‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31

பகுதி பத்து: 2. விழி

அதிகாலையில் என் அரண்மனை அதிரக்கேட்டு விழித்தேன். அசுரர்களோ அரக்கர்களோ ஆழுலக நாகங்களோ என்று திகைத்தேன். கணம்பிரியா துணையான உடைவாளை கைதொட்டேன். எழுந்து இருள் நடந்து சென்றேன். இல்லை என்பது போல் சாளரத்தருகே நின்றேன். ஒருகணம் கழித்தே உணர்ந்தேன். என் மாடமுகட்டின் மணிக்கொடிகள் சிறகடிக்கும் ஒலிதான் என்று. களிகொண்ட பறவைகள் போல் சிறகடித்துக் கூவி கூர் நகம் கொண்ட கைகளால் என் மாளிகை முனைபற்றி வானிழுத்து ஏறமுயன்றன அவை. சுவர்களும் தரையும் பந்தச் சுடர்களும் திரைகளும் நடுங்கக் கண்டேன். அது என் அகம்நடுங்கும் அசைவே என்று பின் உணர்ந்தேன். வந்திழிந்து மண் தொட்ட நாளுக்குப்பின் இந்நாளே என் வாழ்வின் இன்னொருநாள் என்று எண்ணி நின்றேன்.

விடியலில் சுபூதன் வந்து வணங்கி “வரும் வழியை நோக்கி நின்றேன். வண்டிகள் அணைவது கண்டேன். முதல் வண்டியில் நந்தகோபரின் கன்றுக்கொடி கண்டேன்” என்றான். அறியாதெழுந்த சினம் எரிய “அதனுள் கருமைந்தன் இருக்கின்றானா என்று கண்டாயா? மூடா!” என்று இரைந்தேன். சுபூதன் “இப்போதே சென்று கண்டுவருவேன்” என்று விரைந்தான். நிலைகொள்ளா நடையுடன் அறை அளந்தேன். அணுக்கச்சேவகன் வந்து அரவமின்றி நின்று “அணிகொள்ளலாகுமா?” என்றான்.

நீராடி அமுதுண்டு அந்தப்புரம் சென்றேன். நெஞ்சழிந்து சொல்மறந்து அமர்ந்திருந்தேன். என் வருகையறிவிப்பு கேட்டு மகத அரசியர் மணிச்சிலம்பும் அணிகளும் ஒலிக்க வந்தனர். தாம்பூலத்தட்டுடன் ஆஸ்தி வந்து என் முன் அமர்ந்தாள். இன்கடுங்கள்ளுடன் பிராப்தி வந்து என் இடப்பக்கம் அமர்ந்தாள். “இன்று என்ன எழுந்தருளல் இத்தனை விடியலிலே? நேற்றிரவு தங்கள் தாள்பட்ட தடம் இந்தத் தரைவிட்டு அகலவில்லை” என்றாள் ஆஸ்தி. என்றும் என் உளம் நெகிழ்க்கும் அம்முகங்கள் வண்ணத் திரைப்பாவைகள் என வெறுமனே அசைந்தன. நெடுமூச்செறிந்து அவள் தந்த தாம்பூலத்தை தட்டி விலக்கி எழுந்து சாளரத்தருகே சென்று சரிந்தெழும் காலை ஒளிநோக்கி நின்றேன்.

என்னதான் எண்ணுகிறது என் நெஞ்சம்? அச்சமேதுமில்லை. ஐயமும் சற்றுமில்லை. மிச்சமில்லை மிச்சமில்லை என்று தொட்டு எரித்துச் சென்றபின்னும் எச்சமென்றே எஞ்சுகிறது என் அகமெழுந்தவை எல்லாம். இச்சகத்தில் உள்ளதெல்லாம் என்னுள் எப்பொருளும் கொள்ளவில்லை. என்னவென்று மயங்குகிறேன்? தாழ்திறக்கும் தருணம். அறியாத வாயிலொன்றின் இருள் அவிழும் அருங்கணம். என் ஊழ்திறந்து வைத்த ஒரு சொல்லின் பொருள் அறியவிருக்கிறேன். கரியன். என் படைகளுக்கும் பழிகளுக்கும் அரியன். துயிலிலும் விழிப்பிலும் நான் எண்ணும் அடியன். பீலிக்குழல் முடியன். என் குலப்பெயர் சூடும் மைந்தன். என் விழியின்னும் தீண்டாத முகத்தன்.

மெல்ல அருகணைந்து என் தோளணைத்து “நந்தர்குடிச் சிறுமைந்தன் வந்தணையும் நேரம் எது?” என்றாள் ஆஸ்தி. அவள் விழிநோக்கி “எவன்?” என்றேன். குரல் கனிந்து “தேவகி மைந்தன் என்றார். தேவரும் விரும்பும் நீலன் என்றார். நகருள்ள பெண்களெல்லாம் அவன் எழில்காண ஏங்கி வாயில் நிறைத்திருக்கின்றார்கள்” என்றாள் பிராப்தி. முகம் நெகிழ்ந்து நெஞ்சம் ஊறிக்கனத்து இடை ஒசிந்து ஆஸ்தி “அரண்மனையில் எவரும் நேற்றிரவு துயிலவில்லை. அவன் மணிநிறத்தழகும் அவன் சூடும் மயிற்பீலி அழகும் இடையணிந்த பொற்பட்டழகும் கழல் கொண்ட தாளழகும் சொல்லி சொல்லி விடியவைத்தார்” என்றாள்.

வெங்குருதி தலைக்கேற கைதூக்கி பின் அவர் விழிநோக்கி மெல்ல அடங்கி “செல்லுங்கள் உள்ளே. இனியிங்கு எவரும் நிற்கலாகாது” என்றேன். கால்தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து கையில் தலைசாய்த்து கண்மூடிக் கொண்டேன். நீல ஒளி நெளியும் நதியொன்று ஓடும் விழிப்பரப்புக்குள் நின்று சுழன்றெழுந்த நீலக்குழலோசை கேட்டேன். வியர்த்து எழுந்து விதிர்த்து நின்று அருகமைந்த மரக்கிளையின் குயில் அது என்று உணர்ந்தேன். எங்கிருக்கிறேன் நான்? என்னவென்று எஞ்சுகிறேன்? சென்றடைந்த தொலைவெல்லாம் பின் திரும்பி நடக்கிறேனா? வென்றடைந்ததெல்லாம் வீணென்று உணர்கிறேனா? இங்கிருக்கும் இவன் யார்? கம்சனென்று பெயர்கொண்டு கள்ளம் உளம்நிறைத்து வந்து நின்றிருப்பதுதான் என்ன?

கிருதசோமன் வந்தடுத்தான். வணங்கி முகம் தாழ்த்தி, “வில்விழவு கூட ஆயர் வண்டிகள் அணைந்துகொண்டிருக்கின்றன. நந்தன்மைந்தனுடன் அக்ரூரர் அரண் கடந்தார்” என்றான். பெருமுரசுப்பரப்பை தொட்டது முழைக்கழி. ஆழ்கிணற்றில் அலைகொண்டது இருட்சுழி. ஒரு சொல்லும் சொல்லாமல் தோளாடை சுற்றி எழுந்தேன். “அவர் அமைய அரண்மனை புறமாளிகை அளித்தேன். ஆவனவெல்லாம் செய்ய ஆணையும் இட்டேன்” என்றான். தலையசைத்து விழிதிருப்பி என் மஞ்சத்தில் துணையிருந்த உடைவாளை நோக்கி தலைதாழ்த்தினேன். நான் எண்ணுவது நின்று எஞ்சியது ஒரு சொல். “எப்படி இருக்கிறான் மைந்தன்?” அதை என் நா கேட்கவில்லை என்றறிந்து என்னை வியந்து களித்தது புத்தி. கேள் கேள் என்று உள்ளறைக்குள் உந்தியது சித்தம். கேட்பேனா என வியந்தது உள்ளமைந்த சித்தி.

விழியில் விஷம் ஒளிர குரலில் எடை கூட முகம் தாழ்த்தி “கொலைக்களிறு குவலயாபீடம் அணிகொண்டது. அதன் மத்தகத்தில் மதம் நிறைய மதுகொடுக்கச் சொன்னேன். அணிவாயில் முன் அதை நிற்கவைத்தேன். இளமைந்தன் சிறுதோளில் மலைவேங்கை மலர்மாலை அணிவிக்க ஆணையிட்டேன்” என்றான் கிருதசோமன். ”வேங்கை வாசத்தில் வேழம் எழும் என்றான் பாகன். இன்று மாலை அது மால் கொள்ளும். மைந்தன் உயிர் வெல்லும்” என்றான். என் அகம் திகைத்து அவனை ஏறிட்டேன். ஒருகணம் நோக்கி பின் ஒன்றுள் ஒன்றென அமைந்து “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றேன்.

என் மஞ்சத்தறை சென்று மது கொணரச்சொன்னேன். விழிசிவக்க உடல்ததும்ப வெற்றுச் சொற்களென சித்தம் சிதைந்தோட விழித்து படுத்திருந்தேன். என் கட்டில் எழுந்து யமுனைப் பெருக்கில் படகென ஓடுவதை உணர்ந்தேன். இந்த நாள் ஒன்று சென்றதென்றால் இனி நான் ஆவதற்கொன்றுமில்லை. இமை தொட்டு வருடும் அண்மையில் இமயத்தைக் கண்டதுபோல் இத்தருணத்தைக் காண்கிறேன்.

முன்னெடுத்து வைக்க ஓர் அணுவும் இடமில்லை. மலைப்பாறை என உறைந்த காலம். கரும்பாறை என மூடிய காலம். பாறை வழிதிறந்து பாதை எழவேண்டும். விண்ணில் நெறிகளை வைத்து மண்ணில் வாழ்வை விட்டு சூழ்ந்திருந்து சூதாடும் தெய்வங்களே இன்றொருநாளில் வாழ என்ன தவம் செய்துவிட்டேன். காலப்பெருக்கை இறுக்கிச்செறித்து ஒரு கணமென ஆக்கிவிட்டீர். யமுனைப்பெருக்கு ஓர் இலைநுனி தனித்துளி என்றாக்கி விட்டீர். இவ்வொற்றைக் கணத்தில் ஒரு யுகம் வாழ்வேன். பொற்கணம். பொலிந்து நிற்கும் அருங்கணம். நீலன் வந்தணைந்த கணம். நீலவிஷக் கணம்.

தம்பியர் வந்து அறைவாயிலில் நிற்கக் கண்டு எழுந்தேன். தலைகுனிந்து மஞ்சத்தில் அமர்ந்து “சொல்க” என்று கையசைத்தேன். நியகுரோதன் தலைவணங்கி “தேரேறி வந்தார் மூவர். அக்ரூரர் அருகே அமர்ந்திருந்த மைந்தரில் மூத்தோன் பலராமன். வெண்சுண்ண நிறத்தன். பெரும்புயத்து மல்லன். இளையோன் இன்முகம் கொண்டோன். கண்ணன் என்றழைக்கின்றார். நீலமணி வண்ணன். நீள்விழியன். நெடுங்கையன். இளங்கன்று நடையன்” என்றான். “கன்றோட்டும் கோல் அவன் கையில் இல்லை. கைநின்று தேய்ந்த வாள் ஒன்று உள்ளது. மூத்தவனோ கதை கொண்ட தோளன். கடும் நோக்கு விழியன்.”

சுநாமன் வணங்கி சொன்னான் “இன்றுகாலை நம் அரண்மனையின் ஆடைதுவைப்போனிடம் அரச உடையொன்றை கேட்டார் அக்ரூரர். ‘ஆவோட்டும் இடையனுக்கு அரச உடை எதற்கு?’ என்று அவன் பதிலுரைத்தான். இளையோன் அவன் தலையடித்து தரைவீழ்த்தி நெஞ்சில் கால் வைத்து நிமிர்ந்து சூழ நோக்கி ‘இதோ இவன் பேணும் உடையனைத்தையும் நானெடுத்துள்ளேன், இதை மறுக்க எவர் எழுந்தாலும் வாளெடுத்து வந்து களம் வென்று சொல்லெடுக்கட்டும்’ என்றான். அவன் கைவிரைவு கண்டோர் கால்தளர்ந்து பின்சென்றனர். அணியாடை புனைந்து அரண்மனை முன் அமர்ந்தான். இந்நகரை ஆளும் அரசன் போலிருக்கின்றான். மணிமுடியும் செங்கோலும் புனைய வந்தவன் எனத் தெரிகின்றான்.”

கங்கணன் சொன்னான் “மூத்தவரே, மணிநீலம் குழைந்து மலர்போல ஆனதே அவன் மனமென்கின்றனர் விழவுக்கு வந்த வெளிநிலத்துச் சூதர். அரண்மனைக்கு சந்தனமும் லேபனமும் செங்குழம்பும் அகிலும் கொண்டுவரும் கிழவி திரிவக்கிரை இன்று அந்த அரண்மனை வழிவந்து அவன் எழில்கண்டு நின்றுவிட்டாள். ‘நீலம் பொன்கொள்ளும் எழிலை என் விழி காணவேண்டும். என் கை நறும்சாந்து உன் இருதாள் சேரவேண்டும்’ என்றாள். அவள் கைபற்றி முக்கோணல் கொண்ட அவள் முகம் தொட்டு தூக்கி தன் உடலுடன் அணைத்துக்கொண்டான் சிறியோன். ஒளிபட்ட படிகம் போல் அவன் உடல்பட்டு அவள் மேனி எழில்கொண்டது என்றனர் சூதர். கந்தர்வன் கைபட்ட யாழானாள், சிறகடைந்து வான்கண்ட சிறுகூட்டுப் புழுவானாள் என்று பாடுகின்றனர் பாணர்.”

சுபூவும் ராஷ்டிரபாலனும் பத்முஷ்டியும் சுமுஷ்டியும் சங்குவும் அவன் புகழ் சொல்லி நின்றனர். அவர்கள் மொழியில் எழுந்த மைந்தனை நான் முன்னரே அறிந்திருந்தேன். நானறியாத ஏதை இவரறியப்போகின்றார்? அவனைப்பெற்ற தாயறிவாளோ, தந்தையும் அறிவானோ? உற்ற தாயும் உகந்த தந்தையும்தான் அறிவாரோ? ஆயர்குலம் அறியாது, அவனைச்சூழும் கோபியர் குழாம் அறியாது. ஆம், ஆயர் மடமாது அவள் ஒருத்தி அறிவாள். அரைக்கணம் ஒழியாது அவனை நினைத்திருந்தோர் நானும் அவளும் மட்டுமே. அவளறியாத ஒன்றை நானறிவேன் என்பதனால் அணுவிடை அவளை விஞ்சினேன். புன்னகையுடன் விழிதூக்கி “வில்விழவு எழுக! மைந்தனை அங்கே காண்பேன்” என்றேன்.

அரண்மனை தென்முற்றத்து அணியரங்கில் வேந்தமையும் மேடைக்கு வாழ்த்தொலிகள் சூழ்ந்தொலிக்க சென்றேன். முடியும் கோலும் குடையும் சாமரமும் சூழ அரியணை அமர்ந்தேன். என் இரு பக்கமும் ஆஸ்தியும் பிராப்தியும் அமர்ந்துகொள்ள என் குடிகள் எழுந்து என் முடிவாழ்த்தி கூவினர். சூதர் என் குடிவாழ்த்தி நின்றனர். வில்விழவு கூட ஆயர்குடிகள் அணிதிரண்டு எழுந்தனர். பன்னிரு குலத்துப் பெரியோரும் வந்தமர்ந்தனர். என் இளையோர் முறைசெய்து முகமன் உரைத்து அவர்களை அவைசேர்த்தனர்.

வண்ணங்கள் கலந்து வந்தமைந்த களம். கள்வெறிகொண்ட இளையோர். களிவெறி கொண்ட மகளிர். களமெங்கும் புன்னகையும் சிரிப்பும் புளித்த நுரையாய் நிறைந்தன. அங்கு புதுவெள்ளமெழுந்ததுபோல் பொங்கி நிறைவது என் நெஞ்சூறிய நஞ்சு. என் மக்கள், என் உள்ளம். என் பிழை முளைத்த பெருங்காடு. என் விழைவு கொழுத்தோடும் பெருநதி. தன்னை தான் தின்று சுவையறிந்த விழியற்ற புழுக்கள். முகம் சுளித்து அகம் கசந்து நோக்கி இருந்தேன். அணியரங்குகள் தோறும் பெண்விழிகள் ஒளி கொண்டன. கிளர்ந்து குரல்கொண்டு நிறைந்து நின்றிருந்தது நகர்த்திரள்.

அணிரதம் வந்து அரங்கு முன் நின்றது. அதில் ஆம்பலும் நீலமும் அருகருகே மலர்ந்ததுபோல் இரு இளையோர் நின்றிருந்தனர். மூத்தோனை ஒருகணமே நோக்கினேன். இளையோனை எஞ்சிய நேரமெல்லாம் நோக்கினேன். நீலம் எழுந்து நடந்ததுபோல் பாதங்கள். செண்பகச் செம்மை மண் தொட நீலமென்மை விண்நோக்கி மலர தொட்டுத் தொட்டு அருள்செய்து இருள் நீக்கி நடந்து வரும் நீலக்கதிர் குழவிகள் இரண்டு. கழல் நழுவும் கணுக்கால். கழுநீர் கொடி என கணுவெழுந்த முழங்கால். அரையணிக் கிண்கிணி. திண்நெஞ்சில் குடிகொண்ட திரு. இளமூங்கில் எழிற்கரங்கள். கங்கணம் கொண்ட கைமணி. அழியாச்சொல்லே அடவுகளானதென அசையும் சிறுவிரல்கள்.

புன்னகைக்கும் இதழ் மலர்கள். பொன் படிந்த மேலுதடு. வெண்பல் ஒளிரும் சொல்மலர்வு. அவன் கண்மலர்ந்த கனிவை என் விழிக் கரி தொட்டு கனன்றது. தோடணிந்த மலர்ச்செவிகள். தொட்டுத் தொட்டு மணி ஆடும் மென்கதுப்பு. நீலக்குழல் சரிந்த நெற்றி. நீர்மை நெளிந்த கருங்குழல். விழிதிறந்த பீலி. விரிந்தெழுந்த பாரிஜாதம். என் கண் நோக்கியதேதும் கருத்தறியவில்லை. கருத்தறிந்த ஒன்று அங்கே காட்சியாகவில்லை. அள்ளி அள்ளி நான் விட்ட ஆழ்கலம் நிறையவில்லை. அங்கே எழுந்த இருளின் விடாய் தீரவில்லை.

அவன் மணிமார்பில் மலராகி அசைந்தது வேங்கை. மத்தெழுந்த என் பட்டத்துயானை செவிகூர்ந்து தலையசைத்து உறுமியது. பொன்னசைந்ததோ பூவசைந்ததோ என காலெடுத்து வைத்து கரியோன் அருகணைய வெண்தந்தங்கள் தாழ்த்தி துதிக்கை சுழற்றி வெறிகொண்டு மூச்செறிந்தது குவலயாபீடம். அதன் சிறுவிழிகளில் மின்னுவது நான். அதன் முறச்செவியில் அசைவிழந்தது நான். கருங்கையில் நெளிகிறேன். வெண்தந்தங்களில் ஒளிர்கிறேன். மருப்பில் சிலிர்க்கிறேன். மூச்சில் சீறுகிறேன். அவன் அருகணைந்தபோது மூச்சுக்குள் அவன் பெயரைச் சொன்னேன். துதிக்கை சுழற்றி தலைமேல் தூக்கி அதை மீண்டும் பிளிறினேன். என் தாள் பிணைத்த தளையனைத்தும் உடைந்தன. இருளென எழுந்தேன். அவன் இடைபற்றித் தூக்கிச் சுழற்றி மண்மேல் அறையப்போனேன்.

கொலைவெறிகொண்டு கூவினர் என் குடிகள். “கொல்! கொலைமத வேழமே! கொல்! அரசப்பெருங்களிறே அவனைக் கொல்!” என்று கூச்சலிட்டு கை விரித்து நின்றாடினர். என் எழுந்த பெருங்கையை அவன் சிறுகை பற்றி வளைப்பதை உணர்ந்தேன். முன்பு மிதிலைநகரில் ராமன் கைபற்றி உடைத்த முக்கண்ணன் வில் உணர்ந்த முழுமையை உணர்ந்தேன். என் மத்தகம் மேல் நின்றன மலர்ச்சிறு கால்கள். அவற்றின் எடைகூடி என் உடல் நொறுக்கியது. என்னுள் சிறைகொண்ட இருள் செறிந்து தெறித்தது.

எடை எடை என்றே என் அகம் புடைத்துக் கூவியது. நினைவறிந்த நாள் முதலாய் நானறிந்ததெல்லாம் என் உடல்கொண்ட எடை ஒன்றுதான். என் கைவைத்து நோக்காத எதிலும் என் கால் பட்டதில்லை. சேற்றை அஞ்சினேன். சரிவில் செவிகூர்ந்தேன். ஏற்றங்களில் என்னை உணர்ந்தேன். நீரில் மட்டுமே நிறையழிந்து களித்தேன். இதோ எடை எடை என்று என் உடலெங்கும் நிறைந்தது என்மீது அமர்ந்த ஒன்று. மத்தகம் கனத்து என் உடல் மண்ணில் அழுந்தியது. மென்மணலாயிற்று கற்களம். துதிக்கை சுழற்றி கூவினேன். தூக்கிய தந்தங்களை உலைத்தேன். கைசுழற்றி அக்கால் பற்ற முனைந்தேன். வெட்டவெளி துழாவி வீணாக மீண்டேன். என் மேல் நின்றிருப்பதென்ன? நீலவானா? மண்மகள் அறியும் அதன் மாளாச் சுமையா?

குருதி உமிழ்ந்து இருட்குவையென சரிந்தேன். என் மேல் சரிந்து என் எடை விழுவதை உணர்ந்தேன். துடித்துச் சுழன்றமைந்த துதிக்கையில் தெறித்தது வெங்குருதி. நஞ்சுமிழும் நாகமென பீரிட்டு பரவியது. கலப்பையின் கொழுவென நிலம்அழுந்திய நீள்தந்தங்கள் அசைவழிந்தன. கருநாகக் குழவியென என் குறுவால் நெளிந்தமைவதை கண்டேன். நீள் மூச்சு விட்டு நிலம் நோக்கி என் அரியணையில் அசைந்தமர்ந்தேன். குருதிப்பூ சிதற நடந்துவரும் இளங்கால்கள் கண்டு கூவி கைநீட்டி எழுந்து நின்றேன்.

செங்குருதி படிந்த சிற்றுடல் என் அவை புகுந்தது. அக்கணம் பிறந்த குழவி. கருவறை கீறி எழுந்த சிறுதலையில் நனைந்து சொட்டியது கொழுங்குருதி. தொப்புள் கொடி உதைத்து நீந்தும் சிறுகால்கள். கண் திகைத்து நோக்கி கல்லெனச் சமைந்து அமர்ந்தேன். அவனைச்சூழ்ந்து சிறகடித்து வந்தன ஆயிரம் உதிரம் படிந்த உடல்கள். நான் அறிந்த துயரம் கொண்ட விழிகள். இருளில் என்னைச்சூழ்ந்து நின்றிருக்கும் நிலையழிந்த ஒளித்துளிகள். என் செவியில் ஒலித்தன பால்மறவா பைதல் ஒலிகள்.

நீர் பட்டு நுரை அவிந்த பாற்கலம் போல ஒலியணைந்து சமைந்தது என் அவை. விழிகளில் மட்டும் உயிர் எஞ்சும் ஓராயிரம் ஊன்சிலைகள். அலையவிந்த சுனைநடுவே நின்றது அன்றலர்ந்த நீலம். இரு கைதூக்கி உதறி குருதித் துளிஉதிர்த்தான். பாலன். இன்னும் முலைமறக்காத இதழன். விழி ஒளியன். அருள் மலர்ந்த கையன். அஞ்சலென்ற அடியன். ஆயிரம் பல்லாயிரம் கைகள் அகத்தே குவிவதைக் கண்டேன். அங்கு செறிந்த அமைதியின் ஆழத்தில் ஒரு சிறு விசும்பல் எழக்கேட்டேன். அகம் திகைத்து அங்கெல்லாம் நோக்கினேன். அத்தனை விழிகளிலும் அகம் ஊறி வழியக் கண்டேன். என் நெஞ்சிலும் சொட்டின நீர்த்துளிகள். வெய்யநீர். விழுந்த இடம் எரிக்கும் வெங்கனல் நீர்.

ஆணையின்றி பாய்ந்து சென்று களம் நின்றான் அவைமல்லன் சாணூரன். கனத்த கை நீட்டி வெண்ணிறத்தோன் தோள்பிணைத்தான். எருமையைச் சுழற்றி நிலத்தடிக்கும் சிறுத்தையைப்போல் அவனை வென்றான் மூத்தோன். அவன் நெஞ்சு மிதித்து நிலம் தோய்த்தான். என் தம்பியர் எண்மரும் தொடைதட்டி உறுமி களம்சென்று நின்றனர். எங்கோ இருந்து ஏதோ விழிகளால் நோக்கினேன். எத்தனை முறை நான் கண்ட போர் இது என்றே எண்ணிக்கொண்டேன். என்றும் நிலைக்காத எளியதோர் ஆடல். நன்றிது தீதிது என ஒண்ணாத நடனம்.

கழுத்தொடிந்து விழுந்த சுபூ என் கண்ணென நின்றவன். கைகள் ஒடிந்து துடித்தமைந்த ராஷ்டிரபாலன் என் செவிகள். சங்கு என் நாசி. பத்முஷ்டி என் நாக்கு. துடித்து குருதிகொட்டி அமைந்த சுமுஷ்டி என் உடல். ஐந்து துடிப்புகள் அணைந்தன. ஐந்து அமைதிகளின் மேல் அவன் நீலக்கால் நின்றது. சீறி எழுந்து கைகோர்த்தான் என் காமமேயான சுநாமன். தோள்தழுவி இடை வளைத்து பாம்புகள்போல் நெளிந்து பலமுனையில் மல்லிட்டு இறுகி அடங்கி படம் தாழ்த்தி செங்குருதி வாய்வழியச் சரிந்தான். தொடைதட்டிச்சென்றவன் என் குரோதக் குவையென வளர்ந்த நியகுரோதன். அவன் நெஞ்சுடைந்து மண்ணில் முகம் சேர்த்து மடிந்தான். கையிரண்டும் விரித்து விழிகூர்ந்து களம் கொண்டான் என் மோகமென்றான கங்கணன். அவன் நெற்றிப்பொட்டு உடைந்து பின் சரிந்து வான் நோக்கி விழியுறைந்தான்.

வந்தது என் கணம். எழுந்து என் இருதேவியர் விழிநோக்கினேன். அவர் விழிமலர்கள் என் கிளைவிட்டு உதிர்ந்து நெடுந்தொலைவில் கிடந்தன. யாரென்று வினவின ஆஸ்தியின் நீள்விழிகள். எவர் நீ எங்களுக்கு என்றன பிராப்தியின் பெருங்கண்கள். என் அமைச்சும் சுற்றமும் என்னை நோக்குவதைக் கண்டேன். என்னை உதறி எங்கோ நின்றன அவை. இறந்துவிட்டேனா நான்? நடுகல்லாய் நின்றிருக்கிறேனா? என்னை வாழ்த்தும் ஒரு சொல்லும் எழவில்லை. நான் ஆடைகளைந்து அணிகளைந்து காலணி கழற்றி கச்சை முறுக்கி களமிறங்கியபோது கற்பாறைக் கூட்டமெனச் சூழ்ந்து குளிர்ந்து நின்றிருந்தது என் குடி. செல் என்கிறார்களா? சென்றுவிட்டாய் என்கிறார்களா? நில் என்று ஒருகுரலும் எழவில்லை. நினைத்திருப்பேன் என ஒரு விழியும் மின்னவில்லை.

களமிறங்கி கைநீட்டி கால்நிலைகொண்டு கண் ஊன்றி நின்றேன். என் முன் மண் ஊன்றி நின்றது மலர்ப்பாதம். அதன்மேல் அணிகொண்டு அமைந்தது பொற்கழல். கண்மலர்ந்து இதழ் மலர்ந்து கைநீட்டி நின்றது என் கருவறை வாழ்ந்த மகவு. என் உயிரே, என் இறையே, இக்கணத்தில் என்னை ஆட்கொள்ளவென்றா இதுவரை என் உடல்திறந்து வாராதிருந்தாய்? என் குருதியில் குடிகொள்ளும் முளைக்காத விதையா நீ? கண்ணீரில் நோன்புகொண்டு என் குலமகள்கள் காத்திருந்த குழவிமுகம் நீதானா?

கொஞ்ச அழைக்கும் கை. என் கழுத்துசுற்றி குளிரும் கொடி. என் மார்பு நிறையும் அணி. செல்லச்சிறு கால்கள். என் சிரம் சூடும் ஒளிமணிகள். கங்கணம் ஒலிக்க கிண்கிணி சிரிக்க வந்து என்னை தழுவுக இளங்குருத்தே. என் இருளில் எழுக நீலச்சுடர்க் கதிரே. அள்ளி எடுத்து என் ஆவிசேர்த்து அணைத்தேன். ஆயிரம் யுகங்களில் நானறிந்த பிள்ளைக் கலியனைத்தும் வென்றேன். மென்கரம் இறுக்கியது என்னை. தோளில் பதிந்தது செவ்விதழ் முத்தம். செவிகளில் நிறைந்தது மூச்செழும் சத்தம். மூச்சென ஆயிற்று நறுங்குழல் மென்மணம்.

மென்மணம் இறுகிய நெஞ்சுடன் என்னைச்சூழ்ந்த நீலப்பெருக்கில் நீந்தித் திளைத்தேன். நீலமெனச் சுழித்தது ஒரு வேய்ங்குழல் நாதம். குழலொழுகும் வழியில் நெடுந்தூரம் சென்றேன். இவ்வுலகும் இங்குள அனைத்தும் எங்கோ என எஞ்ச நானும் இசையும் நிறைந்த வெளியில் நின்றேன். அங்கே கண்மலர்ந்தன விண்மீன்கள். சிறகெழுந்தன மேகக்குவைகள். ஒளியெழுந்தது. நீலம் திசைவிரித்தது. சுழன்று விழுந்து மண்ணில் அறைபட்டது நெடுந்தொலைவில் எங்கோ என் தசையுடல். அதைச்சூழ்ந்து திகைத்து நின்றன என் குடியினர் சூடிய கண்கள். என் கால்கள் மண் நடந்த தொலைவை எல்லாம் மீளநடந்து கருவறையை அணுகின. கொண்ட மூச்சையெல்லாம் மீண்டும் காற்றுக்கே அளித்தன என் மூக்கும் வாயும். என் நா உரைத்த சொல்லெல்லாம் நெஞ்சுக்குள் மறைந்தன. என் நா அறியாத சொல் ஒன்றை என் இறுதி விழி சொன்னது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

கண்ணா என கைகூப்பினேன். என் மேல் கால்வைத்து நின்றனர் ஆயிரம் இளமைந்தர். ஒருவன் குனிந்து என்னை தாதையே என்றான். இன்னொருவன் குனிந்து என்னை தந்தையே என்றான். பிறிதொருவன் என்னை மாமனே என்றான். என் மீசை பிடித்து இழுத்தனர். என் குழலில் தொங்கி ஆடினர். என் கைவிரல்கள் பற்றி குதித்தபடி கூட வந்தனர். என் கால்கள் பற்றி மரமேறினர். என் தோளமர்ந்து செவிபற்றி உலுக்கினர். என் குருதி என் சுற்றம். என் மடிநிறைக்கும் மைந்தர். விழியொளிர நகைமலர என் மீது ஏறி நடமிட்டனர். அவர்களுடன் கூடி நகைத்து கூத்தாடிக் களித்தது என் நெஞ்சம்.

என் மார்பில் அமர்ந்திருந்தது இளங்குழவி. மடல்பிரியா கைவிரல்கள். மடிப்பமைந்த சிறுதொடைகள். விரல் நெளித்த மலர்ப்பாதம். தொப்புள் முளை எழுந்த சிறு பண்டி. இன்னும் மொழி விரியா இதழ்மலர்கள். அன்னை முகமறிந்த மணிவிழிகள். விழியில் ஒரு சொல் நின்று ஒளிர வாயில் தேன் துளியொன்று திரண்டு அதிர என்னை நோக்கிக் குனிந்தது.

கரியன். குளிரொளிர் விழியன். பனிமலர் மேனியன். என் மார்பின் மேல் தவழ்ந்து முகம் அணைந்தான். குனிந்து என் விழிநோக்கினான். விரிந்த இதழ்ச்சிமிழில் எழுந்தது ஒரு சொல். “மாமா” என அதைக்கேட்டேன். மெய் விதிர்த்து சொல் திகைத்தேன். “மருகா, சிறுமூடா, என் கால்தொட்டு பணிக. உன் சிரம் தொட்டு வாழ்த்துகிறேன்” என்றேன். அவன் இளங்கைகள் என் இருகால்கள் தொட குனிந்து “நீயே நான்” என்றேன். “என்றுமிரு” என வாழ்த்தி அமைந்தேன். அங்கிருந்தேன். பின் இங்கிருந்து அவனைக் கண்டேன்.

என் குடி சூழ்ந்த சபை அங்கு கொடுந்தெய்வம் நீங்கிய குலப்பூசகர் போல் தளர்ந்து விழுவதைக் கண்டேன். விழிநீர் பெய்து விரித்த கைகளுடன் “கண்ணா, கரியவனே, இனி உன் காலடியே அடைக்கலம்!” என அவர்கள் கூவுவதைக் கேட்டேன். என் கொடி பறந்த மதுராபுரி மணிமுகடுகள் புதுக்காற்றில் அசைந்தன. அணிமுரசும் சங்கும் மணிகளும் முழவுகளும் சேர்ந்தெழுந்து ஒலிக்க நகரம் தன்னை தான் வாழ்த்தி குரலெழுப்பியது.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைபார்த்த ஞாபகம்
அடுத்த கட்டுரைசீனு- இருகடிதங்கள்