வீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -2

எம்.டி.யின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அசுரவித்து. அசுரவித்து என்பது பல வழிகளில் முக்கியமான வார்த்தை. ஒரு பெரிய புகழ்பெற்ற, செல்வம் மிகுந்த குடும்பம். அந்தக்குடும்பத்தில் வந்து பிறக்கும் ஒரு குழந்தையினுடைய தீய ஜாதக பலன் காரணமாக அது அழியும் என்றால் அந்தக் குழந்தைதான் அசுர வித்து. அது ஓர் அசுரனின் விதை. துரதிருஷ்டவசமாக ஏற்கெனவே சரிந்துகொண்டிருக்கும் குடும்பத்தில் குழந்தையாக வந்து பிறக்கும் இளைஞனின் வாழ்க்கையை சொல்கிறது எம்.டியின் நாவல். பாட்டி அவனை சின்ன குழந்தையாக இருக்கும்போதே அசுரவித்து என்று சொல்லி வளர்க்கிறாள். எங்கே போனாலும் ஒரு சரிவை, சாவை நிகழ்த்திய ஒருவனாக, ஒரு கப்பலில் ஓட்டைபோட்ட எலியாக அவனைப் பார்க்கிறார்கள்.

இந்தக்கசப்பை பல கோணங்களில் நுட்பமான உளவியல் சித்தரிப்புகள் வழியாக நாவல் முழுக்க எம்.டி. சொல்லி சென்றிருக்கிறார். இரண்டு தருணங்களைச் சுட்டிக்காட்டலாம். ஒன்று சேகரன் அண்ணா இவன் பெரியம்மாவின் மகன்.எப்படியோ அவர் பணக்காரரானார். அதை ‘ஈ அதிருஷ்டம்’ என்கிறார்கள். அது ஒரு விளையாட்டு. பீடியை முன்னால் வைத்துவிட்டு இருவர் அருகே உட்கார்ந்திருப்பார்கள். யாருடைய பீடியில் எறும்பு அல்லது ஈ வந்து அமர்கிறதோ அவர் வென்றார். முழுக்க முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை நம்பியே விளையாடும் விளையாட்டு அது.

அப்படி ஓர் ஈ யோகம் உள்ளவர் சேகர் அண்ணா. அவருடன் தொடர்ந்து ஒப்பிடப்படுபவனாகவும், அவர் முன் சென்று நின்று உதவி வாங்கி பிழைக்க வேண்டிய இடத்தில் இருப்பவனாகவும் கதாநாயகன் ஆகிவிடுகிறான்.அவனுடைய சுய இழிவு ஒவ்வொருமுறையும் சேகர் அண்ணாவால் வதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவனுடைய தரவாட்டின் வீழ்ச்சி எந்த அளவிற்கு அவனை துன்பப்படுத்துகிறதோ அதேபோல ஈ அதிருஷ்டத்தின் வெற்றி துன்பப்படுத்துகிறது. உழைப்பை, திறமையை, ஏன் வாழ்க்கையையே பொருளற்றதாக ஆக்கிவிடுகிறது

உருவாகிவந்துகொண்டிருந்த ஒரு புதிய முதலாளித்துவ அமைப்பை, ஒரு வியாபார அமைப்பை இந்த வார்த்தை வழியாக எம்.டி. சுட்டிக்காட்டுகிறார் ‘ஈ பாக்கியம்’. ஒவ்வொரு கிராமத்திலும் இந்த ஈ பாக்கியத்தால் வென்றவனுடைய மாளிகை அமைந்திருக்கிறது. அருகே நிலப்பிரபுத்துவ காலத்து வீடு சரிந்து சரிந்து அழிந்து கொண்டே இருக்கிறது. அதனுடைய அமர நிலையில் ஒரு அசுர வித்து நின்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

இன்னொரு இடம். ஒரு சடங்கு நடக்கிறது. வயலை ஒட்டுமொத்தமாக உழுது சேறாக்கி எருமைகளை விட்டு அதை கலக்கி அடிப்பதை அங்கே ஒரு கொண்டாட்டமாக செய்கிறார்கள். அது ஒரு போட்டி. அந்த எருமை கட்டிஉழும் போட்டியில சேற்றில் மூழ்கி உடம்பெல்லாம் சேறாகி விழுந்து எழுந்து கொப்பளிக்கும்போது மட்டும்தான் அவனுள் பெரிய விடுதலை உருவாகிறது. அப்போதே வாழ்க்கையின் நிறைவை அடைகிறான். அவனுடைய இழிவுக்கும் அவனுடைய மகிழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடு குறிப்பிடத்தகுந்தது. அவனை இழிவுபடுத்துவது முதலாளித்துவத்தின் அந்த ஈ பாக்கியம். அவனை தன்னுள் வாங்கி அவனை நிறைத்துவைப்பது நிலப்பிரபுத்துவத்தின் சேற்று வாசனை.

சேகரண்ணாவினுடைய தயவால் அவனுக்குத் திருமணம் நடக்கிறது. திருமண இரவில் தெரிகிறது, சேகரன் அண்ணாவின் மகன் கருவுறச்செய்த வேலைக்காரப் பெண்ணைத்தான் தனக்கு கட்டிவைத்திருக்கிறார்கள் என்று. அந்தப் பெண் எந்த பிழையும் செய்யவில்லை என்றாலும் அவனால் அவளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரே சமயம் அவள் மேல் பிரியமும், பரிதாபமும் இருக்கிறது. ஆனால் ஆளை அவன் ஏற்க முடியவில்லை.ஒரு எச்சில் பண்டம்.அவனுடைய பிச்சைப்பாத்திரத்தில் போடப்பட்ட ஒரு வீணாகிப்போன உணவு. அவனுடைய சுய இழிவை இன்னும் மிகைப்படுத்துபவள் அவள்.

நாவலின் உக்கிரமான சித்தரிப்பு என்பது பிளேக் வந்து கிராமமக்கள் செத்துக்கொண்டிருக்கும் சித்திரம். பிளேக் என்பது ஒரு இயல்பான நோயல்ல. அதற்கு நிலப்பிரபுத்துவ பின்புலம் கிடையாது. அது வணிகத்தின் விளைவாக வந்த நோய் என்பதை குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக கோழிக்கோடு பகுதிகளில் போர்ச்சுக்கல்காரர்களின் கப்பலின் வழியாக வந்த ஒரு நோய் அது. அதுவே ஒரு குறியீட்டு அர்த்தமுடையது. [இந்திய நாவல்களில் பிளேக் வகிக்கும் பங்கு என்ன என்பதை விரிவாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். உடனடியாக நினைவில் வரக்கூடிய படைப்பு யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா. அதிலும் பிளேக் நவநாகரிகத்தின் ஓர் இருண்ட கொடையாகவே முன்வைக்கப்படுகிறது]

அசுரவித்து நாவலில் அந்தச்சமூகம் எதிர்கொள்ளவேண்டிய அடுத்த காலக்கட்டத்தின் ஓர் இருண்ட ஆயுதமாக பிளேக் கருதப்படுகிறது. ஒரு பரங்கிப் பூதமாக அந்த கிராமத்தை சூறையாடுகிறது. அப்போது ஒரு தனி ஆளாக பிறரால் அஞ்சி கைவிடப்பட்ட பிணங்களை எடுத்து அடக்கம் செய்வதற்கு கதாநாயகன் காட்டும் அர்ப்பணிப்பு நாவலின் அற்புதமான பகுதி. அந்த மனநிலை முந்தைய நிலப்பிரபுத்துவ காலத்திற்குரியது. மனிதர்கள் தனித்தனியாக அல்லாமல் ஒரு கொத்தாக ஒரு திரளாக வாழ்ந்த காலகட்டத்தின் உணர்வு அது. நான் என்று மட்டுமல்லாமல் நாம் என்று மட்டுமே ஒவ்வொருவருமே யோசித்து வாழ்ந்த காலக்கட்டத்தின் எச்சம்.

IruttinteAthmavu

அசுரவித்து நாவலைப் பார்க்கும்போது அழிந்தே தீர வேண்டிய ஒரு உயிரினத்தின் நற்பண்புகளை வரிசையாக சொல்லிச் செல்லும் ஒரு நாவல் என்று தோன்றுகிறது. அவன் நிலப்பிரபுத்துவத்தின் ஓர் உதாரணம். அது மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாய அமைப்பு. ஏற்கனவே அதனுடைய அடித்தளங்கள் நொறுங்கிவிட்டன. அதனுடைய மேற்கட்டுமானம் ஒவ்வொன்றாக இற்று இற்று ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்துகொண்டிருக்கிறது. அதன் அடியில் சிக்கி எங்கும் போகமுடியாமல் அவனும் சேர்ந்து மண்ணுக்கு அடியில் சென்றுகொண்டிருக்கிறான். அவன் உழுது புரட்டக்கூடிய புது சேற்றில் திளைப்பவன். தன்னுடைய சக மனிதர்களை தன்னுடைய உடல் உறுப்பாக பார்ப்பவன். நான் என்று அல்லாமல் நாம் என்று யோசிப்பவன். ஆனாலும் அவன் அழிந்தேதான் ஆகவேண்டும். அவனுக்கு இடமில்லாத வேறொரு காலம் வந்துவிட்டது.

இந்த வீழ்ச்சியின் நுட்பமான, உணர்ச்சிகரமான சித்தரிப்பு காரணமாகத்தான் ஒரு பெரிய அவலத்தினுடைய அழகியலை உருவாக்கும் ஆக்கமாக எம்.டியின் அசுரவித்து அமைந்தது. மலையாள இலக்கியத்தில் எம்.டியின் முதன்மையான இடத்தை அமைத்த படைப்பு என்று அசுரவித்தை சொல்லலாம். அதனுடைய திரை வடிவமும் அதே அளவுக்கு மிகவும் புகழ்பெற்ற ஒன்றே.

எம்.டி. யின் உதிரிச் சிறுகதைகள் இந்த நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியை உணர்ச்சிகரமாகச் சொன்னவை.. எம்.டி. எழுதிய சிறுகதைகளில் ஒன்று ஓப்போள் [ அக்கா]. ஒருவனால் ஏமாற்றி கைவிடப்பட்ட பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை அவரது அந்த பெண்ணுடைய அம்மாவின் குழந்தை என்று சொல்லி வளர்க்கிறார்கள். அது தன்னுடைய தாயை அக்கா என்று கூப்பிட்டு வளர்கிறது. அந்த அக்காவை ஒருவன் திருமணம் செய்ய வருகிறான். ஒரு முன்னாள் ராணுவ வீரன். தொலைதூரத்தில் ஏதோ ஒரு காட்டில் அவனுக்கு அரசாங்கம் சில ஏக்கர் நிலம் கொடுத்திருக்கிறது. அங்கே சென்று வாழ்வதற்கு எந்த நாயர் பெண்ணும் தயாராக இல்லாததால் இவளை திருமணம் செய்ய தயாராகிறான்.

அந்தப் பெண்ணிற்கு அன்று திருமணம். மகனிடம் அதைச் சொல்லவில்லை. அவனை ஒவ்வொருநிமிஷமும் அசுர வித்து என்று கரித்துக்கொட்டும் பாட்டி அன்று அன்பாக இருக்கிறாள். ஆனால் எனக்கு அம்மா வேண்டாம், அக்கா வேண்டும் என சிறுவன் தேம்பிக்கொண்டே இருக்கிறான். அந்தக்குழந்தையின் பார்வையில் பூடகமாக சொல்லப்படும் கதை இது. சிறுகதையின் வடிவச்சிறப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட கதை இது. வலுவான கதைக்கட்டுமானம், தீவிரமான இறுதி முடிச்சு, நாடகத் தருணங்கள் இல்லாமல் பாவியத்தன்மை [Lyrical quality] வழியாகவே ஓர் ஆழமான பாதிப்பை செலுத்திய படைப்பு.

மலையாள இலக்கியத்தில் எம்.டி, குறூப், மாதவிக் குட்டி ஆகிய மூன்று பேரையுமே சிறுகதையின் மென்கவித்துவத்தை ,பாவிய இயல்பை கையாண்ட முக்கியமான படைப்பாளிகள் என்று சொல்லலாம்.. எம்.டி அவருடைய வெற்றிகரமான சிறுகதைகளை சற்று நீட்டி பிறகு திரைக்கதையாக்கியிருக்கிறார். ஓப்போள் கூட சிறந்த திரைப்படமாக வந்து பாலன் கே. நாயர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

எம்.டியின்சமீபகால நாவல்களில் ஒன்று இரண்டாமூழம். பீமனை மையக்கதாபாத்திரமாக கொண்டு எழுதப்பட்ட ஒரு செறிவான சுருக்கமான மகாபாரத நாவல் வடிவம். தலைப்பு சுட்டுவதுபோல பீமனுடைய நிலையை காட்டுகிறது இரண்டாம் இடம். பாண்டவர்களில் இரண்டாமானவன். பாண்டவர்களிலே மிகவும் வலிமை வாய்ந்தவன் அவன்தான். ஆனால் எப்பொழுதும் அண்ணனுக்கு தம்பியாகத்தான் இருந்தாக வேண்டும். பாண்டவர்களிலே பாஞ்சாலியை உயிருக்கு உயிராக விரும்பும் கணவன் அவன்தான். கணவனாகவும் அவனுக்கு இரண்டாம்இடம்தான். கெளரவர்கள் நூற்றொருவரை கொன்றவன் அவன்தான். அன்றைய ஸ்மிருதிகளின்படி அரியணை அவனுக்குத்தான் சொந்தம். ஆனால் அங்கும் அவனுக்கு இரண்டாம் இடம்தான்.

மொத்த வாழ்நாளில் ஒவ்வொரு தருணத்திலும் இரண்டாம் இடத்திற்கே தள்ளப்பட்ட ஒருவனுடைய பார்வையில் மகாபாரதத்தை சொல்லும் படைப்பு. எம்.டிக்கே சாத்தியமான காவிய இயல்பு கொண்ட இந்த நாவல் பெரும்புகழ் பெற்ற ஒன்று. எம்.டியின் பிற கதாபாத்திரங்கள் அனைத்திலும் உள்ள புறக்கணிக்கப்பட்ட தனிமனிதனின் வன்மம், ஆங்காரம், தனிமை ஆகியவையே பீமனிலும் வெளிப்படுகின்றன. ‘பீமன் நாயர்’ என்று எம்.என்.விஜயன் கேலியாகக் குறிப்பிட்டாலும் இதிகாசபீமனை கேரளநாயரைக்கொண்டு புரிந்துகொள்ளும் முயற்சியில் ஓர் அழகியல் முழுமை நிகழத்தான் செய்கிறது .

சமீபமாக எம்.டி. வாரணாசி என்ற ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அதுவும் உறவுகளில் தோற்று நெஞ்சம் நிறைய பகைமையையும், வன்மத்தையும் சுமந்துக்கொண்டு காசியில் சென்று இருக்கும் ஒருவனுடைய கதை. காசிக்கு சென்றாலும் கருமம் தொலையாது என்று ஒரு வரி மலையாளத்தில் உண்டு. அந்த வரியை அப்படி நாவலாக்கியதை போல் இருக்கிறது இது. அவருடைய காதாபாத்திரத்தை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது விதியை நோக்கி, பண்பாட்டை நோக்கி எனக்கு ஏன் இது நடந்தது என்று கேட்கும் கதாபாத்திரங்களின் வரிசையில் அவர் நிற்பது தெரிகிறது. அரைநூற்றாண்டுக்குப்பின்னரும் எம்.டியின் கதாபாத்திரங்கள் அக்காலத்தின் அவலத்தை, புறக்கணிப்பின் நெருப்பை பேணிக்கொண்ட ஆழ்மனம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்

[மேலும்]

எம் டி குறிப்பு

எம்டி ஒரு பேட்டி

முந்தைய கட்டுரைஜெயகாந்தனும் வேதமும்
அடுத்த கட்டுரைஇருமுகம்