வெண்முரசு -மதிப்புரை

mahabharat_battlecrop_by_sspatra-d7rlrz9

வெ.சுரேஷ் வெண்முரசு நாவலின் மூன்றுபகுதிகளைப்பற்றியும் ஓர் அறிமுக விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வெண்முரசை வாசிக்கும் வாசகர்களுக்கு அதை இன்னொரு கோணத்தில் தொகுத்து நோக்கவும், புதியவாசகர்களுக்கு அதன் பக்கங்களை அறிமுகம் செய்துகொள்ளவும் இக்கட்டுரை உதவும்

சுரேஷ் தன் கட்டுரையில் விரிவான பாராட்டுகளுடன் அவர் கண்ட சில குறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவற்றுக்கு நான் ஏற்கனவே இந்த தளத்திலும் வெண்முரசு விவாதங்கள் என்னும் தளத்திலும் பல வினாக்களுக்கு விடையாக விரிவான பதிலை அளித்திருக்கிறேன்.

*

சுரேஷ் முக்கியமாகச் சுட்டிக்காட்டுவது பருவநிலை மாற்றங்கள் -அதாவது வெயில்காலம் மழைக்காலம் போன்றவை மாறிவருவது- பற்றிய சீரான போக்கு மழைப்பாடலில் இல்லை என்பதுதான். அது அவர் இந்தியாவின் பருவங்களை திட்டவட்டமாக எளியதகவல்கள்மூலம் வகுத்துக்கொண்டிருப்பதன் விளைவு.

நாவலுக்குள் அச்சித்தரிப்புகள் இதுவரையில் எந்தப்பிழையும் இல்லை. பலமுறை சரிபார்க்கப்பட்டபின்னரே அவை அமைக்கப்பட்டிருக்கிறன. நாவலுக்குள் மழை போன்ற பருவங்கள் பிந்தி வருமென்றால் அதற்கான காரணங்கள் இருக்கும். காந்தாரி நகர்புகும்போது வரும் மழை மிக பருவம் தவறி வருகிறது. ஒரு பெரும் கற்பரசி வருவதற்காக அது காத்திருந்தது. இமையமலைச்சாரலின் மழை என்பது தனக்கே உரிய நியதிகள் கொண்டது. அங்கே உலவியவர்கள் அதை அறிவார்கள்.

இரண்டு நிலக்காட்சிச் சித்தரிப்புகளில் உள்ள சிக்கல் பற்றியது. குறிப்பாக குமரிக்கண்டம். மகாபாரத காலகட்டத்தில் மேற்கே தேவபாலபுரம் முதல் கிழக்கே தாம்ரலிப்தி வரையிலான அனைத்துத் துறைமுகங்களும் அடுத்த ஆயிரம் வருடங்களுக்குள் நீரில் மூழ்கி மறைந்தோ இடம்மாறியோ சென்றுள்ளன. அதில் ஒன்றாகவே தொல்மதுரை சுட்டப்படுகிறது.

நாவல் காட்டும் தொல்மதுரையும் ஏழ்பனைநாடு போன்றவையும் தொல்மதுரையும் இன்றுள்ள நிலத்திலிருந்து எழுந்த நிலநீட்சிதான். அதை இங்குள்ள வழக்கமான லெமூரியா கண்டத் தொன்மங்களுடன் குழப்பிக்கொண்டிருக்கிறார். அந்த தொல்மதுரை அலைவாய் என அழைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் புதியமதுரை ஆலவாய் எனப்பட்டது. திருச்செந்தூர் திருச்சீரலைவாய் எனப்பட்டது

அந்த மதுரையில் கன்னியின் காலடித்தடம் இருந்தது. அதுதான் குமரி. அதன் நகல்தான் பின்னர் இன்று அமைக்கப்பட்டிருக்கும் குமரிமுனை ஆலயம். அந்த பழங்கால்த் தொன்மம்தான் நாவலில் உள்ளது. அது இயல்பாக பிற தொன்மங்களுடன் கலக்கவும் செய்கிறது.

சமணர்களைப்பற்றி மகாபாரதத்தில் குறிப்புகள் இல்லை. ஆனால் சமண வரலாறுகள் முதல் ஐந்து தீர்த்தங்காரர்களை மகாபாரத காலத்த்துக்கும் முந்தையவையாகவே சுட்டுகின்றன. அதேபோல சிந்துசமவெளி ஊர்கள் பற்றிய குறிப்புகளும் இல்லை. ஆனால் இந்நாவலில் ஏன் அவை தேவைப்படுகின்றன என்பதை வண்ணக்கடலின் அசுரர் கதைகளை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளமுடியும்

வியாச மகாபாரதத்தின் கதைகூறும் முறை பல அடுக்குகள் கொண்டது. அதிலேயே பல அடுக்குகள் உள்ளன. பலமுறை அக்கதை வெவ்வேறு மாற்றங்களுடன் சொல்லப்படுகிறது. அதன்பின் பிற புராணங்களில் அக்கதைகள் விரிவாக்கம்செய்யப்பட்டுள்ளன. மகாபாரதத்தை ஒரு புராணமாக அப்படியே சொல்வதற்கு அவை இடர் ஏற்படுத்துவதில்லை.ஆனால் யதார்த்தமான கதையாகச் சொல்லமுயல்கையில் ஒரு சீரான கால-வம்ச வரிசையை அடையவேண்டியிருக்கிறது.ஆகவே அக்கதைகளில் பொருத்தமான ஒன்றைத்தான் எடுத்தாளவேண்டியிருக்கிறது.

வெண்முரசு மகாபாரதம் சொல்லும் கதைகளில் ஒன்றை எடுத்துக்கொள்கிறது. கர்ணன் எவரென்று குந்திக்குத் தெரியாது என்ற ஒரு கதை மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் உள்ளது. அதுவே பிரபலம். ஆனால் வியாசமகாபாரதமே குந்தி கர்ணனை அஸ்தினபுரிக்குக் கொண்டுவந்து துரோணரிடம் கல்விகற்கச்செய்தாள் என்றும் சொல்கிறது- வனபர்வத்தில். அதுவே இக்கதைக்கு உகந்ததாக உள்ளது.

அதேபோல சிகண்டியின் கதை. மகாபாரதத்திலேயே இந்தக்குழப்பம் உள்ளது. துருபதனாகிய யக்ஞசேனனின் மைந்தனாக அவன் சொல்லப்படுகிறான். அதேசமயம் பல இடங்களில் யக்ஞசேனனின் தந்தையும் யக்ஞசேனன் என்றே சொல்லப்படுகிறான். வம்சவரிசை நான்கு இடங்களிலும் மகாபாரதத்தில் குழம்பிய நிலையிலேயே உள்ளது. இந்தக்குழப்பம் வெட்டம் மாணியின் புராண கலைக்களஞ்சியத்திலும் சுட்டப்பட்டிருக்கிறது. சிகண்டி துருபதனின் மைந்தன் என்றால் தலைமுறைக்கணக்கு பிழையாகிறது.

மகாபலியின் கதை கேரளத்தின் தொன்மம் என்று சுரேஷ் எடுத்துக்கொள்கிறார். அது இந்தியாவின் மிகப்பழைமையான தொன்மம். மகாபலி வழிபாடு இந்தியாவெங்கும் இருந்தது. கேரளத்துக்குத்தான் மிகப்பிந்தி வந்தது.

சுரேஷ் யுக்கணக்கை குறிப்பிடுகிறார். அதை காலக்கணக்காக புராணங்களைக்கொண்டு வகுக்கமுடியாது. எல்லா முனிவர்களும் எல்லா காலத்திலும் தோன்றும் ஒருவெளி புராணம். ஆகவே யுகம் என்பது ஒரு வகை ‘குண’நீதியான மதிப்பீடுதான்

இவ்விளக்கங்கள் அனைத்தும் முன்னரே அளிக்கப்பட்டுள்ளன

இந்நாவலில் மறுபிறப்பு போன்ற ‘மாயங்கள்’ சித்தரிக்கப்படவில்லை. ஏனெனில் மறுபிறப்பு என்பது ஓரு புனைவு உத்தி அல்ல. அது ஒரு மதம்சார் உருவகம். ஒருவகை மாற்று யதார்த்தம்.அத்தகைய வழக்கமான புராணமாயங்கள் அனைத்தும் தர்க்கபூர்வமாகவே காட்டப்படுகின்றன. அவற்றை அப்படியே உள்ளடக்கினால் இது ஒரு நவீனப்படைப்பாக ஆகாது.

இந்நாவலில் எங்கெல்லாம் மாயம் வருகிறதோ அங்கெல்லாம் அதற்கு குறியீட்டுப்பொருள் இருக்கும், பிரபஞ்ச விளக்கம் இருக்கும். அந்தச்சித்தரிப்புகள் எல்லாம் இந்த காலகட்டத்தின் நவீன மிகைபுனைவின் அழகியல் விதிகளின்படியே எழுதப்பட்டிருப்பதை வாசகர் கவனிக்கலாம்.

இந்நாவல் செவ்வியல்பண்பு கொண்டது. செவ்வியலின் இயல்புகளில் ஒன்று அது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருப்பதே. குழந்தைக்கதையாகவும் நுட்பமான உளவியல்நாடகமாகவும் சாகசக்கதையாகவும் கவித்துவம்கொண்டதாகவும் தத்துவவிவாதத்தன்மை கொண்டதாகவும் தேவதைக்கதையாகவும் எல்லாம் அது தன்னை உருமாற்றிக்கொள்கிறது.எல்லாம் அதில் இருந்தாகவேண்டுமென்பதே அதன் வடிவம். அதற்கான நியதிகள் அதில் இருக்கும். பீமனின் சாகசங்கள் எப்போதும் குழந்தைக்கதைகள்தான்.

நாவல்களின் வடிவம் அதன் எதிர்காலத் தேவையையும் கருதி உருவாக்கப்படுவது. அவ்வடிவங்களில் அவை முழுமைகொண்டுள்ளன என்பதே என் எண்ணம். அது வாசகரின் தேவை அல்லது வாசிப்பின் சாத்தியங்களைப் பொறுத்து மாறுபடலாம். என் நோக்கில் இளநாகனின் கதை என்பது அவைதிக தத்துவங்களை இணைத்து அசுரர் கதை நோக்கிச்செல்லும் பெரும்பாதை. அதில் நிலமும் தத்துவமும் கலக்கும் ஒரு சித்தரிப்புமுறை உள்ளது. எந்நிலத்தில் எந்த தத்துவம் சொல்லப்படுகிறது என்பது இன்னும் கூர்ந்த வாசிப்புக்குரியது.

*

su

சுரேஷ் என் நண்பர். சிறந்த வாசகர். வெண்முரசின் கூடவே இத்தனை தூரம் தொடர்ந்து வந்திருப்பது நிறைவளிக்கிறது. அவர் சுட்டியிருக்கும் தகவல்பிழைகள் உண்மையில் புராண அறிமுகம் கொண்டபொதுவான சமகால வாசகர் அடையும் திகைப்பு மட்டுமே. அவர் சுட்டுபவை இந்நாவலில் உள்ள பிழைகள் என நான் எண்ணவில்லை. எனவே அவர் சுட்டிய எதையும் பிழை அல்லது குழப்பம் என்று கொள்ளமுடியாது. நாவல் அவற்றை முழுமையாகவே நியாயப்படுத்துகிறது. [இத்தகைய விரிவான தகவல் விளக்கத்தை ஒவ்வொருமுறையும் நான் அளிக்க முடியாது. ஆனால் தகவல்பிழைகள் சுட்டப்பட்டால் அவற்றை திருத்திக்கொண்டுதான் இருக்கிறேன்]

நம் தலைமுறையில் மகாபாரதம் பலமுறை பலவாறாகச் சொல்லப்பட்டிருக்கிறது.வெண்முரசு ஒரு நவீனப்பிரதி. அதற்கான சுதந்திரங்களும் அதற்கான மாறுபட்ட நோக்குகளும் கொண்டது. அது உருவாக்கும் ஆரம்பகட்ட திகைப்பைக் கடந்து தான் வாசகர்கள் முழுமையாக அதை உள்வாங்கமுடியும்.

இன்றைய வாசகன் அவன் அறிந்த மகாபாரதத்துடன் ஒப்பிட்டும் முரண்பட்டும் மேலெழுந்தும் தான் இதனுள் நுழைய முடியும். அதிர்ச்சிகள் ஒவ்வாமைகள் குழப்பங்கள் கூடவே புரிதல்கள்,கண்டடைதல்கள் பரவசங்கள் என்றே அந்த பயணம் நிகழமுடியும். இவ்வாசிப்பின் பயன்கள் அந்தப்பயணத்தில் நிகழ்பவை. அவ்வகையில் சுரேஷ் அதனுடன் கொள்ளும் இந்த உரையாடல்- மோதல் ஆக்கபூர்வமானதே. அவருக்கு என் நன்றி

ஜெ

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35
அடுத்த கட்டுரைகுரு என்னும் உறவு