நூறுநாற்காலிகளின் யதார்த்தம்

அன்புள்ள ஜெயமோகன் ,

வணக்கம்,

சென்ற வாரம் தான் நூறு நாற்காலிகள் கதையை உங்கள் தளத்தில் படித்தேன். மனதில் கொப்பளிக்கும் உணர்வுகளை சொல்லவே முடியவில்லை, மிகவும் கனமாக உணர்கிறேன். கடந்த ஒரு வாரமாக கடுமையான பணிச்சூழலுக்கு நடுவேயும் அந்த கதை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது, அதன்பிறகு எதனையும் வாசிக்க முடியவில்லை.

நான் பிறந்து வளர்ந்த தலித்துகள் அதிகம் வாழும் சூழலில் ஆதிக்க சாதி அடக்குமுறைகளையெல்லாம் நான் பார்த்ததே இல்லை, (கூட்டமாக இருப்பவர்களே ஆதிக்க சாதி இந்த காலத்தில்) இத்தனை கொடுமைகள் மனிதர்களுக்கு நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதை யோசித்தது கூட இல்லை.

காப்பான் நாற்காலியில் உட்காரும்பொழுது அவர் தாயின் உடல் பதறி நடுங்கியதைப் போல என் கை கால்கள் எல்லாம் நடுங்கின, அந்த தாயின் மனதில் எத்தனை தலைமுறைகளாக இந்த பயம் விதைக்கப்பட்டிருக்கும். ஒரு மனிதன் சக மனிதனுக்கு செய்யக்கூடிய அதிகபட்ச கொடுமையாகவே இதைக் கருதுகிறேன். இந்த சாதிக்கொடுமைகளை நிகழ்த்திய ஒரு சமூகத்தின் வழிவந்தவனாதலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரிடமும் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் மனிதன் என்ற பிரக்ஞையே உருவாகாமல் எத்தனை மனிதர்கள் இதுபோல கொடுமைகளை அனுபவித்து மாண்டிருப்பார்கள்? இதற்கு மேலாகவாவது இந்தக் கொடுமைகள் ஒழியுமா என்று பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது. சாதியை ஒழிக்கிறோம் என்று தவறான அரசியல்வாதிகளின் பின்னால் சென்று கொஞ்ச நஞ்சம் சமத்துவமாக இருப்பவர்களையும் இவர்கள் பின்னுக்கே இழுக்க நினைக்கிறார்கள்.

இலக்கியம் ஒருவனுக்கு அளிப்பது எதை என்று நீங்கள் எழுதியிருந்தது நினைவில் ஓடிக்கொண்டே இருந்தது, இலக்கியம் அளிப்பது வாழ்வனுபவத்தை. இந்த சிறுகதை இல்லையென்றால் நான் காப்பானாக வாழ்ந்து அவர் அடைந்த துயரங்களை அறிந்துருக்கவே முடியாது. ஒரு நடுத்தர குடும்பத்து மூத்த மகனின் அனுபவங்களை மட்டுமே நான் அறிந்திருக்கக்கூடும்.

இட ஒதுக்கீடு ஏன் தேவை என்று நான் என் அனுபவத்தை மட்டும் வைத்து யோசித்துக் கொண்டிருந்தேன், நான் பார்த்த இட ஒதுக்கீடு பெறும் நபர்கள் எல்லோரும் மூன்றாம் தலைமுறையாக இட ஒதுக்கீடு பெற்றவர்கள், எங்கள் குடும்பத்தை விட பணக்காரர்கள், அதனாலேயே இந்த இட ஒதுக்கீட்டு முறையின் மேல் எனக்கு வெறுப்பு அதிகம். ஆனால் இப்பொழுது உள்ள மனநிலையில் அந்த நிலைப்பாடு நொறுங்கி விட்டது.

நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பொசிந்துதான் ஆகும், இன்னும் எஞ்சியிருக்கும் நெல்லுக்காக இட ஒதுக்கீடு இருந்து தான் ஆகவேண்டும்.

நன்றி

–இப்படிக்கு
விக்னேஷ்.M.S

அன்புள்ள விக்னேஷ்

அறம் கதைகளும் சரி ஏழாம் உலகம் போன்ற நாவல்களும் சரி நாம் காணாமல் விட்டுவிடுகின்ற யதார்த்தங்களைச் சொல்லக்கூடியவை. அவற்றை நாம் அறிவோம், அறிந்ததை நமக்குநாமேகூடச் சொல்லிக்கொள்ள மாட்டோம். இலக்கியத்தின் பணி அறியவைப்பது. அதன் வழியாக நம் நீதியுணர்ச்சியை தீட்டுவது

நீதியுணர்ச்சியின் மறுபக்கம் அமர்ந்திருப்பது சுயநலம். ஆகவே நீதியுணர்ச்சி ஒவ்வொரு கணமும் மழுங்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே அதை மீளமீள தீட்டியாகவேண்டும். இலக்கியங்கள் செய்வது அதையே

சமீபத்தில் சில அனுபவங்கள் வழியாக நூறுநாற்காலிகளின் உலகம் இன்னும் தீவிரமாக அப்படியே நீடிப்பதைத்தான் உணர்ந்தேன். நாம் வசதியாக அதன் மேல் நம் அறியாமையை போர்த்திக்கொள்கிறோம்

ஜெ

அறம் விவாதங்கள்

முந்தைய கட்டுரைபித்தின் விடுதலை
அடுத்த கட்டுரைகாந்தியும் தலித்துக்களும்