‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35

பகுதி பதினொன்று: 4. அழிதல்

காலையில் வந்து கையருகே அமர்ந்து குறுஞ்சிறகடித்து குரலெழுப்பியது நீலக்குருவி. வானம் உருகிச் சொட்டிய துளி. கருவிளை இதழை சிறகாக்கி காற்றில் எழுந்த பூவரசம். கருகுமணி வாய்திறந்து ‘கண்ணா! கண்ணா!’ என்றது. துயில் மலர்ந்து எழுந்தமர்ந்ததும் துடித்தெழுந்து ஆடைதேடின கைகள். அதுவரையில் யமுனையில் ஓர் இளமீனெனத் திளைத்திருந்தேன். ஆடைகொண்டு உடல்மூட அசைந்தால் அகல்வானோ சிறுநீலன் என்று அமைந்திருந்தேன். சிறகதிர, சிறு வாலதிர, கூர்முள் அலகதிர, எழுந்தமர்ந்து அதையேதான் சொன்னான். பொன்மேல் எழுந்த நீலம். புதுமலர் போன்ற நீலம்.

எத்தனை அழகியது பறவையெனும் வாழ்வு. வாடாமலர். வானில் பறக்கும் மலர். வாயுள்ள மலர். விழியுள்ள மலர். உன்பெயர்சொல்லி அழைக்கும் உவகை அறிந்த மலர். நீ என்றே நடிக்கும் நீலச்சிறுமலர். கைநீட்டி “வா” என்றேன். கருமணிக் கண்ணுருட்டி தலைசரித்தது. “கண்ணா வா!” என்றேன். எழுந்தமர்ந்து பின் சிறகடித்து என்னருகே வந்தது. அதன் சிறகசைத்த காற்றும் சிற்றுகிர் கொத்தும் என் மேல் பதிந்தன. முலையுண்ணும் குழந்தையின் முளைநகங்கள். மூச்சுக் காற்றிலாடும் இறகுப்பிசிர்கள். கண்ணென்றான நீர்த்துளிகள். “கண்ணா” என்றது. குனிந்து அதன் விழிநோக்கி “நீயுமா?” என்றேன். ஆம் என்று சிறகசைத்து எழுந்தது. அறைக்காற்றில் மிதந்தேறிச் சென்றது.

ஆடைதிருத்தி கூந்தல் சுழற்றி எழுந்தேன். ஆநிரைகள் என் அசைவறிந்து குரலெழுப்பின. அகத்தளத்தில் மாமி சொல்லும் வசைகேட்டேன். அவள் மகளுரைத்த விடை கேட்டேன். நானிருக்கும் இம்முனையின் நடுவழியில் அவை இறகுதிர்ந்து உதிரக்கண்டேன். என்னை அவர் விழிகள் காணாது. என்னைக் காண இவர் விழி போதாது. குடம் எடுத்து வெளிவந்தேன். குளிரெழுந்த இளங்காலை ஒளியில் கூந்தல் பூத்தேன். என்ன இது, எங்கும் நிறைந்திருக்கும் இசைதான் இப்புவியா? குயிலிசை கேட்டு கூவக்கற்றனவா கூரையேறிய சேவல்கள்? கிளிக்குரல் கேட்டு பாடினவா கிளைததும்ப நின்றாடும் காகங்கள்?

செல்லும் வழியெல்லாம் செவி நிறைந்தது புள்ளிசை வெள்ளம். பொன்சாந்தால் விழி எழுதிய மைனாக்கள். பொன் துளியை அலகாக்கிய ஆலாக்கள். பொற்குச்சப் பாகையணிந்த கொண்டைக் குருவிகள். காட்டுக்கோழிகள், குக்குறுவான்கள். ஒன்றுடன் ஒன்று நிரப்பி ஒன்றேயென ஒழுகும் பேரிசை. மரம்கொத்தி போடும் தாளத்தில் நின்றன. மஞ்சள்வெயிலில் கட்டற்று வழிந்தன. பொன்னுருகி வழியும் காலை. என் புலனுருகி ஓடும் காலை. எண்ணங்கள் சிறகடையும் காலை. என்னை இறைவியாக்கும் இளங்காலை.

யமுனைக்கரையில் இருந்தேன். என் காலடி கேட்டு புதருக்குள் எழுந்தது கனல்மணிக் கண்கொண்ட செம்போத்து. வாழைப்பூ மலரான வண்ணம். அப்பால் கிளைநுனியில் ஆடியது கிள்ளை ஒன்று. பச்சை இலைபோன்ற இறகடித்து சுழன்றமைந்தது. நீரில் தவழ்ந்தன வெண்சங்குக் கணமென வாத்துக்கூட்டம். செங்காலில் நின்ற கொக்குகள். செவ்வலகு சொடுக்கும் நாரைகள். நீர்ச்சதுப்பின் அருகமர்ந்தேன். நீட்டியகாலில் முத்தமிட்டன வெள்ளித்தளிர்கள். பொன்வெளியே, பொற்கதிரே, வானம் விளைந்த மணிவயலே! என்னுள்ளம் பொங்கும் எழிற்கணமே. விண்ணறிந்த பறவைகளே. எச்சொல்லால் எத்தனை நீள்மூச்சால் என்னை நான் முன்வைப்பேன்?

இன்றொருநாள் நிகழுமென இத்தனைநாள் எண்ணவில்லை. இன்றுநான் வாழ்வேன் என எக்குறியும் சொல்லவில்லை. இளந்ததளிர்மேல் விழுந்த இடிமழை இந்நாள். நிறைந்த சிமிழ்மீது பொழியும் பேரருவி. என்முன் விழி விரிந்த மலர்களே. என்னைச்சூழ்ந்த கிளைக்கைகளே. கிளைநிறைத்து பரிதவிக்கும் இலைநாவுகளே. எத்தனை கண்கள் கொண்டால் இந்நாளில் மலர்வேன்? எத்தனை கைகள் கொண்டால் என் நெஞ்சை நடிப்பேன்? எத்தனை நாவெழுந்தால் என் நெஞ்சை உனக்குரைப்பேன்? இனியவனே, எத்தனை கால்கள் கொண்டால் எழுந்தாடி இப்புவி நிறைப்பேன்? இந்நாள் இந்நாள் என்று முதற்சொல்லில் மயங்கியது சித்தம். இனியொருநாள் இல்லையென்று எண்ணி ஏங்கியது உள்ளம்.

இன்னொரு பகலை கடந்தேன். இன்னொரு வாழ்வை நடித்தேன். சென்றதொரு யுகத்தில் இருந்தேன். சேர்ந்த ஏதுமின்றி மீண்டேன். எனைச்சூழ்ந்து பறவைக்குலம் கூவியது. “ஏனிங்கிருக்கிறாய்? இன்னும் எவ்வண்ணம் இருக்கிறாய்?” அதிர்ந்ததிர்ந்து அசையும் விரல்களை சேர்த்துக்கொண்டேன். ஆடும் கால்களை குறுக்கிக்கொண்டேன். என் சிறுவீட்டுத் திண்ணையில் உடல்ஒடுக்கி அமர்ந்தேன். சிவந்தெழுந்து தழலாடி சோர்ந்தணைந்த பகலை கணமென்று, கணத்துளியென்று எண்ணி இருந்தேன். என் முற்றத்துமேட்டில் அலையடித்துக் கடந்துசென்றது செம்பருந்தின் நிழல். என் முகப்பு மாமரத்தில் கூவி நெஞ்சழிந்தது சேவல்குயில். அருகே கண்புதைத்து மயங்கியது குரலற்ற பேடைக்குயில்.

அந்தி எழுந்தது. என் கைபட்டுச் சிதறி அறைபரந்தது குங்குமம். செங்குருதி வழுக்கி என் கால் சிவந்தது. கைவிரல் நுனி சிவந்தது. தொட்ட முகம் சிவந்தது. இருவிழி சிவந்தன. அள்ளி முகம் கழுவி ஆடிமுன் நின்றேன். மாலைப்பொன்வெயில் என் முகம் மீது விழுந்ததோ என்று ஐயுற்றேன். வெளியே கரும்பட்டு சரிந்தது. முல்லையும் மந்தாரையும் அல்லியும் கூவிளமும் கலந்தெழுந்த காற்று அறைநிறைத்தது. கொடித்துணிகள் பதைத்தலைந்தன. கிளர்ந்தெழுந்த சேவலின் கொண்டைப்பூவென ஏற்றிவைத்த அகல்சுடர் எழுந்தெழுந்து துடித்தது. வெளியே கூடணைய விழையாத தனிக்காகம் இருளில் கரைந்து திளைத்தது. எழுந்து நின்றது ஒரு பெயர். எண்ணத்தில் கொழுந்தாடியது. என் உடலெங்கும் பற்றி எரிந்தது. விரல்நுனிகளில் நகமென நின்றது கனல்.

முன்நிலவு எழுந்த இரவில் மலைச்சரிவில் பூத்த மலர்க்கடம்பின் கீழ் நின்றிருந்தேன். இன்றுநான் உன்னை என் இருகையில் சேர்க்கும் ஸ்வாதீனஃபர்த்ருகை. என் செவிசூழ்கின்றது மாலஸ்ரீ. இளங்காற்றில் சுழல்கிறது ஜைதஸ்ரீ. குழல் ஆளும் குளிர்காற்றில் என்னை உதறி எழுந்தன நான் கொண்ட எண்ணங்கள். நிலவாளும் ஒளிவெளியில் பூஞ்சிறகு கொண்டு பறந்தன. விண்மீன்களைச் சூடிய இரவு. முடிவிலி அணிந்த கரும்புடவை முந்தானை. வசந்தகால இரவு. வண்ணங்கள் கரைந்தழிந்த இரவு. நீலக்கடம்பு இரவில் பூத்ததா? தாமரைமலர்கள் இதழவிழ்ந்தனவா? அங்கே மண்ணிலிருந்து விண்நோக்கி எழுந்ததா எரிவிண்மீன்?

இசைவென்ற வெளியில் எழுந்தான் என் கண்ணன். திசைதோறும் தெரிந்தான். நீரில் நிலவொளி போல் ஓசையின்றி நடந்தான். என்னருகே வந்து என் கண்நோக்கி நின்றான். இமைதாழ்த்தி நின்றேன். என் உடல்கொண்டு பார்த்தேன். “இன்று உன் வானத்தில் நூறு நிலவு” என்றான். என்னுள் நகைத்து பின் விழிதூக்கினேன். வெண்தாமரைக்குளம் என வானம் பூத்திருக்கக் கண்டேன். “என்ன இது மாயம்?” என்று சிணுங்கினேன். “உன் மனமறியாத மாயமா?” என்றான். உளம்பொங்கி உடலழிந்தேன். என் விழி துளித்து வழியக்கண்டேன். இதழ்கடித்து என்னை வென்றேன். ஏதும் உரைக்காமல் வீணே நின்றேன்.

மெல்ல வந்து என் தோள்தொட்டான். மீட்டும் கரத்தால் என் இடை வளைத்தான். மெய்ப்பெழுந்து மென்மை அழிந்தது என் உடல். கைக்குழியில் எரிந்தது ஈரக்கனல். கண்நோக்கி குரல் கனிந்தான். “விண்நோக்கி நின்றாய். வேறெதுவும் வேண்டாய். உன் கலம் நிறைந்தபின்னர் என்னில் ஏதும் எஞ்சாது ராதை.” ஈர விழிதூக்கி இதழ்வெதும்பி கேட்டேன் “எத்தனை நீண்ட தவம். ஏனென்னை இத்தனை வதைத்தாய்?” சிரித்து “விதைசெய்யும் தவம் அல்லவா வண்ணமலர்?” என்றான். இளம்பல்காட்டி நகைத்து “உன் சொல்லுக்குமேல் என் சிந்தை செல்லாது. இனி நீ சொல்லவும் வேண்டாம்” என்றேன். “உன் பாதத் தடங்களில் பூத்தமலர்கள் என் சொற்கள்” என்றான்.

உண்மையைச் சொல், நீ சொல்லும்போது மட்டும் என் பெயருக்கு சிறகு முளைப்பதேன்? நீ நோக்கும் இடத்தில் என் தோல்சிலிர்ப்பதேன்? உன் விழி தொட்ட இடத்தை என் விரல் சென்று தொடும் விந்தைதான் என்ன? உடலே ஒரு விழியாக உனைப்பார்க்கிறேன். நான் காணாத அழகெல்லாம் கொண்டிருக்கிறாய். உடலே ஒரு நாவாக தித்திக்கிறேன். குறையாத தேனாக என் முன் நிற்கிறாய். வென்று வென்று சலிப்பதில்லையா உனக்கு? வேறுபணி ஏதும் நீ கொண்டிருக்கவில்லையா? மண்ணில் விளையாடும் மழையை நீ கண்டதில்லையா?

என்னவென்று ஆட்டிவைக்கிறாய்? என் நெஞ்சிருந்து நீ நடிக்கிறாய். உன் முன் நின்றுருகும் உடலைமட்டும் அறிந்திருக்கிறாய். கைதழுவும் மெல்லுடலில் காதல் கொண்டாய். உன் கண் தொடாத இருளில் நீந்துகின்றாய். ‘ம்ம்ம்’ என்று சொல்லி விலகினேன். “ஏன்?” என்று சொல்லி அணுகினாய். என்னென்றுரைப்பேன்! என் உடல் பிளந்து பலவாகி உனைச்சூழும் வண்ணம். இரு நாகங்கள் சீறி உன் தோள்வளைத்தன. வெண்களிறொன்று துதிகொண்டு உன் இடை வளைத்தது. நுனிக்காலில் நின்று உன்மேல் படர்ந்தேன். கொழுகண்ட கொடியறியும் முழுமை இது.

இன்றுகாலை கூட்டுச்சுவர் உடைத்து வான் கண்டது செவ்விதழ் பட்டாம்பூச்சி. வண்ணச் சிறகசைத்துச் சொல்லும் ஒரு சொல் வானிலேற்றி நிறுத்தும் வகை அறிந்தது. குருதிக்கீற்றென காற்றில் அலைந்தது. குங்குமத்தீற்றென ஒளியில் வழிந்தது. எங்கிருந்தோ எழுந்த காற்று எண்திசை நிறைந்தது. இரவின் குளிர் கலந்த காற்று. யமுனையின் நீர் சுமர்ந்த காற்று. நெஞ்சுக்குள் நிலத்தின் வெம்மைகரந்த காற்று. எத்திசையில் எழுந்தாலும் இனியவனை நோக்கியே தள்ளிச்சென்றது. அவன் தோளிலும் இடையிலும் தாளிலும் முடியிலும் சுழன்றது. செஞ்சிறகிணையை அள்ளி அலைக்கழித்தது.

அடிமரக் கொடியென நரம்பெழுந்த புயங்களில் மெல்ல அமர்ந்தது. அவன் கைநீட்ட அஞ்சி எழுந்து சுழன்றது. அறியாத விசையால் நீலப்பாறைத் தோளில் பதிந்தது. அவன் மென்மயிர்க் கன்னத்தில் பட்டு அதிர்ந்தது. அங்கு தன் சிறகுத்தடம் விட்டு எழுந்தது. அசையாத ஆடிப்பாவை கண்டு திகைத்தது. அவன் மூக்கில் கழுத்தில் செவியில் என அமர்ந்தமர்ந்து எழுந்து. ஆறாமல் தவித்தது. பின் தன்னைப்போல் தவிக்கும் தன் ஆடிப்பாவை ஒன்றைக்கண்டு அதிலமர்ந்தது. குங்குமம் அணிந்தது குங்குமம். எரி சிதையேறிய எரியுடல். அங்கே தேனருந்தி தேனாகி சிறகு பூட்டியது.

மலர்கனத்து வளைந்த மரக்கொம்பில் இரு மணிப்புறாக்கள். அஞ்சி அலகுபுதைத்தவை. அணித்தூவல் குவைகள். அவன் கை நீட்டக்கண்டு அதிர்ந்து எழுந்தமைந்தன. மெல்ல நகைத்து கைநீட்டி “அஞ்சாதே” என்றான். அருகணைய அருகணைய விலகி அகலத்தை மெல்லக்குறைத்து அவை நின்றன. ஒன்றை ஒன்று நோக்கி வெட்கின. எங்கோ நோக்குபவை போல் நடித்தன. விழிநோக்காமலேயே அவன் விரல் கண்டவை. செவ்வலகு எழுந்தவை. நெஞ்சில் இறகு புடைத்து பெருத்தவை. நெருங்கு என்று குரலும் அஞ்சி நீங்கிச்செல்லும் கால்களும் கொண்டவை.

“அச்சமென்றால் அவ்வண்ணமே ஆகுக” என்று விலகினான். தோகை விரித்த மடமயிலை நாடினான். நீள்கழுத்து சொடுக்கி அவனை நோக்கியது. நீலக்கூந்தல் சுழற்றி அவன் முகம் மறைத்தது. கூந்தலருவியின் கீழ் நின்றான். பீலிக்குளிர் அருவி. பெய்யும் விழியருவி. சாமரமாயிற்று. சரிந்து அவனை மூடும் மென்மழையாயிற்று. பூமரமென காற்றிலாடியது. பொழிந்து அவனை கொண்டது.

அஞ்சி அடிவைத்து அவன் தோளில் அமர்ந்தன வெண்புறாக்கள். கருநீல மேனியை தொட்டுத் தொட்டுச் சிவந்தன கருங்கூர் அலகுகள். தோளமர்ந்த மென்மைகளை கைகளில் அள்ளினான். கண்சுழித்து உருட்டி சிறகடக்கி விரல்வெம்மையில் ஒடுங்கின. அவன் முழங்கை மடக்கில் மணிக்கட்டில் மடியில் சென்று அமர்ந்தன. அச்சம் துடிக்கும் ஒலி கொண்டவை. குருதி ஓடும் சுதி கொண்டவை. காற்றெழுந்தமைந்த களிப்பந்துகள். அவன் இதழ்கள் தொட்டதும் விழி கூர்ந்தன. அவன் மூச்சின் வெம்மையில் இறகு சிலிர்த்தன. அவன் கன்னக்கதுப்பில் அலகு தீட்டின. “அய்யோ” என எழுந்து சிறகடித்தன. அவன் நீட்டிய கைகளை நோக்கி நகைத்தன.

மீண்டும் ஆவல் கொண்டு வந்தமர்ந்தன. நாணி இறகுக்குள் அலகு புதைத்தன. ஒன்றோடொன்று ஊடி விலகின. ஒன்றுடன் ஒன்று ஒண்டி அமர்ந்தன. அவன் பாதத்தில் பதிந்தன. தொடைகளில் நடந்தன. தசை வயிற்றில் புதைந்தன. மார்பில் உலாவின. கழுத்தில் அமைந்தன. உதடுகளில் அலகு சேர்த்தன. அஞ்சி விழியிமைகளை அலகுதொட்டு நோக்கின. நெற்றியில் சிறகமைத்தன. அவன் நகைத்து கைநீட்ட நாணி எழுந்து பறந்தன. அவன் எண்ணி எண்ணாது நடிக்கையில் வந்தமர்ந்து ஒண்டின.

மென்பனித் தூவல் கொண்டது அன்னம். அலைகளிலாடி அலையென்றானது. நீர்த்துளி வழுக்கும் பளிங்குப் பரப்பு. வெண்நிலா ஒழுகும் தண்பனிப் பாளம். விரல் தொட உருகி வழிந்தது. சிறகமைந்து அங்கே அமைந்தது. பின் கையுதறி விலகி நீரில் மறைந்தது. மெல்ல எழுந்தது. இறகு விரித்து அமைத்தது. அருகணைந்து நின்றது.

“நிலவுத் திரியிட்ட ஆலயம். நீ அதன் தேவி” என்றான். என் இருகைபற்றி அழைத்துசென்று மலைச்சுனை அருகே நிறுத்தினான். “பதினாறு பணிவிடைகள் உனக்கு. பருவம் தோறும் ஒரு பெருவிழா. பகல் ஐந்து பூசை. இரவில் நீ என்னவள்” என்றான். “என்ன இது? நான் எளியோள். ஆயர்மகள்” என்றேன். “ஆலய முகப்பில் கைகுவிக்கிறேன். அகிலும் சாந்தும் அணியும் மலரும் கொண்டு வருகிறேன். அன்றலர்ந்த மலர்கொண்டு பூசெய்கிறேன். அடியவன் பணிவதே இறைவடிவென்றாகும்” என்றான். “அய்யோ, நான் என்ன செய்வேன்” என நகைத்து முகம் மூடினேன்.

“என்ன இவ்வணிகள்? பொன்னும் மணியும் பெண்களுக்குரியவை. தேரிறங்கி மண்ணில் வந்த தெய்வங்கள் தீண்டலாமா?” என்றான். என் குழல்சுற்றிய மணிச்சரத்தை மலர்தொடுத்த நார் விலக்குவதுபோல் எடுத்தான். காதணிந்த குழைகளை மடல்தொட்டு கழற்றினான். மூக்கிலாடிய புல்லாக்கை மெல்லத் திருகி எடுத்தான். கழுத்தணிந்த ஆரங்களை கைதொட்டு நீக்கினான். முலைதவழ்ந்த முத்தாரம் முத்தமிட்டு நீக்கினான். மேகலை அகற்றிய மெல்விரல் தீண்டி பொன்புனல் சுனையொன்று புதுச்சுழி கண்டது.

“பூமி ஒரு மொட்டாக இருக்கையில் உனக்காக முகிழ்த்து இத்தனைநாள் தவம்செய்தது இம்மலைப்பாறை” என்றான். என்னை தோள்தொட்டு அதில் அமர்த்தினான். உன் பின்னழகு அமைய இப்பள்ளத்தைச் செதுக்கின பல்லாயிரம் ஆண்டுப் பெருமழைகள்.” தாமரை இலைபறித்து சுனைநீர் அள்ளி வந்தான். “இலைகொண்ட நீரால் மலர்கழுவுதல். தன்னில் மலராத தாமரையை ஒருநாளும் கண்டிராது இம்மலைச்சுனை” என்றான்.

குளிர்நீர் கொண்டுவந்து என் கால்கழுவினான். “என் நெஞ்சில் நடந்த பாதங்கள். மலர் உதிர்ந்து மலைப்பாறை வடுவான மாயத்தை யாரறிவார்?” என்றான். என் குதிகாலை தொட்டு வருடினான். பாத வளைவில் விரலோட்டினான். விரல்களை சேர்த்தணைத்தான். சிணுங்கிய சிலம்பை மெல்லத் தட்டி கழற்றி வீசினான். என் இருகையைக் கழுவினான். சிவந்த சிறுவிரல்களை ஒவ்வொன்றாய் அழுத்தினான். “சிறு செங்குருவிகள் கொண்ட பொன்னலகுகள்” என்றான். விரலொன்றுக்கு நூறுமுத்தம் ஈந்தான். விதிர்ந்து நின்ற சுட்டுவிரலை வெம்மை எழுந்த தன் வாய்க்குள் வைத்தான்.

நாகம் தீண்டிய செவ்விரல் போன்றவை நீலம் பரவிய ஊமத்தைப்பூக்கள். அவற்றின் நச்சுக்குவளைக்குள் தேங்கிய மழைநீர் கொண்டுவந்து தந்தான். “உன்மத்த மலர்நீர். உன் பித்துக்கு இதுவே அமுது” என்றான். நான் அருந்திய மிச்சத்தை தானருந்தினான். என் இதழ் நின்ற தனித்துளியை நாவால் எடுத்தான். என் இடைபற்றி சுனைக்கரை கொண்டு சென்றான். “அதிகாலை ஆலயத்தின் அணிகொள்ளா அன்னைசிலை நீ” என்றான். “அய்யோ” என நான் அள்ளிப்பற்றும் முன்னே ஆடை பற்றி இழுத்தான். நழுவத்தான் காத்திருந்தனவா நானணிந்த உடையெல்லாம்? நின்று அதிரத்தான் எழுந்தனவா நிமிர்முலையும் பின்னழகும்? நிலவொளி அணிந்து நிமிர்ந்து அங்கு நின்றேன். அவன் நீர்விரிந்த நிலவள்ளி என்னை குளிராட்டினான்.

“மென்சந்தனம், மலைவிளைந்த செம்பஞ்சு” என்று சொல்லி சுனைக்கரையின் செஞ்சேறு அள்ளி என் முலைபூசினான். செம்மண் விழுதெடுத்து இடைபூசினான் “மதகளிறின் மத்தகம் அணிந்த கொன்றை. உன் இளமுலை கொண்ட தொய்யில்” என்றான். என் உடல் மண்ணில் ஒளித்தது. கோடி விதைகள் கண்விழித்து முளைவிட்டெழுந்தன. சாந்து உலர்ந்து வெடிக்கும் வெம்மை. செம்பஞ்சை வெல்லும் செம்மை. என் மேல் எழுந்த காட்டில் மலர்ந்த கோடி மலர்கள். கூவி சிறகடித்தன குழல்கொண்ட பறவைகள்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

தாமரைக்கொடி பிழுது நூலெடுத்து என் தோள்சார்த்தினான். அதை இரு முலைநடுவே நிறுத்தி வைத்தான். நீரோடும் பாறை வழி. நெளிந்தோடும் நாக உடல். “எனை எண்ணி ஏங்குகையில் எழுந்த முலை நெரிக்கவேண்டும் இப்புரிநூல்” என்றான். செண்பக மலர்ப்பொடி அள்ளி என் உடல்பூசினான். பாரிஜாதம் அள்ளி என் குழல்சூட்டினான். “எரிதழலுடலோன் சூடிய எருக்கே உன் பித்துக்கிசைந்த பூசைமலர்” என்றான். கொன்றை மலர்கொண்டு மஞ்சள் பரல் தூவினான். மருதமலர் கொளுத்தி மணத்தூபம் காட்டினான். வாழைமடல் எடுத்து காந்தள் இதழ் வைத்து அகலேற்றினான். மின்மினி கொண்டு சுடர் கூட்டினான்.

பணிவிடைகள் கொண்டு தெய்வப் படிவமானேன். உள்நின்று எரிந்து தேவியானேன். விழிசுடர்ந்து கை அருளி நின்றேன். “உன் பலிபீடத்தில் நான் அமுதம்” என்று தன் தலையெடுத்து என் தாளிணையில் வைத்தான். “என் இதழ் சுவைக்கும் தாம்பூலம் உனக்கு” என்றான். இவ்வுலகும் அவ்வுலகும் எவ்வுலகும் அறியாமல் இதழோடு இதழ்கரந்து சுவையொன்று தந்தான். என் செவியில் எனை விண்ணேற்றும் மந்திரமொன்று உரைத்தான். “ராதை” அச்சொல் மட்டும் அப்பொழுதை ஆண்டது.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஅம்புபட்ட பறவை
அடுத்த கட்டுரைவெண்முரசு -மதிப்புரை