பகடியுடன் தொடங்கும் வண்ணக்கடல் இளமையின் செழுமையை எதிர்நோக்க வைத்தது. மாறாக நாம் காண்பதோ ஆணவம், வன்மம், புறக்கணிப்பின் வலி. பெண்களின் அக விழைவுகளுடன் விரிந்த மழைப்பாடலுக்கு பின் வண்ணக்கடல் சிறுவயதில் கௌரவர் பாண்டவர்கள் கொள்ளும் நிலைகளை கோடிட்டு காட்டுகிறது.
மாமதுரையில் தொடங்கி மிருத்திகாவதி வரை செல்லும் அஸ்தினபுரி நோக்கிய இளநாகனின் பயணமாக விரியும் இந்நாவலில் நாமும் பண்டைய இந்திய நிலப்பரப்பில் பயணிக்கிறோம். வெறும் இடங்களாக இல்லாமல் நம் ஆசிரியரின் எழுத்தில் நமது நிலப்பரப்பின் தனித்தன்மைகளை, அங்கு இயற்கையுடன் இயைந்து கட்டப்பட்ட கட்டிடங்கள், இலகுவான கலங்கள் ஊர்திகள், அக்காலத்திய வணிக முறைகள், உணவு முறைகள் என விரிகிறது. இதில் காஞ்சி நகரின் வர்ணனை மகுடம். வழியில் இளநாகன் காணும் யாவும் இந்திய பெருநிலத்தின் பன்மைதன்மையில் உள்ள ஒருமையை காட்டி செல்கிறது.
சாங்கியம், அருகநெறி, ஜடவாதம்/பூதவாதம், காளமுக நெறி, தார்கிகம், வைசேடிகம், தன்னியல்பு/தற்செயல்வாதம் என பல்வேறு நெறிகளும் தத்துவங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் கூர்ந்து வாசிக்கவேண்டிய பக்கங்கள் அவை. மகாபாரதக்கால நாடுகள் மற்றும் நகர்களின் பெயர்களை சிறு முயற்சியுடன் இணையத்தில் தேடியே தெரிந்துகொள்ளப்பெற்றேன்.
நெகிழ்ச்சியான பயண கட்டங்கள் பல உள்ளன. புதிய மனிதர்களின் அருமையான விருந்தோம்பல், நட்பு, உதவிகள் பெரும் இளநாகன் இவ்வளவே இந்த உலகம் என உவகை கொள்கிறான். சென்னம்மையிடம் அமுதன்னம் உண்ட கீடகர், மன்னரின் முன் சென்னம்மையை வாழ்த்தி செய்யுளுரைக்கும் நாடகீயதருணம் மிகச்சிறப்பு. உக்கிரமான சில பகுதிகளும் குறிப்பிடத்தக்கவை. காளமுக சூலமேறுதல், ஏகலவ்யனின் அன்னை சுவர்னை நவகண்டம் மற்றும் பிருகு-ஹேகயர்களின் குல அழிப்பு ஆகியன மனதை பதறசெய்கின்றன.
காலத்தின் மைந்தன் தருமன் உலகை ஒலிகளால் ஆனதாகவும், காற்றின் மைந்தன் பீமன் உலகை மிருகங்களால் ஆனதாகவும், மின்னலின் மைந்தன் அர்ஜுனன் உலகை பறவைகளால் ஆனதாகவும், புரவிகளின் மைந்தர் நகுலன் உலகை மலர்களால் ஆனதாகவும், சகாதேவன் உலகை பூச்சிகளால் ஆனதாகவும் காண்பதாக தொடங்கி, இறுதியில் அவை காட்டில் ஒன்றை ஒன்று உண்டு அழித்து அழகிலா ஒற்றை பேரியக்கத்தின் ஓங்காரமாக முடியும் காட்சி விவரணை புனைவின் உச்சம்.
துரியோதனின் உலகை பாறைகளாக காண்பதும், பாறைகளுக்கு கண்ணில்லாததால் எதிரியை கண்டு அஞ்சுவதில்லை என்பது அவன் அன்னையை அறிந்தோ அல்லது தந்தையை அறிந்தோ? அன்ன மந்திரத்துடன் அடுமனையிலும் யானைகொட்டிலிலும் வளரும் பீமன் அனைத்து கௌரவர்களாலும் நேசிக்கப்படுகிறான். இருவரின் முதல் கள சந்திப்பு அபாரமான உத்தியில் சொல்லப்படுகிறது. பீமனின் புஜங்கள் ஜயன் மகாஜயன் ஆகவும் துரியோதனின் புஜங்கள் கேது ராகு ஆகவும் உருவகப்படுத்தி அவை போரிடுவதும் அவ்வாறு அவர்கள் ஒருவரை ஒருவர் அறிவதும் அழகு.
ஆடிப்பாவைகளாக ஒற்றுமையாக செல்லும் துரியோதனன் பீமன் உறவு கானுலாவின் கரடி நிகழ்வால் முற்றுபெறுகிறது. தர்கவாதியான சௌனகரின் பார்வையில் நாம் துரியோதனின் வன்மத்தின் ஊற்றுமுகத்தை அறிகிறோம். பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரன் உடனான பீமனின் முதல் சந்திப்புகளும் அந்நேரத்தில் துரியோதனின் மீதான புறக்கணிப்பும் என சௌனகர் அவர் கோணத்தில் விவரிக்கிறார்.
இந்திரா விழாவுடன் தொடங்குகிறது அர்ஜுனனின் பகுதி. வில்வித்தையில் சிறந்தவனாக இணையற்றவனாக தன்னை முன்னிறுத்த விழையும் அர்ஜுனன், துரோணரை தனக்குமட்டுமேயான குருவாக கொள்கிறான். அஸ்வத்தாமனிடமும் கர்ணனிடமும் அவன் கொள்ளும் பூசல்கள் அனைத்தும் குருவிற்க்காகவும், தன்னை மிஞ்சுபவரை மிஞ்சவும் எனலாம்.
நெருப்பை ஆளக்கற்ற பிருகுகுலம்(பார்கவர்) வைதிகர்களும், மேய்ப்பர்/இடையர்/யாதவரான ஹேகயர்குலமும் இணைந்து உடன்பாட்டுடன் தலைமுறைகளாக வந்துவருகின்றனர். பிருகு குல சியவனன் கொள்ளும் பொன்னாசையால் ஹேகயர் குலம் மீது கருணைஇழக்கிறான். ஹேகயர் குலம் பட்டினியால் குன்றியதும் கிருதவீரியன் சினம் கொண்டு பிருகுகளை அழிக்கிறான்.
கிருதவீரியன் தொடங்கி கிருதசோமன், கார்த்தவீரியன் வரை ஹேகயர் குலம் பிருகு குலத்தை அழிக்க முயல்வதும், ஊருவன் முதல் ருசீகன், ஜமதக்னி, பார்கவராமர் வரை பிருகுகள் ஹேகயர்களை அழிக்க முயல்வதும் இருண்ட மானுட பக்கங்களாக விரிகிறது. இறுதியில் பிருகுகளின் ஜமதக்னி நெருப்பு துரோனரிடமும், ஹேகயர் குல கார்த்தவிரியனின் ஆயிரம் கைகள் துரியோதனிடமும் சேர்கிறது என உருவகிக்கப்படுகிறது.
வைதிகர்களுக்கும் யாதவர்களுக்குமான அதிகாரப் போரை இன்றும் காண்கையில் அக்காலத்தில் இக்குலப்போர்களின் வன்மையை உணரலாம். இதே போல் இன்னும் எத்தனை குலப்போர்களோ? அவற்றை அடுக்கி அடக்கி அணைந்து போக செய்த இந்திய ஞான மரபுகளையும் தாரிசனங்களையும் இன்று வெற்று ஜாதி அடுக்கு மதமாக ஏளனம் செய்வோரை என்னவென்பது?
இந்நாவலில் மிக விரிவான கதாபாத்திரம் துரோணருடையது. பிராமண பரத்வாஜருக்கும் தாழ்குல ஹ்ருதாஜிக்கும் பிறந்து தந்தையின் புறக்கணிப்புடன், தரப்பையை தாயாகக்கொண்டு வளர்கிறார். தன்னை பிராமணனாக உணரும் துரோணர் தந்தையால் காயத்ரி மறுக்கப்பட்டு அக்னிவேசரிடம் வில் ஏந்தி மாணவராக செல்கிறார். அக்னிவேசரின் குருகுலத்தில் முதன்மை மாணவராக பிராமண நெறிகளுடன் வாழும் துரோணர் அனைத்து மாணவர்களிடமும் சிறு ஏளனத்தை அறிகிறார். தன்னை பிராமணனாக கொண்டு கல்வி கோரும் யக்னசேனனை அக்னிவேசரின் சொல்மீறி மாணவனாக கொள்வதில் அவரின் முனைப்பு வெளிப்படுகிறது.
அக்னிவேசரின் இறப்பின் பின் இமையம் முதல் தண்டகாரண்யம் வரை, பரசுராமர் முதல் சரத்வான் வரை அலைந்து பிராமண பேறு பெற அலைகிறார். அது கிடைக்கப்பெறாமல், கிருபியை மணந்து, விடூகரை தந்தையாக கொண்டு, க்ஷத்ரியனாக அமைதியை கொள்கிறார். அஸ்வத்தாமன் வளர்பருவத்தில் சிறு உலகியல் தேவைக்காக பழைய மாணவனான துருபதனிடம் சென்று எல்லோர் முன் குலமிலியாக அழியா அவமதிப்பை பெறுகிறார். அஸ்தினபுரி சேர்வதற்குமுன் அவர் ஜமதக்னியின் பிருகு குல நெருப்பை அடைவது குறிப்பிடத்தக்கது.
சிறந்த மாணவனாக, நட்பான கணவனாக, தந்தையாக, இணையில்லா குருவாக திகழும் துரோணர், தன் மகனுக்காக தனக்கு கிடைக்கப்பெறாத தந்தைப்பாசத்திற்காக சில விந்தையான சமரசங்களை கொள்கிறார். மகனுக்காக அர்ஜுனனிடம் உயிர் உத்திரவாதம் பெறுவதும், மகனின் எதிர்காலத்திற்காக ஏகலவ்யனின் கட்டைவிரலை பெறுவதும் இவரின் மதிப்பையும் நோக்கத்தையும் கேள்விக்குறியாக்குகிறது.
சூரியனின் கொடை திறத்தின் பெருமைகளை சொல்லி விரிகிறது கர்ணனின் பகுதி. சூத பெற்றோரிடம், சத்ரியனாக தன்னை உணர்ந்து வளரும் கர்ணன் விதியின் வசத்தால் அஸ்தினபுரியை சேர்கிறான். பெரும் கொடைகுணமும், நீரில் பிரதிபலிக்கும் குண்டலமும் கவசுமுமாக அஸ்தினபுரி சேர்கையில் பிரம்மமுகூர்த்தத்தில் சூரிய உதயமாகிறது. அஸ்தினபுரியில் படியும் தன் மீதான பார்வைகளாலும் கவனங்களாலும் தன்னை விரைவாகவே உய்த்துணர்கிறான். கர்ணனை பற்றி ஒரே தழுவலில் அனைத்தும் அறிகிறார் திருதராஷ்டிரர். ஒரே பார்வையில் அறிகிறார் விதுரர் குந்தியின் பாதடங்களை கர்ணன் தரிசிப்பது கவிதை.
எவரிடமும் அன்பை மட்டுமே காட்டும் பீமன், கர்ணனை அவமதித்து கிருபரின் குருகுலத்திலிருந்து வெளியேற்றுகிறான். அவமதிப்பையே காரணமாக கொண்டு துரோணரின் மாணவன்ஆகிறான். மீண்டும் பீமனால் இழிந்து அங்கிருந்து வெளியேறுகிறான். தன்னை போன்றே குலமிலியாக கர்ணன் இழிப்படும்போது இதே துரோணர் இயலாமையால் சொல்லொண்ணா துயரை அடைகிறார். அவமதிப்பின் பெருந்துயருடன் புழுவென செல்கிறான் கர்ணன். பின் கடைசியில் பெரும் வஞ்சதுடன் களம் நுழையும் கர்ணன் எல்லோரையும் வெல்கிறான்.
தருமனின் பார்வையில் விரியும் அக்காட்சிகள் கர்ணனின் அழகை, அவன் அலங்கரிக்கும் மகுடத்தின் அழகை, அதிரதனின் பாதம் பணியும் செயலின் பெருந்தன்மையை சொல்லி செல்கிறது. துரியோதனின் நுழைவிற்க்கு முன் தருமன் கிருபரிடம் சொல்ல வாயெடுத்து சொல்லாமல் நின்றது என்னவோ? விதியின் மௌனமோ?
வெண்முரசு விவாதங்கள்