சீனு- இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

எழுதுதல் என்பது தன் மனம் செல்லும் வழியே பிரிந்து போனபடி போய்க்கொண்டு இருக்காமல் அதே சமயம் மனதின் போக்குகளில் அது தன்னை தொட்டு கொண்டதை மிக எளிதாக சொன்னபடி போகிறது கடலூர் சீனுவின் கடிதம்….தான் கூட நடந்து வந்தவர் தன் வாக்கில் பேசியபடி போக நாம் நின்று விட்டால் கேட்காத வார்த்தைகளாய் சென்றது அவரின் கடிதம். இன்னும் கூட பேசியபடி போகும் போல அவர் மனது உங்களை தூக்கி கொண்டு …

வாழ்வின் கடின தருணங்களை தாண்டி குடும்பத்தை தாங்கி செல்லுவதாக அவரைப்பற்றி சொன்னதாக நினைவு ( “நீங்கள் எழுத முடியும் “என்று முடியும் உங்களின் ஒரு கடிதத்தில்)….அவரின் சுமை தெரியாது ஆனால் இலக்கியமும் இயற்கையை நுணுகி ரசிக்கும் அவரின் மனதும் நல்லவை… இயற்கையை ஆழமாகவும், படர்ந்து நேசித்து விகசிக்க இலக்கியம் பேராயுதம் போல

பகிரவும் என் சிநேக வாழ்த்துகளை.

அன்புடன்,
லிங்கராஜ்

சார் நலம்தானே?

சீனுவின் கடிதத்தைத் தளத்தில் கண்டேன். அவரது அனுபவங்களும், அவற்றை எடுத்துரைக்கும் பாங்கும், வீச்சும் எப்போதும் பொறாமை கொள்ள வைக்கிறது. அவ்வப்போது அவரைப்போல உணர்ச்சிச் சுழலில் சிக்கிக் கொண்டாலும், உடலும், மனமும் தாங்குவதில்லை. அவர் உடல்நிலையை கவனித்துக் கொள்ளச் சொல்லவேண்டும்.

‘ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து’ – தளத்தில் எழுதியிருந்த பதிலைப் படித்தேன் (மீள்பிரசுரம்). அதைத் தொடர்ந்து ரமணர், கென் வில்பர் தேடி அரவிந்த கருணாகரனுக்கு 2008-ல் நீங்கள் எழுதிய கடிதங்களின் வாயிலாக அவரது வலைப்பூவைக் கண்டடைந்தேன்.

நான் சமீபத்தில் கண்டடைந்த பொக்கிஷம் அது. கொஞ்சம்கூட கவிதையே இல்லை என்று ஜே.கிருஷ்ணமூர்த்தியைக்கூட படித்ததில்லை இதுவரை. கென் வில்பரையெல்லாம் வாசிக்க முடியும் என்பது வெறும் கனவாகவே இருந்தது. அரவிந்தின் கட்டுரைகள் ஏதோ ஒரு தெளிவைத் தந்தன.

பிறகு கிருஷ்ணமூர்த்தியை இயல்பாகப் படிக்கமுடிகிறது. கென் வில்பரையும் புரட்டத் தொடங்கியிருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அரவிந்துக்கு உடனே ஒரு கடிதம் எழுதினேன். என்னைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறீர்கள் என்றார்.

ஆனந்த் உன்னத்