ரயில் உணவு

சாதாரணமாக வாரத்தில் ஒருமுறை ரயிலில் பயணம் செய்கிறேன். ஆனால் மிக அபூர்வமாக, தவிர்க்கமுடியாது மாட்டிக்கொள்ளும்போதன்றி ரயில் உணவை நான் சாப்பிடுவதில்லை.எங்கே எது கிடைக்கும் என முன்னரே கேட்டு வைத்திருப்பேன். அல்லது வீட்டில் இருந்து கொண்டுசெல்வேன். இரவுணவு பழங்கள் என்பதனால் உணவு தேவைப்படுவதும் எப்போதாவதுதான். அதைமீறி எப்போதெல்லாம் ரயில் உணவை சாப்பிட்டிருக்கிறேனோ அப்போதெல்லாம் நோய்வந்திருக்கிறது.

சமீபத்தில் கேரளத்தில் எக்ஸ்பிரஸில் அருகே இருந்த நண்பர் ரயில் உணவை வாங்கி மனம் உடைந்தார். ரொட்டியும் பழமும் சாப்பிடும் என்னை நோக்கி ‘முன்னே சொல்லியிருக்கலாமே?’ என்றார். கல்போன்ற இட்லி. தண்ணீரை விட மோசமான புளித்துப்போன சட்னி. பல வண்ணங்களில் கெட்ட வாடை வீசும் பல பொருட்கள்.

சற்று நேரத்தில் ஒரு ரயில் அதிகாரி வந்தார். அவர் இவரை தெரிந்தவர்.நண்பர் சாப்பாட்டைக்காட்டிப் புலம்பினார். ‘நான் புகார்செய்வேன்’ என்றார். ‘வழக்குபோடுவேன், பத்திரிகையில் எழுதுவேன்’ என்றார்

அதிகாரி கோணலாகச் சிரித்து ‘ எத்தனை ரூபாய்க்கு இதை வாங்கினீர்கள்?’ என்றார். நூறு ரூபாய். ‘ஐந்து ரூபாய் நீங்கள் ரயில்வே மேலதிகாரி கையிலேயே மனமுவந்து கொடுத்து விட்டீர்கள்’ என்றார் அதிகாரி. ‘இருபது ரூபாய் ரயில்வே அமைச்சகத்துக்கு கொடுத்திருக்கிறீர்கள். மூன்றுரூபாய் வரை அமைச்சருக்கே கொடுத்திருக்கிறீர்கள். கீழே உள்ளவர்களுக்கும் சேர்த்தால் கிட்டத்தட்ட எழுபது ரூபாயை ரயில்வேக்கே அளித்திருக்கிறீர்கள்’

நண்பர் விழிபிதுங்கினார். இயற்கைவிவசாயியான காந்தியவாதி அவர். அதிகாரி ‘எஞ்சிய அந்த முப்பது ரூபாயில் பத்து ரூபாயாவது லாபம் இருக்கவேண்டும். அதை அலுமினியத்தில் சுற்றி ரயில் வரை கொண்டுவந்து சேர்க்க பத்து ரூபாய். மிஞ்சிய பத்து ரூபாயில் இதைவிட நல்ல உணவை தர நீங்கள் தொழில் நடத்தினால் உங்களால் முடியுமா’ என்றார்

சிரித்துக்கொண்டு எழுந்து ‘சும்மா காண்டிராக்டரை குற்றம் சொல்லவேண்டாம். இந்த பத்து ரூபாய்க்காக அவன் ஏழுதலைமுறைக்குரிய சாபங்களை வேறு பெற்றுக்கொள்கிறான்’ என்றார். ‘என்னதான் செய்கிறார்கள்?’ என்றேன்.

‘பெரும்பாலும் கெட்டு வீணாகிப்போனதனால் கழித்து போடப்படும் மளிகைப்பொருட்கள். அவற்றை மொத்தமாக அடிமாட்டு விலைக்கு வாங்குவார்கள்.ரேஷன் அரிசி. தேங்காய்க்குப் பதில் தேங்காய்ப்புண்ணாக்கு.சந்தைகளில் வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்தபின் மிஞ்சி குவிந்து கிடக்கும் காய்கறிக்குப்பைகள். புழுத்தவை,அழுகல், மட்கல்’

பெரும்பாலும் காண்டிராக்டர்கள் உணவு சமைப்பதை திரும்ப காண்டிராக்டுக்கு விட்டுவிடுவார்கள். நாலாந்தர ஓட்டல்காரர்கள் அதை பெற்று சமைத்து அதில் லாபம் பார்க்கிறார்கள். பல இடங்களில் ஓட்டல்களில் மிஞ்சுவதை சேகரித்து திரும்ப குழம்பாக ஆக்குகிறார்கள். ஓட்டல்சோறுதான் இட்லியாகவும், கொஞ்சம் மைதா கலந்து தோசையாகவும் உருமாறி வருகிறது.

ஒருமாதிரி பேயறைந்ததுபோல ஆகிவிட்டேன். அருகே ஒரு அம்மாள் அந்த தோசையை குழந்தைக்கு பிய்த்து ஊட்டிக்கொண்டிருந்தாள். அது நாளைமுதல் நான்குநாள் கஷ்டப்படும், சந்தேகமே இல்லை.

எஸ்.ராமகிருஷ்ணன்
ரயில் உணவைப்பற்றி எழுதிய கட்டுரையை வாசித்தேன். என்ன சொல்ல? ஜப்பானிய உணவுடன் ஒப்பிடுகிறார். அங்கெல்லாம் உண்ணும் உணவு பருகும் நீர் தின்னும் வெற்றிலை அனைத்திலும் கைவைக்கும் மாபெரும் அதிகாரிவர்க்கமும் அரசும் இல்லை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 28
அடுத்த கட்டுரைநீலம் -கடலூர் சீனு