காளிதாசன். இரண்டுமே நிர்வாண உடல்மேல் பட்டு ஆடையைப்போட்டு மூடிவைப்பதுமாதிரி என்று எனக்கு வகுப்பு சொல்லித்தந்த ஆசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அந்த ஆடை இல்லாவிட்டால் சிருங்காரம் வெறும் அதிர்ச்சியை மட்டும்தான் கொடுக்கும் ரெண்டாமுறை வாசித்தால் அடச்சீ என்று இருக்கும். அதில் கற்பனையோ நுட்பமோ கிடையாது. துணிந்து எழுதிவிட்டார் ஆசிரியர் என்ற பாராட்டுமட்டும்தான் இருக்கும். கவிதை என்பது சொல்வதிலே கிடையாது. மறைப்பதிலேதான்.

அச்சொல்லில் புல் தளிர்த்தன மலைச்சரிவுகள். முகில்கொண்டன அம்மலைமுடிகள். திடுக்கிட்டு அசைந்தமைந்தன அம்முடிகள் சூடிய கரும்பாறைகள்.
விதையெல்லாம் முளைவிட்ட மண்ணின் மணம். பாறைகளில் படரும் பாசியின் மணம். இலைப்பாசி படிந்த நீர் மணம். ஈரத்தின் மணம். இளமழையின் மணம். மழை ஆளும் நிலம் அணிந்த மணம்.

கைக்குழந்தை கண்டெடுத்த களிப்பாவைகள். நாபறக்கத் தொட்டுச்செல்லும் நாகத்தின் முகம். தொட்டெண்ணி தொட்டெண்ணிச் சலிக்கா உலோபியின் விரல். முட்டைகளை வருடும் அன்னைப்பறவையின் இறகு. கன்று தழுவும் பசுவின் நாக்கு

-பட்டு அணிந்து போகிற அழகி மாதிரி. நன்றி

சுவாமி

வெண்முரசு விவாத்ங்கள்

முந்தைய கட்டுரைதல்ஸ்தோயின் மனைவி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35