நாவல்,முன்னுரை

இந்த நூல் ஒரு குறிப்பிட்ட விவாதச்சூழலின் விளைவாக 1992ல் எழுதப்பட்டது. 1990ல் என் முதல் நூலான ரப்பர் நாவலுக்கு அகிலன் நினைவுப்பரிசு கிடைத்தபோது நான் தமிழில் வெளிவந்துள்ள பெரும்பாலான நாவல்களை நீண்டகதைகள் என்றே சொல்லமுடியும் என்றும் நாவல் என்ற கலைவடிவத்துக்கு உலகளாவிய தளத்தில் உள்ள சாத்தியங்களை தமிழ் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளவில்லை என்றும் பேசினேன்.

அந்தப்பேச்சு வழக்கம்போல பெரிய இலக்கிய அக்கப்போரை உருவாக்கியது. நான் தமிழில் நாவலே கிடையாது என்று சொல்வதாகவும் இதுவரை தமிழில் வெளிவந்த எல்லா நாவல்களையும் கலைப்படைப்பு அல்ல என்று நிராகரிப்பதாகவும் பேச ஆரம்பித்தார்கள். நான் தமிழில் படிப்பதற்கு எதுவுமே இல்லை என்று சொன்னதாகக் கூட சிலர் சொன்னார்கள். அதையொட்டி என் மீது கடுமையான கசப்புகள் உருவாயின. நான் சந்தித்த முதல்பெரும் இலக்கியப்பூசல் அது.

ஆனால் அதை ஒரு சாதகமான அம்சமாகவே எடுத்துக்கொண்டேன். ஓர் இளம்படைப்பாளியை ஓர் இலக்கியச்சூழலே திரும்பிப்பார்ப்பது சாதாரண விஷயம் அல்ல. நான் சொல்ல வருவதை விரிவாக முன்வைக்க அதுவே சரியான தருணம் என்று தோன்றியது. இந்த நூலை அதன் பொருட்டே எழுதினேன்.

இந்த நூல் நான் எழுதிய முதல் திறனாய்வு நூல். இதில் இருந்து  என் பார்வைகள் உருவாகி  இப்போது நெடுந்தூரம் வந்திருக்கும் விதம் எனக்கே ஆச்சரியம் அளிக்கிறது. இந்நூலில் நான் பேசியிருக்கும் பல விஷயங்களை பிற்பாடு நான் எழுதிய விமரிசன நூல்களில் பல கோணங்களில் வளர்த்தெடுத்திருக்கிறேன். பல இடங்களை தொட்டு விட்டிருக்கிறேன். பல இடங்களில் தடுமாறியுமிருக்கிறேன். ஆனாலும் அக்கருத்துக்களின் விதைக்களம்  என்ற முறையில் இந்நூல் பல கோணங்களில் சிந்தனையை திறப்பதாகவே உள்ளது. எனக்கு. வாசகர்களுக்கு அப்படியே இருக்கும் என நம்புகிறேன்.

இன்றைய வாசகர் இந்நூலின் சந்தர்ப்பத்தைப் பற்றி சிறிய ஒரு புரிதலை கொள்வது நல்லது. இந்நூல் முன்னிலைப்படுத்திப் பேசுவது அன்றிருந்த தீவிர இலக்கியச் சூழலை. அன்று வருடத்திற்கு ஐம்பது இலக்கியநூல்கள் வெளிவந்தால் அரிது. அன்று தமிழின் மைய இலக்கியவடிவம் சிறுகதையே. சிறுகதையில்தான் தமிழ் தன் சாதனைகளை அடைந்துள்ளது. ஆகவே சிறுகதையின் இலக்கணமே எல்லா புனைகதைகளுக்கும் அனிச்சையாக போடப்பட்டது

அன்று வெளியாகிய நாவல்கள் மிகக்குறைவு. அவையும் இருநூறு பக்கங்களுக்குள்ளேயே இருக்கும். சிறுகதைகள் எழுதுவதைப்போல கொஞ்சம் நீட்டினால் நாவல் என்ற எண்ணம் அன்றிருந்தது. சிறுகதைகளுக்குரிய சொற்செட்டு, சுருக்கிக் கூறும் போக்கு, குறிப்புணர்த்தும் தன்மை ஆகியவையே நாவலிலும் கையாளப்பட்டன. ஆகவே நாவலுக்குரிய விரிந்து பரவும்தன்மைக்குப் பதிலாக குறுகி ஒடுங்கும்தன்மை அக்கால நாவல்களுக்கு இருந்தது. இதையே நான் விமரிசனம் செய்தேன்.

ஆனால் இன்று அந்தப் போக்கு வெறும் வடிவப் போதாமை மட்டுமல்ல என்று எனக்கு தெரிகிறது. அது நவீனத்துவ அழகியலுக்குரிய மனநிலையும்கூட. சமூகத்தை, வரலாற்றை, இயற்கையை கணக்கில் கொள்ளாமல் நாவலாசிரியன் தன்னில் ஆரம்பித்து தன்னிலேயே நாவலை முடிக்கும் போக்கு கொண்டிருந்ததன் விளைவு அது. தமிழ் நாவல்களில் ஏன் தமிழகத்தின் பாரம்பரியமோ, இயற்கையோ இல்லை என்று நான் இந்த நூலில் கேட்கும் கேள்விக்குக் காரணம் அதுதான்.

இந்த எல்லையை உடைத்து மீற விரும்பிய ஒரு மனத்தின் வெளிப்பாடுதான் என்னுடைய எதிர்ப்பும் விமரிசனமும் இந்நூலும். இதில் நவீனத்துவம் வழியாக தமிழில் உருவாகி இருந்த குறுகிய நாவல் வடிவை உடைத்துத் திறந்து ஒரு பெரிய பரப்பை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சி தெரிகிறது. நான் உள்ளே கொண்டுவர நினைத்த வாகனத்துக்காக வழியை இடித்துப் பெரிதாக்கும் முயற்சிதானோ இது என்றும் எனக்குப் படுகிறது. இன்னொரு பார்வையில் என் தலைமுறை எழுத எண்ணிய நாவல்களுக்குத்தான் நான் வழியமைத்திருக்கிறேனோ என்றும் தோன்றுகிறது.

இரண்டாவதாக, நான் எழுதிய தருணம் வரை தமிழ் நாவல்களை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு அவற்றின் கலைப்பெறுமதியையும் வடிவ அமைதியையும் எவரும் பரிசீலித்ததில்லை. தமிழ் நாவல் குறித்து சிட்டி,சிவபாத சுந்தரம் எழுதிய முக்கியமான நூல் அதற்கு முன்னரே வந்திருந்தது. ஆனால் அது முழுக்க முழுக்க நாவல்களின் பேசுபொருளைச் சார்ந்து ஆராயக்கூடியது. நான் இந்நூலில் நாவல்களை தரம்பிரிக்கவும் வகைப்படுத்தவும் முயல்கிறேன். தமிழில் அது ஒரு முதல்முயற்சி என்றார் சுந்தர ராமசாமி. அந்த மதிப்பீடு தமிழில் நாவல் எந்தெந்த வகையில் வடிவப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை அறிவதற்கு உதவியாக அமைந்தது.

இந்நூலில் இதற்குப்பின் வெளிவந்த நாவல்களுக்காக வாதாடப்பட்டிருப்பதை இன்றைய வாசகன் காணமுடியும். விஷ்ணுபுரம், உபபாண்டவம் போல மரபை எடுத்துக்கொண்டு மறு ஆக்கம் செய்யும் நாவல்கள்,  காவல்கோட்டம் போல வரலாற்றை திருப்பி எழுதும் நாவல்கள், நெடுங்குருதி ஆழிசூழ் உலகு மணற்கடிகை போல ஒட்டுமொத்தமாக வாழ்க்கையை அள்ள முயலும் நாவல்கள், மணற்கேணி , உண்மை கலந்த நாட்குறிப்புகள் போல இடைவெளிகள் வழியாக தொடர்புறுத்தும் நாவல்களுக்காக இந்த விமரிசன நூல் அறைகூவுகிறது. இறுக்கமான,செறிவான நாவல்கள் நாவலின் சவாலை தவற விடுகின்றன என்றும் அவை குறுநாவல்களே என்றும் கூறுகிறது. முழுமையாக விரிந்துய் வாழ்க்கையை அள்ல முயலும் நாவல்களுக்காக வாதாடுகிறது.

இந்நூல் தமிழின் நாவல்களை பகுத்து அடையாளப்படுத்துகிறது. அந்த பகுப்புக்கான தேவையே தமிழில் மட்டும் உள்ள ஒன்றுதான். உதாரணமாக தொடர்கதை வேறு நாவல் வேறு என இத்தனை திட்டவட்டமாக நிறுவ வேண்டிய கட்டாயம் வேறு மொழிச்சூழல்களில் இல்லை. குறுநாவலையும் நாவலையும் வேறுபடுத்தவேண்டிய கட்டாயம்கூட இருக்கவில்லை. ஆகவே நாம் இதற்கான அளவுகோல்களை வெளியே இருந்து பெற முடியாது. இந்த நூலில் இப்பகுப்புகளை புதிதாக நிகழ்த்தவில்லை, ஏற்கனவே இங்கே பிறரால் சொல்லப்பட்ட வடிவங்களுக்குள் படைப்புகளை நிறுத்திப்பார்க்க முயல்கிறேன். அதன் மூலம் நாவல் என்ற  கலைவடிவத்தின் தனிச்சவால் என்ன என்று பார்க்க முனைகிறேன்.

கடைசியாக ஓர் ஆர்வமூட்டும் விஷயம். இந்நூலில் நாவலின் வடிவத்தை வெறுமே மொழியில் நிகழ்த்தப்படும் ஒரு கட்டுமானமாக நான் பார்க்கவில்லை. இலக்கிய வடிவம் என்பது வாசகர்களால் நிரப்பி உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஒன்று என்ற அணுகுமுறை இந்நூலில் உள்ளது. குறிப்பாக வாசக இடைவெளி என்ற கருதுகோள். ஒரு சிறுகதையில் வாசகன் நிரப்பிக்கொள்ளவேண்டிய இடைவெளி என்பது அதன் முடிவிலும் நாவலில் அதன் சித்தரிப்புகளின் இடையிலும் இருக்கிறது என்று இதில் நான் வரையறை செய்கிறேன்.

ஆகவே சிறுகதை தன் சித்தரிப்பில் இடைவெளிகளுடன் இருக்காது, வீச்சும் வேகமுமாக முடிவை நோக்கிச் செல்லும். நாவல் அவ்வாறு சென்றால் அதன் விரிதல் சாத்தியங்களை இழந்துவிடும். அதுவே தமிழின் பல நாவல்களில் நிகழ்ந்திருக்கிறது என வாதிடுகிறேன். அதாவது ஓர் இலக்கிய வடிவத்தை தீர்மானிப்பதில் வாசகனின் பங்கேற்பை முன்னிறுத்துகிறேன்

1992ல் தமிழில் அமைப்புவாதம் மிகுந்த நம்பிக்கையுடன் முன்வைக்கப்பட்டிருந்தது. இலக்கியப்படைப்பு என்பது குறிகளும் சமிக்ஞைகளும் கலந்து கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதே அதன் மைய நோக்கு. ஆகவே என்னுடைய வாசகப்பங்கேற்பு கொள்கை சிலரால் அபத்தமான ஒன்றாக கூறப்பட்டது. அக்காலத்தில் இந்நூல் மீது முன்வைக்கப்பட்ட முக்கியமான விமரிசனங்களில் அதுவும் ஒன்று. வாசகனின் பங்கேற்பு ஆளுக்கு ஆள் மாறக்கூடியது, அதை எப்படி ஓர் அளவுகோலாக முன்வைக்கமுடியும் என்றார்கள்.

நான் என் சொந்த வாசிப்பால் அடைந்த ஒரு கொள்கை அது. அதை விவாதித்து கோட்பாடாக ஆக்க நான் முனையவில்லை. என்னைப்பொறுத்தவரை விமரிசனத்தின் கருவிகள் எல்லாமே படைப்பை புரிந்துகொள்வதற்குத்தான். என் வழிமுறை அதற்கு உதவியானது என்பதுடன் நின்றுவிட்டேன்.

ஆனால் பின்னர் அமைப்புவாதமே பின் அமைப்புவாதமாக ஆகி வாசிப்பை முன்னிலைப்படுத்துவதாக மாறியது. அதன் பின் பத்தாண்டுகள் கழித்துத்தான் ஆகியோர் வாசக ஏற்புக்கோட்பாடு என்றபேரில் கிட்டத்தட்ட நான் கூறிய அணுகுமுறை பல படிகளாக ஏறி பின் அமைப்புவாதம் வரை வந்திருப்பதை நான் வாசித்துத் தெரிந்துகொண்டேன்.வாசக இடைவெளி [Gap] என்ற கருத்தைக்கூட அவர்கள் அப்படியே கூறியிருந்தார்கள்.

இந்நூல் வாசகர்கள் மத்தியில் பெரிதாக வாசிக்கப்படவில்லை. எழுத்தாளர்கள் கல்வித்துறையினர் நடுவே பெரிதும் பேசப்பட்டது. கிட்டத்தட்ட பதினெட்டு கூட்டங்கள் இந்நூலை விவாதிப்பதற்காக நிகழ்த்தப்பட்டன. இந்நூலுக்குப் பின்பு வந்த நாவல்களின் வடிவத்தில் தீர்மானமான வேறுபாடு நிகழ்ந்திருப்பதை எவரும் அவதானிக்க முடியும்.  இந்நூலால் அந்த மாற்றம் நிகழ்ந்ததா அந்த மாற்றம் நிகழவிருந்ததனால் இந்நூல் எழுதப்பட்டதா என்பது ஆராய்ச்சிக்குரியது.

இந்த நூல் இன்று நாவல் என்ற தனிவடிவிடம் வாசகன் என்ன எதிர்பார்க்கலாம் என்று காட்டும். எழுத்தாளனுக்கு அவனது சவால் என்ன என்பதைக் காட்டும். இந்நூலில் தமிழ் நாவல்களின் வடிவத்தைப்பற்றிய ஏராளமான நுண்ணிய அவதானிப்புகள் உள்ளன என்பதையே இந்நூலின் முதற் தகுதியாகச் சொல்வேன். ஒரு படைப்பூக்கம் கொண்ட வாசகன் சிந்தித்து மேலெடுப்பதற்கான தொடக்கங்கள் அவை

இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட்ட மகாலிங்கம்[பெங்களூர்] அவர்களுக்கும் இப்பதிப்பை வெளியிடும் கிழக்கு பதிப்பகத்துக்கும் நன்றி.

ஜெயமோகன்

சமர்ப்பணம்
கோவை ஞானிக்கு

‘நாவல்’ கோட்பாட்டு நூல், ஜெயமோகன்.  கிழக்கு பதிப்பகம், சென்னை

முந்தைய கட்டுரைகிழக்கில் என் நூல்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்