என்னுடைய இணையதளத்தில் நேற்று வருகைப்பதிவு கிட்டத்தட்ட நாற்பதிவு சதவீதம் அதிகரித்திருந்தது. மனுஷ்யபுத்திரனுக்கும் எனக்குமான மனக்கசப்பு குறித்து நான் பதிவு போட்ட நாள்முதல் அது எகிறியபடியே செல்வதைக் காண்கிறேன். இப்போதிருக்கும் வருகை எப்போதுமே இருந்ததில்லை. தமிழில் வெளிவரும் பிற இலக்கிய இணையதளங்களை விடவும் மிகஅதிகம் என்று அலெக்ஸா காட்டுகிறது.
உபரியாக வரும் கும்பலில் அத்தனைபேரும் வந்து அந்த மனக்கசப்புக் கட்டுரையையே வாசித்துச் செல்கிறார்கள். அதனுடன் வெளிவந்துள்ள புத்தகங்களைப்பற்றிய இடுகைகளுக்கெல்லாம் வழக்கமான வருகைகள் மட்டுமே உள்ளது. ஏன் சர்ச்சைக்குள்ளான அந்த இலக்கியவிமரிசனக்கட்டுரையைக்கூட அதிகம்பேர் உள்ளே சென்று வாசிக்கவில்லை. இத்தகைய கட்டுரைகளுக்கு உள்ள வழக்கமான வாசிப்பு மட்டுமே.
அந்தக்கட்டுரையை எழுத எனக்குக் காரணமிருந்தது. என் வாசகர்களுக்கு என் தரப்பை நான் சொல்லவேண்டியிருந்தது. என் எண்ணங்களையும் நோக்கங்களையும் விளக்க வேண்டியிருந்தது. ஆனால் என் இணையதளத்துக்கு எப்போதுமே வராத, இதற்கெனவே வந்து வாசிக்கக்கூடிய, இந்த நாற்பது சதவீத உபரி வாசகர்களுக்கு இதில் என்ன தேவை இருக்கிறது?
இந்த இணையதளத்தில் எத்தனை கனமான விஷயங்கள் உள்ளன. எத்தனை ஆர்வமூட்டும் விஷயங்கள் உள்ளன. அரசியல், சினிமா, இலக்கியம், வாழ்க்கைவரலாறுகள், ஆன்மீகம், சமூக ஆராய்ச்சிகள், விவாதங்கள், நகைச்சுவைக்கட்டுரைகள்… எதிலுமே எந்த ஆர்வமும் இல்லாமல் இதற்கு மட்டுமே ஆர்வம் கொண்டு வரும் இந்த நாற்பது சதவீதம் வாசகர்களுக்காக பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. இவர்களின் மனநிலைதான் என்ன?
கிட்டத்தட்ட ஒரு கோழிச்சண்டை பார்க்கும் குதூகலம். இதில் சம்பந்தப்பட்டிருக்கும் இலக்கியக் கருத்துக்கள் , விழுமியங்களைப்பற்றிய கவலைகள் எதுவுமே இவர்களுக்கு பொருட்டல்ல. அப்படி அவர்கள் எண்ணியிருந்தால் அந்த விஷயங்களுக்காகவும் வந்திருப்பார்களே. இவர்களைக் கவர்வது சண்டை மட்டுமே. இன்னும் மாறி மாரி வசைபாடிக்கொண்டிருந்தால் இன்னமும் அவமதித்துக்கொண்டிருந்தால் இவர்களின் உள்ளம் உவகை கொள்ளும்போலும்
இதன்பின், ”என்னசார் ரைட்டர்லாம் சண்டை போட்டுட்டிருக்காங்க…சொசைட்டிக்கு என்ன சார் இதனாலே பிரயோஜனம்?” என்று ஆர்வமாக சலித்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இந்தக்கும்பல்தான் இணையத்தின் பெரும்பாலான பக்கங்களை வசைவெளியாக மாற்றுகிறது. தீவிரமான நம்பிக்கையுடன் எழுத வருபவர்களைக்கூட கோமாளிகளாக ஆக்குகிறது. எங்கே பூசல் நிகழ்கிறதோ அங்கே இவர்கள் கூடி விடுகிறார்கள். இதனால்தான் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எவரையேனும் வசைபாடுவதை இணையத்திற்கான தொழில்நுட்ப உத்தியாகவே கொண்டிருக்கிறார்கள் போலும்.
ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக்கும்பலுக்கு வேறு ஏதேனும் கலாச்சார அக்கறைகள் உண்டா? எதையாவது வாசித்துப்பார்ப்பார்களா? பெரும்பாலும் மௌமனாகவே வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள் போலும். இந்தக்கும்பலை இணையதளம் நோக்கி இழுப்பதன்மூலம் ஒருவர் அடையப்போவதுதான் என்ன? இவர்களால் ‘ஹிட் எகிறுதுங்கோ’ என்று ஒருவர் மகிழ்ந்தாரென்றால் அவர் பெரிய மூடராகவே இரூக்க வேண்டும். அதைவிட, இந்த மாதிரி விஷயங்களுக்காக தங்கள் ஓய்வுநேரத்தைச் செலவழிக்கும் இந்தக்கும்பல் தங்களையே ஆன்மீகமாக கறைப்படுத்திக் கொள்கிறது
இந்த ஆசாமிகள் என் இணையதளம் பக்கமே வராமல் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். பொழுதுபோக்குக்காக, ‘சும்மா’ படிக்க வரும் எவரும் இங்கே இனிமேல் நுழையவே கூடாது. அதுதான் இலக்கு. இப்போதிருக்கும் பாதிப்பேரையாவது கழித்துக்கட்டுவது. பார்ப்போம்.