இரும்புத்தெய்வத்திற்கு ஒரு பலி

 

தல்ஸ்தோயின் பெரும்நாவல்களில் ‘அன்னா கரீனினா’ மட்டுமே வடிவநேர்த்தி கொண்ட படைப்பு என்று ஒரு பேச்சு உண்டு. அவரது கடைசிநாவலான புத்துயிர்ப்பு ஒரு வகையான சென்று தேய்ந்திறுதல் கொண்டது. ‘போரும் அமைதியும்’ வடிவமற்ற வடிவம் கொண்டது. ஹென்றி ஜேம்ஸ் அதை ஒரு மாபெரும் கதைமூட்டை என்று சொன்னார். ‘கொஸாக்குகள்’ போன்ற ஆரம்பகால நாவல்கள் நாவலுக்கான முயற்சிகளே.

அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார்.

 

leo_3062020a

அந்த விரிந்துசெல்லும் கேள்விகளை நாவலின் எலும்புச்சட்டகம் என்று வைத்துக்கொண்டால் தல்ஸ்தோயின் உணர்ச்சிச் சித்தரிப்பும் சூழல் விவரணையும் ரத்தமும் தசையும் எனலாம். அவரது கவித்துவமோ அதன் ஒளிரும் புன்னகை. அதன் தரிசனமே உயிர். அன்னா கரீனினா ஓர் உயிருள்ள கலைப்படைப்பு. உயிர்வடிவுகளில் தேவையற்றது என்று ஒன்று இருப்பதில்லை. ஆகவே வடிவப்பிழை என்பதற்கு இடமில்லை.

அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’ தன் சகோதரன் ஸ்டீவின் மணவாழ்க்கையின் சிக்கல்களை தீர்ப்பதற்காக அன்னா கரீனினா பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து மாஸ்கோவிற்கு வருகிறாள். ஆனால் வந்தவள் தன்னையறியாமலேயே விரான்ஸ்கியுடன் காதலில் விழுகிறாள்.

கரீனின் என்ற கறாரான அதிகாரியின் மனைவி அன்னா. அவளுக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால் காதலின் வலிமை அவளை விரான்ஸ்கியை நோக்கி இழுக்கிறது. குற்றவுணர்வு கொண்டு அவள் அதிலிருந்து விலக முயலும்தோறும் குற்றவுணர்ச்சியின் தீவிரத்தாலேயே அந்தக்காதல் மேலும் உக்கிரமானதாக ஆகிறது. குழந்தையையும் கணவனையும் விட்டுவிட்டு விரான்ஸ்கியுடன் ஓடிப்போகிறாள். அவனுடன் குறுகியகால காதல் கொண்டாட்டம்

 

 

அதன்பின் அந்தக் காதலுக்கு அடியில் மூடி வைத்திருந்த ஒவ்வொன்றாக வெளியே தலைநீட்ட ஆரம்பிக்கின்றன. விரான்ஸ்கிக்காக தான் இழந்தவை மிக அதிகம் என்பதனாலேயே விரான்ஸ்கி தன் மேல் பூரணமான அன்பு செலுத்தவேண்டும் என அன்னா எதிர்பார்க்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த எதிர்பார்ப்பு விரான்ஸ்கியை மூச்சுத்திணறச் செய்கிறது. மகனைப்பிரிந்த குற்ற உணர்ச்சியால் அன்னா வதைபடுகிறாள்.

ஒரு நாடக அரங்கில் உயர்குடிப்பெண்கள் — அவர்களில் பெரும்பாலானவர்கள் ரகசியமான கெட்ட நடத்தை கொண்டவர்கள் — அன்னா தங்களுடன் அமரக்கூடாது, அவள் ஒழுக்கம் கெட்டவள் என்கிறார்கள் சமூகத்தின் முன் பாவியாக நிற்பதன் விளைவாக வீம்பும் கசப்பும் கொண்டவளாகிறாள் அன்னா. அவளுடைய இனிமையும் நாசூக்கும் இல்லாமலாகி சிடுசிடுப்பான, உள்வாங்கிய பெண்ணாக ஆகிறாள். அவளிடமிருந்து விரான்ஸ்கியின் மனம் விலக ஆரம்பிக்கிறது.

அன்னாவுக்கு விரான்ஸ்கியில் ஆன்னி என்ற இரண்டாவது குழந்தை பிறக்கிறது. அவள் பிரசவத்தில் மாண்டுபோகக்கூடும் என்ற நிலை இருந்தபோது கரீனின் அவளைப் பார்க்க வருகிறான். அவளது நோய்ப்படுக்கையின் முன்னால் வைத்து அவன் விரான்ஸ்கியை மன்னிக்கிறான். கணவனின் இன்னொரு முகத்தை அன்னா பார்க்கிறாள். மனித உறவுகளை எல்லாம் வேறு ஒரு கோணத்தில் பார்க்க அவளால் முடிகிறது. குற்றவுணர்ச்சி கொண்ட விரான்ஸ்கி தற்கொலைக்கு முயல்கிறான்.

ஆன்மீகமாக அன்னாவின் வீழ்ச்சியை பல படிகளாகச் சித்தரிக்கிறார் தல்ஸ்தோய். அன்னா விரான்ஸ்கியை தனக்கு ஓர் உணர்ச்சியடிமையாக இருக்க வைக்க முயல்கிறாள். அப்படி அவன் முயலும்தோறும் அவனை அவள் ஐயப்படுகிறாள், அவனை துன்புறுத்துகிறாள். தன்னுடைய ஈர்ப்பு குறைகிறதோ என்ற ஐயம் காரணமாக அவள் பிற இளம் ஆண்களை கவர முயல்கிறாள். அந்த கவர்ச்சி மூலம் தன்னைத் தனக்கே நிரூபித்துக்கொள்கிறாள்.

விளைவாக அவள் மெல்ல மெல்ல மனம் நைந்தவளாக உச்சஉணர்ச்சிநிலைகளும் பதற்றங்களும் கொண்டவளாக ஆகிறாள். கனவுகளுக்கும் நனவுகளுக்கும் இடையே அலைகிறாள். தூங்குவதற்கு அவள் மார்பின் பயன்படுத்துவதும் அதற்குக் காரணமாகிறது

கடைசியில் அனைத்திலும் நம்பிக்கை இழந்த அன்னா தன்னை வந்து பார்க்கும்படி விரான்ஸ்கிக்கு ஒரு தந்தி கொடுத்துவிட்டு ரயில் நிலையம் செல்கிறாள். ரயில் நிலையத்தில் காத்திருக்கிறாள். ரயில் கிளம்பும்போது சட்டென்று உருவான ஒரு நிராசையால் ரயிலின் சக்கரங்களுக்கு அடியில் பாய்ந்து உயிர்விடுகிறாள்.

அன்னாவின் கதை நுட்பமான எத்தனையோ ஆராய்ச்சிகளுக்கு ஆளாகியிருக்கிறது. உலக இலக்கியத்தில் உளவியல் ரீதியாக அதிநுண்ணிய ஆய்வுகள் செய்யப்பட்ட வெகு சில நாவல்களில் ஒன்று அன்னா. ஆனால் இன்றும் ஒரு நல்ல வாசகன் தன் வாழ்க்கை மூலம் அவனே கண்டுபிடிக்கும் நுண்மைகள் கொண்டதாகவே இந்நாவல் உள்ளது.

உதாரணமாக இந்நாவலில் கிட்டி என்ற இளம்பெண்ணுக்கும் அன்னாவுக்குமான உறவு. என் வாசிப்பில் இத்தனை நுட்பமான ஒரு வாழ்க்கைக்கூறினை எந்த புனைகதையிலும் வாசித்ததில்லை. இந்த இருபத்துஐந்து வருடங்களில் எத்தனையோ முறை நான் சிந்தனைசெய்திருக்கும் ஒன்று இது. கிட்டி அன்னாவின் சகோதரன் ஸ்டீவின் மனைவியின் தங்கை. ஸ்டீவின் குடும்பச் சிக்கலை தீர்ப்பதற்கு வரும்போதுதான் அன்னா கிட்டியைச் சந்திக்கிறாள்.

111

கதை ஆரம்பிக்கும்போதே அன்னா இளமையைத் தாண்டியவளாக, குடும்பத்தலைவியாகவும் தாயாகவும் இருக்கிறாள். கிட்டி முதிரா இளமைக்குரிய துடிப்புடன் துள்ளலுடன் இருக்கிறாள். அவளுக்கும் விரான்ஸ்கிக்கும் இடையே மண ஆலோசனைகள் நிகழ்கின்றன. அதற்காகவே விரான்ஸ்கி வருகிறான். ஆனால் அன்னா அவனை மிக நுட்பமாக தன் பெண்மையின் வசீகரத்தால் கவர்ந்து கொள்கிறாள்.

அன்னா அதை ஏன் செய்தாள்? தெரிந்து திட்டமிட்டுச் செய்யவில்லை. அவளில் இருந்த பெண்மை அதை நிகழ்த்தியது. ஓர் ஆணைக் கவரவேண்டுமென எண்ணும் பெண்ணின் உடலில் பார்வையில் சிரிப்பில் கூடும் பேரழகு அவனை வீழ்த்தியது. அந்தச்செயல் அவளில் அவளையறியாமலேயே நிகழ்ந்தது என்றுகூடச் சொல்லலாம்.

கிட்டியின் வாழ்க்கை சிக்கலாகிறது. அதன்பின்னர் அவளுக்கு லெவினுடன் காதல் மலர்கிறது. அவர்கள் மணம்புரிந்துகொள்கிறார்கள். லெவின் நாவலின் ஆரம்பத்திலேயே அன்னாவை காணவருபவன். இந்நாவலில் தல்ஸ்தோயின் இயல்புகள் தெரியும் கதாபாத்திரம் அவன். மாஸ்கோவில் லெவின் கிட்டியுடன் வாழ வரும்போது மீண்டும் அன்னாவைக் காண்கிறான். இப்போது அன்னா விரான்ஸ்கியின் மனைவியாக அவன் குழந்தையின் அன்னையாக இருக்கிறாள். இப்போது லெவினை அன்னா மெல்ல நுட்பமாக தன் மீது காதல்கொள்ளச் செய்கிறாள். அந்த வசீகரத்தை தாங்க முடியாத லெவின் அதை கிட்டியிடமே கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து அதில் இருந்து விடுபடுகிறான்.

அன்னாவுக்கும் கிட்டிக்கும் என்ன உறவு? நாவலில் தல்ஸ்தோய் எதுவுமே விவரிப்பதில்லை. அன்னா கிட்டியைப்பற்றி அதிகமாக யோசிப்பதே இல்லை. அவர்களிடையே பெரிய அளவில் தொடர்பும் இல்லை. ஆனால் அன்னாவின் வாழ்க்கையை தீர்மானிப்பவளாக கிட்டி இருந்திருக்கிறாள். எப்படி?

கிட்டியை முதன்முதலில் காணும் அன்னா தன் முன் காண்பது தன்னையேதான் என்று எனக்குப் பட்டது. சென்று மறைந்த தன் முதிரா வயது பிம்பத்தை. நிரந்தரமாக தான் இழந்த ஒரு காலகட்டத்தை. அது அவளுடைய பெண்மனதில் உருவாக்கிய ஒரு வீம்பினால்தான் அவள் விரான்ஸ்கியைக் கவர்ந்தாள். அதன் வழியாக கிட்டியை தோற்கடித்தாள். இன்னமும் தன் இளமையும் அழகும் போய்விடவில்லை என்று தனக்குத் தானே நிரூபித்துக்கொள்பவள் போல. சென்று மறைந்த அனைத்தும் தன்னிடம் இருந்துகொண்டே இருக்கிறது என்பதைப்போல

மீண்டும் கிட்டியின் கணவன் லெவினைப் பார்க்கும்போது அவன் விரான்ஸ்கியை விட வலுவான ஆளுமையாக இருப்பதை அன்னா காண்கிறாள். அவனை வெல்லாமல் அவளால் இருக்க முடியாது. அவளுடைய இளமையின் பிம்பமாகிய கிட்டியிடமிருந்து அவனை அவள் வென்றாக வேண்டும். அந்த வீம்பு அவனை வென்றதுமே தணிந்து ஒரு வெறுமையை அவள் உணர்கிறாள்.

அன்னா பேரழகி. அந்த அழகுடனேயே அவள் வளர்ந்து வந்திருப்பாள். போற்றப்பட்டவளாக, காதலிக்கப்பட்டவளாக. இளமை தாண்டி அந்த பொக்கிஷத்தை இழப்பதன் உளச்சிக்கலே அவளை கிட்டியுடன் போட்டிபோட வைத்ததா என்ன? அவள் போட்டி போட்டது காலத்திடமா? அவளை அழகற்ற, விரும்பத்தகாத, கிழவியாக ஆக்கிக்கொண்டே இருக்கும் காலத்துடன் போட்டியிட்டு வெல்லவா அவள் முயன்றாள்? அத்தனை பெண்களுக்கும் நடுவயதில் ஏற்படும் மனச்சிக்கல்தான் அவளையும் துரத்தியதா? அவ்வளவுதானா, முடிந்து போயிற்றா என்ற ஏக்கம். இனி என்னில் என்ன மீதி என்ற பதற்றம்…

தெரியவில்லை. ஆனால் அன்னாவின் இறுதிநாட்களில் அவள் ஏங்குவது காதலுக்காக அல்ல என்று இப்போது நாவலை வாசிக்கும்போது தோன்றுகிறது. தன்னைச் சந்திக்கும் அத்தனை கண்களும் தன் அழகையும் வசீகரத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என அன்னா நினைக்கிறாள். அவளுடைய உடலெங்கும், அவள் சலனங்கள் முழுக்க, அந்த விருப்பம் நிறைந்திருந்தமையால் அவளைச் சந்தித்த அத்தனை இளைஞர்களும் அவளை காதலிக்கும்போது அவள் தன்னால் வெல்லப்படமுடியாதவனாக விரான்ஸ்கியை உணர்கிறாள். அவனை வெல்ல கடைசியாக அவள் கண்டுபிடித்த வழிதான் அந்த தற்கொலை. அவனுள் ஆழமானதோர் குற்றவுணர்ச்சியை உருவாக்கிவிட்டு நிரந்தரமாக அவள் சென்றுவிட்டாள்.

 

 

அன்னாவின் மரணத்தின் கணத்தை எளிய சொற்களில் தீவிரமாகச் சித்தரிக்கிறார் தல்ஸ்தோய். அப்போது இளம்சிறுமியாக அவள் வாழ்ந்த நாட்கள், அவளுடைய முதிரா இளமையின் உல்லாசங்கள்தான் அவள் நினைவில் காட்சிகளாகப் பீரிட்டுக் கிளம்புகின்றன. அந்தத்தருணத்தில் எல்லாவற்றையும் மூடிக்கொண்டிருந்த இருள் சட்டென்று விலகிவிடுகிறது. ஆம் அன்னா எப்போதும் நிரந்தரமாக வாழ விரும்பிய பொன்னுலகம் அதுவே, ஆனால் மண்ணில் எவருக்குமே அது சாத்தியமில்லை.

ரயில் தல்ஸ்தோயின் மனதில் ஒரு குறியீடு. நவீன இயந்திர யுகத்தின் சின்னமாகவே அவர் பல கதைகளில் ரயில் வருகிறது. தல்ஸ்தோய் அதை கொஞ்சம் வெறுப்புடன், நிராகரிப்புடன் தான் பார்த்தார். அது சென்ற யுகத்தின் அரிய மதிப்பீடுகளை, நுண்ணிய உணர்ச்சிகளை சிதைத்துவிடுகிறது என்று அவர் நினைத்தார்.

தல்ஸ்தோயைப் பொறுத்தவரை அன்னாவின் பிரச்சினைக்குக் காரணமே சென்ற கிறித்தவயுகம் முன்வைத்த தியாகத்திற்குப் பதிலாக போகத்தை முன்வைத்த நவீனக்காலகட்டம்தான். அவரது கட்டுரைகளில் கூட அவர் விரிவாக அதைப்பற்றிப் பேசியிருக்கிறார். ஆடம்பரத்தை, ஒருவருக்கொருவர் போட்டியை, வெட்கமில்லாத நுகர்வை அது முன்வைக்கிறது என்று அவர் நினைத்தார். அந்த யுகத்தின் பலியே அன்னா

அன்னாவுக்கு ஒரு கனவு வந்துகொண்டே இருக்கிறது, விரான்ஸ்கியைச் சந்திக்கும் முன்னரே. ஒரு பரட்டைத்தாடிகொண்ட கிழவர் இரும்பை இரும்புச் சுத்தியலால் அடித்து நொறுக்கி கொண்டே இருக்கிறார். அவர் ·ப்ரெஞ்சில் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருக்கிறார்.  அந்த உறுத்தும் ஒலி தாங்கமுடியாமல் அவள் தவித்து விழித்துக்கொள்கிறாள். அந்தக் கனவு எதைக் குறிக்கிறது? கனவுகளுக்கே உரிய தோராயமான முறையில் அது நவீனக் காலகட்டத்தை, இரும்பின் யுகத்தையே குறிக்கிறது என்று படுகிறது. இன்னமும் குறிப்பாக அந்த பிரெஞ்சு. தல்ஸ்தோயின் காலத்தில் பிரெஞ்சு நவீன காலகட்டத்தின் மொழியாக,  உயர்குடி ஆடம்பரத்தின் மொழியாக இருந்தது

அன்னா ரயிலின் சக்கரங்கள் நடுவே பாய்கிறாள். கனத்த இரக்கமற்ற இரும்பு அவளுடைய மெல்லிய உடலைச் சிதைத்து இழுத்துச் செல்கிறது. அந்தச் சித்திரத்தை காட்டும் தல்ஸ்தோய் ‘ஒரு சிறிய விவசாயி தனக்குள் முணுமுணுத்தபடி தண்டவாளத்தில் வேலைசெய்துகொண்டிருந்தான்’ என அக்கனவை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

 

*

இந்திய மொழிகளில் எல்லாம் அன்னா கரீனினா 1950களிலேயே வெளியாகியிருக்கிறது. அனேகமாக உலக மொழிகளில் அனைத்திலும் வெளிவந்திருக்கலாம். அன்னா கரீனினாவின் சுருக்கமான வடிவம் ஏற்கனவே சந்தானம் மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்திருந்தாலும் இப்போதுதான் இந்த மாபெரும் நாவல் முழுமையாக வெளிவருகிறது. பல்வேறு ருஷ்ய நாவல்களை மொழியாக்கம் செய்த மூத்த மொழிபெயர்ப்பாளரான பேரா.நா.தர்மராஜன் இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார். மதுரை பாரதி புக் ஹவுஸ் வெளியிட்டிருக்கிறது.

மிகச்சரளமாக வாசிக்கும்படியாகவும், அதேசமயம் முழுமையாகவும் இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நா.தர்மராஜன் அவர்கள். அவர் ருஷ்யாவில் பல காலம் இருந்தவராதலால் நுண்தகவல்கள் எல்லாம் சீராக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தல்ஸ்தோய்யின் நாவல்கள் வெறும் மானுடசித்திரங்கள் மட்டுமல்ல. அவை ருஷ்யப் பண்பாட்டின், ருஷ்ய நிலத்தின், ருஷ்ய வரலாற்றின் பதிவுகளும்கூட. அவை முழுமையான நாவல்கள். வாசகனுக்கு ருஷ்யாவில் வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிப்பவை. அந்த அனுபவத்தை அளிப்பதாக உள்ளது இந்த மொழியாக்கம்.

ஒரு மாபெரும் கலையனுபவத்துக்காக, மானுட வாழ்க்கையைப்பற்றிய மெய்த்தரிசனத்துக்காக இன்றைய வாசகன் மீண்டும் அன்னா கரீனினாவிடம் செல்லவேண்டியிருக்கிறது. இம்முறை தமிழிலேயே. அதற்காக நா.தர்மராஜனும் பாரதி புத்தக நிலையமும் நன்றிக்குரியவர்கள்

அன்னா கரீனினா, லியோ டால்ஸ்டாய், தமிழாக்கம் பேரா நா.தர்மராஜன். பாரதி புக் ஹவுஸ்,  மதுரை. Bharathi Book House D 28, Corporation shopping Complex Periyar Bus Stand Madurai 625001 விலை ரூ 500

 

பழைய கட்டுரைகள்

தல்ஸ்தோயின் மனைவி

தல்ஸ்தோயின் கலைநோக்கு

ஓர் எளிய கூழாங்கல்

இரும்புதெய்வத்திற்கு ஒரு பலி
கனவுபூமியும் கால்தளையும்

அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?

இரண்டு வானோக்கிய சாளரங்கள்

ஆண் பெண் சமூகம் இரு கடிதங்கள்

வாழ்க்கையை காட்டுவதும் ஆராய்வதும்

அசடன்

தஸ்தயேவ்ஸ்கி கடிதம்

குற்றமும் தண்டனையும்

அசடனும் ஞானியும்

 

====================

தொடர்புள்ள கட்டுரைகள்

 

 வைரம்

பேரா.நா.தர்மராஜன்

தேடல்,விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்.

காந்தி, கடிதங்கள் தொடர்கின்றன

=====================

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 8, 2010 @ 0:06

முந்தைய கட்டுரைஅன்னா கரீனினா -கடிதம்
அடுத்த கட்டுரைசென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து