ராமச்சந்திர குகாவின் இந்த புகழ்பெற்ற நூலின்மீது ஓர் அடிப்படைக்கேள்வியை எழுப்பிக்கொள்ளலாம். ஏன் காந்திக்குப் பின்? ஒரு திருப்புமுனைப்புள்ளியாக அல்லது வரலாற்றின் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கமாக குறிப்பிடவேண்டுமென்றால் இந்தியசுதந்திரத்தையே குறிப்பிடவேண்டும். அதுவே வழக்கமும் கூட. ஆனால் குகா காந்திக்குப் பின் என்கிறார். ஏன்?
அதற்கான விடை இந்த நூலில் நேரடியாக இல்லை. முன்னுரையில் குகா சுதந்திரத்துக்கு முந்தைய வரலாற்றை ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் காந்தி என்ற மாமனிதரும்’ என்ற வரி மூலம் குறிப்பிடுவதைக் காணலாம். அவரது மனச்சாய்வு காந்தி மீதுதான். பிரிட்டிஷ் அரசல்ல , காந்தியே அந்நூற்றாண்டுன் மாநிகழ்வு. ஆக பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவான 1947 ஆகஸ்ட் 15 ஐ அவர் ஒரு யுகமுடிவாக கருத விரும்பவில்லை. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட 1948, ஜனவரி 30, ஐயே அந்த யுகத்தின் முடிவாகக் கொள்கிறார் என்று கருதலாம்.
காந்திய யுகத்தின் முடிவு என்ற கருதுகோள் பலவகையிலும் இந்திய சிந்தனையாளர்களைக் கவர்ந்து வருகிறது. குகாவைவிட அஷிஷ் நந்தி அவ்வகையில் அதிகமாக எழுதியிருக்கிறார். காந்திய யுகம் என்பது சிலவிழுமியங்களையும் அதனடிப்படையிலான இலட்சியக் கனவுகளையும் பிற அனைத்தையும் விட மேலாக முன்னிறுத்திய காலகட்டம். அதிகாரத்தால் அல்ல, தியாகத்தாலேயே மக்கள் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டார்கள். அந்த அலையை வழிநடத்திய மனிதர் தன்னைத்தொடர்பவர்களுக்கு துயரத்தை மட்டுமே வாக்களித்தார்.
காந்தியின் கொலை என்பது ஒரு மனிதனால் செய்யப்பட்டதாக இருந்தாலும் அந்தமனிதன் மனதில் இருந்த உணர்ச்சிகளை இந்த தேசத்தின் கணிசமானவர்கள் நனவிலியில் தாங்களும் கொண்டிருந்தார்கள் என்று அஷிஷ் நந்தி எழுதியிருக்கிறார். காந்தி மூன்று வகையில் தேவையற்றவராக, அகற்றப்படவேண்டியவராகக் கருதப்பட்டார். இந்த மண்ணை இந்து அடிப்படைவாத அதிகாரத்தை நோக்கிக் கொண்டுசெல்ல விழைந்தவர்கள் முதல் தரப்பு. உருவாகி வந்த புதிய நாடு ஒரு நவீன மையப்படுத்தப்பட்ட நவமுதலாளத்துவ அரசாக உருவாகி வரவேண்டும் என்று எண்ணியவர்கள் இரண்டாவது தரப்பு. நடைமுறையில் இலட்சியவாதங்கள் பயனளிக்காது சமரசங்களே பயனளிக்கும் என்று எண்ணியவர்கள் மூன்றாவது தரப்பு.
முதல்தரப்பு அவரைக் கொன்றது. பிற இரு தரப்புகளும் அந்தக்கொலையால் லாபமடைந்தன. நேரு-மகாலானோபிஸ்- அம்பேத்கார் அணியை இரண்டாம் தரப்பு எனலாம். இந்த நாட்டின் பெரும்பான்மையினரான கோடானுகோடி லௌகீகவாதிகளை மூன்றாம் தரப்பாகக் கொள்ளலாம். அவ்வகையில் ஒரு கூட்டான விருப்பின் பலனாக காந்தி அகற்றப்பட்டார். அசௌகரியமான ஒரு குரல் நீக்கம் செய்யப்பட்டது. அந்த பிம்பம் மொத்தமாக ‘மறுசுழற்சி’ செய்யப்பட்டது. ரூபாய்நோட்டு காந்தி பிறந்தார்.
குகாவின் நூல் அந்தப் புதிய தேசியத்தையும் தேசத்தையும் பற்றிய ஒரு நவீன வரலாற்று நூல். இந்தியா ஒரு தேசமாக என்றுமே இருந்ததில்லை, என்றும் இருக்கப்போவதுமில்லை என்றும் பிரிட்டிஷார் நம்பினார்கள். அவர்களின் வரலாற்றாசிரியர்கள் அப்படி மீண்டும் மீண்டும் எழுதினார்கள். 1857 முதல் இந்தியப்பெருங்கிளர்ச்சிக்குப் பின் பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய ரயில்போக்குவரது, ராணுவம், நிர்வாகக் கட்டுமானம் ஆகியவற்றால் சிறுகச் சிறுக உருவாக்கப்பட்ட நாடு இது என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.
அத்துடன் இந்த நாடு ஒரு தேசமாக நீடிக்கக்கூடாது என்ற விழைவும் பிரிட்டிஷாரில் இருந்தது. அந்த விழைவிலிருந்தே அவர்களின் வரலாற்றுநோக்கு உருவானது என்று சொன்னால் மிகையல்ல. சுயாட்சிக்கு இந்தியர்கள் தகுதியற்றவர்கள் என்று வாதிட்ட வின்ஸ்டன் சர்ச்சில் 1930ல் லண்டனில் பேசும்போது ‘பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு வெளியேறினால் வெள்ளையர்கள் அடங்கிய கூலிப்படை ஒன்றின் உதவியைக் கொண்டு நாம் இந்துக்களின் மேலாண்மையை தடுக்கவேண்டும். தேவைப்பட்டால் ஜெர்மனியில் இருந்துகூட நாம் படைவீரர்களை அமர்த்திக்கொள்ளலாம்’ என்றார் என்று குகா முன்னுரையில் சொல்கிறார். இந்தியாவும் காங்கிரஸ¤ம் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்று அவர் சொனனர்.
பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கமுகமாக இருந்த தரப்பின் குரல் இது. இந்த ஒற்றை வரியில் உள்ள நுண்மையான நான்கு விஷயங்களை நாம் கருத்தில் கொள்ளலாம். ஒன்று வெள்ளைய இன மேலாதிக்க மனநிலை. இரண்டு இந்தியாவின் தேசியத்தன்மையை மறுக்கக்கூடிய மனநிலை. மூன்று, உண்மையில் இந்தியாவில் என்றுமே இருந்திராத ஒன்றை, பிராமண முற்றாதிக்கத்தை இருப்பதாகச்சொல்லி இந்தியாவில் பிளவை உருவாக்கும் நோக்கம். நான்கு இந்தியாவை வெல்ல தன் எதிரியுடனும் இணைவதற்கான மனநிலை.
இந்த மனநிலைதான் இந்தியாவை அராஜகநிலையில் விட்டுச்செல்ல பிரிட்டிஷாரை தூண்டியது. இந்திய நிலத்தை பற்பல சமஸ்தான மன்னர்களிடமே விட்டுவிட்டுச் சென்ற பிரிட்டிஷார் எதிர்பார்த்தது ஒரு மாபெரும் அராஜகத்தை. இந்திய நிலம் பலநூறு துண்டுகளாக உடையும் பேரழிவை. இந்திய நிலத்தில் எல்லாவகையான மக்களும் கலந்து வாழ்கிறார்கள் என்பதை அவர்கள் நன்கறிவார்கள். இங்கே இருந்தது அடித்தளத்துடன் சம்பந்தமே இல்லாத அரசியல் நிர்வாக அரசுகளே ஒழிய தேசிய அரசுகள் அல்ல என்றும் அறிவார்கள். அந்த நிர்வாக அரசுகள் தேசியங்களாக மாறினால் கோடிக்கணக்கில் மக்கள் பரிமாற்றம் நிகழ்ந்து பேரழிவு நிகழும். சர்ச்சிலின் அந்த உள்ளக்கிடக்கை யே மௌண்ட்பேட்டனிலும் வெளிப்பட்டது.
ஆனால் பிரிட்டிஷாருக்கும் பொதுவாகவே ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்களுக்கும் ஆழமான ஏமாற்றத்தை அளித்தபடி அவ்வாறு நிகழாமல் மீண்டது இந்தியா. அதுவும் மிகமிகக் குறைவான காலத்தில், நம்பமுடியாத அளவுக்குக் குறைவான ராணுவப் பிரயோகத்துடன், இது ஒற்றைநாடாக ஆகியது. அதற்குக் காரணமாக அமைந்தது ஏற்கனவே இத்தேசத்து மக்கள் ஒற்றைநாடாக ஆகிவிட்டிருந்தமைதான்.
இந்த வசீகரமான வரலாற்று மர்மத்தில் இருந்தே குகா ஆரம்பிக்கிறார். இந்தியா ஒற்றைநாடாக நீடிக்காது என்று ஐம்பதாண்டுகளாக மீண்டும் மீண்டும் ஐரோப்பிய அரசியல் நோக்கர்கள் எழுதி வருகிறார்கள் என்று குகா சுட்டிக்காட்டுகிறார். வறுமை, கல்வியறிவின்மை, பொதுவான சீரான சமூக அமைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்காது என்றும் மேலைநாட்டு அரசியலாய்வாளர்கள் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். சமீபத்தில் 135 நாடுகளின் அரசியல் சூழலை வைத்துக் கணிக்கப்பட்ட ஆய்வில் இந்தியா ஒரே நாடாகவும் ஜனநாயக நாடாகவும் நீடிப்பதற்கான காரணிகள் மிகக் குறைவு என்று கண்டடையப்பட்டது. ஆனால் ஆச்சரியமாக இந்தியா இன்னமும் ஒரே நாடாக, ஜனநாயக நாடாக நீடிக்கிறது.
‘ஓவ்வொரு பிரதமரின் மறைவுக்குப் பின்னரும் இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்துவிடும் என்று ஆரூடம் சொல்லப்பட்டது. பருவமழை தவறும்போதெல்லாம் நாடு முழுதும் பஞ்சம் பீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவினைவாத இயக்கம் தோன்றும்போதும் நாடு உடைந்து சிதறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.’ என்று சொல்லும் குகா இந்நூலில் எதிர்கொள்ளும் கேள்வி ஏன் அப்படி நிகழவில்லை என்பது மட்டுமல்ல ஏன் அந்த மனநிலை உருவாகியிருக்கிறது என்றும்தான். ‘இந்தியா நிலைக்கும் என்று இதயம் நம்புகிறது ஆனால் நிலைக்காது என்று அறிவு கவலைப்படுகிறது’ என்று இன்றைய நவீன அறிவுஜீவியின் கவலைமிக்க நிலையில் நின்றபடி குகா பேச ஆரம்பிக்கிறார்.
1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது நடந்த நிகழ்ச்சிகளை ஆர்வமூட்டும் விதத்தில் சொல்லியபடி குகா தன் நூலை ஆரம்பிக்கிறார். இன்றும் எது ‘இந்தியத்தன்மை’ என்ற நடைமுறையாக இருக்கிறதோ அது அன்றும் இருந்தது. சுதந்திரதினம் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சியும் குளறுபடிகள் இல்லாமல் நிகழவில்லை. மந்திரிசபை அமைப்பதற்கான பட்டியலை காவர்னர் ஜெனரலிடம் நேரு கொடுக்கும்போது உள்ளே வெறும் காகிதம் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் இதன் மறுபக்கமாக இன்னொன்றும் இருந்தது. இந்திய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்து காங்கிரஸ் வென்றெடுத்த சுதந்திரத்தின்போது முதல் மந்திரிசபையில் காங்கிரஸை அதுவரை எதிர்த்துவந்த இருவர் இடம்பெற்றிருந்தனர். பி. ஆர். அம்பேத்கார் மற்றும் இந்துமகாசபையின் சியாமபிரசாத் முகர்ஜி.
‘சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது,காங்கிரஸ¤க்கு அல்ல’ என்று அந்தப்போக்கை வரையறைசெய்தார் காந்தி. இந்திய ஜனநாயகத்தின் பலவீனமும் பலமும் இந்நிகழ்ச்சிகளில் தெரிகிறது. அத்தனை குளறுபடிகளுடனும் இந்தியாவின் அரசியலில் ஒரு விட்டுக்கொடுக்கும் மனநிலை இருந்துகொண்டிருக்கிறது. அதுவே இன்னமும் ஜனநாயகத்தை நீடிக்கச் செய்கிறது என்று படுகிறது.
இந்தியச் சுதந்திர நாளில் அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவர் தேசப்பிதா காந்தி படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு சுதந்திர இந்திய அரசை அறிவித்தபோது காந்தி தன்னந்தனியாக கல்கத்தா நகரின் சேரிகளில் முஸ்லீம் இந்து கலவரங்களை கட்டுப்படுத்துவதற்காக உண்ணாவிரதத்திலும் பிரார்த்தனையிலும் நடைபயணத்திலும் ஈடுபட்டிருந்தார். ஒருபக்கம் மகாத்மாகாந்திக்கு ஜே என்ற கூக்குரலுடன் தேசம் கொண்டாடிக்கொண்டிருந்தது. மறுபக்கம் எல்லைகளில் அகதிகள் ரத்தமும் கண்ணீரும் வழிய வந்து குவிந்துகொண்டிருந்தார்கள். வரலாற்றிலேயே ஆகப்பெரிய இடப்பெயர்ச்சி என்று அதை விவரிக்கிறார் குகா.
காந்தியின் மரணம் ஒருவகையில் இந்தியா என்ற நவீன தேசம் உருவாக வழியமைத்த வரலாற்று நிகழ்வாக அமைந்தது. மதமோதல்களால் கொந்தளித்துக்கொண்டிருந்த தேசத்தில் அது உருவாக்கிய ஆழமான அதிர்ச்சி சட்டென்று பொங்குதல்மேல் நீர்விட்டு குளிரச்செய்தது போல் ஆயிற்று. கடுமையான கருத்துவேறுபாடுகளால் பட்டேலும் நேருவும் பிரிந்துசெல்ல காங்கிரஸ் உடையும் நிலையில் இருந்தது. காந்தியின் மரணம் பட்டேலை நேருவை முழுமையாக ஏற்றுக்கொள்ளச் செய்தது. அந்த பின்பலமே நேருவை நவீன இந்தியாவை வழிநடத்தும்படிச் செய்தது.
தேசபிரிவினையின் வன்முறையில் பிரிட்டிஷாரின் நடத்தை வகித்த பங்கைப்பற்றி திட்டவட்டமாகவே குறிப்பிடுகிறது இந்த நூல். பொதுவாக இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் மழுப்பும் இடம் இது. தேசப்பிரிவினையின்போது இந்திய ராணுவம் பிரிட்டிஷ் அதிகாரிகளின் முழுக்கட்டுபபட்டிலேயே இருந்தது. அதை கலவரத்தை அடக்குவதற்கு அவர்கள் பயன்படுத்தவில்லை, மாறாக இந்தியாவிலிருந்த பிரிட்டிஷாரை முழுக்க பாதுகாப்பாக வெளியேற்றவே பயன்படுத்தினர். பெருமளவுக்கு ராணுவம் ஐரோப்பியர் குடியிருப்புகளைச் சுற்றி காவலுக்கு நிறுத்தப்பட்டது.
மேலும் தேசப்பிரிவினை அவசர அறிவிப்பாக வெளியிட்டதில், தேச எல்லையை இந்திய நிலத்தைப்பற்றி எந்த அறிதலும் இல்லாத ஓர் அன்னிய அளவையாளரைக்கொண்டு அவசர அவசரமாக நிகழ்த்தியதில் எல்லாமே இந்திய உயிர்களைப்பற்றிய எந்தவிதமான அக்கறையும் இல்லாத தன்மையே வெளிப்பட்டது. இந்தியாவின் சிவில் நிர்வாகத்திற்கு அப்போதும் பிரிட்டிஷார்தான் பொறுப்பு என்பதனால் அன்று நிலவிய அராஜகத்துக்கு பிரிட்டிஷார்தான் காரணம், ஆனால் அந்த அராஜகம் இந்தியா ஒரு தேசமாக நீடிக்க லாயக்கிலாதது என்பதற்கான காரணமாக பிரச்சாரம் செய்யப்பட்டது.
பிரிட்டிஷார் இந்தியாவை முழுமுற்றான அராஜகத்திற்கு விட்டு விட்டு வெளியேறினர். இந்திய சமஸ்தானங்கள் ‘விரும்பினால்’ இந்தியாவுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று அவர்கள் அறிவித்தனர். எல்லையில் பாக்கிஸ்தானின் ஆக்ரமிப்பு சாத்தியம் இருக்கையில், உயரதிகாரிகள் அனைவருமே வெளியேறி ராணுவம் நிலை குலைந்திருந்த தருணத்தில், ஏற்கனவே சிறு ராணுவங்களை வைத்திருந்த பொறுப்பற்ற ஊழல் மிக்க சம்ஸ்தான மன்னர்களுக்கு இந்த வாய்ப்பை அளிப்பதில் உள்ள தந்திரம் அப்பட்டமானது. அந்தச் சவாலை பட்டேலும் அவரது அதிகாரிகளும் சந்தித்த வரலாறு இந்த நூலின் உத்வேகமான அத்தியாயங்களில் ஒன்று.
இந்தியாவின் தெற்கெல்லையில் இருந்த, தொண்ணூறு சதவீதம் இந்துக்கள் கொண்ட, திருவிதாங்கூர் சம்ஸ்தானத்துக்குக் கூட பாகிஸ்தான் வலைவீசியது. ஜூனாகட், ஹைதராபாத் போன்ற பகுதிகளின் நிஜாம்கள் பிரிந்துசெல்ல விரும்பினர். அவர்களை பட்டேல் மிரட்டியும் நயந்தும் வழிக்குக் கொண்டுவருவதன் சித்திரம் சுவாரசியமானது. ஜோத்பூர் மன்னர் இந்தியாவுடன் சேர்வதை தவிர்த்து நாடகமாடினார். இளமையான ஜோத்பூர் மன்னருக்கு யாரோ பாகிஸ்தானுடன் சேர்ந்தால் அதிக சலுகை கிடைக்கும் என்ற கருத்தை சொல்லிவிட்டார்கள். ஜின்னாவுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஜின்னா அவருக்கு கராச்சி துறைமுகத்தின் மீது முழு உரிமை, தங்குதடையில்லாமல் ஆயுதம் இறக்குமதி செய்யும் உரிமை போன்ற சாத்தியமே இல்லாத பொய்யான வாக்குறுதிகளை வழங்கினார். ஜோத்பூரைக்கண்டு பிற சம்ஸ்தானங்களும் தயங்கின.
பட்டேலின் அதிகாரியான கெ.எம்.பணிக்கர் ஜோத்பூரின் நிலக்கிழார்களை கவர்ந்து அந்த முயற்சியை முறியடித்தார். ஆனாலும் கையெழுத்திடுவதற்கு முன்னால் ஜோத்பூர் மன்னர் ஒரு நாடகம் நடித்தார். வைஸ்ராய் மாளிகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்குள் செயலரின் தலையில் ஒரு துப்பாக்கியை வைத்து ‘நான் இதை ஏற்க முடியாது’ என்றார். ஆனால் உடனே கையெழுத்தும் போட்டார்!
கடந்த இருபதாண்டுகாலமாக காஷ்மீரின் வரலாற்றின் திரிக்கப்பட்ட ஒரு சித்திரத்தையே நம்முடைய ‘கலக’ அறிவுஜீவிகள் முன்வைத்து வருகிறார்கள். குகாவின் நூலில் நடுநிலையான, ஆதாரபூர்வமான ஒரு வரலாற்றுச் சித்திரம் உள்ளது. அதாவது காஷ்மீரின் பிரச்சினை எந்தத் தரப்பாலும் எளிமையாக ஒற்றைப்படையாகச் சொல்லத்தக்கதல்ல. இந்திய சுதந்திரத்தின்போது பிரிட்டிஷார் உருவாக்கிய விதிகளின்படி மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைய சம்மதிக்கிறார், ஆகவே காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. அந்று காஷ்மீர் மக்களின் தலைவராக இருந்தவர் ஹேக் அப்துல்லா. அவரும் அந்த இணைப்புக்குச் சம்மதிக்கிறார். அதனால் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் பழங்குடிகளை தூண்டிவிட்டு காஷ்மீர் மீது ஒரு படை எடுப்பை நிகழ்த்துகிறது, அது பாதி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தான் வசம் காஷ்மீரின் ஒரு பகுதி எஞ்சிவிட்டது.
ஷேக் அப்துல்லா காஷ்மீருக்கு தன்னாட்சி கேட்டதும் சிறையிலடைக்கப்பட்டதும் அதற்குப் பிந்தைய நிகழ்ச்சிகள். ஆக மன்னர் மற்றும் மக்களின் ஆதரவுடன் தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. காஷ்மீரின் தன்னாட்சி பிரச்சினை பின்னர் மத அடிப்படையில் பாகிஸ்தானின் உதவியுடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் ஷேக் அப்துல்லாவை ஓர் ஐந்தாம்படையாகவே பாகிஸ்தான் கருதியிருந்தது என்று இந்நூலில் காண்கிறோம்.
1948 ல் ஷேக் அப்துல்லா சென்னையின் வார இதழான ஸ்வத்ந்திராவுக்கு அளித்த ஒரு கட்டுரையில் காஷ்மீரை இந்தியாவின் பிரிக்கமுடியாத உறுப்பு என்றும் தென்னகமும் காஷ்மீரும் ஒரே அமைப்பைச் சேர்ந்தவை என்றும் உணர்ச்சிகரமாக எழுதிய கடிதத்தை குகா முழுமையாகவே மேற்கோள் காட்டியிருக்கிறார். ஷேக் அப்துல்லாவின் மனக்கசப்பும் பிரிவினைக்கோரிக்கையும் காங்கிரஸ் அரசின் தவறுகளில் இருந்து, நேருவுடனான மனக்கசப்புகளில் இருந்து, 1952க்குப் பிற்பாடு உருவம் கொண்டவையே.
காஷ்மீரின் பிரிவினைக்கோரிக்கையின் சித்திரம் இங்கே நாம் பேசாத பல தளங்களைக் காட்டுகிறது. ஷேக் அப்துல்லாவுக்கு இந்திய அரசு சலுகைகளை அளித்துக்கொண்டே இருக்கிறது. காரணம் எஞ்சிய காஷ்மீருக்காக பிரச்சினையை ஐக்கியநாடுகள் சபைக்குக் கொண்டுசென்றுவிட்டார் நேரு. அதற்கு ஷேக் அப்துல்லாவின் ஆதரவு இன்றியமையாதது. ஆகவே ஒருகட்டத்தில் ஷேக் அப்துல்லா நேருவை ஆட்டிவைத்தார். தனி ராணுவம் வைத்துக்கொள்ளவும் தனிச்சட்ட ஆட்சியை வைத்துக்கொள்ளவும் அனுமதி கோரினார்
இது காஷ்மீரின் சிறுபான்மையினரான டோக்ரி பேசும் இந்த் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. காஷ்மீர் எந்தவித ஜனநாயக முறைமையும் இல்லாமல் ஷேக் அப்துல்லாவுக்கு கையளிக்கப்படுவதாகவும் தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படுவதாகவும் அவர்கள் நினைத்தார்கள். ஆகவே பிரஜா பரிஷத் என்ற அமைப்பின் தலைமையில் அவர்கள் கிளர்ச்சி செய்தார்கள். அந்த ஜனநாயக கிளர்ச்சிக்கு சியாமபிரசாத் முகர்ஜி போன்ற இந்துத்துவர்கள் மதவண்ணம் பூசினார்கள். அதற்கு எதிராக இஸ்லாமிய உணர்ச்சி உருவானது, பாகிஸ்தான் ஆதரவு ஊடகங்களாலும் சில அமெரிக்க அமைப்புகளாலும் அது வளர்க்கப்பட்டது. காஷ்மீரில் இஸ்லாமிய தேசியவாதம் பரவ வழிவகுத்ததும் ஷேக் அப்துல்லா தனிநாடு கோர தூண்டப்பட்டதும் இந்த நிகழ்ச்சிகள்தான்.
இன்றும்கூட இந்தக்கிளர்ச்சிக்கு எந்த அளவு வெகுமக்கள் ஆதரவு உள்ளது என்பது எவராலும் கூறப்பட முடியாத ஒன்று. காஷ்மீரில் மக்களின் சுதந்திரமான கருத்து வெளிப்படும் ஒரு தேர்தல் என்பது அனேகமாகச் சாத்தியமற்றதே. இஸ்லாமிய தீவிரவாதமும் அதை அனுமதிக்காது.
குகாவின் இந்நூலின் மிக முக்கியமான பகுதி என்பது இந்திய அரசியல்சட்ட வரைவைப்பற்றிய அத்தியாயம்தான். இந்தியா என்ற நவீன தேசம் உருவாகி வருவதன் சித்திரமே அதில் உள்ளது என்றால் மிகையல்ல. ஒவ்வொரு விஷயத்திலும் ஏராளமான மாற்றுத்தரப்புகள் எழுந்து வருகின்றன. பல முரண்பாடுகளுக்கு பல்லாயிரம் வருடத்து வரலாறு உண்டு. முன்பே பிரிட்டிஷாரின் சட்டங்கள் இருந்தன, ஆனால் அவை ஆள்வோரால் ஆளும் வசதிக்காக உருவாக்கப்பட்டவை. இப்போது ஒருதேசத்தவர் தங்கள் சட்டங்களை தாங்களே உருவாக்க முனைந்தார்கள்.
அந்த அரசியல் சட்டம் அடிப்படையில் முற்போக்கு நோக்கு கொண்டதாகவும் நலிந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் மனிதாபிமானம் உடையதாகவும் ஜனநாயகப்பண்புகளை காப்பதற்கான முனைப்பு கொண்டதாகவும் அமைந்தது. நூற்றுக்கணக்கான பேச்சுவார்த்தைகள் வழியாக பல்லாயிரம் சமரசங்கள் வழியாக அது அங்கே சென்று சேர்ந்தது. பிணக்குகளும் மோதல்களும் கசப்புகளும் இருந்தன. ஆனால் அவை ஜனநாயகத்தின் மையக்கட்டுமானத்திற்குள்ளேயே நிகழ்ந்தன.
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கார் வகித்த பங்கையும் அதற்கு அம்பேத்காரை பரிந்துரை செய்த காந்தியின் நோக்கையும் இந்நூல் சித்தரிக்கிறது. கடைசிவரை அம்பேத்காரை பாதுகாத்து நின்ற நேருவின் சித்திரத்தையும் ஜனநாயகத்தின் தீராத உள்விவாதங்களால் கசப்படைந்து பாதியில் விலகிய அம்பேத்காரின் சித்திரத்தையும் குகா வரைந்து காட்டுகிறார்
வரலாற்றின் மாபெரும் சூதாட்டம் என்று மேலைநாட்டு ஊடகங்கள் வருணித்த முதல் இந்தியத்தேர்தல் உலக வரலாற்றின் மிக அதிகமான பேர் வாக்களித்த முதல்பெரும் தேர்தல். வயதுவந்தவர்களுக்கு அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்ட தேர்தல் அது. அன்று வாக்களித்த மக்களின் மிகப்பெரும்பாலானவர்களுக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்றே அதற்கு முன்னர் தெரியாது. வாக்குச்சீட்டு அவர்களுக்கு பழக்கமில்லை. எழுதப்படிக்கத்தெரியாது. ஏன் பலருக்கு தாங்கள் ஒரு தனிமனிதர் என்ற எண்ணமே இல்லை.
உண்மையில் அது தேர்தல் மட்டுமல்ல தேர்தல் என்றால் என்ன என்று கற்பிக்கும் நிகழ்ச்சியும்கூட. உலகம் அது வெற்றிகரமாக நடக்குமென நம்பவில்லை. ஏன் நேருவுக்கே ஐயங்கள் இருந்தது. ஆனால் அவர் விமானத்திலும் ரயிலிலும் காரிலும் கழுதையிலும் பயணம்செய்து நாட்டை வலம் வந்து மக்களைச் சந்தித்தார். ஒரு நாட்டை நிர்மாணிக்கும் பொறுப்பை அவர்களுக்கு அளித்தார். பலர் இன்று பிரச்சாரம்செய்வதுபோல மக்கல் பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்திய அரசோ அரசியல் சட்டமோ அமையவில்லை என்பதை இந்நூல் காட்டுகிறது. அரசியல்சட்டத்துக்குத்தான் நேரு அனுமதி கோரினார். இந்து சட்டம் போன்ற பல திருப்புமுனைச்சட்டங்களை மிகப்பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற்றபின்னரே சட்டமாக்கினார்.
அந்தத்தேர்தலே இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளை ஆழமாக நிறுவியது. ஒரே தேர்தல் வழியாக இந்தியா மன்னராட்சிக்காலத்தில் இருந்து மக்களாட்சிக்கு வந்தது. எளிய மாற்றமல்ல அது. அந்தமாற்றம் பல வருடங்களாக நடைபெற்ற ஒன்று. அந்த மாற்றத்தை தன் அரைநூற்றாண்டு பொதுப்பணி மூலம் காந்தி நிகழ்த்தினார் என்றே சொல்லவேண்டும். அந்த தேர்தலின் மூலமந்திரமே காந்தியின் பெயர்தான். அதுதான் நேருவை மிகப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரச்செய்தது. அவர் நினைத்தபடி வலுவான ஜனநாயக அடிப்படைகள் கொண்ட ஒரு தேசக்கட்டுமானத்தை உருவாக்கச் செய்தது.
மிகவிரிவான இந்த நூல் அளிக்கும் வரலாற்றுச் சித்திரம் நாம் உதிரித்தகவல்களாக அறிந்த இந்தியாவை முழுமையாகப் பார்க்க உதவக்கூடியது. இந்த மாபெரும் ஜனநாயகத்தின் பிரச்சினையே இங்கே எப்போதும் உரிமைக்கான குரல் எழுந்துகொண்டே இருக்கும் என்பதுதான். அந்தப்போராட்டம் ஒருபோதும் ஓயாது. காரணம் அதுவே ஜனநாயகம் அளிக்கும் ஆகப்பெரிய வாய்பபகும். சிறுபான்மையினர், உபதேசியத்தினர், பழங்குடியினர் என இந்தியாவின் கடந்த அரைநூற்றாண்டுக்கால வரலாற்றில் நிகழ்ந்த போராட்டங்களை விரிவாகச்சித்தரித்து முடிகிறது இந்த தமிழாக்கம்.
ராமச்சந்திரகுகாவின் நூலின் முதற்பகுதிதான் இது. விரைவில் அடுத்தபகுதி வெலிவருமென எதிர்பார்க்கலாம். ஆ.ர்.பி சாரதியின் மொழியாக்கம் மிகவும் சரளமாக உள்ளது.மொழியாக்கத்துக்காக ஒருதனிப்பாராட்டை பதிவுசெய்ய விரும்புகிறேன்
ஒரு வரலாற்று நூலை நிறுத்தமுடியாத உதேவகத்துடன் வாசித்து முடிக்க முடியும் என்று இந்நூலை முன்வைத்துச் சொல்லலாம். பிளஸ் டூ தேர்வு முடிந்ததும் எந்த நூலை முதலில் வாசிக்கலாம் என்று என் மகன் கேட்டான், இந்த நூலைத்தான் சொன்னேன். இந்த நூல் ஒரு நல்ல தொடக்கமாக அமையும். இந்த நூலின் கேள்விகளை புதிர்களை மேலும் மேலும் வாசித்து நிறைத்துக்கொண்டே செல்லலாம்
இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு, ராகச்சந்திர குகா, தமிழாக்கம் ஆ.பி.சாரதி, கிழக்கு பதிப்பகம் . சென்னை