வெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்- காஷ்மீர்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

ஏற்கனவே காஷ்மீரில் ராணுவத்தின் மீது கல்லெறியும் சம்பவங்களின் பின்னணியில் உள்ள அரசியலைப் பற்றி தங்களின் “இமயச் சாரல்” தொடர் கட்டுரைகளில் விளக்கி இருந்தீர்கள்.ஆனால் தற்சமயம் காஷ்மீர் மாநிலமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு,அதில் சிக்கிய மக்களை ராணுவம் உயிருடன் மீட்க போராடி வரும் நிலையில்,அவர்களை பணி செய்யவிடாமல் இந்த சூழ்நிலையிலும் கல்லெறியும் கயவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்,இது பற்றி எந்த முற்போக்கு சமூக ஆர்வலர்களோ ,ஊடகங்களோ கண்டு கொள்வதில்லையே ஏன்? இது சம்பந்தமாக “First post ” இல் வந்துள்ள செய்தியின் சுட்டியை கொடுத்துள்ளேன்.

http://www.firstpost.com/india/worried-armys-humanitarian-effort-separatists-incite-anger-among-kashmiris-1710697.html

அன்புடன்,
அ.சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி,

காஷ்மீரின் உண்மை அறிந்த எவரும் எதிர்பார்ப்பதுதான் இது. காஷ்மீர் பிரிவினைவாத போராட்டம் என்பது அங்குள்ள லடாக் ,ஜம்மு தவிர்த்த காஷ்மீர் சமவெளியில் மட்டும், அதன் மூன்று மாவட்டங்களில் உள்ள எல்லையோர ஊர்களில் மட்டும், சுன்னி இஸ்லாமியக் குழுவினரால் எல்லைதாண்டிய ஆதரவுடன் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் ஓர் அரசியல் சதி.

அவர்களைப் பொறுத்தவரை இந்தியா என்ற எதிரியை அவர்கள் கட்டமைத்து நிறுத்தியாகவேண்டும். அது காஷ்மீருக்காக அல்ல. பாகிஸ்தானை தன் ஆடுகளமாகக் கொண்டிருக்கும் பாகிஸ்தானிய ராணுவத்துக்கும், அந்த ராணுவத்துக்கு மட்டுமே கட்டுப்படும் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கும் அது தேவைப்படுகிறது. காஷ்மீர் பிரச்சினை இருக்கும் வரைத்தான் பாகிஸ்தான் மக்களிடம் ராணுவத்துக்கு உணர்வுரீதியான ஆதரவு இருக்கும்.

ஏற்கனவே அங்குள்ள மனசாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் தெரிந்த உண்மை ஒன்றுண்டு. இந்திய அரசு கொண்டு கொட்டும் பெரும் நிதியுதவியால்தான் காஷ்மீர் சமவெளியில் அவர்கள் வளம் மிக்க வாழ்க்கை வாழ்கிறார்கள். அதை சுவைத்தபடியே இந்திய எதிர்ப்பு பேச அவர்களை தூண்டுவது கண்ணை மறைக்கும் மதவெறி

இன்று ஒரு தேசியப்பேரிடரில் இந்தியப்பெருநிலமும், மத்திய அரசும், ராணுவமும் அவர்களைக் காப்பாற்றும் பெருவல்லமையாக வந்து நின்றிருக்கின்றன. ஒருபோதும் அதை பிரிவினைவாத அரசியலும் மதமௌடீகமும் அனுமதிக்காது. இந்திய அரசுடனும் ராணுவத்துடனும் மக்கள் நல்லெண்ண இணக்கம் கொள்வது அவர்களின் அதிகாரம் தளர்வதற்குச் சமம்

நான் இன்னும் கூட எதிர்பார்க்கிறேன். இப்பேரிடர் முடிந்த பின்னர் இந்தியா முழுக்க பரவியிருக்கும் சுன்னி முஸ்லீம் பிரச்சார அமைப்பும், கஷ்மீரின் தீவிரவாத அமைப்பும் இப்பேரிடர் காலத்தில் இந்திய ராணுவம் செய்த ‘அட்டூழியங்கள்’ ‘வன்கொடுமைகள்’ பற்றிய அவதூறுகளை ஆரம்பிப்பார்கள்.

அதை நாம் உயிர்மையிலும் காலச்சுவடிலும் உயிரெழுத்திலும் ஏன் ஆனந்த விகடனிலும் வாசிப்போம். பின்னர் இங்குள்ள இஸ்லாமியத் தீவிரவாத இதழ்கள் தோறும் மறுபிரசுரமாகவும் மேற்கோளாகவும் பார்ப்போம். இங்குள்ள இடதுசாரி, திராவிடவாதி அரசியல்வாதிகளின் குரல்களில் கேட்போம். கொஞ்சநாளில் அங்கே வெள்ளமே வரவில்லை, கொடுமைகள் இழைப்பதற்காக இந்திய ராணுவம் செய்த நாடகம் அது என்று நம்பப்படும். அந்நம்பிக்கையை மறுபவன் மதவாதி என்று முத்திரைகுத்தப்படுவான்

வேடிக்கை இல்லை. பலமுறை நிகழ்ந்த கதை இது. ஏதேனும் ஒரு காஷ்மீர் நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டு இணையத்தின் உதவிகொண்டு பத்து வருடம் தொடர்ச்சியாக கவனியுங்கள் அதிர்ச்சியூட்டும் திரிபுகளை, அவதூறுகளைக் காண்பீர்கள்

உதாரணமாக, காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் சிட்டிசிங்புரா என்ற ஊரில் 2000 த்தில் நடந்த சீக்கியர் மீதான தாக்குதல். ஹோலி கொண்டாடிக்கொண்டிருந்த சீக்கிய கிராமம் மீது இந்திய ராணுவ உடையில் வந்த பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 36 பேரைக் கொன்றனர்.

அப்போது கிளிண்டன் இந்தியா வந்துவிட்டு பாகிஸ்தான் செல்வதாக இருந்தார். அந்தப் பயணத்தை குலைக்கும்பொருட்டு இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் அது என அமெரிக்க ஊடகங்கள் சில எழுதின. அதை இங்குள்ள டைம்ஸ் ஆப் இந்தியா, தி இண்டு உள்ளிட்ட இந்திய ஆங்கில ஊடகங்கள் பெரிய அளவில் தலைப்புச்செய்தியாக்கின. அத்தனை இஸ்லாமிய இதழ்களும் அவர்களின் கூலிப்படையும் அதை மீண்டும் மீண்டும் எழுதித்தள்ளினார்கள்.

ஆனால் மெல்லமெல்ல அந்தத் தாக்குதலின் உண்மைகள் வெளிவந்தன. டேவிட் ஹெட்லி 2010ல் கைதுசெய்யப்பட்ட போது அவர் அந்தத் தாக்குதல் எப்படி லஷ்கர் இ தொய்பாவால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்று விளக்கினார். சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டனர். இன்று உண்மைகள் அப்ப்ட்டமாகிவிட்டன

ஆனால் முதலில் அவதூறைக் கிளப்பிய அமெரிக்க ஊடகங்கள் சம்பிரதாயமான ஒரு மன்னிப்புடன் பேசாமலிருந்து விட்டன. இங்கே அச்செய்தியை மறுபடியும் பிரசுரித்த நாளிதழ்கள் சில அதையும் செய்யவில்லை. இன்றும் இடதுசாரி இதழ்களில், இஸ்லாமிய இதழ்களில் ‘சீக்கியர்களை கூட்டக்கொலை செய்த இந்திய ராணுவம்’ என்னும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன

உலக அளவில் இந்த அளவுக்கு அறிவுலகம் கூலிப்படைகளால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் இன்னொரு தேசம் இருக்குமென்று தோன்றவில்லை

ஜெ

முந்தைய கட்டுரைஇன்னொரு யானை டாக்டர்
அடுத்த கட்டுரைகாஷ்மீரும் இந்துவும்