«

»


Print this Post

ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே


நகைச்சுவை
ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே என்று நிறுவும்பொருட்டு பிரபல தோமாகிறித்தவ ஆய்வாளரும் அதன் நிறுவனருமான முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரையின் சுருக்கத்தை இங்கே அளிக்கிறோம்.முனைவர் ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் ஏற்கனவே தொல்காப்பியம், எட்டுத்தொகை பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள்,ஐஞ்சிறு காப்பியங்கள், கம்பராமாயணம்,பெரியபுராணம், திருவிளையாடல்புராணம், அரிச்சந்திரபுராணம், நளவெண்பா, கலிங்கத்துப்பரணி, கச்சிக்கலம்பகம்,நாலாயிர திவ்வியபிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம், மீனாட்சியம்மைபிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமிபிள்ளைத்தமிழ், கூளப்பநாயக்கன் காதல், விறலிவிடுதூது, பாரதியார் பாடல்கள் ஆகியவை கிறித்தவ இலக்கியங்களே என்பதை ஐயம்திரிபற அமெரிக்காவில் விளக்கி அங்குள்ள துரைத்தனத்தார் அதை ஏற்றுக் கைதட்ட வைத்தவர் என்பதை இங்கே குறிப்பிடவேண்டியுள்ளது. தேம்பாவணியும் இரட்சணிய யாத்ரீகமும்கூடக் கிறித்தவ நூல்களே என்று அவர் நிரூபித்திருக்கிறார்.

அத்துடன் அன்னார் அவர்களின் புதல்வி முனைவர்.வேதபலா அவர்கள் புதுமைப்பித்தன் கதைகள், க.நாசு.நாவல்கள், கு.ப.ராஜகோபாலன் சிறுகதைகள்,மௌனி விடுகதைகள், ஜெயகாந்தன் கு.அழகிரிசாமி ப.சிங்காரம் படைப்புகள் ஆகியவற்றுடன் – மின்னஞ்சல்களையும் சேர்க்கும்போது எழுபதாயிரம் பக்கங்களுக்கு நீளும் சுந்தரராமசாமி எழுத்துக்கள் அனைத்துமே கிறித்தவ இலக்கியமே என்று ஆணித்தரமாக நிறுவியிருப்பதை சுட்டிக்காட்டவேண்டும். இவ்வாய்வுகள் முற்றிலும் உண்மை என்பதை ஆய்வேடுகளின் கீழே அவர்கள் கைநாட்டுப் போட்டு அதற்கு கொங்குஞானி , மாவடுதுறை ஆதீனம் போன்றவர்கள் சாட்சிக்கையெழுத்தும் போட்டிருக்கிறார்கள். சாரு நிவேதிதாவின் எழுத்துக்களும் கிறித்தவ எழுத்துக்களே என்று அவர் தொலைபேசியில் ரகசியமாக அச்சுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

ஆத்திச்சூடி என்ற பெயர் தவறானது என்று ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அது கிபி எட்டாம் நூற்றாண்டுவாக்கில் ஆரியபிராமணக் கொலைவெறியர்களால் திரிக்கப்பட்டது. உண்மையில் அத்திசூடி என்றுதான் இருக்க வேண்டும். அது அத்திப்பழத்தையே குறிக்கிறது. ஆத்திச்சூடி நூலின் முதல் செய்யுளான காப்புச்செய்யுளில் உள்ள  ‘ அத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே’ என்ற வரியானது அப்படியே ஒரு கிறித்தவப் பாடல் வடிவில்தான் உள்ளது. [எத்தி எத்தி என்று இரண்டாம் வரி இருக்க வேண்டும்]  அகரவரிசையில் உள்ள ஆத்திச்சூடியின் முதல் எழுத்து ‘ஆ’வாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை ஆய்வாளர் கவனிக்கவேண்டும், இதுவே அது அத்திசூடிதான் ஆத்திசூடி அல்ல என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரம் என்று முனைவர் ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்

அத்திப்பழம் உண்பதைப்பற்றிய எந்த தகவலும் தமிழிலக்கிய மரபில் இல்லை. அதேசமயம் பைபிளில் அத்திப்பழம் புனித உணவாகப் பல இடங்களில் சொல்லப்படுகிறது. அத்திப்பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு அதைத்தின்றபடியே மலைப்பிரசங்கத்தை ஏசு நிகழ்த்தியிருக்க வாய்ப்புள்ளது.ஆகவே அத்திச்சூடி என்று குறிக்கப்படுபவர் ஏசுபெருமானே. ‘அத்தி பூத்ததுபோல’ என்ற பழமொழி ஏசு உயிர்த்தெழுந்த அற்புதத்தையே குறிப்பிடுகிறது. ‘அத்திப்பழத்தைப் புட்டுப்பார்த்ததுபோல’ என்ற பழமொழி ஏசுவின் புனித உடலை பக்தர்கள் பிய்த்துத் தின்னும் குறியீட்டுச்செயல்பாட்டைக் குறிப்பிடுகிறது.

அத்திச்சூடி நூலை எழுதியவர் அவ்வையார் என்று சொல்லப்படுகிறது. இவரது உண்மையான பெயர் ஏவாள் என்பதாகும். அதன் திரிபே அவ்வை. இவர் கன்னியாகவே இருந்தார் என்ற வரலாறு உள்ளதை நாம் கவனிக்கலாம். கன்னிமரபு என்பது கிறித்தவம் அன்றி வேறென்ன? ஆகவே ஈவையார் கிபி ஒன்றாம் நூற்றாண்டுவாக்கில் மயிலையில் புனித தோமையர் நிறுவிய கன்னியர்மடத்தின் தலைவியாக இருக்க வாய்ப்புள்ளது. இவர் ‘எட்டேகால் லெட்சணமே எமனேறும் பரியே’ என்று ஒரு செய்யுள் எழுதியிருப்பதிலிருந்து இவருக்கு ‘விரியன்பாம்புக்குட்டிகளே’ என்றெல்லாம் முச்சந்திப்பிரசங்கம் செய்யும் திறனிருப்பதும் தெரியவருகிறது.

இவரது கதையில் இவர் முருகனுக்கு ஞானப்பழம் கொடுத்ததைப்பற்றிப் பாடியிருப்பதாகத் தெரிகிறது. முருகன் என்பது ஏசுவே என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஞானப்பழம் என்பது ஏவாள் ஆதாமுக்குக் கொடுத்த ஞானப்பழம்தானா என்பதை ஆராயவேண்டியிருக்கிறது. பழனிமலையில் ஏசுவானவர் கோவணத்துடன் ஆண்டியாக நிற்பது ஏன் என்பதும் ஆராயத்தக்கது. அவரது உடைகளைக்  கல்வாரியில் காவலர்கள் பகிர்ந்து எடுத்துக்கொண்டபின் உள்ள நிலையை அது குறிப்பிடுகிறது என்று ஊகிக்கலாம்.

ஆத்திச்சூடியின் முதல் செய்யுள் ‘அறம்செய விரும்பு’ என்று சொல்கிறது. அறம் செய்கிறார்களோ அதைச்செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் விரும்புவது கிறித்தவர்களின் இயல்பு. அதுவே அவர்களின் மதத்தின் முதல்கட்டளை ஆகும் .அதையே இச்செய்யுள் குறிப்பிடுகிறது என்று முனைவர்.ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். பிறமதங்களில் அறம் என்பது செய்யவேண்டிய ஒன்றாக இருக்கிறதே ஒழிய விரும்பமட்டும் வேண்டிய ஒன்றாக இல்லை.

‘ஆறுவது சினம்’ என்ற செய்யுளானது ஏசுவின் காயங்களையே குறிப்பிடுகிறது என்பது வெள்ளிடைமலை. [இந்த சொல்லாட்சி கல்வாரி மலையைக் குறிப்பது என்பதும் வெள்ளிடைமலை] சினத்தால் யூதர்கள் உருவாக்கிய ஏசுவின் புண்கள் தெய்வீக அருளால் ஆறுவதை ஈவையார் குறிப்பிடுகிறார்.

‘இயல்வது கரவேல்’ என்ற மூன்றாவது செய்யுள் வெளிப்படையாகவே கிறித்தவம் சார்ந்தது. தங்களால் இயன்றவரை கரைந்தபடியும் கரைத்தபடியும் இருப்பது ஒவ்வொரு கிறித்தவனுக்கும் ஏசுவானவர் விதித்த ஆணித்தரமான கட்டளை அல்லவா? ‘ஈவது விலக்கேல்’ என்பதும் இதையே குறிப்பிடுகிறது. கிறித்தவர்கள் ஒருபோதும் வெளிநாட்டினர் ஈயும் நன்கொடைகளை விலக்கல் ஆகாது. ‘உடையது விளம்பேல்’ என்பதும் இதன் தொடர்ச்சியே. கிறித்தவ நிறுவனங்களில் உடைய செல்வம் என்ன என்பதை பிதாசுதன்பரிசுத்த ஆவியினர் சேர்ந்துவந்து வினவினாலும் சொல்லக்கூடாது.

அடுத்தசெய்யுளான ‘ஊக்கமது கைவிடேல்’ என்பதை வைத்தே அத்திசூடி கிறித்தவ நூல் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக நிரூபித்துவிடலாம். [உள்ளங்கையில் நெல்லிக்காயை வைத்து ஜெபம் செய்வது அராமிக் பண்பாடு என்பதை விளக்க வேண்டியதில்லை] ஊக்கம் + மது என்று பிரித்தால் வரும் அந்த மது என்ன? கிறித்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் மது என்ன? தேவாலயத்தில் ஏசுவின் குருதி என்று கொடுக்கப்படும் அந்த புனிதமது- ஒயின் அல்லவா இங்கே குறிப்பிடப்படுகிறது? இன்றும் ஊக்க மதுவை வழிபாட்டாளர்களுக்கு அளிக்கும் வழக்கம் கத்தோலிக்க தேவாலயங்களில் உள்ளது. அப்போது அந்தக் கோப்பை கைநழுவுவதும் சாதாரணம். அப்போது புனிதகுருவானவர் இந்த செய்யுளைத்தான் இப்போதும் சொல்வது வழக்கம்.

‘எண் எழுத்து இகழேல்’ என்ற செய்யுள் குறிப்பிடுவதற்கு ஒரே பொருள்தான் இருக்க முடியும். எண்கள் போடப்பட்ட எழுத்துக்கள் பைபிளில் மட்டுமெ உள்ளன. எந்த இந்திய நூலிலும் அந்த அமைப்பு இல்லை. பழங்காலத்தில் பைபிள் ‘எண்ணெழுத்து’ என்றே அழைக்கப்பட்டிருந்தது என்பதற்குக் கல்வெட்டுச் சான்று உள்ளது, கல் ரோமாபுரிக்குக் கொண்டு போகப்பட்டிருக்கிறது. பைபிளை இகழக்கூடாது என்றுதான் புனிதகன்னி ஈவையார் ஆணித்தரமாகச் சொல்கிறார்.

‘ஏற்பது இகழ்ச்சி ‘ என்ற செய்யுளைப் படிக்கும் எவரும் அது கிறித்தவப் பண்புநலன் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஓர் உண்மைக்கிறித்தவன் ஒருபோதும் பிறர் சொல்லும் எதையுமே ஏற்கலாகாது என்பதே இச்செய்யுளின் பொருளாகும். அதன் மூலம் அவனுக்கு இகழ்ச்சியே ஏற்படும்.

‘ஐயம் இட்டு உண்’ என்ற செய்யுளையும் நாம் இவ்வாறே காண வேண்டும். பிறரில் ஐயங்களை உருவாக்கி அதைவைத்துத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இச்செய்யுளின் சாரம். இப்பொருளைக் கொள்ள முடியாத பிராமண வெறியர் ஐயம் என்றால் உணவைப் பகிர்தல் என முற்றிலும் ஆதாரமில்லாத பொருளைக் கொள்வது நகைப்புக்கிடமானது. ‘ஒப்புரவு ஒழுகு’ என்றால் தேவாலயங்களில் கிறித்தவர்கள் ஒப்பாக அதாவது சமமாக ஒழுகி வழிபடுவதைக் குறிப்பிடுகிறது. அடுத்தச் செய்யுளில் ‘ஓதுவது ஒழியேல்’ என்பது பைபிளை ஒவ்வொருநாளும் ஓதுக என்றே பொருள்படும்.

‘ஔவியம் பேசேல்’ என்ற செய்யுள் கிறித்தவர்கள் ஒருபோதும் பிற கருத்துக்களைப் பேசக்கூடாது என்று பொருள்படும். அராமிக் மொழியிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு மொழியிலோ ஔவியம் என்றால் பழிக்கப்பட்டது என்று பொருள் என்பதை இங்கே திட்டவட்டமாகக் குறிப்பிட வேண்டியுள்ளது.

இவ்வளவு தூரம் வந்தபின் கடைசிச் செய்யுள்ளான ‘அ·கஞ் சுருக்கேல்’ என்பதும் கிறித்தவப் பொருள் உடையதே என்பதை சொல்லவேண்டியதில்லை

தமிழர்களே உலகுக்கு மெய்ஞானத்தைக் கற்பித்தவர்கள். இந்தியாவெங்கும் உள்ள எல்லா மொழிகளும் தமிழில் இருந்து வந்தவையே. உதாரணமாக பார்+அது என்று தமிழர்கள் சொன்னதனாலேயே பாரதம் என்ற பெயர் வந்தது. இந்தியாவில் இருந்துதான் மெய்ஞானம் சீனா முதலியநாடுகளுக்குச் சென்றது. ‘தமிழ்’ என்ற சொல்லை சீனர்கள் தங்களல் இயன்றவரை சொல்ல முயற்சித்ததன் விளைவே ‘தாவோ’ ஆகும். இந்தக் கோணத்தில் ஆராயும் எவரும் மாவோ என்ற சொல் மாமன் என்ற சொல்லின் திரிபு என்று கண்டுகொள்ள முடியும்.ஆகவே தமிழே உலக ஞானத்துக்கு அடிப்படை. தமிழ் ஞானத்துக்குத் தாமையர் அடிப்படை.

இந்த உணர்வை அடைந்து ஒன்றே குலம் [ஏசு] ஒருவனே தேவன் என்ற தமிழ்க் கோட்பாட்டை ஏற்றுப்  புனித தாமையர் மதத்தை மேலும் செம்மைப்படுத்தி அதைத்தழுவி உய்வோமாக. வாழிநலம்சூழ! ஓம்! அதாவது ஆமேன் !

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/621

10 comments

2 pings

Skip to comment form

 1. kthillairaj

  ரொம்ப பொறுமை உங்களுக்கு, அவர்கள் பிழைப்புக்காக செய்கின்றார்கள். பனை மரத்துக்கு கீழ் இருந்து பால் குடித்த கதை தான் இது .

 2. BALA.R

  நகைச்சுவை எனத் தலைப்பிட்டிருந்தாலும் ஒருவிதத்தில் உண்மையும் கூட.Mr.அரவிந்தன் நீலகண்டன் தனது ‘ உடையும் இந்தியா ‘ நூலில் சொல்லியிருக்கும் தந்தையும் மகளும்தான் இங்கே சிறு பெயர் மாற்றத்துடன் . இன்றைய மிஷனரிகளின் ஆராய்ச்சி இந்த லட்சணத்தில்தான் செல்கிறது.

 3. ramesh

  எதிர் பார்க்காத மரண நாகைச்சுவை …யோசிச்சி யோசொசி சிரிக்றோம்… நீங்க இறுக்கமாகவே எழுதி எங்கள பழக படுத்தி வச்சிருக்கீங்க…சட்டுன்னு இப்டி எழுதவும் இது உங்களுடைய எழுத்து தன்னு டவுட் வந்துடுச்சு…

 4. rbkaran

  இனி சிவன் , முருகன் ,கணபதி , விஷ்ணு , என அனைவர்களும் , ஈசுவின் வழிவந்தவர்கள் என ஆராய்சி முடுவுகள் வரும் .

 5. LK

  hahahaha

 6. கோபாலன்

  அருமை அருமை. இனித் தமிழில் கிறித்தவமல்லாத நூல்கள் எவை என்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்!

 7. கோபாலன்

  உங்கள் நகைச்சுவையையும் மீறும் இந்தப் பக்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
  http://www.eupedia.com/forum/showthread.php?26632-Genetics-and-Anthropology-of-Indian-Brahmins-presenting-a-theory

 8. தமிழ்வள்ளுவர்

  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் !

  இன்னும் நல்லா ஆராய்ச்சி பண்ணுங்க.

  ஈசனுக்கு ஏசு சித்தப்பனா கூட இருக்கலாம்.

  ஏசு பக்தியோட லூசு முத்தி போயிடுச்சு!!!

  கவலைப் படாதீங்க, இந்த ஆண்டின் தலை சிறந்த காமெடி எழுத்தாளர் நீங்கதான்!

 9. மதன் பாரத்

  உங்கள ஏன் நாங்க உண்மையறிந்த உலக நாதன் னு சொல்லக் கூடாது ?

 10. மதன் பாரத்

  ungaludaiya intha vivatham kooda yesu panna vivatham mathiriye irukku

 1. jeyamohan.in » Blog Archive » ஆத்திசூடி:கடிதங்கள்

  […] ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே கட்டுரை படித்தேன். நகைச்சுவை என்ற தலைப்பு இல்லாவிட்டால் அதை சீரியஸாக எடுத்துக் க்கொண்டு விடுவார்கள் நம் மக்கள். ஏனென்றால் நம்முடைய ஆராய்ச்சிகள் இப்படித்தான் இருக்கின்றன. நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். தொல்காப்பியம் பற்றிய  XXX ஆராய்ச்சி, திருக்குறளை சிறுநீர்நோக்கில் ஆராய்ச்சி போன்றவற்றைப்பற்றி. இது அதில் ஒரு வகை, அவ்வளவுதான். திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று ஒரு துண்டுப்பிரசுரம் படித்தேன். அதில் 25 குறள்களை உதாரணமாகச் சொல்லியிருந்தார்கள். ஆதிபகவன் என்றால் பரிசுத்த ஆவியும் பிதாவும் என்று விளக்கியிருந்தார்கள். ஐந்தவித்தான் என்றால் ஐந்து காயங்கள் கொண்ட ஏசு. பொறிவாயில் ஐந்தவித்தான் என்றால் சிலுவையில் தொங்கியவன். பொறி என்றால் சிலுவை. […]

 2. My time line tweets « Tamil Twitter Conversation

  […] என்ன கொடும சார் http://www.jeyamohan.in/?p=621 […]

Comments have been disabled.