மாண்டலின் ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் எனக்கு சுந்தர ராமசாமியிடமிருந்து அறிமுகமாயிற்று. தொலைக்காட்சிப்பெட்டியை கவனமில்லாமல் தாண்டிச்சென்ற ராமசாமி அரைக்கணம் கேட்ட ஒலித்துணுக்கை வைத்து ‘ஸ்ரீனிவாஸ்னா வாசிக்கறான்?’ என்று கேட்டதை வியப்புடன் கவனித்தேன். அதன்பின் அவரை மெதுவாக அறிமுகம் செய்துகொண்டேன்.
அருண்மொழியை மணந்தபின் அவளுடன் சேர்ந்து இசைகேட்க ஆரம்பித்த நாட்கள். 1991- இல் நான் முதல்முறையாக ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கினேன். பேரார்வத்துடன் ஒலிநாடாக்கள் வாங்கி சேகரித்தேன். நாட்கணக்கில் இரவும் பகலுமாக நீண்ட ஒரு இசைக்காலகட்டம் அது.
இசையின் கரையிலேயே நின்றிருக்கக்கூடியவன் நான். இசை எனக்கு ஒரு காட்சியனுபவம், கனவு அனுபவம் மட்டுமே. அதை அடையாளம் காண முயல்வதில்லை. இன்றும் இரவு முழுக்க கேட்பதுதான் வழக்கம். ஸ்ரீனிவாஸ் பல இரவுகளில் விடியவிடிய ஒலித்திருக்கிறார். நாவல்கள் எழுதிமுடிந்தபின் வரும் அபாரமான வெறுமையை விட்டு படிப்படியாக இறங்கச்செய்வது இசையே.
சிலநாட்கள் முன்புகூட அவரது மாண்டலின் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போதிருக்கும் புலன்மயக்க நிலையில் அதை குழலாகவே கேட்டேன். ஒளிமிக்க ஜப்பானிய ஓவியங்களாக, வெயில் பொழியும் கேரளப்பசுமைக் காடுகளாக, இளமழையாக.
மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு அஞ்சலி. ஆறுதலடையச்செய்வது ஒன்றே. மாபெரும் இசைமுன்னோடிகளைப்போலன்றி ஒலிப்பதிவுக்கருவிகள் இசையை நிரந்தரப்படுத்திய காலகட்டத்தில் அவரால் வாழமுடிந்தது.