கந்தர்வன்

1986 ல் ஓர் உரையாடலில் சுந்தர ராமசாமி சொன்னார், ”பூவுக்கு கீழே’ன்னு ஒரு தொகுப்பு வந்திருக்கு. நீங்க படிச்சுப்பாக்கலாம்.” கந்தர்வனின் கதைகளை நான் வாசிப்பது அதுவே முதல்முறை. எனக்கு அவரது கதைகள் மேல் மதிப்பு உருவாகவில்லை. சுந்தர ராமசாமியிடம் அதைச் சொன்னேன்.

அவர் ”நீங்க அவரை அவர் இருக்கிற சூழலிலே வச்சுப்பாக்கணும். அவர் ஒரு மார்க்ஸிஸ்டு. கட்சியில இருக்கார். டிரேட் யூனியன் வேலை செய்றார். அந்தமாதிரி ஆட்கள் எழுதிட்டிருக்கிற மாதிரி பெரும்போக்கா வர்க்கவேறுபாடு, சுரண்டல், போராட்டம்னு எழுதாம நுட்பமான விஷயங்களை எழுதறார். தமிழிலே அது ஒரு பெரிய திருப்புமுனை. நேத்து இந்தமாதிரி ஒருத்தர் எழுதினா நா.வானமாமலை கடிச்சுக் குதறிடுவார். தி.க.சி வரிசையா நம்பர் போட்டு கார்டு அனுப்பி வைவார்…”

 

எனக்கு அந்த மாற்றம் ஒரு முக்கியமான விஷயமாகப் படவில்லை. ”சார், இதிலே இருக்கிற நுட்பம்ங்கிறது ஒரு பாவலா. நுட்பம் இல்லாம ஆயிடக்கூடாதுங்கிறதுனால, நுட்பமா இருக்கணும்ங்கிறதுக்காக செயற்கையா நுட்பங்களை உண்டுபண்ணிக்கிறாங்கன்னு படுது…சின்ன விஷயங்கள் படைப்பிலே வர்றப்ப நமக்கு ஒரு பரவசம் வரணுமே அது வரல்லை” என்றேன்.

அவர் அதை ஏற்கவில்லை. சின்னவிஷயங்கள் சின்னவிஷயங்களாகவே ஒரு படைப்பில் வரலாமென்று அவர் நினைத்தார். நானோ அவை சின்னவிஷயங்களாக அர்த்தப்படக்கூடாதென்ற எண்ணம் கொண்டவன். ஒவ்வொரு சின்னவிஷயமும் மிகப்பெரியவையாக மலர முடியும். அப்படி மலர்ந்தால்தான் அது படைப்பு என்று நினைப்பவன். அதன்பின் கந்தர்வன் என்னுடைய விருப்பப்பட்டியலில் இருக்கவில்லை. அவரது கதைகள் என் கைகளுக்குத் தட்டுப்படவுமில்லை.

நெடுநாட்கள் தாண்டி, 1999 இல் ஒருமுறை நான் ஏதோ பேருந்து நிலையத்தில் ஒரு குமுதம் வாங்கினேன். காத்திருந்து சலித்து அதில் உள்ள எல்லா வரிகளையும் வாசித்தேன். அதில் ஒரு கதை கந்தர்வன் எழுதியது.

ஒர் இளம்பெண்ணை அவளைவிட சிறுவயது இளைஞன் ஒருவன் பேருந்தில் கூட்டிச்செல்கிறான். கூடவே ஒரு கைப்பிள்ளைக்காரி. பிள்ளை இந்தப்பெண்ணின் பிள்ளை போல் இருக்கிறது. கூட்டமில்லாத இரவுப்பயணம். பெண் நிலைகொள்ளாமல் இருப்பதை எல்லாரும் கவனிக்கிறார்கள். அவள் ஏறும்போதே அரைமயக்கத்தில் இருப்பது போல் இருக்கிறாள். முந்தானையைகூடப் பிள்ளைக்காரி ஒருத்தி தூக்கித் தூக்கி விடவேண்டியிருக்கிறது. பெண் ஏதோ முனகுகிறாள், அழுவதுபோல ஒலி எழுப்புகிறாள்.

சட்டென்று அந்தப்பெண் எழுந்து கூச்சலிடுகிறாள் ”பாவிகளா பொய் சொல்லாதிங்கடா… கண்ணு அவிஞ்சு போயிடும்டா . காளி கேப்பாடா உங்களை.வெட்டோடை காளி கேப்பாடா உங்களை” அந்த இளைஞனும் கைப்பிள்ளைக்காரியும் அவளை சமாதானம் செய்கிறார்கள். வலுவாக இழுத்து அமரச்செய்கிறார்கள்.

டிரைவரின் முதுகைப்பாத்து ”இபப்டித்தானே வந்தான், நான் அவன்கிட்ட பேசவே இல்லியே…டேய் பாவிகளா…வெட்டோடை காளி கேப்பாடா” இளைஞன் அந்தப்பெண்ணை இழுத்து அமரச்செய்து ரகசியமாக அதட்டுகிறான். அவள் கைகளை முரட்டுத்தனமாகப் பிடித்து முறுக்கி அடக்குகிறான்.

ஆனால் அவள் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறாள். மீண்டும் கூச்சல் ”நான் உத்தமிடா, நான் பத்தினிடா” அவளை அமரச்செய்ய இளைஞனால் முடியவில்லை. அவள் முந்தானை இழுபட எழுந்து நின்று பெருங்குரலில் ”டேய் நான் உத்தமிடா..பத்தினிடா நான்”என்று கூவுகிறாள்

இளைஞன் அவளை மாறி மாறி செவிட்டில் அறைந்து இழுத்து அமரச்செய்கிறான். அடி அவள் மேல் படவேயில்லை என்பது போல அவள்” மாத்திரையைப்போட்டு என்னை சாவடிக்கப் பாக்கிறியா? ஏண்டா என்னை அடைச்சு வைக்கிறே? டேய் நான் பத்தினிடா” என்றாள். அவன் அடிக்கிறான், இழுத்து அமரச்செய்துவிட்டு மீண்டும் மூர்க்கமாகத் தாக்குகிறான்.

பேருந்தில் இருப்பவர்கள் அனைவருமே சங்கடம் கொள்கிறார்கள். அந்தப்பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்று தெரிகிறது. டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு எழுந்து வந்து ”மேலூரிலே இருந்து உசுரை எடுக்குது சத்தம்” என்று அதட்ட இளைஞன் சங்கடமாக மன்னிப்புக் கோரும் பாவனையில் பார்க்கிறான். ”இப்படியெல்லாம் பொது பஸ்ஸிலே கூட்டிட்டு வரலாமா? மத்தவங்களுக்குக் கஷ்டம்ல?” என்று ஒருவர் கேட்கிறார்

அவள் தம்பிதான் அந்த இளைஞன். பிள்ளைக்காரி அவன் மனைவி. அக்காவை மதுரையில் இருந்து கூப்பிட்டுக்கொண்டு செல்கிறார்கள். ”எப்பவும் மாத்திரை சாப்பிட்டா தூங்கிடுவாங்க…இன்னைக்கு சாப்பிட மாட்டேன்னு சொல்றாங்க” என்கிறான் இளைஞன். அவர்கள் புதுக்கோட்டையில் இறங்குகிறார்கள். வீடுவரைக்கும் டாக்ஸியில் போகப் பணமில்லை. ஆட்டோ வைக்கலாமா என்று யோசிக்கிறார்கள். அந்தப்பெண் ‘டேய் பத்தினிடா…நான் பத்தினிடா” என்று அலறுகிறாள். பேருந்து நகர்கிறது.

அந்த நள்ளிரவில் எனக்கு வேர்த்துவிட்டது. அன்று என்னிடம் செல்பேசி இல்லை. இருந்திருந்தால் தமிழகத்திலுள்ள அத்தனை நண்பர்களையும் கூப்பிட்டு சொல்லியிருப்பேன். தமிழின் மகத்தான சிறுகதைகளில் ஒன்று இது. சிறுகதை என்ற வடிவம் எதற்காக உள்ளதோ அதைப் பயன்படுத்திக்கொண்ட ஆக்கம்.

அந்தப்பெண்ணின் கதை என்ன? எதற்காக அவள் அப்படிக் கதறுகிறாள்? மாபெரும் அநீதி ஒன்றின், ஆற்றமுடியாத துயரம் ஒன்றின் கதை புதைந்து கிடக்கிறது இந்த சிறு நிகழ்ச்சியில். ஏதோ உடம்பிலிருந்து வெட்டுப்பட்டு நம் பாதையில் கிடந்து அதிரும் உயிருள்ள தசைத்துண்டு போல இருந்தது அந்தக்கதை.

நான் ஊருக்கு வந்ததுமே குமுதத்துக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதி அக்கதை ஒரு சாதனை என்று சொன்னேன். என் நண்பரும் வாசகருமான ஒருவருக்கு எழுதிக் குமுதத்திலும் விகடனிலும் கந்தர்வன் எழுதிய எல்லாக் கதைகளையும் எடுத்துத் தரச்சொன்னேன். பல கதைகளில் தமிழின் பெரும் கதைசொல்லி ஒருவரைக் கண்டு கொண்டேன்.

கந்தர்வனின் விலாசத்தைத் தேடி அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். அவர் எழுதிக்கொண்டிருப்பவை தமிழின் மாபெரும் சிறுகதைகள் என்று சொன்னேன். அவர் எனக்கு பதில் ஏதும் போடவில்லை. அடுத்து விகடனில் கந்தர்வனின் இன்னொரு சிறந்த கதையான ‘தாத்தாவும் பாட்டியும் ‘ வந்திருந்தது.

கச்சிதமான சிறிய கதை அது. இரு கதாபாத்திரங்கள். தாத்தா நித்யகல்யாண ஆசாமி. எந்தப்பொறுப்பும் இல்லாதவர். சொத்தை அழித்த சொகுசுக்காரர். தன் சாப்பாடு, தன் சௌகரியங்கள் அல்லாமல் எதைப்பற்றியும் கவலை இல்லாதவர். பாட்டி அவர் மீது நீங்காத பிரியம் கொண்ட மனைவி. அந்தப் பிரியமே அவரை அப்படி வைத்திருக்கிறது என்று கூடச் சொல்லலாம். அந்தப்பிரியம் பாட்டிக்கு அத்தனைபேர் மீதும் இருக்கிறது.

ஆகவே சொத்து பங்கு வைக்கும்போது மகன்களும் மகள்களும் அம்மா என்கூட வந்து இருக்கட்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். ஆனால் யாருமே தாத்தாவைத் தங்கள் கூடவே வைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. அவரைப்பற்றிய பேச்சே எழுவதில்லை என்பதைப் பஞ்சாயத்தார் கவனிக்கிறார்கள்.

பிள்ளைகள் எல்லாருமே நல்ல நிலையில் இருக்கிறார்கள். கடைசிப்பெண் மட்டும்தான் கஷ்டப்படுகிறார். அவள் கணவன் ராசு மைத்துனன்களுக்கு எடுபிடியாக இருந்து வசைகள் வாங்கியே தன் ஆளுமையை இழந்து அப்பிராணியாக ஆனவர். ‘அப்பத்தா நீ யாருடன் இருக்கிறாய்?’ என்று அம்மாவிடம் கேட்கிறார்கள். அம்மா ‘ராசு கூட இருக்கேன்’ என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறாள். பிள்ளைகளுக்குப் பேரதிர்ச்சி. ராசு வீட்டில் ஒழுங்காக சாப்பாடே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ராசு முகம் மலர்கிறது. அம்மா பிடிவாதமாக இருக்கிறாள்.

அப்பாவுக்கு பிள்ளைகள் சேர்ந்து ‘சவரட்சணை’ செலவு கொடுப்பது என்று முடிவாகிறது. தாத்தா காதில் கைவைத்து எல்லாவற்றையும் கேட்டுவிட்டுத் தன் தேவைகளைச் சொல்கிறார். மாதம் ஒரு பிள்ளை அல்லது பெண் அவரைப் பராமரிக்க வேண்டும். காலையில் ஒரு தேக்சா வெந்நீர் குளிப்பதற்கு.குளியல் பொருட்கள் எல்லாம் தேவை. காலைப்பலகாரம் ஐந்து சூடான இட்டிலிகள், தொட்டுக்கொள்ளும் வகையறாக்கள். மதியம் வாழை இலையில் சூடான சோறும் குழம்பும் இரு தொட்டுக்கொள்ளும் விஷயங்களும். இரவும் அதேபோல சுடுசோறும் குழம்பும் பொரியலும். இதைத்தவிர டீ காபி முதலியவை. கைச்செலவுக்கு காசு. ராசு சித்தப்பா வீட்டில் அம்மா தங்குவதனால் அவருக்கு விதிவிலக்கு.

தாத்தா குடும்பத்தின் எந்தக் கஷ்டத்தையும் கண்டுகொள்பவரல்ல. உடம்பெங்கும் விபூதி சார்த்தி திண்ணைச்சுவர் முழுக்க சாமிபடங்கள் மாட்டி எந்நேரமும் பூஜையில் இருப்பார். அவர் தங்கியிருந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு டைபாயிடு கண்டு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. ஆனால் தாத்தா ஆருத்ரா தரிசனத்துக்கு திரு உத்தர கோச மங்கை போகவேண்டுமென்று பாடிக்காட்டிக்கொண்டிருக்கிறார். கோபமடைந்த மகன் பூஜைப்பொருட்களை அள்ளி முற்றத்தில் வீசிவிடுகிறான். ஆனால் அதற்கும் சேர்த்து தாத்தா அபராதம் போடுகிறார்

படிப்படியாக விவசாயம் நொடிக்கிறது. குடும்பங்களில் பட்டினி கிளம்புகிறது. ஆனாலும் தாத்தாவுக்கு அவரது சேவைகள் கிடைத்தாகவேண்டும். அவருக்கு மட்டுமாக கைப்பிடி அரிசியும் உளுந்தும்போட்டு அரைத்து ஐந்தே ஐந்து இட்டிலி சுட்டு கொடுத்துவிட்டுப் பிள்ளைகளுக்குக் கஞ்சியும் களியும் கொடுக்கிறார்கள்.அவர் இட்டிலி சாப்பிடுவதைப் பிள்ளைகள் எட்டிஎ ட்டிப் பார்க்கின்றன.

எந்தப்பட்டினியில் இருந்தாலும் சரியான வேளைக்கு தாத்தாவுக்குச் சாப்பாடு தேவை. சாப்பிடக்கூப்பிட்டால் உரக்க ‘நான் தயார்’ என்று கத்துவார். அந்த சொற்றொடரே அவருக்கு அடைமொழியாக ஆகிவிட்டது. நீண்டநாள் உயிர்வாழ்வதற்காக தாத்தா வெங்காயத்தை நசுக்கி சாப்பிட்டு அந்த வாசனையுடன் இருக்கிறார்.

மறுபக்கம் பாட்டி ராசு குடும்பத்தின் பட்டினியைப் பங்கிட்டுக்கொள்கிறாள். ராசு சித்தப்பா பகல் முழுக்க அரிசிக்கு பணம் தேடி அலைந்து ஏமாந்து திரும்புகிறார். சித்தி முகம் வீங்கி அமர்ந்திருக்க பாட்டி சோளத்தையோ கம்பையோ மிச்சம் பிடித்திருந்ததை வைத்து கூழ் காய்ச்சிக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறாள். அந்த வீட்டில் எப்போதும் களியும் கூழும்தான். பிரிந்துபோன மற்ற வீடுகளில் எப்படியோ சாப்பாட்டுக்கு ஒப்பேற்றி விடுகிறார்கள். ரங்கூனில் இருக்கும் பிள்ளைகள் வீடுகள் செழிப்பாகவே இருக்கின்றன. அவர்கள் நயந்தும் பயந்தும் பாட்டியைக் கூப்பிட்டுப் பார்க்கிறார்கள். பாட்டி மறுத்துவிடுகிறார்.

எந்நேரமும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு வாதநாராயண மரத்தடியில் அமர்ந்திருக்கும் பாட்டி ”உங்க தாத்தா ஊரிலே இருக்காரா?” என்று எங்கோ இருப்பவரைக் கேட்பது போல தாத்தா பற்றி விசாரிக்கிறாள். உண்ணாமல் வைத்து பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்து தொடர்பட்டினியால் நைந்து பாட்டி இறக்கிறாள். ‘ஒருவருஷம் கூழுமட்டும் குடிச்சா தாங்குமா’ என்கிறார் வைத்தியர். பாட்டியைத் திண்ணைக்கு கொண்டுவந்துபோடுகிறார்கள். பிள்ளைகள் அலறியடித்து வந்து கூடுகிறார்கள். பால்தயிர் கலந்து ஊட்டுகிறார்கள். ஹார்லிக்ஸ் புட்டிகள் ஆரஞ்சு ஆப்பிள்கள் வந்திறங்குகின்றன…பாட்டி அவற்றைப் பார்க்காமலேயே செத்துப்போகிறாள்.

கல்யாணமரணம். ஆகவே கொட்டு பேண்ட் மேளத்துடன் இழவு எடுக்கிறார்கள். பதினாலு ஊர் அழைப்பு உண்டு. உள்ளே ஏதோ சடங்கு நடக்க தற்காலிகமாக மேளங்கள் நின்றன. அந்த அமைதியில் யாரோ யாரையோ அழைக்க தன்னைத்தான் அழைப்பதாக எண்ணிக்கோண்டு திண்ணையில் எந்தக்கவலையும் இல்லாமல் இருந்த தாத்தா ‘நான் தயார்’ என்று கூவுகிறார்

கந்தர்வனின் இந்தக்கதையில் இரு குணச்சித்திரங்கள் வாழ்க்கையின் இரு துருவங்கள் போல எதிரெதிராக நிற்கின்றன. இந்த விசித்திரமான முரணுக்கு எந்த விளக்கமும் வாழ்க்கையை வைத்துச் சொல்லிவிடமுடிவதில்லை. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்று வள்ளுவர் கூட அந்த வியப்பையே பதிவுசெய்துவிட்டுச் செல்கிறார்.

இக்காலகட்டத்தில் பிரபல வணிக இதழ்களில் மட்டுமே தொடர்ந்து எழுதிவந்தார் கந்தர்வன். ஆகவே அவை இலக்கியச்சூழலில் கண்டுகொள்ளப்படவேயில்லை. அவற்றில் கணிசமான கதைகளுக்கு அடுத்த இதழில் என் வாசகர் கடிதம் பிரசுரமாகியிருக்கும். கந்தர்வனின் கடைசிக்காலம் என்பது உச்சகட்ட படைப்பூக்கம் வெளிப்பட்ட தருணம். அத்தகைய ஒரு மலர்ச்சியை வாழ்நாளின் இறுதியில் அடைந்த கலைஞர்கள் தமிழில் குறைவே.

கடைசியில் ஒருநாள் நான் கந்தர்வனை நேரில் சந்திக்க நேர்ந்தது. சென்னையில் நியூ புக்லேன்ட்ஸ் புத்தகக்கடையில். அவர்தான் கந்தர்வன் என நான் அறியவில்லை. நான் கண்ட புகைப்படங்களில் முடிச்சாயமிட்டுக்கொண்டு இளமையாக இருந்தவர் நன்றாக நரைத்திருந்தார். களைத்து முதுமைதெரியவும் இருந்தார். யாரோ அவரிடம் வந்து பேசியபோதுதான் அவர் கந்தர்வன் என்று அறிந்தேன். அவர் எனக்கு பதில் ஏதும் போட்டதில்லை. காரணம் அவர் ஒரு கட்சி உறுப்பினராக என்னைப்போன்ற ஒரு ‘பிற்போக்கு’ ஆளிடம் தொடர்பு வைத்துக்கொள்ள அஞ்சியிருந்தார். ஆகவே நானும் அவரைச் சங்கடப்படுத்தவில்லை.

அவரைத்தாண்டி பில் போட்டுக்கொண்டு நான் வெளியே கிளம்பும்போது ”ஜெயமோகன்!” என்று உரக்க அழைத்தபடி கந்தர்வன் என்னை நோக்கி வந்து சட்டென்று என்னை ஆரத்தழுவிக்கொண்டார். ஒருகணம் நான் செயலிழந்து போனேன். ”என்ன சார்!” என்றேன். கந்தர்வன் கண்கலங்கியிருந்தார். ”என்னைக்குமே என்னோட ஆதர்ச எழுத்தாளர் நீதான்யா… எத்தனை நாள் உன் எழுத்தை வாசிச்சு தூங்காம இருந்திருக்கேன் தெரியுமா… நீ தொட்ட இடத்தைத் தொடணும்னு நெனைச்சுக்குவேன்.. நீ மார்க்ஸியத்தை விமரிசனம் பண்ணி எழுதினப்பக்கூட பாவி உன் கையாலே எழுதிட்டியேன்னுதான் எனக்கு வருத்தமா இருந்தது….” நோயுற்றிருந்த உடல் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது.

நான் அவருடன் வெளியே சென்று ஒரு டீ குடித்தேன். அப்போது அரசுப்பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டிருந்தார். ”உன்னோட லெட்டர் குமுதத்திலே வந்த அன்னைக்கே என் எழுத்து வாழ்க்கை நிறைவடைஞ்சாச்சுன்னு நெனைச்சேன்.. ஆனா உனக்கு நான் பதில் போடல்லை…பலவிதமான தடைகள்…சங்கடங்கள்னு சொல்லலாம்” என்று புன்னகைசெய்தார்.

நான் பேச்சை மாற்றி அவரது கதைகளின் உச்சங்களைப்பற்றி சொன்னேன். அவர் என்னைப்பற்றிப் பேச விரும்பினார். ”என் சகாக்களாலே உன்னைப் புரிஞ்சுக்க முடியல்லை… வாசிச்சவங்க சிலபேர் இருக்காங்க…அவங்களை உனக்குத் தெரியாது. உன்னோட பெஸ்ட் ரீடர்ஸ்…அவங்க வேற. ஆனா மத்த பெரும்பாலானவங்களுக்கு கசப்பும் கோபமும்தான் இருக்கு… என்ன சொல்றது?”

நான் ”அது பரவாயில்லை” என்றேன். அவர் உணர்ச்சி வசப்பட்டு நிறைய பேசினார். தீவிரத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டுப் பலவகையான தண்டனைகளுக்கு ஆளானவர். ஆனால் அதிகாரியாக அவர் பதவி உயர்வு பெற்றபோது அதே தொழிற்சங்கம் அவரைக் கைவிட்டது, ஏன் வேட்டையாடியது. அதில் அவருக்கு ஆழமான மனக்கசப்பு இருந்தது. மேலும் பல ஏமாற்றங்களைச் சொன்னார். அத்துடன் உடல்நலம் குன்றியதைக் குறிப்பிட்டு ”அவ்ளவுதான் நாளை எண்ணிட்டிருக்கேன்” என்றார். ”உடம்புக்கு என்ன?” என்றார் ”அது எதுக்கு?” என்று சொல்லிவிட்டார்.

அவருக்குக் குடிப்பழக்கம் இருந்தது என்று நான் ஊகித்தேன். அப்போதுகூட கொஞ்சம் போதையில்தான் இருந்தார். ஒருவேளை போதையில்தான் தன்னை அவர் தளர்த்திக்கொண்டிருக்கலாம். போதை இல்லாவிட்டால் முப்பதாண்டுக்கால கம்யூனிஸ்டுத் தொண்டனின் இறுக்கம் அவரிடம் இருந்திருக்கலாம். அப்போது அவர் என்னைத் தன் கோட்பாட்டுக் கவசத்தால் தட்டித் தள்ளிவிட்டு சென்றுவிட்டிருப்பார்.

கடைசிக்காலத்தில் உருவான இந்த விலக்கம், மரணத்தைக் கண்டுகொண்டநிலைதான் கந்தர்வனைக் கோட்பாடுகளை உதறி மனிதர்களை அப்பட்டமாகப் பார்க்கச்செய்தது. தன்னுடைய சொந்த கிராமத்தையும், மண்மறைந்த உறவினர்களையும், அவர்களுடன் அழிந்த ஒரு வாழ்க்கையையும் எழுதிவிட வேண்டும் என்று வெறி கொள்ளச்செய்தது. ‘எழுதறதுக்கு நெறைய இருக்கு…எழுதுத்துக்கு உடம்பு இருக்கணும்’ என்றார்

கந்தர்வனின் கடைசிக்கதைகள் காட்டுவது புதுக்கோட்டைப் பகுதி நிலம் ஐம்பதுகளில் ஆரம்பித்து மெல்லமெல்ல புஞ்சை விவசாயம் இல்லாமலாகி பாலையாக ஆவதன் சித்திரத்தைத்தான். நிலத்தை நம்பி வாழ்ந்த சிறுநிலக்கிழார் குடும்பத்தின் அழிவையே அவர் சித்தரிக்கிறார். அது அவரது சொந்தக்குடும்பம். சொந்தச்சாதி. செழிப்பான ஒரு வாழ்க்கையில் இருந்தும் பண்பாட்டில் இருந்தும் சரிந்து பட்டினி நோக்கிச் சென்று அந்நிலையிலும் தங்கள் பண்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி அவமானமடையும் மக்கள். பல கதைகளில் அந்த உக்கிரமான மானுடப்பிரச்சினை பதிவாகியிருக்கிறது.

 

2003 ல் நடந்த எட்டு நூல்கள் வெளியீட்டு விழாவில் கந்தர்வன் .  முறையே வலமிருந்து இரா.குப்புசாமி, சோதிப்பிரகாசம், ஜெயகாந்தன், அசோக மித்திரன், கந்தர்வன்

பழைய மார்க்ஸியக் கோட்பாட்டு நம்பிக்கையில் உறுதியாக இருந்திருந்தால் அது அவருக்கு ‘உழைக்கும் மக்களின்’ பிரச்சினையாகத் தோன்றியிருக்காது. அவருக்குத் தன் சொந்த சாதிசனத்தின் கதையை எழுதுவது சரியா என்ற சந்தேகமே இருந்திருக்கிறது. ”அதையெல்லாம் எழுதணும்னே நெனைச்சதில்லை.. இப்ப எழுதாம இருந்தா நான் எழுதினதுக்கே அர்த்தமில்லைன்னு தோணுது” என்றார். ”எழுதுங்க சார்” என்றேன். ”பாப்பம்..ஆனா உடம்புக்கு முடியலை” என்றார்.

விடைபெறும்போது என்கையைப்பிடித்துக்கொண்டு கந்தர்வன் சொன்னார் ”ஆனா தம்பி என்னோட நம்பிக்கை மார்க்ஸியம். என்னோட ரத்தம் அது. நீங்க ‘பின் தொடரும் நிழலை’ எழுதினதை என்னால மன்னிக்கவே முடியாது.. உங்க பார்வையே தப்பு . ஒரு புரட்சியிலே வர்ற அழிவுக்கும் அடக்குமுறையிலே வர்ற அழிவுக்கும் வித்தியாசமில்லாம பாக்கிறீங்க…என்னால ஒத்துக்கிடவே முடியாது..பேசுவோம்” ஈரமான கையால் என் கையை அழுத்தினார்.

அதன்பின் அவர் எனக்கு ஏழெட்டு கடிதங்கள் எழுதியிருந்தார். எல்லாமே என் கதைகளை சிலாகித்தும் என் அரசியலை விமர்சனம் செய்தும் எழுதப்பட்டவை. 2003 டிசம்பரில் என்னுடைய ஏழு விமரிசன நூல்களை வெளியிடும்போது நான் கந்தர்வனை அழைத்துப்பாருங்கள் எனப் பதிப்பாளர் வசந்தகுமாரிடம் சொன்னேன். அழைத்தபோது அவர் உடனே வர ஒத்துக்கொண்டார். அன்று அது சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு கெடுபிடிப்போர் இருந்தது. நான் தொலைபேசியில் அழைத்து ”நீங்கள் என்ன வேணுமானாலும் பேசலாம் சார்…எனக்கு ஒண்ணுமே இல்லை. பாத்துக்கங்க, கட்சியிலே பிரச்சினை ஆயிடக்கூடாது” என்றேன் ”எனக்கு இனிமே என்ன? நான் வர்ரேன்” என்றார்.

அந்தக்கூட்டத்தில் கந்தர்வன் அவர் வாசித்த உரைக்கு முன்னதாக என் எழுத்தைப்பற்றி வெளிப்படையாக நான் அவரது ஆதர்ச எழுத்தாளன் என்று சொல்லியதனால்தான் அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னவற்றைப் பதிவுசெய்கிறேன். அந்தக்கூட்டத்தில் ஏழு நூல்களின் பல விமரிசனங்களுடன் தனக்கு உடன்பாடில்லை என்றும் அதில் முற்போக்கு முன்னோடிகள் விடப்பட்டிருக்கிறார்கள் என்பது குறையே என்றும் சொன்னார்.

சிலவாரங்கள் கழித்து என்னிடம் அவர் தொலைபேசியில் பேசினார். ”என்ன,கட்சியில் பிரச்சினையா?” என்றேன். ”சேச்சே, கட்சியைப்பத்தி என்னதான் நெனைச்சிருக்கீங்க? கேட்டாங்க, என் தரப்பைச் சொன்னேன். அவ்ளவுதான்” என்றார். ஆனால் அ.மார்க்ஸ் அவரிடம் ஏன் அந்தக்கூட்டத்திற்குச் சென்று அவ்வாறு பேசினீர்கள், நீங்கள் முற்போக்குத்தரப்பைக் காட்டிக்கொடுக்கிறீர்கள் என்று கடுமையாகச் சொன்னதாகச் சொன்னார்.

பின்னர் அவரிடம் தொடர்பே ஏற்படவில்லை. நான்கு மாதம் கழித்து 2004 ஏப்ரல் மாதம் அவர் இறந்தார். உடல்நலம் குன்றியிருந்தார் என்றும் திடீரென்று மரணமடைந்தார் என்றும் கேள்விப்பட்டேன். திருவண்ணாமலை பவா செல்லத்துரை என்னை ·போனில் அழைத்து கந்தர்வனின் மரணத்தை சொன்னார்.

கந்தர்வனின் அனைத்துக் கதைகளையும் பவா செல்லத்துரை அவரது வம்சி புக்ஸ் சார்பில் ‘கந்தர்வன் கதைகள்’ என்ற தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். சாசனம், கொம்பன் போன்ற பல முக்கியமான கதைகள் உள்ள இந்தத் தொகுப்பின் சிகரமான கதை ‘காளிப்புள்ளே’ என்ற கதைதான். அது மானுட மனத்தின் அதி நுண்மையான ஒரு இடத்தை மிகச்சிறந்த கலைஞனுக்குரிய விதத்தில் ‘தற்செயலாகத் தீண்டிச்செல்லும் கதை.

வாழ்நாள் முழுக்க பிறருக்காகவே வாழ்ந்த ஒரு பெண். தன்னைப்பற்றி நினைக்கவே தருணமில்லாத தியாக வாழ்க்கை வாழ்ந்தவள். வாழ்நாளின் இறுதியில் ஒரு கூட்டுப்புகைப்படம் அவளுக்குக் காட்டப்படுகிறது. அவள் கவனம் முதலில் செல்வது அவளுடைய படத்தைநோக்கித்தான். ‘நான் என்ன இப்டியா இருக்கேன்?’ என்கிறாள். ஆம், அவளுக்கும் அவள்தான் உள்ளூர முக்கியம். அது ஒரு மானுட உண்மை

கந்தர்வனும் அப்படித்தான். அவர் கடைசிக்காலத்தில் எழுதிய கதைகளால்தான் தமிழிலக்கியவாதிகளின் கூட்டுப்புகைப்படத்தில் அவருக்கும் இடம் கிடைத்தது. அதைப் பரவசத்துடன் பார்த்து ‘நான் இப்டியா இருக்கேன்?’ என்று அவரும் கேட்டிருக்கக்கூடும். நல்லவேளை அதற்கான வாய்ப்பு அவருக்கு அமைந்தது. குடி பெரும்பாலானவர்களைக் கட்டிப்போடுகிறது. சிலரை விடுவித்தும்விடுகிறது

கந்தர்வன் கதைகள். வம்சி புக்ஸ், திருவண்ணாமலை.

கந்தர்வன் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்

http://e-arc.blogspot.com/2005/06/blog-post_25.html

http://www.tamilonline.com/Thendral/print.aspx?id=102&cid=18&aid=4088

 www.thinnai.com/?module=displaystory&story_id… 

முந்தைய கட்டுரைகல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்
அடுத்த கட்டுரைஒளியை அறிய இருளே வழி .