எம்.டி.வாசுதேவன் நாயர் வீழ்ச்சியின் அழகியல் 2
எம்.டி.வாசுதேவன் நாயர். வீழ்ச்சியின் அழகியல் 3
எம்.டி. வாசுதேவநாயர் என்ற பெயரையோ அவரது புகைப்படத்தையோ எங்கு பார்த்தாலும் என்னுடைய நினைவில் வந்துநிற்பது ஒரு பழைய புகைப்படம். அவர் ஒரு தென்னை மரத்தில் முக்கால்வாசி ஏறி அமர்ந்து கீழே பார்த்துக்கொண்டிருப்பார். எழுபதுகளில் அந்த புகைப்படம் மலையாள வார இதழ் ஒன்றில் வந்தது. அதைப்பற்றி நான் ஏன் இத்தனை காலம் நினைவில் வைத்திருக்கிறேன் என்று நானே வியந்திருக்கிறேன். அப்படி நினைவில் வைத்திருப்பதற்கான காரணமாக நான் கண்டுகொண்டது எங்கோ ஓர் இடத்தில் நான் அதற்கு ஆசைப்படுகிறேன் என்பதுதான். ஏனென்றால் தென்னை மரத்தில் ஏற முடியாது. இன்றுவரை ஏறியதில்லை.
எம்.டி.யுடன் என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும்போது எம்.டி. ஏறி அமர்ந்திருந்த அந்த தென்னைமரம் குறியீட்டு ரீதியாகவே மிகவும் பொருள் கொண்டதாகிறது. நான் ஆகமுடியாத, நான் எட்ட விழைந்த ஏதோ ஒன்றுடைய அடையாளமாம் அது. இளமையிலே நான் நோயுற்ற குழந்தையாகவே இருந்தேன். அதனால் தந்தை என்னை நோயுற்றவன் [வய்யாத்தவன்] என்றுதான் சொல்வார். அதனாலேயே அதிகமாக கவனிக்கப்படுவதாகவும், கவனிக்கப்படுவதாலேயே அதிகமாக கண்டிக்கப்படும் குழந்தையாகவே நான் இருந்தேன். என்னுடைய தந்தை என்னை அதிகமாகக் கொஞ்சியதில்லை. எப்பொழுதாவது அவருடைய கனத்த மயிரடர்ந்த கை என்னுடைய தோளில் அமர்ந்த சின்ன தருணங்களை நான் வாழ்நாள் முழுக்க நினைவில் கொண்டிருந்தேன்.
பலவீனன் என்று தன்னை உணரும் ஒரு குழந்தை மெல்ல தன் ஆற்றலை அறிகையில் மூர்க்கம் கொள்கிறது. தான் நிரப்பியதை கொஞ்சமென்றும் எஞ்சியதே அதிகம் என்று உணர்ந்து முழு உயிர் ஆற்றலையும் விரித்து அதை நிரப்ப முயற்சி எடுக்கும்போதுதான் அந்த ‘மூர்க்கம் உருவாகிறது. ஒருவகையில் புனைவிலக்கியத்தை நோக்கி நான் வந்ததற்கும் அந்த மூர்க்கம்தான் காரணமாக இருக்க முடியும். எனக்கு எஞ்சியிருந்த வெற்றிடம் மிக பிரம்மாண்டமானது. அதனை நான் எத்தனை சிறகுகள் விரித்தாலும் நிரப்பமுடியாது. எத்தனை உடலை உப்பிக்கொண்டாலும் நிரப்பமுடியாது. எனவே எனது கனவுகளை விரித்துக்கொண்டோன். எனக்கு இலக்கியம் அதற்கான வெளி மட்டுமே.
எம்.டி. வாசுதேவன் நாயர் தன் இளமைப்பருவத்தைப் பற்றி வெவ்வேறு நூல்களில் எழுதியிருக்கிறார். அவரது புனைவுலகமே அவரது சுயசரிதைக்கு நெருக்கமானது. அந்த சுயசரிதையில் வெளிப்படும் எம்.டி. கிட்டத்தட்ட ஒரு ஜெயமோகன். உடல் ஆற்றல் குறைவானவர். எனவே அன்றைய சூழ்நிலையில் ஒரு ’நரம்ப’னாக, ‘நூல’னாக கருதப்பட்டவர். நெடுங்காலமாக ‘நூலன் வாசு’ என்று ஒரு பட்டப்பெயர் இருந்திருக்கிறது. பஷீரின் நாவல்களில் நூலன் வாசுவின் அற்புதமான பகடிச்சித்திரங்கள் உள்ளன.
நூலன் வாசு இளைஞனாக ஆனபோது ஒரு கட்டாரி வாங்கி தன்னோடு வைத்துக்கொண்டார். அவருடைய பெயர் கட்டாரி வாசு என்று மாறுவதை மிகுந்த மனக்கொந்தளிப்புடன், உவகையுடன் கண்டடைந்தார். எம்.டியின் புனைவுலகத்தை தீர்மானிக்கும் இந்த முக்கியமான அம்சம் அவருடைய அனைத்துபடைப்புகளும் ஒரு சரடாக பின்னி ஓடுவதை காணமுடிகிறது. ஒற்றை வார்த்தையில் எம்.டியின் புனைவுலகத்தை ‘அயலவனின் ஆன்மக் கொதிப்பு’ என்று சொல்லிவிடலாம்.
இலக்கியத்தின் வெளியால் புறக்கணிக்கப்பட்டவர்கள், தோற்கடிக்கப்பட்டவர்கள், மறக்கப்பட்டவர்கள் அதிகமாக கவனிக்கப்பட்ட ஒரு காலம் என இக்கால இலக்கியத்தை சொல்லலாம். மாமனிதர்களை நாயகர்களாக்கிய சென்ற கால காவிய மரபிற்கான ஒரு எதிர்நிலைஎன்று நவீன இலக்கியத்தின் இந்த அம்சத்தை சொல்லமுடியும். எப்பொழுதுமே ஒலிக்கப்படாத குரல்களை நோக்கியே நவீன இலக்கியம் திரும்புகிறது. கேட்கப்படாத உரையாடலை நோக்கி அது செல்கிறது. காணப்படாத கண்ணீரை பதிவு செய்ய முடியுமா என்று முயற்சி செய்கிறது.
இந்த அம்சம் பழைய இலக்கியத்துக்கும் புதிய இலக்கியத்துக்கும் முக்கியமான ஒரு வேறுபாடாக இருக்குமோ என்றும் எனக்கு படுகிறது. ஏனென்றால் சீனப் பெருங்கவிஞர் து ஃபூ பற்றிப் படிக்கும்போது அவர் படைகளை நடத்திய மாவீரர் என்று காண்கிறோம். ஐம்பதாண்டுக்காலம் மாவீரர். ஐம்பதாண்டு காலம் தன்னந்தனியாக துறவியாக அலைந்து திரிந்த சாகசக்காரர். பின் இருபதாண்டுக்காலம் தன்னந்தனியாக மலையுச்சியில் வாழ்ந்த துறவி. ஒருவாழ்க்கையில் மூன்று வாழ்க்கைகள். து ஃபு வெல்ல முடியாத எதுவுமே இல்லை. அவர் காவியங்களின் ஒரு வீர நாயகன் போல இருக்கிறார். கதே அப்படித்தான் இருக்கிறார். ஒரு அமைச்சராக, வீரனாக, அறிவியல் அறிஞனாக, பண்பாட்டு நாயகனாக விளங்கும்போதே படைப்பாளியாக இருக்கிறார். டால்ஸ்டாய் அப்படித்தான் இருக்கிறார். எல்லா வகையிலும் ஒரு வீரநாயகன் அவர்.
அவர்களுடைய காலம் முடிந்துவிட்டதோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது நவீன இலக்கியம். உடனடியாக நினைவுக்கு வரக்கூடியவர் புதுமைப்பித்தன். காசநோயாளி, மெலிந்த உடல்கொண்ட, உந்திய பற்கள்கொண்ட, வயிற்றுக்குப் போதுமான அளவுக்குப் பொருளீட்ட முடியாத, உறவுகளில் தோற்றுப் போன, தனித்த மனிதர். ஒருவகையில் பாரதியும் அப்படிப்பட்டவர்தான். காஃப்கா, இவருடைய குரலை இலக்கியம் பதிவு செய்யத் தொடங்குபோது இலக்கியத்தில் அழகியலில் வலுவான மாற்றம் உருவாகிறது. அது வரலாற்றை எழுதுவதற்குப் பதிலாக, வரலாற்றின் இடைவெளிகளை எழுத ஆரம்பிக்கிறது. பண்பாட்டை எழுதுவதற்குப் பதிலாக பண்பாட்டின் விடுபடல்களை எழுத ஆரம்பிக்கிறது.எம்.டி. மலையாள இலக்கிய மரபின் நவீன இலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று.
நூலன்வாசு ஏன் இலக்கியத்திற்கு வந்திருக்க வேண்டும்? பொருளியல் ரீதியாக நலிந்துகொண்டிருக்கக்கூடிய ஒரு பெரிய நாயர் தரவாட்டில் பல பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவர் .அவருடைய அண்ணா கல்வியிலும், உடல் ஆற்றலிலும், அறிவுத்திறனிலும் அவரைவிட மேலானவராக எப்பொழுதும் கணிக்கப்பட்டார். எங்கும் எவருக்கும் ஒரு பொருட்டாகத் தோன்றாத மெலிந்த சிறுவனாக, பெரிய விழிகளால் அவர்களை நிமிர்ந்து பார்த்தபடி கூட்டத்தில் சுற்றிச் சுற்றி வரும் நூலன் வாசுவை என்னால் பார்க்கமுடிகிறது.
நூலன் வாசுவின் உலகம் முழங்கால்களுக்கு கீழே அசையும் கால்களால் ஆனது. அபூர்வமாக அவருடைய தலையைத் தொட்டுச் செல்லும் கைகளால் ஆனது. எப்போதாவது ஓர் அன்னையின் முகம் குனிந்து பரிவுடன் சில சொற்களைச் சொல்லக்கூடும். பெரிய தரவாட்டின் இருண்ட அறைகளிலே எங்கோ தனித்துவிடப்பட்ட ஒரு அக்கா துணைக்கு அவனை இழுத்து தனது மடியில் வைத்துக்கொள்ளக்கூடும். அந்த சிறு பிரியங்கள், சிறு அங்கீகாரங்கள் ,உள்ளடங்கி மறைந்திருக்கும் மெல்லிய காமம் ஆகியவற்றின் வழியாக நூலன் வாசு ஒரு கனவு படலத்தை மிக அந்தரங்கமாக தனக்குத்தானே நெய்து எடுக்கத் தொடங்கினார். அதுதான் அவருடைய புனைவுலகம்.
அறுபதுகளில் எம்.டி. எழுதவந்தபோது அவரது புனைவுலகத்தின் சில சிறப்பு அம்சங்கள் மலையாள வாசகர்களைப் பெரிய அளவில் கவர்ந்தன. ஒன்று, தீட்டி கூர்ப்படுத்தப்பட்ட உளியால் மென்மரத்தில் நுட்பமாக செதுக்கியதுபோல் அவருடைய மொழி நடை. சொல் மிகாமல் சொல் குறையாமல் எழுதும் திறன்வாய்ந்த ஒரு சில மலையாள எழுத்தாளர்களில் ஒருவர் எம்.டி. இன்றுவரைக்கும்கூட எம்.டி.யின் மொழிநடை, அதனுடைய புதுமையை, அழகை இழக்கமாமல் இருக்கிறது.
முக்கியமான உரைநடைக்கு எழும் அறைகூவல்களில் ஒன்று தேய்வழக்காதல் . எம்.டி.யின் உரைநடை மிகப்பெரிய அளவில் மக்களை கவர்வது என்பதாலும், அதிகமாக வாசிக்கப்படுவது என்பதாலும் தொடர்ந்து அதற்கு நகல் வடிவங்கள் உருவாகிகொண்டே இருக்கின்றன. அந்த நகல் வடிவங்கள் இன்னும் அதிகமான வாசகர்களை அதிகமாக சென்றடையக்கூடும். குறிப்பாக அடுத்த தலைமுறை அவர்களை நகல் செய்யுமென்றால் வாசகர்கள் கணிசமானவர்கள் தங்கள் சமகால காலத்தை சேர்ந்த நகல்களை முதலில் வாசித்துவிட்டு மூலப்படைப்புகளுக்கு வருவார்கள். அப்போது மூலப் படைப்பு தன்னுடைய ஒளி குன்றி அந்த நகல்களின் ஒரு நகலாகத் தோற்றமளிக்கும்.
பொதுவாக சிறந்த உரைநடையை நகல் செய்பவர்கள், அதன் உயிரை நகல் செய்வதில்லை. அதன் கட்டமைப்பைத்தான் நகல் செய்வார்கள். அந்த கட்டமைப்பில் இருக்கும் தேய்வழக்குகளை இன்னும் அதிகமாக நகல் செய்வார்கள். எம்.டியின் மிகச்சிறப்பான சொல்லாட்சிகள், பிற்பாடு வந்த பெரும்பாலான ஆசிரியர்களால் சொல்லிச் சொல்லி தேய்வழக்குகளாக ஆக்கப்பட்டுவிட்டன. இந்த தேய்வழக்குகளை கண்டு வாசித்து வரும் ஒரு தலைமுறை எம்.டி யின் ஒரு நாவலை இன்று வாசிக்கஎடுக்கும்போது கூட எம்.டி. புதுமையாக இருக்கிறார், ஈர்க்கிறார் என்பது ஒரு இலக்கிய சாதனை என்றுதான் நினைக்கிறேன்.
இரண்டாவதாக, எம்.டி. மலையாளத்தில் எழுத வந்தபோது அவருடைய தனிச்சிறப்பாக அடையாளப்படுத்தப்பட்டது அவரிலிருந்த ஒரு துன்பியல் அம்சம். கேரள சமுதாயத்தின் பொதுவான வரலாற்று வீழ்ச்சியின் சோகச் சித்திரத்தை தரும் படைப்பாளியாக அவர் கருதப்பட்டார். அந்த மனநிலை அவர் எழுதிய காலகட்டத்தைச் சார்ந்தது. அதற்கேயான நியாயங்களும் வரலாற்றுப்பின்புலமும் கொண்டது
மலையாள இலக்கியம் பிற இந்தியமொழி இலக்கியங்களைப் போலவே இந்திய மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தில் தோன்றியது. எனவே மாபெரும் அறச்சிக்கல்களையும், தத்துவ விவாதங்களையும் நிகழ்த்தியபடி உருவாகி வந்தது. ஆசான் உள்ளுர் வள்ளத்தோள் போன்றவர்கள் அக்காலகட்டத்தின் நாயகர்கள். அதன்பிறகு நாலப்பாட்டு நாராயணமேனன், அக்கித்தம் நம்பூதிரிப்பாடு, பி.சங்கரக்குறுப்பு போன்ற காந்திய இயக்க படைப்பாளிகள், அதன்பிறகு மார்க்சிய இலக்கிய படைப்பாளியாகிய கேசவ தேவ், வைக்கம் முகம்மது பஷீர் போன்றவர்கள்.
இந்த மூன்று அலைகளுமே நம்பிக்கை சார்ந்தவை. எதிர்பார்ப்புகளை, கனவுகளை முன்வைக்கக்கூடியவை. அதிலிருந்து விலகி எழுந்த முதல் பெரும் குரல் எம்.டி வாசுதேவநாயருடையது என்று சொல்லலாம். அவருடைய படைப்புகளில் ஆழமாக ஓடிக்கொண்டிருப்பது வீழ்ச்சியின் அவலத்தின் சித்திரிப்பும், அதன் விளைவான ஒரு அவநம்பிக்கை நோக்கும்தான். முந்தைய மூன்று அலைகளும் முன்வைத்தது எதிர்காலம் பற்றிய கனவு. எம்.டி.யின் படைப்பு வைத்தது நிகழ்காலம் பற்றிய யதார்த்தம்.
கேரள நிலப்பிரபுத்துவம், பொய்யான சில அடிப்படைகளின் மேல் கட்டிஎழுப்பப்பட்டதாக இருந்தது. விரிவான வயல்வெளிகளோ வேளாண்மை முறைகளோ இல்லாத , நீண்ட கோவணம் போன்ற ஒரு நிலப்பகுதி கேரளம். அதிகமும் மலைகள், எஞ்சியவை கடலோர மணல் வைப்புகள். நடுவே கடும் உழைப்பால் மேடாக்கி உருவாக்கப்பட்ட நிலத்தில் மேலும் கடும் உழைப்பால் செய்யப்பட்ட வேளாண்மையை நம்பி வாழ்ந்தது கேரள நிலப்பிரபுத்துவம். இக்காரணத்தால் நிலம் மிக அரியபொருளாக இருந்தது. எனவே நிலம் பிளவுகொண்டு போய்விடக்கூடாது என்பதற்காகவும், போர் சம்பந்தமான காரணங்களுக்காகவும், பெரும்பாலான குடும்பங்கள் பெரிய கூட்டுக் குடும்பங்களாகவே தலைமுறை தலைமுறையாக இருக்கவைக்கப்பட்டன.
கேரளத்தில் ஒரு தரவாடு என்பது பெண்வழி வருவது. அதை தாய்வழி என்று சொல்வார்கள், ஒரு தாயின் கொடிவழியே சேர்ந்த சகோதரிகளின் ஒரு பெரிய கூட்டமைப்பு அது. ஒரு வகையில் அதுவே ஒரு குட்டிச் சமூகம். அந்த சமூகம் கையாளும் நிலங்கள் உண்மையில் அந்தச் சமூகத்துக்குரியவை அல்ல. அவை அந்தச் சமூகத்திற்கு அன்றைய நிலப்பிரபுத்துவ அமைப்பால் கையளிக்கப்பட்டவை மட்டும்தான். அவர்கள் அதனுடைய டிரஸ்டிக்கள். அந்த கூட்டமைப்பிற்குச் சொந்தமான நிலம் ஒருவகையில் பெரியதாக இருக்கும். ஆனால் இன்னொரு வகையில் பார்த்தால் ஒரு சிறிய அளவு நிலம்தான் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கும்.
ஒரு நாயர் தனக்கு எவ்வளவு நிலம் இருக்கிறது என்று பார்த்தால், வேடிக்கையாக கேரள சினிமா ஒன்றில் சொல்லப்பட்டதுபோல, ஒரு தென்னை மரத்தின் அடிப்பகுதி அண்ணனுக்கும் மேல்பகுதி தம்பிக்குமாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இது சென்றகால நிலப்பிரபுத்துவ முறைக்கு ஏதோ ஒரு வகையில் சரியானதாக இருந்தது. அன்று ஓர் நாயர் ஆண் தன்னுடைய தரவாட்டிலிருந்து பெறக்கூடியதாக இருந்தது உணவு மட்டும்தான். அதுவும் அவனுடைய நடுவயதுக்குப் பிறகு அபூர்வமாகவே கிடைக்கும். மற்றபடி அவன் தன் ஆயுதத்தை நம்பி வாழும் ஒரு அனாதைதான். நவீன முதலாளித்துவ அமைப்பில் அவனுக்கு ஆயுதமும் இல்லாமலாகியது.
ஆகவே கேரளத்தில் ‘நிலப்பிரபுக்கள்’ என்று சொல்லப்பட்டவர்கள் அனைவருமே மிகுந்த ஏழ்மையில்தான் ஒருவகையில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். நிலப்பிரபுத்துவம் முடிந்து முதலாளித்துவத்தின் தொடக்ககாலம் அணுகிய 1930களிலிருந்து கூட்டுக்குடும்பங்கள் தொடர்ந்து உடைய ஆரம்பித்தன. ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் ‘எனக்கென்ன மிச்சம்?’ என்று கேட்கும் ஒரு காலம் வந்தது. தன் குழந்தைகளைக் கற்பிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. விளைவாக, கூட்டுக் குடும்பங்கள் தொடர்ந்து உடைய ஆரம்பித்தன. அப்படி பெரிய பெரிய கூட்டு குடும்பங்கள் உடையும்போதுகூட, அதனுடைய பல உறுப்பினர்களுக்கு அவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான மிகக் குறைவான நிலம்கூட பாரம்பரியச் சொத்தாகக் கிடைக்காது. இது கேரளச் சூழலில் ஒரு பெரிய இக்கட்டை உருவாக்கியது.
ஒருபக்கம், பெரிய குடும்ப அமைப்பும் அதற்கான கடமைகள், அதற்கான பண்பாடு, அதற்கான மனநிலைகளும் உருவாகி இருந்தன. இன்னொரு பக்கம், அந்தப் பண்பாட்டையும், மனநிலைகளையும் தக்க வைத்துக்கொள்ளும் அளவிற்கு நிலமும், பொருளோ இல்லை. இந்த இக்கட்டில் இருந்துதான் நவீனக் கேரள வாழ்க்கையின் அறச்சிக்கல்கள் பொருளியல் அறைகூவல்கள் எல்லாம் உருவாகி வந்தன. கேரள இலக்கியத்தைப் புரிந்துகொள்ள அவசியமான பின்புலம் இது.
ஒரு நாயர் அடித்தள சாதியினரைப்போல உடல் உழைப்பால் வாழவேண்டிய பொருளியல் கட்டாயத்திலிருப்பவர். ஆனால் ஒரு பிரபுவாக வாழ்ந்தாகவேண்டிய பண்பாட்டுக் கட்டாயத்தைக் கொண்டிருப்பவர். இந்த இக்கட்டு நாயர்களை மிகப் பெரிய ஒரு மனக்கொந்தளிப்பை நோக்கிக் கொண்டு சென்றது. உறவுகள் சிதைந்தன. கடுமையான வறுமை. வறுமையை மறைப்பதற்கான பல்வேறு மன நாடகங்கள். அதன் விளைவான உறவு மோதல்கள், கோபங்கள், வன்மங்கள், துரோகங்கள். 1930 முதல் 1960 வரையிலான 30 வருடங்கள் என்பது கேரள நிலப்பிரபுத்துவ காலக்கட்டத்தில் நாயர் வாழ்க்கையில் காம குரோத மோகங்கள் அனைத்து அறவிழுமியங்களுக்கும் மேலாக எழுந்து வந்த ஒரு காலகட்டம் என்று சொல்லலாம்.
இந்த காலகட்டத்தின் படைப்பாளிகள் என்று இருவரைச் சொல்லலாம். இந்த காலகட்டத்தைச் சரியாகத் தனது படைப்புகளில் வெளிப்படுத்தியவர் இருவர். ஒருவர் வைலோப்பிள்ளி ஸ்ரீதரன் மேனோன். இன்னொருவர் எம்.டி. வாசுதேவன்நாயர். இருவருக்கும் புனைவுகளில் மொழி நடையில் மட்டுமல்ல, மனநிலையிலும் பொதுவான பல அம்சங்கள் உண்டு.
1940க்கு முதலே வெவ்வேறு சிறு படைப்பாளிகளும், கவிஞர்களும், நாயர் வாழ்க்கையின் இந்த வீழ்ச்சியை, இக்கட்டை உதிரி படைப்புகளாக எழுதியிருந்தார்கள். ஆனால் இதனுடைய ஒட்டுமொத்த ஒரு சமூக பின்புலத்தோடு எழுத அவர்களால் முடியவில்லை. அப்படி எழுதுவதற்கு தேவையான சமூக ஆய்வுக் கருவியென்று ஒன்று அப்போது உருவாகிவரவில்லை. ஆனால் 1930க்குப் பிறகு தொடர்ச்சியாக சமூக மாற்றத்திற்கான விஷயங்கள் பேசப்பட்டு அதனுடைய இறுதி விளைவாக மார்க்சிய சமூக ஆய்வு முறை கேரளத்திலே அறிமுகமாயிற்று. தகழி சிவசங்கரப்பிள்ளை, பி.கேசவதேவ் போன்றவர்கள் விரிவான சமூகச் சித்தரிப்பை மார்க்சிய சமூக ஆய்வுக் கருவிகளின் உதவிக்கொண்டு உருவாக்கினார்கள். உதாரணமாக தகழி சிவசங்கரப்பிள்ளையின் தோட்டியின் மகன், இரண்டிடங்கழி போன்ற நாவல்கள், கேசவதேவினுடைய அயல்கார், ரௌடி போன்ற நாவல்கள்.
இப்படைப்புகள் சமூகத்தில் நடக்கும் மாறுதல்கள் பெரும் மனிதர்களுடைய உணர்ச்சிவேகங்களால் ஆனது அல்ல என்றும் உற்பத்தி முறைகளுக்கும், உற்பத்தி உறவுமுறைகளுக்கும் அதில் மிகப் பெரிய பங்கு இருக்கிறது என்றும் காட்டின. சமூகம் மாறும்போது உற்பத்தி முறைகளும், உற்பத்தி உறவுகளும் பெரிய அளவிலே அதற்குப் பங்களிப்பாற்றின என்றும் இந்த கோணத்தில்தான் நாம் தனிமனித உறவுகளைப் பார்க்கவேண்டும் என்றும் விரிவான பார்வையை இந்த மூலப்படைப்பாளிகள் உருவாக்கினார்கள். அவர்களிடமிருந்து அந்தக் கருவியை வாங்கிக்கொண்டு தன்னுடைய சமூக பின்புலத்தை ஆராயக்கூடிய ஒரு வாய்ப்பு எம்.டி.க்கு கிடைத்ததால்தான் எம்.டி.யுடைய படைப்புகள் விரிவும், ஆழமும் கொண்டவையாக இருந்தன.
எம்.டி. வீழ்ச்சியடைந்த தரவாடுகளின் கதைசொல்லி என்று சொல்லப்படுகிறார். எப்படி தகழி குட்டநாட்டின் கதாசிரியர் என்று சொல்லப்படுகிறாரோ அதுபோல .சிறு நகரங்களின் கதாசிரியராக பி.கேசவதேவ் கருதப்படுகிறார். எம்.டி. அவருடைய கதைகளை அவர் சந்தித்த ஆழமான உணர்ச்சிகொந்தளிப்புகள், அறச்சிக்கல்கள், வன்மம் ஆகியவற்றால் உருவாக்கியுள்ளார். மூழ்கி கொண்டிருக்கும் ஒரு தோணியின் அமரமுனையில் வந்து நின்று பதைத்துக்கொண்டிருக்கும் ஒரு சுண்டெலியை பார்க்கும் அனுபவம் எம்.டி. எழுதிய பெரும்பாலான படைப்புகளின் கதாநாயகனைப் பார்க்கும்போது வருகிறது. அது எம்.டி.யேதான். அவமதிக்கப்பட்டதின் வன்மம் அவர்களின் மனதில் தேக்கிவைக்கப்பட்டிருக்கிறது, சிறுமைப்படுத்தப்பட்ட இடங்களில் திரும்பிவந்து தன்னை நிரூபிக்க வேண்டும் என்று வெறியோடு கிளம்பிச் செல்பவர்கள் அவர்கள். எம்.டி.யின் புகழ் பெற்ற வரி ஒன்று உண்டு, ‘போகிறேன் -வருவதற்காக’
வருவதற்காக கிளம்பி போகிற கதாநாயகனின் உலகம் எம்.டி.யுடையது. தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் பரவலாக இருக்கும் ஒரு கேலி உண்டு, ஒரு நாயர் காதில் பீடியுடன் வேறெந்த உடைமையும் இல்லாமல் தமிழக ஊர் ஒன்றில் வந்து இறங்குகிறார்.[ அவருக்கு துண்டுபீடி என்றே ஆகுபெயர் இருக்கும்] அவ்விடத்தில் கடன் வாங்கி டீக்கடை நடத்துகிறார். தமிழகம் முழுக்க ஒரு காலகட்டத்தில் நாயர்கள் மற்றும் நாயர் என அழைக்கப்படும் ஈழவர்களுடைய டீக்கடைகள் இருந்தன. இன்றும் இருக்கின்றன. இந்த டீக்கடைகள் அனைத்திற்கும் பின்னால் இருக்கும் சமூகவியல் என்பது இதுதான். உடைந்துபோன ஒரு தரவாடு. மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பலிருந்து குதித்து நீந்தி கிடைத்த இடங்களில் கரையேறிய தனி மனிதர்கள் அவர்கள். எதுவுமற்றவர்கள். தங்கள் வாழ்க்கையை தாங்களே உருவாக்கிக்கொள்ளவேண்டியவர்கள்.
இவர்கள் எவரும் அவர்களுடைய சொந்த ஊரில் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் உடல் உழைப்புதான் செய்தாகவேண்டும். ஆனால் அவர்களுடைய சமுதாய அமைப்பு அவர்களை நிலப்பிரபுக்கள் என்றுதான் பார்க்கும், அவர்களால் உடல் உழைப்பை செய்ய முடியாது. வணிகத்தில் ஈடுபடுவதற்கான பொருள் அவர்களிடம் இருக்காது. பழைய நாயர் கூட்டுக்குடும்ப அமைப்பில் அம்மாவன் என்று சொல்லப்படும் தாய்மாமன் தான் பொறுப்பில் இருப்பார். அவன் ஒருபோதும் அந்த தரவாட்டின் குழந்தைகளை படிக்கவைப்பதை ஆதரிக்க மாட்டார். மேலும் படிக்க வைப்பதற்கான பொருள்நிலை இருக்காது. பெரும்பாலான நாயர்களுக்கு இதனால் படிப்பும் இருக்காது.வேறுவழியே இல்லை. சிதறிப்பரந்து அலையவேண்டியதுதான்.
இவ்வாறு தான் சென்றகாலத்தில் அடைந்த மொத்த பண்பாட்டையும் விட்டுவிட்டு நினைவுகளையும், சற்று வன்மங்களையும் மட்டுமே சுமந்துகொண்டு பிழைப்பிற்குப் போகும் ஒரு நாயர் இளைஞனின் கசப்பு முதல்முறையாக மலையாள இலக்கியத்தில் வெளிப்பட்டது எம்.டியின் கதைகளிலேயே. அறுத்துவைக்கப்பட்ட ஒரு மாமிசம்போலே என்று சொல்லலாம். அந்தக் கசப்பு ஒரு துளி குருதி போல மலையாள இலக்கியத்தின் பரப்பில் வந்து விழுந்தது எம்.டியின் கதைகள் வழியாகத்தான்.
இப்போது அவருடைய படைப்புகளை திரும்பிப் பார்த்தால் ஒவ்வொரு படைப்புக்குள்ளும் அந்த பொது அம்சம் வியப்பூட்டுகிறது. அவருடைய புகழ்பெற்ற நாவல் நாலுகெட்டு. அதற்காக அவர் கேரள சாகித்ய அகாடமியின் விருது பெற்றார். நாலுகெட்டு தொடர்ச்சியாக சரிந்துகொண்டே இருக்கும் ஒரு நாயர் தரவாட்டின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. பி.கேசவேதேவின் அயல்கார் [தமிழில் அண்டைவீட்டார் ]நாவலில் ஒரு துணைக்கதையாக இப்படி சரிந்து கொண்டிருக்கும் ஒரு நாயர் தரவாட்டினுடைய சித்திரம் மிக வலுவாக சொல்லப்பட்டிருக்கும். அந்த சித்திரத்தினுடைய இன்னும் விரிவாக்கபட்ட ஒரு சித்திரம் என்று நாலுகெட்டு -ஐ சொல்லலாம். கேசவதேவ் நாவலில் அந்த சரிவு ஒரு பழைய அமைப்பின் இன்றியமையாத வீழ்ச்சியாக ,பரிதாபத்திற்கோ, கேலிக்கோ உரிய ஒரு பழைய சித்தரிப்பாக சுட்டிக்காட்டப்படுகிறது. எம்.டி. அதை அழியும் மனிதர்களுடைய கண்ணீரும், ஏக்கமும் கலந்த கதையாக மாற்றித்தந்திருக்கிறார்.
[மேலும்]