பார்த்த ஞாபகம்

அன்புள்ள ஜெயமோகன்,
ஃபேஸ்புக்கில் பதிந்தது உங்கள் பார்வைக்கு,
நன்றி
Venkada Prakash

அட……பாத்துருக்கோம் படிச்சிருக்கோம் ஆனா திருடப்பட்டும் வந்துருக்கலாம்னு நெனைக்கத் தோணலையே நமக்கு!!!!!

செய்தி:

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த ஸ்ரீபுரந்தானில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நடராஜர் சிலை கடந்த 2008-ஆம் ஆண்டு திருடு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதனிடையே, விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் சிலையும் திருடு போனது கண்டறியப்பட்டது.
ஆஸ்திரேலியா சென்ற சிலைகள்: பாரம்பரியமிக்க பல ஆண்டுகள் தொன்மையான இந்த இரு சிலைகளையும், இந்தியாவில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற சுபாஷ் சந்திர கபூர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது.

அவர், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பழைமையான பொருள்களைக் காட்சிக்கு வைத்து விற்பனை செய்யும் அங்காடியை நடத்தி வந்தார். அந்த அங்காடிக்கு தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட இந்த இரு சிலைகளும் கொண்டு செல்லப்பட்டன. அந்த அங்காடியில் இரு சிலைகளையும் பார்த்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிகாரிகள், அவற்றை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டின் அருங்காட்சியகத்தில் வைத்தனர். அந்தச் சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருப்பது குறித்த தகவல் தமிழகத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குக் கிடைத்தது.

—————————–

அன்றே சொன்னார் அண்ணன்! ஜெயமோகன் , புல்வெளிதேசம் (ஆஸ்திரேலியப் பயணம்) , டிசம்பர் 2009 , உயிர்மை பதிப்பகம். பக்கம் 78 !!!

’அந்த அரங்கின் எல்லையில் (ஆஸ்திரேலியாவின் கன்பெரா கலைக்கூடத்தில்) கிட்டத்தட்ட நடுநாயகமாக ஐந்தடி உயரமான ஐம்பொன் நடராஜர் சிலை இருந்தது. அற்புதமான ஒளியமைப்பு. தகதகவென செம்பொன்மேனி……………’ ‘ கன்பெரா நடராஜர் சிலையின்கீழே எழுதப்பட்டிருந்த வரிகள் என்னைக் கவர்ந்தன. ’பிரபஞ்சத்தை ஒரு நடனமாகவே இந்துக்களில் ஒரு பிரிவினரான சைவர்கள் நினைக்கிறார்கள். அந்த நடனத்தையே இந்த இறைவடிவமாகச் செதுக்கியிருக்கிறார்கள். பிரபஞ்சத்தை ஆக்கி காத்து அழிக்கும் கடவுளாகிய சிவபெருமானின் நடனம் இது. இந்தச் சிலையைச் சுற்றியிருக்கும் தழல்வடிவம் பிரபஞ்சத்தின் ஒளி வடிவத்தைச் சுட்டுகிறது. கையில் உள்ள உடுக்கு பிரபஞ்சச் சுழற்சியின் தாளத்தையும் இன்னொரு கையில் உள்ள தழல் ஆற்றலையும் சுட்டுகின்றன. அவர் மிதித்து நிற்கும் முயலகன் இருளின் குறியீடு’ எனக் கச்சிதமான சொற்களில் அழகிய குறிப்பு. ஆச்சரியமாக இருந்தது. தென்னிந்தியா பத்தாம் நூற்றாண்டு என்ற காலக்குறிப்பும் சோழர்காலத்தையது என்ற விவரிப்பும் இருந்தது…’

முந்தைய கட்டுரைகாஷ்மீர் இன்னொரு கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31