ஃபுகோகா :இருகடிதங்கள்

ஜெ..

ஃபுகோகா எழுத்து உண்மை.[  மாசனபு ·புகோகா:ஒரு கீழை ஞானி ] வேளாண்மையும், மேலாண்மையும் படித்து விட்டு, ஒரு 3 வருடங்கள் இயற்கை வேளாண்மை தொழிலில் ஈடுபட்டிருந்தேன்.

வேளாண்மை தொடர்பான பல அறிவியல் உண்மைகள் என அதுவரை அறியப்பட்டிருந்த பல மாயைகள் பற்றிய பட்டறிவு அப்போது உண்டானது. யூரியாவும், பூச்சிக் கொல்லிகளும் இல்லாமல், வேளாண்மை சாத்தியம் என்பதை உணர்ந்த காலங்கள். இதில், பூச்சிக் கொல்லி மருந்துகளின் பின்னணி மிக சுவாரஸ்யமானது. BHC, DDT முதலிய மருந்துகள், இரண்டாவது உலகப் போரின் போது, கண்டு பிடிக்கப் பட்டவை. இரண்டாவது உலகப் போரின் மிகப் பெரிய எதிரி, பேன். (lice). தைக் கட்டுப்படுத்த, இவை பயன்படுத்தப் பட்டன. போர் முடிந்ததும், அந்தப் பூச்சிக் கொல்லி நிறுவனங்களின் தொழில் முடங்கியது. என்ன செய்வதென்று யோசித்த போது தான், அவை பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தலாம் க் கண்டு பிடித்தனர்.

பூச்சிக் கொல்லிகளும், உரங்களும் கொடுக்கும் உடனடி முன்னேற்றம், விவசாயிகளை மயக்கியதில் விந்தையேதுமில்லை. அந்த முறைகளை, உலகெங்கும் அரசாங்கங்களே ஊக்குவித்ததனால், அவை மிக விரைவாகப் பரவின. வயாக்ரா மருந்தினால் விரைக்கும் ஆண்குறி, ஆரோக்கியத்தின் அடையாளமல்ல என்பதை அறிந்துகொள் கிட்டத் தட்ட 50 ஆண்டுகள் ஆகியிருக்கின்ற. 

காந்தி ஒரு முறை நோய்வாய்ப் பட்டிருந்த போது, அவருக்கு penicillin மருந்தை சிபாரிசு செய்தார் மருத்துவர். அது ஒரு சர்வ ரோக நிவாரணி என்று. your science is arrogant என்று பதிலளித்தார் காந்தி.

இயற்கையை ஆக்கிரமிக்கும் ஏகாதிபத்திய முறை நீண்ட நாள் செல்லாது. இயற்கையின் பதிலடிக்கு நம் பேரர்கள் காணிக்கை செலுத்த வேண்டியிருக்கும்.

அன்புடன்

பாலா

****

மாசானபு ·புகுவோகா ஒரு வேளாண்மை காந்தி!

புகுவோகா பற்றி தாங்கள் எழுதிய கட்டுரை படித்தேன். ·புகுவோகாவைப்புரிந்துகொள்வதற்கு நாம் ஒரு வரியில் உலக அரசியலைப் புரிந்துகொண்டால் போதும். ‘அறிவியல் என்பது போரைச்சார்ந்தே வளர்வது’

கடந்த பல்லாயிரம் வருடங்களாக அறிவியல் என்பது போரையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. டாவின்ஸி வரைந்துள்ள கோட்டோவியங்களில் பெரும்பகுதி போர்க்கருவிகளே. உலகின் பெரும் கண்டுபிடிப்புகள் போருக்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை, போர் வெறியர்களால் நிதியுதவ ¢செய்யப்பட்டவை. உலகத்தைச் சமாதானம் நடத்திச் செல்லவில்லை, போர்தான் நடத்திச் செல்கிறது.

ஐரோப்பியநாடுகளின் பொருளியலில் 80 விழுக்காடு போர் ஆயுதங்களை உற்பத்தி செய்வதனால் உருவாகின்றது. ஆனால் ஐரோப்பா தன் மண்ணில் இருந்து போரை துரத்திவிட்டது. ஆசிய ஆப்ரிக்க மண்ணில்போர் நிகழ்கிறது. காங்கோ புரட்சியாளர்கள் , விடுதலை புலிகள், இந்திய மாவோயிஸ்டுகள், ஜிகாதிகள், பாகிஸ்தான், பர்மா, இந்தியா எல்லாருமே எதற்காக போரிடுகிறார்கள்? பொருளியல் நோக்கில் பார்த்தால் ஐரோப்பிய ஆயுத ஆலைகள் செயல்பட்டு லாபம் ஈட்டித்தருவதன் பொருட்டே.

ஐரோப்பிய பொருளியலில் மிச்சமுள்ள 20 விழுக்காடு பொருளியலானது போரின் துணைவிளைவுகளான பொருட்களை உற்பத்தி செய்வதில் இருந்துவருகிறது. நாம் உலகுக்கு உணவைக்கொடுத்து ஆயுதங்களைப் பெற்றுக் கொள்கிறோம். எல்லா ஆசிய நாடுகளும் இந்நிலையில்தான் இருக்கின்றன.

பசுமைப்புரட்சி போரால் உருவாக்கப்பட்ட ஒன்று. போரின்போது காடுகளில் போரிடவும் வெப்பமண்டலப் பகுதிகளில் ஊடுருவவும் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் எவ்விதமான ஆய்வுகளும் இல்லாமல் வேளாண்மையில் பயன்படுத்தப்பட்டன. அவற்றால் எந்தவிதமான பயனும் இல்லை என்று அப்போதே அறிவியலாளர் எச்சரித்தனர். ஆனால் அரசுகளை தங்கள் செல்வாக்கின்கீழ் கொண்டுவந்து அறிவியலாளர்களை விலைக்கெடுத்து பன்னாட்டு நிறுவனங்கள் அதை உலகமெங்கும் பரப்பின.

சென்ற ஐம்பதுவருடங்களில் அவை பூச்சிகளை பதின்மடங்கு பெருக்கியிருக்கின்றன. வேளாண்மைமுதலீட்டில் கிட்டத்த நாற்பது விழுக்காட்டை அவையே பிடுங்கிக் கொள்கின்றன. இன்று அவை பெரும் தொழில்களாக வளர்ந்துள்ளன. உலகம் விஷமயமாகிவிட்டது. வேளாண்மை நஷ்டமாக ஆகி அதேமருந்துகள் சுருக்க வழியில் விவசாயிகளுக்கு மரணத்தை அளிக்கின்றன.

அதேபோல வெடிமருந்துக்காக உருவாக்கப்பட்ட அமோனியா உரமாக மறு வடிவம் கொண்டது. மண்ணை காவுகொண்டது. பத்தாயிரம் வருடம் உணவளித்த நிலங்கள் இப்போது சத்திழந்து கிடக்கின்றன.

இயற்கை நம்முடைய கிடங்கு அல்ல. அது நம் அன்னை. நாம் அதைப்பேணினால் மட்டுமே அது நம்மைப்பேணும். மனிதனின் தேவைக்கு மண்ணில் செல்வம் உள்ளது, அவனுடைய பேராசைக்கு மண் போதாது– இவை அனைத்துமே காந்தி சொன்னவை. காந்தி மட்டுமே அவர்காலகட்டத்து சிந்தனையாளர்களில் இயற்கையின் சமநிலையைப்பற்றியும் , லாப வெறிகொண்ட உற்பத்தியின் வன்முறையைப்பறியும், நுகர்வானது இயறகையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய தேவையைப்பற்றியும் சொன்ன ஒரே சிந்தனையாளர். இன்று உலகமெங்கும் பரவிவரும் பசுமைச்சிந்தனைகளின் முன்னோடி அவரேயாவார்.

நவீன அறிவியலின் சாரத்தில் போர் இருப்பதை காந்தி உணர்ந்திருந்தார். அதை அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருக்கிறார். அகிம்சையை நவீன யுகத்துக்கான அறமாக முன்வைத்த காந்தி நவீன அறிவியலை ஆழ்ந்த சந்தேகத்துடன் பார்த்தது இதனாலேயே. அவரது சீடர்கள் கூட அவரைப் புரிந்துகொள்ளவில்லை. நவீன அறிவியலைப் புரிந்துகொள்ள முடியாத பழைமைவாதியாகவே அவர்கள் காந்தியைப்பற்றி நினைத்தார்கள். ஜெ.சி.குமரப்பா மட்டுமே காந்தியைப் புரிந்துகொண்டவர்.அவர் நேருயுகத்தால் எள்ளிநகையாடப்பட்டு முழுமையாகவே ஒதுக்கப்பட்டார்.

·புகுவோகா முன்வைத்தது காந்திய மதிப்பீடுகளின் வேளாண்மைஅறிவியல் சார்ந்த வடிவத்தையே ஆகும். நவீன அறிவியலுக்குள் உள்ள வன்முறைக்கு எதிரான குரல் ·புகுவோகாவில் உள்ளது. இயற்கையை வன்முறைக்கு ஆளாக்காத, அதைச் சுரண்டாத ஒரு வேளாண்மை முறை அவரால் முன்வைக்கப்படுகிறது.

இன்று சிலர் எண்ணுவது போல இயற்கை வேளாண்மை என்பது ஒரு மாற்றுத் தொழில்நுட்பம் அல்ல. அது ஒரு மாற்று உலகப்பார்வை. பேராசையையும் அதன் விளைவான போரையும் அடிப்படையாகக் கொண்ட நவீன உலகநோக்குக்கு எதிரான ஒரு முழுமையானநோக்கு அதில் உள்ளது. அதை அந்த உலக நோக்குடன் சேர்த்து ஒட்டுமொத்தமாகவே நாம் வாங்கிக்கொள்ள முடியும்.

·புகுவோகா தோற்றுப்போனார் என்கிறார்கள். அவர் எதிர்பார்த்த உலகவேளாண்மைப்புரட்சி நடக்கவில்லை. ஒற்றைவைக்கோல் முளைக்கவில்லை. ஆனால் காந்தியும் நவீன ‘போர்ப்பொருளாதார’த்தால் தோற்கடிக்கப்பட்டவர்தான். தோற்கடிக்கப்பட்டமையாலேயே அவர் பொருந்தாதவர் என்று பொருள் இல்லை. தோற்கடிக்கப்படக்கூடாத ஒரு தரப்பு அது. எத்தனை முறை தோற்கடிக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் நாம் முன்வைத்து போராடவேண்டிய இரு முன்னோடிகள் அவர்கள்.நமக்கு வேறுவழியே இல்லை.

சத்யமூர்த்தி
கான்பூர்

 மாசனபு ·புகோகா:ஒரு கீழை ஞானி

முந்தைய கட்டுரைமாசனபு ·புகோகா:ஒரு கீழை ஞானி
அடுத்த கட்டுரைபுகோகா மீண்டும் இரு கடிதங்கள்