தல்ஸ்தோயின் மனைவி

ஜெ,

வாசந்தி இந்துவில் எழுதிய இக்கட்டுரையை வாசித்தீர்களா? தல்ஸ்தோயின் மனைவியைப்பற்றி அவரது சீடர் அவதூறு செய்தார் என்று எழுதியிருக்கிறார். இது உண்மையா? இதுபற்றி நீங்கள் ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா?

அருண்

tolstoy [சோபியாவுடன்]

அன்புள்ள அருண்

நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் இதைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.

இது அரசியல்- அறவியல் நோக்குகளுக்கு ஏற்ப மாறக்கூடிய கோணம்.

வாசந்தி சொல்லும் தரப்பை மேலைநாட்டு வலதுசாரி விமர்சகர்களும், முதலாளித்துவ நோக்குள்ள பெண்ணியர்களும் பலகாலமாகச் சொல்லிவருகிறார்கள். அது ஒன்றும் அவர் எண்ணுவதுபோல ‘புதியதாகக்’ கிளம்பி வந்த தகவல்வெளிப்பாடு அல்ல. தல்ஸ்தோயின் மனைவியை நியாயப்படுத்த ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. அவற்றை மறுத்து இன்று அணுவணுவாக விவாதிப்பதில் பொருள் இல்லை.

serk
செர்க்கோவுடன்

சில விஷயங்களைக் கருத்தில் கொண்டால் மட்டும் போதும்

தல்ஸ்தோய் தன் வாழ்நாளுக்குப்பின் தன் கருத்துக்கள் உலகெங்கும் கொண்டுசெல்லப்பட ஓர் அறக்கட்டளை அமையவேண்டுமென விரும்பினார். தான் சொன்ன வாழ்க்கைமுறையை பரப்பும் ‘கம்யூன்’கள் அமைய திட்டமிட்டார். சொல்லப்போனால் அவர் ஒரு மதத்தை நிறுவ விழைந்தார். அதற்காகவே அவரது மாணவர்களை திரட்டினார்.

வாழ்க்கையின் ‘கடைசியில்’ துன்பத்துக்காக அவர் ஆன்மீகத்தை நாடினார் என்பதை அவரது எழுத்துக்களை சற்றும் வாசிக்காத ஒருவரே கூறமுடியும். ஆன்மீகம் என்றால் சாமிகும்பிடுவது அல்ல.

தல்ஸ்தோயின் முதல்நாவல் முதல் அவரது ஆன்மீகத் தேடல் படிப்படியாக விரிந்து வளர்ந்தது. தன் நாற்பத்தொன்று வயதில் அவர் எழுதிய போரும் அமைதியும் நாவலிலேயே அவரது ஆன்மீக தரிசனங்களை பெரும்பாலும் முழுமையாக முன்வைத்தார். அவற்றையே பின்னர் தனியாக வளர்த்தெடுத்தார்.

நிலங்களை விவசாயிகளுக்குக் கொடுக்கும் கனவை அந்நாவலிலும் மேலும் ஏழு வருடம் கழித்து எழுதிய அன்னா கரீனினாவிலும் விரிவாக எழுதியிருக்கிறார். அவருடன் அடையாளம் காணத்தக்க கதாபாத்திரங்கள் வழியாக. அவர் அவற்றை செயல்படுத்த முனைந்தது எண்பத்த்திரண்டு வயதில்.அதைத்தான் சோபியா தடுத்தார்.

தல்ஸ்தோய் தன் கொள்கையை பரப்ப தேர்ந்தெடுத்த சீடர்கள் பலர். அவர்களில் முதன்மையானவர் செர்க்கோவ் .அவர் ஒரு போலி அல்ல. அசடனும் அல்ல. தல்ஸ்தோய் மேல் உண்மையான பேரன்பு கொண்டவர். தல்ஸ்தோயின் படைப்புகளில் பேரறிஞர். தன் வாழ்நாளெல்லாம் தல்ஸ்தோயின் நூல்களை அச்சிடவும் மொழியாக்கம் செய்யவும் உலகமெங்கும் கொண்டுசெல்லவும் உழைத்தவர். தல்ஸ்தோய் இன்று நாமறியும் வடிவில் உலகளாவிய படிமமாக ஆனது அவரால்தான்.

அதேசமயம் தல்ஸ்தோயின் மனைவி சோபியா தல்ஸ்தோய் எழுத்தின் மீதான மரியாதையை படிப்படியாக இழந்தவர். இளமையில் தல்ஸ்தோயின் நாவல்களை படி எடுத்தவர், இலக்கியத் தோழியாக விளங்கியவர்.தல்ஸ்தோய் பின்னர் வந்த மார்க்ஸிய சிந்தனைகளுக்கு முன்னோடியாக இருந்த பொதுவுடைமைச் சிந்தனைகளையும் புரட்சிகர சிந்தனைகளையும் நோக்கிச் செல்லச்செல்ல சோபியா தல்ஸ்தோயை நிராகரிக்க தொடங்கினார். ஒருகட்டத்தில் அவரது எழுத்து அர்த்தமற்றது என்று முடிவு கட்டினார். உறுதியான ஜார் ஆதரவாளர் அவர்

தல்ஸ்தோயை விட தான் பெரிய எழுத்தாளர் என நம்பியவர் சோபியா அதை தன் டைரியிலும் கடிதங்களிலும் எழுதினார். எழுதவும் செய்தார்.ஆனால் அவர் எழுதியவை உயிரற்ற சம்பிரதாயமான உரைநடைப்பிண்டங்களே. செர்க்கோவ் இல்லாவிட்டால் தல்ஸ்தோய் அவரது மரணத்துக்குப்பின் அவர் பெற்ற விஸ்வரூபத்தை அடைந்திருக்கமாட்டார். மனைவியின் காழ்ப்பால் மறைக்கப்பட்டிருக்கவும் கூடும்

தல்ஸ்தோய் விவசாயிகளுக்கு ‘சொத்தை’ கொடுக்கவிரும்பினார். அது அவரது மகன்களுக்கும் உரியது, எப்படிக்கொடுக்கலாம், என்ற வாதம் பலரால் முன்னரே எழுப்பப்பட்டுள்ளது. தி லாஸ்ட் ஸ்டேஷன் சினிமாவும் அதையே சொல்கிறது.அந்தவாதமே பலவீனமானது. அன்றைய சொத்துரிமை பற்றிய புரிதல் இல்லாதது.

அன்று இருந்தது இன்றைய முழு நில உரிமை முறை அல்ல. நிலப்பொறுப்பு முறை– ஃப்யூடல் முறை. டியூக்குகள் போன்ற நிலக்கிழார்களின் பொறுப்பில் மொத்த நிலமும் இருக்கும். விவசாயிகள் அதை வைத்து விவசாயம்செய்வார்கள். பிரபுக்களுடையது நில உரிமை அல்ல. உழைத்து ஈட்டப்பட்ட சொத்து அல்ல அது. அது நிலம் மீதான ஒரு நிர்வாக அதிகாரம் மட்டுமே.

அன்றைய அரச அமைப்பால் அளிக்கப்பட்டது அது. தல்ஸ்தோய் அரச ஆதிக்கத்தை எதிர்த்தவர். நில உரிமையை தல்ஸ்தோய் ஒரு தர்மகர்த்தா பொறுப்பு என்று மட்டுமே கண்டார். ஆகவே அதை மக்களுக்கே திருப்பிக்கொடுக்க எண்ணினார். அவர் நிலத்தை தான் மட்டும் கொடுக்க எண்ணவில்லை, அத்தனை டியூக்குகளும் கொடுக்கவேண்டும் என்றார். அவர் இறந்து சிலவருடங்களிலேயே புரட்சி நிகழ்ந்து அது அவர்களிடமிருந்து பிடுங்கவும் பட்டது.

எளிமையாக புரிந்துகொண்டோம் என்றால் இங்கிருந்த நில உச்சவரம்புச்சட்டத்தின்படி உபரி நிலத்தை உழவருக்கு கொடுக்க ஒரு உண்மையான மனிதர் எண்ணுகிறார் என்று கொள்வோம். நிலத்தை பல பகுதிகளாக பிரித்து மோசடியாக தக்கவைக்க அவரது குடும்பம் அவரை கட்டாயப்படுத்துகிறது, நிலம் தங்கள் சொத்து என நினைக்கிறது என்று கொள்வோம். நம் ஆதரவு எவருக்கு?

தல்ஸ்தோயின் மைந்தர்கள் எவருமே அவரை ஏற்கவில்லை. புரிந்துகொள்ளவில்லை. அன்றைய ருஷ்ய உயர்குடி வாழ்க்கையின் குடி,சீட்டாட்டம்,காமம் ஆகியவற்றில் திளைத்தவர்கள் அவர்கள். மூத்தமகன் செர்ஜி பெருங்குடிகாரனாகவும் சூதாடியாகவும் வாழ்ந்து மறைந்தான். இரண்டாம் மகன் லெவ் கடன்காரன். சோபியாவை இயக்கியவன் அவனே.

சோபியா பிள்ளைகளை வளர்க்க பரிதாபமாக பாடுபட்டதாகச் சொல்கிறார் வாசந்தி. சோபியா அபலை அன்னை அல்ல. தல்ஸ்தோய் குடும்பம் பெரும் பிரபுக்குடும்பம். அன்றைய ரஷ்யாவின் அதிகார உயர்வட்டத்தில் வாழ்ந்தது. அவர்களுக்கு கடும் பணமுடை கடைசிக்காலத்தில் இருந்தது. காரணம் ஊதாரிவாழ்க்கை.

அந்த ஊதாரிப் பிள்ளைளுக்கு தல்ஸ்தோயின் சொத்து சென்று சேரவேண்டுமென்றுதான் சோபியா போராடினார். தாய் என்ற நிலையில் அதற்கான காரணங்கள் இருக்கலாம். ஆனால் நாம் அதை தார்மீகமான அணுகுமுறையாலேயே அணுகவேண்டும்

மேலும் தல்ஸ்தோயின் நூல்களின் பதிப்புரிமைகூட அவர் எண்ணிய அமைப்புக்குச் செல்லக்கூடாது என்று வாதிட்டார் _. அதற்காக அவரை கட்டாயபடுத்தினார். அவரை முதுமையில் கொடுமை செய்தார். வீட்டை விட்டு வெளியேறச்செய்தார். வெளியேறியவரை துரத்திவந்து சொத்தைப்பிடுங்க முயன்றார். இதெல்லாம் ‘பெண்ணின் உரிமை’ என்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைகனவுபூமியும் கால்தளையும்
அடுத்த கட்டுரைஅம்புபட்ட பறவை