காலச்சுவடுக்கு தடை

காலச்சுவடு இதழுக்கு நூலகத்துறை அளித்துவந்த ஆணையை வாய்மொழி உத்தரவின்பேரில் ரத்துசெய்து வந்ததாக காலச்சுவடு இணையதளத்தில் இருந்து என் வாசகர் ஒருவர் அனுப்பிய சுட்டிமூலம் http://www.kalachuvadu.com/issue-104/page53.asp அறிந்துகொண்டேன். நெடுநாட்களாகவே நான் காலச்சுவடை படிப்பதில்லை. அரவிந்தன் என்பவர் அதன் ஆசிரியராக இருந்த நாட்களில் அனேகமாக எல்லா இதழிலும் என்னைப்பற்றி வெளிவந்த அவதூறுகளும், வசைகளும் காரணமாக என் மனநிலையைப் பேணும்பொருட்டு தவிர்த்துவிட்டேன். வைக்கம் முகமது பஷீர் என்னுடைய கட்டுரை ஒன்றை அவர்கள் கோரி வெளியிட்ட இதழும் காந்தி பற்றிய இதழும் எம்.எஸ் கொண்டுவந்து தந்தார். காந்தி குறித்த இதழ் தமிழ் இதழியலில் ஒரு சாதனை.

காலச்சுவடை பழிவாங்கும் நோக்குடன் திட்டமிட்டேநூலக ஆணை தடுக்கப்பட்டதாகவும் விசாரித்து அறிந்தேன். நூலக ஆணை மூலம் காலச்சுவடு 1500 பிரதிகள் வாங்கபப்ட்டது. இப்போது இவ்விழப்பு அந்நிறுவனத்துக்கு மிகவும் சுமையானது.

கனிமொழிக்கு எதிராகவோ விமரிசனமாகவோ எதையும் காலச்சுவடு எதுவுமே செய்துவிடவில்லை என்றுதான் கேள்விப்பட்டேன். கனிமொழியின் பாராளுமன்ற உரையை கிட்டத்தட்ட காலச்சுவடின் கொள்கைப்பிரகடனமாக வெளியிட்டமையால் வந்த எதிர்வினைகளையும் வெளியிடவேண்டியிருந்தது. அந்த எதிர்வினைகள் அவரை கோபப்படுத்தியுள்ளன என்கிறார்கள். உண்மை அவர்களுக்குத்தான் தெரியும். இப்போது காலச்சுவடு இதழில் எழுதப்பட்டுள்ள கண்ணனின் கடிதங்கள் மிக பொதுப்படையானவையாக மழுப்பலான நாசூக்குடன் உள்ளன.

இத்தகைய கெடுபிடிகள் மூலம் எந்த இதழையும் தடுத்துவிடமுடியாதென்றாலும் எப்போதும் ஆட்சியாளர்கள் இதைச் செய்கிறார்கள். வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல் இது. கருத்துச் சுதந்திரம் மீதும் இதழியல் மீதும் விடப்பட்ட தாக்குதல். அனைத்து தரப்புகளும் இணைந்து இதைக் கண்டித்தாகவேண்டும். இப்போக்கு வளரவிடப்பட்டால் நாளை நூலகத்துறை வாங்கும் நூல்களையே இவ்வாறு ‘அரித்தெடுக்க’ ஆரம்பிப்பார்கள். என்னுடைய கண்டனத்தை பதிவுசெய்கிறேன்.

ஒன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்த நூலக ஆணையானது காலச்சுவடு தி.மு.க அரசில் தனக்கிருந்த நேரடியான செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கு மட்டுமாகப் பெற்றுக் கொண்ட சலுகை. அத்தகைய சலுகைகளைப் பெறுவதற்கு காலச்சுவடு செய்துகொண்ட சமரசங்களும் அதிகம். கனிமொழியை சென்ற காலங்களில் அது முன்னிலைப்படுத்திய விதத்தை வாசகர்கள் நினைவுகூர்வார்கள். கனிமொழி காலச்சுவடின் பார்வையிலேயே உச்சகட்டமாக மதிப்பிட்டாலும்கூட  தமிழில் எழுதும் இளம் பெண்கவிஞர்களில் முக்கியமானவர், ஓரளவு வாசிக்கக் கூடியவர் அவ்வளவுதான்.

ஆனால் காலச்சுவடு அவரை அப்படியா முன்னிறுத்தியது? ஒரு இலக்கிய மேதைக்குக் கூட அளிக்கப்படாத முக்கியத்துவம் காலச்சுவடின் இதழ்களிலும், கூட்டங்களிலும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவர் ஒரு மாபெரும் அறிவுஜீவியாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அல்லவா முன்வைக்கப்பட்டார்? அதைப்பற்றி நான் என் கண்டனத்தை அப்போதே பதிவுசெய்துள்ளேன்.

அந்தவிசுவாசம் காலச்சுவடுக்கு சில சிறிய நன்மைகளைப் பெற்றுத்தந்தது. அதற்கான விலையை அளிக்க சுந்தர ராமசாமியின் மகனால் முடியவில்லை. நம் அரசியல்தலைமை விசுவாசத்தை மட்டும் எதிர்பார்க்கவில்லை, மேலும் விசுவாசத்தை, மேலும் மேலும் விசுவாசத்தை, அடிமைத்தனத்தை, மேலும் மேலும் அடிமைத்தனத்தை எதிர்பார்க்கிறது.

இது அரசியல் சக்திகளுடன் குலாவி சில நன்மைகளைப் பெறலாம் என்று எண்ணும் எல்லாருக்குமே பாடம்தான். இந்த இதழிலேயே பா.செயப்பிரகாசம் பிரம்மராஜனைப்பற்றி எழுதியிருக்கிறார்.

காலச்சுவடு ஒருவகைச் சோர்விலிருந்து சமீப கால இதழ்கள் வழியாக பெருமளவு மீண்டுவிட்டதாகவும் அதன் சமீபத்திய இதழ்கள் மிகக் கவனமாகவும் தீவிரமாகவும் தயாரிக்கப்பட்டு வெளிவருவதாகவும் என் வாசகர்கள் பரவலாக கருத்து தெரிவித்து வருவதைக் காண்கிறேன். குறிப்பாக ஈழப்போர் இலக்கியத்தைப் பற்றி சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு தனி இதழ் குறித்து உணர்ச்சிகரமான வெளிப்பாடுகள் வந்தன. இதுவே முக்கியமானது. ஒரு இதழ் அதன் பொருளடக்கத்தாலும் நேர்மையாலும் தன் இடத்தை அடையமுடியும். நிரந்தரமான இடத்தை.

இந்த இக்கட்டு காலச்சுவடு மேலும் தீவிரம் பெறவும் தன் சக்திகளை ஒருங்கிணைத்துக் கொள்ளவும் உதவட்டும். காலச்சுவடு மேலும் மேலும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்.

காலச்சுவடு நூறாவது இதழ்

கனிமொழி வணக்கம்

நிழல் நாடுவதில்லை நெடுமரம்

முந்தைய கட்டுரைதமிழ்ப்பெண்ணியம் – சுருக்கமான வரலாறு
அடுத்த கட்டுரைஇந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்