நீலம் மலர்கள்

Daisy

Gooseneck

Echinacea

அன்பான ஜெயமோகன்

நான்தான் சொன்னேனே, நீலம் பற்றி எத்தனை மடல்கள்தான் எழுதுவது? அது மட்டும் அல்ல நீண்ட கடிதங்கள் எங்கே உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுமோ என்ற தயக்கம் வேறு. விட்டால் ஆயிரம் கடிதங்கள் எழுதுவேன், இதைப் பார்த்தீர்களா, அதைக் கவனித்தீர்களா என்று.

நீலத்தில் வரும் மலர்கள், அவற்றின் வாசனையும் சிந்தும் தேனும் திகட்டாத வாசிப்பு. எப்படி எப்படி என்று மலைப்பு ஏற்படுகிறது. வாசித்தது ஒரு கணத்தில் நிற்க பின்னால் சென்று வாசித்து மீள்வேன். எது சிறந்தது, எதைச் சொல்வது? ஒவ்வொரு பூவினதும் சித்தரிப்பின் விரிவை சில சமயம் ஒரு வாசிப்பில் முழுமையாகக் கிரகித்துக் கொள்ள முடிவதில்லை.

மரங்களும், செடிகளும், மலர்களும் என் மனதுக்கும் மிக நெருக்கமானவை. இங்கே என் சிறு தோட்டத்தில் மார்ச் தொடங்கி செப்டம்பரில் முடியும் ஐந்தே மாதங்கள் கொண்ட குறுங்காலத்தில் எத்தனையோ செடிகள் வளர்க்கிறேன். பனியில் இறுகிய நிலம் பிளந்து எழும் முதல் குருத்து, மொட்டு மலராவது, பூவிதழ்களின் வண்ணங்கள் மாறுவது, மாலையில் நீரூற்றி அதில் சிலிர்க்கும் செடிகள், எல்லாமே பரவசம்.

ஒரு நிறத்தில் பூத்து வெயிலேற வண்ணம் மாறுகிற பூக்கள், நல்ல வெயில் நேரம் மழை பெய்தால் சட்டென்று வாசனை வீசுகிற பூக்கள், எந்தக் கிளையிலும் அமராது அந்தரத்தில் சிறகடித்துக் கொண்டு தேன் உண்ணுகிற Hummingbird வந்து போகிறது. போன வாரம் ஒரு புதுச் செடி வாங்கிக் கொண்டு வந்தேன், வண்டியில் இருந்து வெளியே எடுக்கும்போதே ஒரு சின்ன வெண்ணிற வண்ணத்துப் பூச்சி வந்து அந்த ஊதா மலர்களில் அமர்ந்து கொண்டது.

காலநிலை, நில அமைப்பு வேறுபாடுகள் காரணமாக இங்கேயும் உங்களிடமும் வேறு வேறு மலர்கள்தான் மலர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லாமே மலர்கள், அதன் அதிசய உலகம் எதற்காக என்றே அறிவதில்லை.

குமரி மாவட்டம் மலர்களுக்குப் பெயர் போன ஒன்று என்பது நான் அறியாத செய்தி. பார்க்கக் கிடைக்க வேண்டும்.

நான் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுப்புகிறேன். .

வெண்முரசில் வரும் நிலப் பரப்புகள், மரங்கள், மலர்கள், நதி, நீர், அருவி எல்லாச் சித்தரிப்புகளையும் ஒரு euphoric நிலையில்தான் வாசிக்கிறேன். அதிலும் நீலம் ஒன்றை ஒன்று மிஞ்சிய கவிதை அல்லவா.

தத்தி நடக்கும் வாழ்க்கையில் நிகழும் சில மின்னல்கள்

அன்புடன்

ரவிச்சந்திரிகா

அன்புள்ள ரவிச்சந்திரிகா,

குமரிமாவட்டம் மலர்கள் நிறைந்த இடம். அனேகமாக உலகிலேயே மலர்செறிந்த இடங்கள் சிலவற்றில் ஒன்று. காரணம் வெப்ப மண்டலம், மூன்று மழைக்காலம்.

இங்குள்ள மலர்களால் ஆனதாகவே என் இளமைக்கால விழாக்கள் அனைத்தும் இருந்துள்ளன. ஓணம் பத்துநாளும் மலர் கொய்யச்செல்வோம். மிக அதிகமான அளவில் வண்ணங்களில் மலர்கள் கொண்டு ‘அத்தக்களம்’ அமைப்பது பெரிய போட்டி. விஷு என்றால் கொன்றை முதலிய வசந்தகால மலர்கள். பங்குனி உத்தரம் அன்று பூசணி முதலிய நீர்மலர்கள். வாவுபலிக்கு அதற்கான தும்பை தெச்சி முதலிய மலர்கள்.

பகவதிக்கு கமுப்பூ. தென்னம்பூ. துர்க்கைக்கு அரளி. சாஸ்தாவுக்கு தாழை என மலர்கள்.இதைத்தவிர வருடம் முழுக்க கோயில்களில் புஷ்பாபிஷேகம். என் வீடு கோயில் நந்தவனத்தை ஒட்டி இருந்தது. இன்றும் குமரிமாவட்டம் விட்டு நான் செல்லாமலிருக்கக் காரணம் பூவின்றி வாழமுடியாது என்பதே

நீலம் அத்தனை மலர்களையும் நினைவிலிருந்து கிளப்பிக் கொண்டுவந்தது

ஜெ

 

மறுபிரசுரம்/ Sep 22, 2014

மலர்கள் நீலம்

மலர்களின் உலகு
பகல்மலர்கள்

உதிர்தல்

இரவுமலர்கள்

கிருஷ்ணதுளசி

முந்தைய கட்டுரைஉலகுடைய பெருமாள் கதை
அடுத்த கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்தின் மூன்று தொகுப்புகள்