மாசனபு ·புகோகா:ஒரு கீழை ஞானி

இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்னர் காசர்கோடு நகருக்கு அருகே பையன்னூர் என்ற கிராமத்தில் நடந்த ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே கோபாலகிருஷ்ணன் விஜயலட்சுமி என்ற தம்பதிகள் வந்திருந்தார்கள். நீண்ட தாடிவைத்திருந்த கோபாலகிருஷ்ணன் நம்முடைய உணவு எந்த அளவுக்கு மலினப்பட்டிருக்கிறது என்பதை விளக்கி அதற்குக் காரணம் லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட வேளாண்மையே என்றார். அந்த இயல்பிலிருந்து வேளாண்மையை விடுவிக்கும் ஒரு புரட்சி நிகழ வேண்டும் என்று சொல்லி ஒரு நூலைக் காட்டினார்

அது மாசானபு ·புகோகா எழுதிய ‘ஒற்றைவைக்கோல் புரட்சி’ என்ற நூல். அப்போதுதான் நான் மாசானபு ·புகோகாவின் பெயரைக் கேள்விப்படுகிறேன். எனக்கு அப்போது பேசப்பட்ட பல கருத்துக்கள் உடன்பாடாக தோன்றின. அது கேரளத்தில் சைலண்ட் வேலியைக் காப்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து சூழியல் கருத்துக்கள் பரவலாகிவந்த காலம். சூசீமுகி , வைத்ய சஸ்திரம் போன்ற சூழியல் இதழ்கள் வெளிவந்துகொண்டிருந்தன. நான் அப்போது ஷ¤மாக்கர், இவான் இல்யிச் ஆகியோரின் நூல்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருதேன்.

நான் வாசித்த ஒற்றைவைக்கோல்புரட்சி என்னை ஆழமாக பாதித்த நூல்களில் ஒன்றாக இருந்தது. சொல்லப்போனால் நான் இன்றுவரை வாசித்த ஜென் நூல்களில் அதுவே முதன்மையானது. ‘இயைந்திரு’ என்ற ஜென் தரிசனத்தின் நடைமுறை விளக்கமாக இருந்தது அந்த நூல். அந்த தரிசனம் மாசானபு ·புகோகாவுக்குக் கிடைப்பதும் ஒரு ஜென் தருணம் மூலமே. குப்பையில் முளைத்துக்கிடந்த ஒருநெல்செடியின் செழுமையைக் கண்டு அதைப்புரிந்துகொள்ள முயன்று அலைந்து திரிந்து மனக்குழப்பத்தின் உச்சியில் இருக்கையில் ஒரு பறவையின் சிறகடிப்பைக் கேட்கிறார் மாசானபு ·புகோகா. அந்த தருணத்தில் அவர் மனதில் அந்த தரிசனம் திறந்துகொள்கிறது. உச்சகட்ட புனைவுத்தருணம்போல என்னை பரவசம்கொள்ளச் செய்தது அந்த இடம்.

அந்நூலில் மாசானபு ·புகோகா பேசும் பலகருத்துக்களை நான் சிந்தனை செய்திருக்கிறேன். என் சிறுவயதில் நான் கண்ட மூத்த விவசாயிகள் பலரும் கலைஞர்கள், பாடகர்கள், அடிமுறை ஆசான்கள். அவர்களுக்கு அதற்கெல்லாம் நேரம் இருந்திருக்கிறது. என் தலைமுறை விவசாயிகளுக்கு நேரமே இல்லை. அவர்கள் ஒவ்வொரு கணமும் போராடியாக வேண்டும். ‘ஹைக்கூ கவிதை எழுதிய விவசாயிகள் ஏன் மறைந்து போனார்க?’ என்று கேட்கிறார் மாசானபு ·புகோகா. ரசாயன உரங்கள் மூலம் மண்ணுடனும் பூச்சிகொல்லிகள் மூலம் உயிர்பெருந்தொகையுடனும் வெல்லமுடியாத ஒரு போரில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறான் இன்றைய விவசாயி. சற்றே அசந்தால்கூட அவனை விழுங்கிவிடும் அந்த இயற்கைச் சக்திகள்.

காட்டில் அலைந்த நாட்களில் புதர்களில் வளர்ந்த பெரிய நெற்கதிர்களை நான் கண்டிருக்கிறேன். காட்டில் ஒரு மரசீனியை பிடுங்கி நாங்கள் எட்டுபேர் வயிறு புடைக்க உண்டிருக்கிறோம். அந்த விளைச்சலை ஒருபோதும் வேளாண்மை அளிக்காது. காட்டரசியாகிய நீலியின் அருள் அது என்பார்கள் விவசாயிகள். நீலி இயற்கையின் பெருந்தோற்றம். அவள் அருள் பெற்ற ஒரு விவசாயத்தை உருவாக்க முனைந்தார் மாசானபு ·புகோகா. இயற்கையுடன் போராடாமல் இயற்கையுடன் முழுமையாக இணைந்த ஒரு வேளாண்மை முறையை அவர் உருவாக்கினார்.

இன்று தமிழகத்தின் முக்கியமான பேசுபொருள்களில் ஒன்றாக மாறியுள்ளது இது. நம்மாழ்வார் போன்ற புகழ்பெற்ற இயற்கைவேளாண்மை நிபுணர்களும் ஏராளமான விவசாயிகளும் இன்று உருவாகியிருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் மாசானபு ·புகோகாவின் சில கட்டுரைகளையும் ஒரு பேட்டியையும் நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

மாசானபு ·புகோகா [Fukuoka Masanobu] 1913 பிப்ரவரி 2 ஆம் தேதி பிறந்தார். சென்ற  ஆகஸ்ட் 16, 2008 அன்று மரணமடைந்தார். The One-Straw Revolution, The Road Back to Nature and The Natural Way Of Farming ஆகியவை முக்கியமான நூல்கள். நான் அறிந்தவரை ஒற்றை வைக்கோல் புரட்சி மட்டும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனக்கு மாசானபு ·புகோகா அளித்த தரிசனங்களில் முக்கியமானது இயற்கைவேளாண்மை சார்ந்தது அல்ல. அவர் தன் நூலில் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை ஒரு வகை அரைகுறை ஐரோப்பியநோக்கு என்று சொல்லி சாதாரணமாக நிராகரித்துச் செல்கிறார். முழுமையின் ஒருமையை மையத்தரிசனமாகக் கொண்ட ஜென் மரபு அப்படித்தான் அதைக் காண முடியும். ஆனால் அந்த வயதில் அந்த நோக்கு என்னை அதிர்ச்சியடையச் செய்தது. மீள மீள சிந்திக்கச் செய்தது.

மேலைஅறிவியல் என்பது புறவயமான, நிரூபிக்கப்பட்ட , கடைசி உண்மைகளை முன்வைப்பது என்று நாம் பள்ளிக்கல்விமூலம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில் அவர்களின் நிரூபணவாத அறிவியல்கூட அவற்றுக்குப் பின்னால் உள்ள ஊகங்களின் நிரூபணத்தையே நிகழ்த்துகிறது. அந்த ஊகங்களோ அவர்களின் பிரபஞ்ச நோக்கின் கூறுகள் மட்டுமே. அறிவியலுக்குப் பின்னால் அந்தப் பண்பாடு பிரபஞ்சத்தை எப்படி நோக்குகிறது என்ற அடிபப்டைக் கேள்விக்கு இடமுண்டு என்று நான் உணர்ந்தேன்.

ஆகவே மேலைஅறிவியல் முன்வைக்கும் உண்மைகளை முற்றிறுதியான உண்மைகளாகக் கொள்ள வேண்டியதில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அவை ஒருவகை பிரபஞ்ச நோக்கின் விளைவுகள். வேறுவகையான பிரபஞ்ச நோக்குகளுக்கு இந்த புவியில் இடமுண்டு. அவை மேலைநாட்டு பிரபஞ்சநோக்குக்களை முழுமையாக மறுத்தே இயங்கமுடியும். தங்களுக்குரிய அறிவியலை உருவாக்கவும் முடியும்.

இந்திய மெய்யியல் சார்ந்து எனக்கிருந்த குழப்பங்களை அதன் வழியாக நான் கடந்தேன். இந்தியமெய்யியல் சார்ந்து இருக்கும் தாழ்வுமனப்பான்மைகளை நீக்கினேன். நமது சிந்தனைகள் மேலை அளவுகோலில் என்ன மதிப்பு கொடுக்கின்றன என்று நோக்கும் மூடத்தனத்துக்கு நான் இடம்கொடுப்பதேயில்லை. மேலைச்சிந்தனைகளை படிக்கும்போதுகூட அவற்றின் வழிபாட்டாளனாக நான் ஒருபோதும் ஆனதில்லை. இலக்கிய உலகில் அவ்வப்போது மேலைநாட்டிலிருந்து வந்து சுழன்றடித்து கடந்து செல்லும் புயல்களிலில் இருந்து என்னைக் காத்தது இந்த தரிசனம்

மாசானபு ·புகோகாவுக்கு என் அஞ்சலி. அவர் ஒரு நவீனகால ஞானி.

இயற்கைவேளாண்மை,உலகமயம்:ஒரு கடிதம்

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

இயற்கை உணவு ஒரு கடிதம்

இயற்கை உணவு : என் அனுபவம்

முந்தைய கட்டுரைவிசிஷ்டாத்வைதம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஃபுகோகா :இருகடிதங்கள்