ஒரு சொல்…

அன்பு ஆசிரியருக்கு,

சிறுவயதில் எல்லா குழந்தை புத்தகங்கள்(அம்புலிமாமா, பூந்தளிர், கோகுலம்,நீதி நெறி கதைகள்..) படித்திருந்தேன். அதன் பிறகு சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை படித்தேன். 2008 முதல் தங்களது எழுத்துக்கள் தவிர வேறு எதையும் படிப்பதில்லை. கூடாது என்பதற்காக அல்ல. களஞ்சியம் இங்கேயே இருப்பதால். தங்களது அணைத்து எழுத்துக்களையும் படித்த திமிரிலும், சிறிது இலக்கிய அறிவும் இருப்பதாக நினைத்தும் இறுமாந்திருந்தேன். வெண்முரசை என்னை விட அதிகமாக யாரும் உள்வாங்கி கொள்ள முடியாது என்று மிதப்பில் இருந்தேன்.

ஆனால் வண்ணக்கடல் – பாலாஜி பதிவு படித்ததில் இருந்து என் அகங்காரம் தூளாகி விட்டது. கடலை கரையில் நின்று கண்டுவிட்டு அவ்வளவுதான் அதன் அழகு என்று நினைத்து இருக்கிறேன். அதில் மூழ்கி முத்தெடுக்கும் வாசகர்கள் எத்துனை பேர். அவர்களின் புரிதலுக்கு முன்னால் என் அறிவு ஒரு துளி. உங்கள் எழுத்தின் ஆழம் உணரும் பாலாஜி போன்ற வாசகர்களின் மேல் பொறாமை ஏற்ப்பட்டது. உங்கள் எழுத்தின் சாரத்தை முழுவதும் உள்வாங்கும் அவர்கள்தானே உங்களிடம் நெருக்கமாக இருக்கிறார்கள்? என்னை போன்ற எளிய வாசகர்கள் குழந்தைத்தனமாக உங்களுக்கு எழுதும் கடிதத்தை எல்லாம் மன்னித்து எனக்கும் வாசகனாக தங்கள் மனதில் ஒரு இடம் அளித்து அருள வேண்டும்.

தாழ்மையுடன்,

சரவணகுமார்.

துபாய்

அன்புள்ள சரவணக்குமார்

இன்று காலை ராதையின் வெறுமை [புரோஷிதஃபர்த்ருகை] நிலையைச் சொல்லும் ஒரு பகுதியை எழுதிவிட்டு அதே மனநிலை என்னையும் ஆட்கொல்ல கிட்டத்தட்ட தற்கொலை மனநிலையில் இருந்தேன். நண்பர்களை அழைத்தேன். அத்தனைபேரும் அவரவர் வேலைகளில்.

அஜிதனை அழைத்தேன். அவனுக்கு இம்மனநிலையை கடத்த விழையவில்லை. நீலம் எழுதும் இம்மனநிலையையே அருண்மொழி அறியலாகாது என கிட்டத்தட்ட ஒருமாதமாகவே நான் வீட்டில் இல்லை. கண்ணீர்கூட இல்லாத கடும்துயர் நிலை. ஆனால் அதற்குக் காரணம் ஏதுமில்லை

சட்டென்று உங்கள் கடிதம். மீன்பிடிக்கும் சீனவலையில் மைய முடிச்சை அவிழ்ப்பார்கள். எல்லா சரடுகளும் தொய்ந்து சரிந்து குவியும். அந்த விடுதலை

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27
அடுத்த கட்டுரைஜனநாயகத்தின் காவலர்கள்