திரு செமோ,
தமிழறிஞர்கள் எங்கே என்ற கட்டுரையினை வாசித்தேன். சமஸ்கிருதம் அறிவியலுக்குரிய மொழி என்று அதிலே சொல்லியிருந்தீர்கள். உங்களுக்கே கேவலமாக இல்லையா? சம்ஸ்கிருதத்திலே உள்ள அறிவியல் என்ன என்று கொஞ்சம் சொல்லித்தர முடியுமா? சமஸ்கிருதத்தை இனிமேல் அறிவியலுக்கு வைத்துக்கொள்ளலாமா? உங்கள் அறிவுத்திறனை பற்றி ஆச்சரியம் கொள்கிறேன்
மனோ சந்திரா.
அன்புள்ள மனோ,
நீங்கள் சுட்டிய கட்டுரையில் உள்ள நான் எழுதிய வரி இதுதான். ‘சம்ஸ்கிருதம் அறிவியக்கத்துக்குரிய மொழி’. அறிவியக்கம், அறிவியல் இரு சொற்களுக்கும் வேறுபாடு தெரியாத நீங்களெல்லாம் என் இணையதளத்தை வாசிக்கத்தான் வேண்டுமா? உங்கள் உடல்நிலைமேல் கொண்ட உண்மையான அக்கறையினால்தான் கேட்கிறேன். சினம் கொள்ளவேண்டாம்.
சம்ஸ்கிருதம் அறிவியக்கத்துக்குரிய மொழி. அதற்காகவே ஆக்கப்பட்டது. மக்கள் மொழியான தமிழில் அறிவியக்கம் ஒன்று ஈராயிரமாண்டுகளாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்த தலைமுறையில் அது அழிந்துவருகிறது
— என்பதுதான் அக்கட்டுரையில் நான் சொல்லியிருந்த சுருக்கமான கருத்து. சம்ஸ்கிருதத்தில் தொடர்ச்சியாக நான்கு நூற்றாண்டுகளாக மாபெரும் அறிவியக்கம் நிகழ்ந்து வந்துள்ளது என்பது உலகசிந்தனையின் ஓரத்தை பயின்றவர்களும் அறிந்ததே.
சம்ஸ்கிருத அறிவியக்கத்தை 1.வேதங்கள் உருவான காலகட்டம் 2 .ஆறுதரிசனங்கள் தோன்றி தொகுக்கப்பட்ட காலகட்டம் 3.உபநிடதங்கள் உருவான காலகட்டம் 4. இதிகாசங்களும் ஆரம்பகட்ட புராணங்களும் தொகைநூல்களும் உருவான காலகட்டம் 5. பிறமொழி நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டதும் சமணநூல்கள் எழுதப்பட்டதும் பெருங்காவிய இயக்கம் நிலைகொண்டதும் மொழியியல் மற்றும் இலக்கண நூல்கள் உருவானதுமான காலகட்டம் 6. பிற்கால வேதாந்தங்கள் உருவான காலகட்டம் என பல தனி அறிவியக்கங்களாகப் பிரிப்பதுண்டு.
சம்ஸ்கிருதம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை உலக அளவில் மிக அதிகமான அறிவியல் நூல்களைக் கொண்ட அறிவியல்மொழியாகவே இருந்துள்ளது. கணிதம், வானவியல்,மருத்துவம், சிற்பவியல் என அதிலுள்ள பெருநூல்கள் இன்றும் அறிவியலாளர்களால் பயிலப்படுபவை, ஆராயப்படுபவை. இன்றும் இங்கே புழங்கும் மருத்துவமும் சிற்பவியலும் சம்ஸ்கிருதக் கலைச்சொற்கள் இன்றி செயல்படமுடியாதவையாகவே உள்ளன.
இன்று சம்ஸ்கிருதம் அதன் அறிவியல் முக்கியத்துவத்தை இழந்து ஐநூறாண்டுகள் ஆகின்றன. அதுவும் இயல்பே. நூறாண்டு முன்வரை ஜெர்மன் மொழியே தத்துவத்துக்கான மொழி. இன்று அப்படி இல்லை. இன்று நவீன அறிவியலுக்கான உலகளாவிய மொழி ஆங்கிலமே.
தமிழிலும் தொடர்ந்து ஓர் அறிவியக்கம் இருந்துள்ளது. 1. திணைப்பிரிவினைகள் மற்றும் அதை ஒட்டிய வாழ்க்கைநோக்கு உருவான சங்க காலகட்டம். 2. பௌத்த சமண சிந்தனைகளின் செல்வாக்குடன் உருவான நீதிநூல்கள் மற்றும் காப்பியங்களின் காலகட்டம். 3. சைவ வைணவப் பெருமதங்கள் தத்துவார்த்த அடிப்படையை திரட்டிக்கொண்ட பக்திகாலகட்டம். 4. மூலநூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்ட, மருத்துவம் போன்றதுறைகளில் மூலநூல்கள் பல உருவான மரபின் இறுதிக்காலகட்டம் 5.பாரதிக்குப்பின் உருவான நவீன காலகட்டம் என அவ்வறிவியக்கத்தை பிரித்துப்பார்க்கலாம்
கொஞ்சமாவது ஏதாவது புரிந்துகொள்ள முயலலாமே அய்யா. உங்களை எல்லாம் நம்பித்தானே தமிழ் எதிர்காலத்தில் வாழவேண்டும்?
ஜெ