«

»


Print this Post

வடக்குமுகம் [நாடகம்] – 6


(சிகண்டி வணங்கி விடைபெறுகிறான்)

நிழல்: மீண்டும் நீ தவறவிட்டு விட்டாய்.

பீஷ்மர்: (மெதுவாக திரும்பி நிழல்கள் அளித்த தன் முதிய வேடத்தை எடுத்து அணிந்தபடி) ஆம். ஆனால் அது மட்டுமே சாத்தியம்.

நிழல்: ஏன் ?

பீஷ்மர்: ஏனெனில் இது காலத்தின் இக்கரை. இங்கு இருந்து நாம் கூவும் எதுவும் மறுகரையில் ஒலிக்காது. (அம்புப்படுக்கையில் கால்களை நீட்டிக் கொள்கிறார்) ஆனால் இந்த அம்புகளின் எரியும் வலியை நான் என் உடல் முழுக்க உணர்ந்து கொண்டிருந்தேன் அப்போது.

நிழல்: நான் கூறுவது எதுவுமே உனக்குப் புரியவில்லை. உணர்வுகளின் போது மனிதர்கள் மூடர்களாகிறார்கள்.

பீஷ்மர்: உணர்வுகள் இல்லாதபோது அவர்களிடம் இருப்பவை வெறும் சொற்கள். அர்த்தமற்ற சொற்கள்.

நிழல்: எழுந்திரு. நீ கூற வேண்டிய சொற்களை கூறிவிடு. இல்லையேல் இந்த அம்புப்படுக்கையில் நீ மரணமின்றி கிடப்பாய்.

பீஷ்மர்: அதோ அங்கு . . . யார் அது ?

நிழல்: யார் ?

பீஷ்மர்: (எழுந்து) ஒரு சூதன். ஆனால் வேறு வகையாக உடையணித்தவன்.

நிழல்: ஆம் அவன் சூதன்தான். அவனைப் பார்த்தால் . . .

பீஷ்மர்: அவன் பாடுவது ஓர் ஆடுகளத்தில் அவனைச் சுற்றி நடனமிடுகிறார்கள். அது ஏதோ திருவிழா.

(அரங்குக்கு வெளியே திருவிழா ஒலிகள். சிரிப்புகள் மத்தளம் முழங்க இருவர் மெல்ல நடனமிட ஒரு சூதன் கையில் தாளக்கோலை மெல்ல குலுக்கியபடி பாடிக் கொண்டு வருகிறான்.)

சூதன்: குருகுல பீஷ்மன் – அவன்

இணையிலா வீரன்.

குருகுல பீஷ்மன் – அவன்

இணையிலா வீரன்.

(கை தூக்கி காட்ட அமைதி)

ஆகவேதான் பீஷ்ம பிதாமகர் தன் வில்லை மடியின்மீது வைத்து இருகரங்களையும் கட்டியபடி அமைதியாக தேர்ந்தட்டின்மீது அமர்ந்திருந்தார். மேகங்கள் இல்லாத தூய வானம் போன்றிருந்தது அவர் மனம். அந்த வானம் தெளிந்த குளிர்ந்த தடாகத்தில் பிரதிபலிப்பது போலிருந்தது அவர் முகம். அர்ச்சுனன் காண்டாபத்தை வைத்து விட்டு அவரை கை கூப்பி வணங்கினான். பின்பு காண்டாபத்தின் நாண்களை ஏற்றி அம்புகளை எய்யத் தொடங்கினான். அம்புகள் முதிர்ந்த மரத்தில் மாலையில் அணையும் பறவைகள் போல பிதாமர் பீஷ்மரின் அகன்ற மார்பிலும் புஜங்களிலும் சென்று தைத்தன…. பாட்டன் மீது ஏறிவிளையாடும் குழந்தைகள்போல அவை அவரை மொய்த்துக் கொண்டிருந்தன…

(பாடல் தொடர்கிறது)

குருகுல பீஷ்மண் – அவன்

இணையிலா வீரன்

இமய மலைச் சிகரம் – அவன்

சடை விரித்த பேராலம்…

(பாடியபடி சூதர்கள் கடந்து செல்கிறார்கள்)

பீஷ்மர்: வேறு ஏதோ காலம். வேறு ஏதோ சூதர்கள். மனிதர்கள் மறைகிறார்கள். கதைகள் மறைவதில்லை.

நிழல் நீ இந்தக் கதைகளில் ஒன்றில் நீ சொல்லாமல் போன சொற்களை சேர்த்து விடலாம்.

பீஷ்மர்: காலத்தின் ஒரு கணத்தில் தவறவிடப்பட்டவை; காலம் முழுக்க சென்றபடியே இருக்கட்டும் என்கிறாயா ?

நிழல்: பிறகு எப்படி நீ இறப்பது ?

பீஷ்மர்: அச்சொற்களும் சமானமான வேறு எவற்றையோ நான் சொல்லும்போது.

நிழல்: யாரிடம் ? எங்கே ? எதைப்பற்றி ?

நிழல் 2: வீண்! வீண்! எல்லாம் வீண்!

பீஷ்மர்: இல்லை. என் உள்ளுணர்வு சொல்கிறது. இந்த எண்ணம் எழுகையிலேயே எனக்குள் ஒரு முகம் தெளிவுறத் தெரிகிறது அது அவன் முகம்.

நிழல்: யார் ?

பீஷ்மர்: அந்த யாதவன். கண்ணன்.

நிழல்: துவாரகை மன்னன் . . .

பீஷ்மர்: ஆம். ஆனால் அவனுக்கு மட்டுமே இந்த உதிர வெறியாட்டை மாபெரும் மனித நாடகமாகமட்டும் பார்க்க முடிகிறது. அன்று அம்பு மழை பொழிந்த களத்தில் இள வெயிலில் கண்டேன், அவன் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்திருப்பதை.

நிழல்: அவன் சதி செய்பவன். போரிடுபவனல்ல.

பீஷ்மர்: வெல்பவனாகவும் தோற்பவனாகவும் ஒரே சமயம் உணர்பவன் அவன் . நான் இருக்கும் இந்தப் பித்து வெளிக்கு வந்தால் பிறர் மனம் சிதறி அழிவார்கள். அவன் மட்டுமே சிரிப்பான்.

நிழல்: கொல்லும் சிரிப்பு.

பீஷ்மர்: காலத்தின் சிரிப்பு அது. அவன் இங்கு வரக்கூடும். அவனிடம் நான் எதையோ கூறக்கூடும் . . .

நிழல்: பாவனைகளில் உன்னை நீ தாலாட்டுகிறாய்.

பீஷ்மர்: இல்லை. அவன் அனைத்தும் அறிந்தவன். என்னைக் கொல்லும் வழியென்ன என்று கேட்டு யுதிஷ்ட்டிரரை என்னிடம் அனுப்பியவன். யுதிஷ்ட்டிரன் ஒரு தூதுப்புறா போல அசட்டுத்தனமான பணிவுடன் என்முன் வந்து நின்றபோது நான் அவன் சிரிப்பைக் கேட்டேன்.

நிழல்: உனக்கு மீண்டும் ஒரு தருணம் வாய்த்தது.

பீஷ்மர்: ஆம். அப்போதும் நான் அதைக் கூறவில்லை. ஆனால் அந்தத் தருணத்தில் நான் சொன்னவை எதுவும் தருமனிடம் கூறப்பட்டவை அல்ல.

நிழல்: என்ன கூறினாய் ? ஒருவேளை அச்சொற்களில் நீ தேடும் அந்த மாற்றுச் சொற்கள் இருக்கலாம்.

பீஷ்மர்: ஆம். ஆனால் நான் களைத்துவிட்டேன். என் உடலை ஒரு திரவம் போல பூமியின்மீது படரச் செய்து படுத்துவிட வேண்டுமென்று மட்டுமே விழைகிறேன்.

நிழல்: எழுந்திரு. நீ சென்றாக வேண்டும். அந்தச் சொற்களை மீண்டும் தொட்டு அளைந்து தேடிப் பார்த்தாக வேண்டும்.

பீஷ்மர்: என்னை விட்டுவிடு.

நிழ: உனக்கு மரணம் மட்டுமே ஓய்வாக அமைய முடியும் . . .

பீஷ்மர்: ஆமாம். மரணம். அதையன்றி வேறு எதையுமே நான் இக்கணம் விழையவில்லை.

நிழல்: எழுந்திரு.

(பீஷ்மர் ‘ஆ ‘ என்று முனகியபடி எழுகிறார் . வயோதிக உடையை மாற்றாமலேயே தள்ளாடி நடக்கிறார்)

நிழ: அதோ பாடி வீடு. போர் ஓய்ந்து வீரர்கள் காயங்களை கழுவிக் கொண்டிருக்கும் மாலை நேரம்.

(காயமடைந்த வீரர்கள் தூக்கிச் செல்லப்படுகிறார்கள். குதிரைகள் நடக்க கொண்டு செல்லப்படுகின்றன. உணவு சமைக்கப்படும் ஒலிகள். வீரர்கள் சிலர் ஒரு பெரிய அண்டாவுடன் செல்கிறார்கள். வளைந்த ஆயுதங்களை அள்ளி ஒருவன் செல்கிறான். அனைவரும் பீஷ்மரை வணங்கி செல்கின்றனர்)

பீஷ்மர்: போர்க்களத்து மாலை நேரத்திற்கே ஓர் அமைதி இருக்கிறது. தீராத கடும் நோய் இடைவெளி விடுகையில் வரும் உல்லாசம் போல.

ஒரு வீரன்: பிதாமகரே விட எல்லையில் எழுபது யானைகள் காயம்பட்டு விட்டன.

பீஷ்மர்: துதிக்கைக் காயம் எவ்வளவு ?

வீரன்: பதினெட்டு.

பீஷ்மர்: அவற்றை மட்டும் விலக்கி மூலைக்கு கொண்டு செல். நாளை போரின்போது அவற்றுக்குப் பின்னால் நிற்கும் நமது படைகளிடம் எரியும் பந்தங்கள். இருக்கட்டும். தீயால் சுடப்பட்டு அவை பாண்டவர் படைகளுக்குள் விரட்டப்பட்டும்.

வீரன்: உத்தரவு

(இன்னொரு வீரன் உள்ளே வந்து வணங்குகிறான்.)

பீஷ்மர்: யார் வந்திருப்பது.

வீரன்: இந்திரப்பிரஸ்த மன்னர், குருவம்சத் தோன்றல், பாண்டவர்களில் முதல்வர் . . .

பீஷ்மர்: வரச்சொல் – தனியாக

(பீஷ்மரின் முகத்தில் குழப்பம் பரவுகிறது. தாடியை உருவியபடி நடக்கிறார். தருமன் எளிய உடையில் ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி வருகிறான்.)

தருமன்: (வணங்கி) பிதாமகருக்கு வணக்கம்.

பீஷ்மர்: தருமம் வெல்க. (ஆசியளிக்கிறார்)

தருமன்: எந்தையே இந்தப் போர் என்னை கவலைக்குள்ளாக்குகிறது. வெல்ல முடியாத பிதாமகர்களும் வித்தையே கற்பித்த குருநாதர்களும் எதிரே அணிவகுக்கையில்….

பீஷ்மர்: நீ பார்த்தசாரதியின் உபதேச மொழிகளை கேட்கவில்லை போலும்.

தருமன்: அது வில்லாளிகளுக்குரியது பிதாமகரே. நான் எளிய மனிதன்.

பீஷ்மர்: நாளை பாரத வர்ஷத்தை ஆளவிருப்பவன்.

தருமன்: அந்த ஆசை எனக்கில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். இந்தப் போர் எப்படித் தொடங்கியது என்பதை இப்போது எண்ணியே பார்க்க முடியவில்லை. சிந்திக்கும் தோறும் அந்த துவக்கப்புள்ளி காலத்தில் பின்னகர்ந்து போகிறது. எங்கள் இளமைப்பருவத்திற்கு . . . அதற்கும் முன்னால் . . . எங்கள் தந்தையர் வாழ்வுக்கு . . . ஒருவேளை எங்கள் குலத்தின் விதையிலேயே இந்தப் போர் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்று படுகிறது.

பீஷ்மர்: (இகழ்ச்சியுடன்) களத்திலும் உனக்கு தத்துவ விசாரம் தானா ?

தருமன்: நான் கோழையாக இருக்கலாம். ஒரு போதும் நான் அதை மறைத்ததில்லை. பிதாமகரே வீரம் என்பது என்ன ?சுயநலம் நிரம்பிய வன்முறை அவ்வளவுதானே ?

பீஷ்மர்: இல்லை அதன் மறுபெயர் துணிவு.

தருமன்: துணிவு என்று எதுவும் இல்லை. அச்சம் இல்லாத மனிதன் யோகி. அவன் ஒருபோதும் போரிடுவதில்லை. அவனுக்கு எதிரிகள் இல்லை

.

பீஷ்மர்: விதுரநீதி உன் மூளைக்குள் நிரம்பிவிட்டது.

தருமன்: பிதாமகரே உங்களிடம் விவாதிக்க நான் வரவில்லை. இந்தப் போர் என்னை மீறி தொடங்கிவிட்டது. என்னை மீறி நடந்து கொண்டிருக்கிறது. அதன் தலைமை இடத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். கோபுரம் மீது அமர்ந்த எளிய பறவை போல. என்னைச் சுற்றி அழியும் துயரமும் துயரமும் பெருகுகின்றன. இன்று நான் விரும்புவதெல்லாம் ஒன்றுதான், இந்தப் போர் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் முடிந்துவிட வேண்டும். வெற்றியோ தோல்வியோ சீக்கிரம் அது நிகழும் என்றால் அழிவு குறையும் அவ்வளவுதான்.

பீஷ்மர்: நீ தோல்வியை ஏற்கலாமே.

தருமன்: உங்களுக்குத் தெரியும். நான் இங்கு எதையும் தீர்மானிக்க முடியாது.

பீஷ்மர்: வேறு யார் யாதவ மன்னனா ?

தருமன்: இல்லை குந்தியும் திரெளபதியும்.

பீஷ்மர்: (சட்டென்று இறுகி) ஆம். இப்போது உனக்கு என்ன தேவை ?

தருமன்: போர் நாட்கணக்கில் நீள்கிறது. உங்களை வெல்ல அர்ச்சுனனால் முடியவில்லை. இருபுறமும் படைகள்தான் அழிகின்றன.

பீஷ்மர்: ஆம் அவனால் என்னை கொல்ல முடியாது. நான் அவனை கொல்லமாட்டேன்.

தருமன்: பிறகு எப்படி போர் முடிவது ?

பீஷ்மர்: அதுதான் விஷயமா ? உன்னை அனுப்பியவன் யார் ?

தருமன்: உங்களுக்குத் தெரியும் . . .

பீஷ்மர்: அவன் என்ன கேட்கச் சொன்னான்.

தருமன்: உங்கள் மரணம் எப்படி நிகழும் என்று . . . அதற்கு நாங்கள் செய்ய வேண்டியது என்ன என்று கேட்டு வரச் சொன்னார்.

பீஷ்மர்: (உரக்கச் சிரித்து) அப்படியல்ல. அவன் சொன்ன வார்த்தைகள் வேறு.

தருமன்: (யோசித்து) ஆம் . . . நீங்கள் இறக்க விரும்பும் விதம் என்ன என்று கேட்கச் சொன்னான்.

பீஷ்மர்: எவர்முன் நான் தோற்பேன் என்று இல்லையா ?

தருமன்: ஆம்.

பீஷ்மர்: என்னைக் கொல்பவன் ஒருபோதும் தீராத அவப் பெயரை, அதன் முடிவிலா நரகத்தை அடைவான் என்றால்கூட அதைச் செய்யத் துணிபவன் உங்களில் யார் ?

தருமன்: பிதாமகரே . . .

பீஷ்மர்: என்னைக் கொல்வதன்றி அதன்மூலம் அவன் எதையுமே அடையமாட்டான் என்றாலும் அதற்குத்துணிபவன்….

தருமன்: வெற்றியில்லாத போருக்கு எந்த சத்திரியன் முன் வருவான்.

பீஷ்மர்: வருபவன் உண்டு. யாதவன் உன்னிடம் சொன்னது என்ன ?

தருமன்: இதைப்பற்றி ஏதும் கூறவில்லை.

பீஷ்மர்: அவன் சொன்ன சொற்களையெல்லாம் நினைவுகூர்.

தருமன்: எவ்வளவோ சொற்கள்.

பீஷ்மர்: இந்தத் தருணத்திற்குப் பொருந்தாத எதையோ அவன் சொன்னான். அதுதான் மிகப்பொருந்துவது…

தருமன்: இல்லையே . . . (நின்று) ஆம் , அவன் சிகண்டியைப் பற்றி சொன்னான்.

பீஷ்மர்: சிகண்டியா, யார் அது ?

தருமன்: பாஞ்சாலனின் வளர்ப்பு மகன் அல்லது மகள். அவனை யாதவன் இருபிறப்பாளன் என்று இளநகையுடன் கூறினான்.

பீஷ்மர்: அவன் என்ன செய்ய வேண்டும் என்றான். ?

தருமன்: ஒரு செயலின் பொருட்டு மறுபிறப்பு கொள்பவன் அதை செய்து முடிக்காமல் விடுவதில்லை என்றான்.

பீஷ்மன்: (பெருமூச்சுடன்) அதைத்தான் எதிர்பார்த்தேன். தருமா என்னை உன் தம்பியால் கொல்ல முடியாது. இந்த சிகண்டி என்னைக் கொல்வான். அவனை முன்னிறுத்தி போர் புரியச் சொல்.

தருமன்: ஏன் ?

பீஷ்மர்: பெண்கள், பிராமணர், அலிகள் ஆகியோரிடம் நான் போரிடமாட்டேன். ஆயுதத்தை இறக்கி விடுவேன்.

தருமன்: உங்கள் கவசங்களைப் பிளக்கும் அம்பு வலிமை அவனிடம் உண்டா.

பீஷ்மர்: பாறையை புல் பிளக்கும்.

தருமன்: புரியவில்லை பிதாமகரே.

பீஷ்மர்: உன் தம்பிக்கும் யாதவனுக்கும் புரியும். சிகண்டிக்குத் தெரியும். நான் இதைச் சொன்னதாக மட்டும் அவர்களிடம் சொல்.

தருமன்: (பெருமூச்சுடன்) நானறியாத இந்த ஆட்டத்தில் வெறும் பகடையாக உணர்கிறேன்.

பீஷ்மர்: (நகைத்து) அல்லது திருவிழாவை பதைத்துப் பார்க்கும் உற்சவ மூர்த்தி

தருமன்: போதும் பிதாமகரே, இதெல்லாம் என்ன ? ஏன் அந்தப் பேடி உங்களைக் கொல்ல வேண்டும் ?என்ன அர்த்தம் அதற்கு ? அவனுக்கும் உங்களுக்கும் என்ன உறவு ?

பீஷ்மர்: அவன் (திடுக்கிட்டு அமைதியாகி) இது ஒரு கேலிக்கூத்து மட்டும்தான் தருமா. உனக்கு இது புரியாது.

தருமர்: ஆம். புரியாததனால்தான் நான் இன்னும் தர்மத்தில் நம்பிக்கையுடனிருக்கிறேன் போலும்.

பீஷ்மர்: யாதவனிடம் கூறு (நிதானித்து) உடைந்த ஆடியில் முகம் பார்ப்பவன் தன் மரணத்தைக் காண்கிறான்.

தருமர்: சொல்கிறேன்.

(வணங்கி விடைபெறுகிறான். நிழல் நெருங்கி வருகிறது)

நிழல்: என்ன சொன்னாய் ?

பீஷ்மர்: உடைந்த ஆடியில் முகம்பார்ப்பவன் தன் மரணத்தைக் காண்கிறான். ஏன் அதைச் சொன்னேன் ?

நிழல்: அதில் உள்ளது உன் மரணத்தின் ரகசியம்.

பீஷ்மர்: நான் சொன்ன சொற்கள்தான். ஆனால் வேறு ஏதோ நாடகத்தில் நான் கேட்டவை போலிருக்கின்றன. எனக்கு புரியவில்லை. ஒருவேளை யாதவனுக்குப் புரிந்திருக்கும் அவனுக்குத் தெரியும் . . .

நிழல்: உனது மனம் அவனையே நாடுகிறது.

பீஷ்மர்: அவனுக்குத் தெரியாதது இல்லை.

(வெளியே இசை, நடன ஒலிகள். சிப்ளாக்கட்டை ஒலிக்க ஒரு கிழக்குரல் கதை சொல்கிறது)

குரல்: இவ்வாறாகவே யோகபுருஷனான பீஷ்மர் தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்தார். சூரியன் உத்தராயணத்தை அடைந்துவிட்டது. மகாபாரதப் போரின் ஐம்பத்திரண்டு நாட்கள் ஐம்பத்திரண்டாயிரம் கொடும் கனவுகளைப்போல கடந்து சென்றன. ஆச்சாரியரான துரோணர் மறைந்தார். மகாரதனான கர்ணன் தேரடியில் விழுந்தான். சல்லியனும் ஐயத்ரதனும் மறைந்தார்கள். அபிமன்யுவின் பிஞ்சு உடல் குருஷேத்ர ரணபூமியில் விழுந்தது. முடி மன்னர் வணங்கிய மாமன்னனாகிய சுயோதனன் தொடை பிளந்து துடித்து துடித்திறந்தான். அவனது சகோதரர்கள் அனைவருமே கொலையுண்டனர். லட்சோப லட்சம் உயிர்கள் தங்களை அந்த ரணபூமியில் தங்களை பலி தந்தன. அது போன்ற ஒரு பெரும்போர் முன்பு நடந்ததில்லை. பின்பு நடக்கவில்லை. இனி நடக்கப் போவதும் இல்லை. தர்மமும் அதர்மமும் எல்லைகள் அழிந்து மோதிய பெரும் போர்.

(பேசியபடியே பாகவதர் மேடைக்கு வருகிறார். கூடவே சில கேள்வியாளர்கள்.)

அன்பர்களே அந்தப் போரின் இறுதியில் எஞ்சியதென்ன ? விதவைகளின் கண்ணீர். குருதி படிந்த சிம்மாசனம். வெறுமை நிறைந்த வீதிகளுடன் பாழடைந்த நகரம். நீர்க்கடன்களால் கனத்து குளிர்ந்த நீர்நிலைகள்… மகத்தான விஷயங்களுக்காகவே பெரும் போர்கள் துவங்குகின்றன. ஏனெனில் மகத்தானவையே மக்களை போரை நோக்கி கவர்ந்திழுக்கின்றன. ஆனால் போர் முடியும்போது கீழ்மைகள் மட்டுமே எஞ்சுகின்றன.

எத்தனை பெரும்போர். மரணமே காற்றாக திசைகளை மூடியிருந்த ஐம்பத்திரண்டு நாட்கள்…

தர்மம் வென்றதா ? வென்றதெனில் இன்று ஏன் இன்னமும் அதர்மம் வீற்றிருக்கிறது ?

வென்றது எது ? அன்பர்களே, வென்றது வல்லமை. வில் வல்லமை ,சொல் வல்லமை. எங்கு வில்லும் சொல்லும் முயங்குகின்றதோ அங்கு வெற்றி உள்ளது என்று காட்டியது அந்த பெரும்போர்.

(பார்வையாளர் ‘ஆகா ‘ என்கிறார்கள்.)

அந்த ரணகளத்தின் நடுவே இன்னும் பொருள் தெரியாத ஒரு சொல் எனக் கிடந்தார் பிதாமகர் பீஷ்மர். தன் குழந்தைகளை ஒருவரை ஒருவர் கொன்றொழிப்பதைக் கண்டு படுத்திருந்தார். பேரர்கள் விளையாடக் கண்டு முன்றில் மஞ்சத்தில் ஓய்வு கொள்ளும் பாட்டனைப் போல. வம்ச பரம்பரைகள் கருகிய வெம்மையிலிருந்து மெய்ஞானத்தின் சாரத்தை அவர் கற்றார். அன்பர்களே அந்த மெய்ஞானம் எத்தனை மகத்தானதாக இருக்க வேண்டும்!

(பார்வையாளர் சிரிக்கிறார்கள்)

அந்த மெய்ஞானத்தை அவர் தன் வாரிசு அர்ச்சுனனுக்குச் சொன்னார். பீஷ்மகீதை! வென்றவனின் கீதைக்கு பதிலாக அமைந்த தோற்றவனின் கீதை.

(சிரிப்பு)

பிறகென்ன ? உயிர்தியாகம்தானே ? உத்தராயண நாள் முழுமை பெற்றது. சூரியன் வடதிசைக் கோட்டில் பொருந்தினான். மகாபுருஷனான பீஷ்மர் தன் உடலை யோகத்தில் அமர்த்தினார். ஒவ்வொரு உறுப்பாக யோகத்தில் மூழ்கும்போது அவற்றில் தைத்திருந்த அம்புகள் உதிர்ந்து அப்பகுதி அழகு பெற்றது கைகள். தோள்கள் மார்பு தொடைகள். பிறகு அவரது மனம் யோகத்தில் ஆழ்ந்தது. அதிலிருந்து எத்தனை அம்புகள் உதிர்ந்தன என யார் அறிவார்.

பின்பு அவரது சிரம் உடைந்து தெறித்தது. அவரது உயிர்ப்பறவை விண்ணை நோக்கிப் பாய்ந்தது. நாளில்லா நாழிகையில்லா நொடியில்லா பெரும் கால வெளி நோக்கி . . .

(பீஷ்மர் நெளிந்து துடிக்க ஆரம்பித்து உடல் உதறி வலிப்பு கொள்கிறார். ஆ!! என அலறுகிறார். அவரைச் சுற்றி நிழல்கள் நடமிடுகின்றன. வெண்கொடிகளும் செந்நிறக் கொடிகளும் கருநிறக் கொடிகளும் ஏந்திய வீரர்கள் சுழன்று வருகின்றனர். அவர்களுடன் பாகவதரும் கலந்து கொள்கிறார். அர்த்தமற்ற ஒரு ஒலிச்சூழல், உடற்சுழல்)

பீஷ்மர்: அம்மா! அம்மா

(நிழல் நடனம் அடங்குகிறது)

பீஷ்மர்: தாகம்! தாகம்!

(தருமரும் அர்ச்சுனனும் முன்வர பீமன் தொடர பாண்டவர்கள் வருகிறார்கள்.)

பீஷ்மர்: யார் ? யார் நீங்கள் ?

தருமன்: தாத்தா இது நான் தருமன்!

பீஷ்மர்: யார் ? தருமனா ? யார் நீ ?

தருமன்: தாத்தா ?

அர்ச்சுனன்: (கோபத்துடன்) பிதாமகரே இவர் இந்திரப்பிரஸ்தத்தின் அதிபர். இவர் பெயர் தருமசேனர். இவரது பிரஜை நீர்.

பீஷ்மர்: தண்ணீர்.

தருமன்: தம்பி சற்று சும்மா இரு. (குவளை நீரை நீட்டுகிறான்)

பீஷ்மர்: (பதறி) ரத்தம்! (உடல் வெடவெடக்க எழ முயல்கிறார்)

பீமன்: (அவரைப் பற்றி) பிதாமகரே . . . இதோ பாருங்கள். தண்ணீர் . . . (உரக்க) கங்கை நீர்.

பீஷ்மர்: இது அவளுடைய உதிரம் !அவளுடைய உதிரம் . . . சிவப்பு நிறம் . . .

தருமர்: (வலுக்கட்டாயமாக நீரை புகட்டியபடி) தளர்ந்து விட்டார்.

பீஷ்மர்: (நீர் அருந்தியதும் புத்துணர்ச்சி பெற்று மெல்ல நிதானமாகி) தருமா நீயா ?

தருமர்: ஆம் தந்தையே

பீஷ்மர்: இது எத்தனை நாள் ?

பீமன்: போர் முடிந்துவிட்டது.

பீஷ்மர்: (கணநேரத்தில் அனைத்தையும் ஊகித்து) சுயோதனன் ?

பீமன்: மாண்டான்

பீஷ்மர்: (பரிதவிப்புடன்) என் மகன் திருதராஷ்ட்ரன். அவன் எப்படியிருக்கிறான்.

(அனைவரும் அமைதியடைந்து தங்களுக்குள் பார்க்கிறார்கள்)

பீஷ்மர்: எப்படி இருக்கிறான் அவன் ? என் குழந்தை. அவன் என்ன செய்கிறான் ?

பீமன்: (மூர்க்கமாக) இப்போது சற்று பார்க்க ஆரம்பித்திருக்கிறார். விரைவில் தெளிவடைவார்.

பீஷ்மர்: (அவனை பரிதவிப்புடன் பார்த்து) நீ . . . நீ குலாந்தகன். குருகுலத்தின் எமன் . . .

பீமன்: ஆம், அது என் மெய்கீர்த்தி

பீஷ்மர்: (வாயடைந்து) இதற்காகத்தானா ? (மனம் உடைந்து வீரிடுகிறார்) இதற்காகத்தானா ? எம்பிரானே எல்லாம் இதற்காகத்தானா ?

(பாண்டவர்கள் அவர் அழுவதை பரிதவிப்புடன் பார்த்து நிற்கிறார்கள்.)

அர்ச்சுனன்: பிதாமகரே ,தாங்கள் தர்மம் என்ன என்பதை அறிந்தவர்.

பீஷ்மர்: இல்லை. என் அகந்தை அது. நான் தர்மத்தை அறிந்ததே இல்லை. அதன் பாதை என் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. அதன் பாதத் தடங்களைக்கூட நான் கண்டதில்லை. நானறிந்ததெல்லாம் என் அகங்காரத்தை மட்டும்தான்.

அர்ச்சுனன்: இங்கு தங்களிடம் தர்மஞானம் பெறுவதற்காக வந்திருக்கிறோம்.

பீஷ்மர்: எனக்கு சொல்வதற்கு ஏதுமில்லை. (கண்ணீருடன்) என் துயரை சொல்லி அழுவதற்குக்கூட என்னிடம் மொழியில்லை.

தருமன்: உங்களிடம் தர்ம உபதேசம் பெற்று வரும்படி யாதவக் கிருஷ்ணன் எங்களை அனுப்பினான்.

பீஷ்மர்: (பிரமித்து) யார் யாதவனா ? என்னிடமா ?

தருமன்: ஆம்.

பீஷ்மர்: தர்ம உபதேசம் என்றா சொன்னான்.

தருமன்: இல்லை. தங்கள் சொற்களை கேட்டு வரும்படி கூறினான்.

பீஷ்மர்: சொற்களை ? வெறும் சொற்களையா ? (மெதுவாக அமைதி கொண்டு) ஆம் சொற்கள் மட்டும்தான்.

அர்ச்சுனன்: ஆம் பிதாமகரே.

பீஷ்மர்: நான் உணர்பவற்றைச் சொல்கிறேன். இவை தர்மங்களா என்று எனக்குத் தெரியாது. ஒரு வயோதிகன் மரணத்தை முன்னிறுத்திச் சொல்பவை இவை.

தருமன்: சொல்லுங்கள் பிதாமகரே

பீஷ்மர்: எப்போதும் தலையில் மணிமுடியுடனும் கவசங்களுடனும் இருந்த ஒரு மன்னன் இருந்தான். அவனை எவராலும் வெல்ல முடியவில்லை. ஆனால் தன் குழந்தையின் மென்மையான சருமத்தை அவன் உணர்ந்ததே இல்லை. அந்த கவசத்திற்குள் அவன் இறந்தான். மட்கி அழிந்தான். அயினும் அக்கவசம் தன் பழக்கத்தால் நடமாடியது. நாட்டை ஆண்டது. அதை தர்மம் தவறாத மன்னர் என்றனர் சூதர்கள்.

தருமன்: புரிகிறது தந்தையே.

பீஷ்மர்: நியமங்களில் கடுமையான ஒரு உபாத்யாயன் இருந்தான். தன் சீடர்களை தண்டிக்க அவன் வாளை வைத்திருந்தான். அவனுடைய நூல்களிலெல்லாம் உதிரம் படர்ந்திருந்தது.

தருமன்: ஆம் தந்தையே.

பீஷ்மர்: களத்தில் உதிரத்துடன் உடைந்து விழுந்த ஒரு கதை மீது மண் படிந்தது. அதில் விதைகள் முளைத்து மெல்லிய மலர்கள் விரிந்தன. அவற்றைத்தேடி மென்மையான பட்டாம்பூச்சிகள் வருவதைக் காண்கிறேன்…

தருமன்: ஆம் தந்தையே. மலர்களால் கைவிடப்பட்ட இடம் ஏதும் எங்கும் இல்லை.

பீஷ்மர்: நீ போகலாம். (கண்களை மூடிக் கொள்கிறார்.)

பீமன்: என்ன சொல்கிறார் ? உளறுகிறாரா ?

அர்ச்சுனன்: ஏதோ தர்ம விசாரம். அதற்குத்தான் இங்கு பஞ்சமே இல்லை.

(போகிறார்கள்)

பீஷ்மர்: அம்மா!

(நிழல் எழுந்து வருகிறது)

நிழல்: சொல்லி முடிக்கவில்லையா ? உன்னுள் எரியும் அந்த ரணம் எந்த அம்பின் நுனியில் ?

பீஷ்மர்: இல்லை. இன்னுமில்லை.

நிழல்: உத்தராயணம் முழுமை பெற்றாகிவிட்டது. இன்னும் என்ன ?

பீஷ்மர்: தெரியவில்லை. ஆனால் இன்னும் என் மறுகரை தெரியவில்லை. . .

நிழல்: (பொறுமையிழந்து) நீ விளையாடுகிறாய். மனங்களையும் உணர்ச்சிகளையும் வைத்து விளையாடும் மாபெரும் தெய்வங்களை சதுரங்கத்திற்கு அழைக்கிறாய்.

(செந்நிறக் கொடியுடன் வீரன் செல்கிறான். தொடர்ந்து களைத்து துவண்டு விழுந்து உடலை இழுத்தபடி கரிய கொடி வீரன்)

பீஷ்மர்: கனத்த இரவு. குளிர்ந்த இரவு. இந்த இரவுக்கு தெரியும் 

 

(இரவின் ஒலிகள் எழுகின்றன. நாய் நரிகளின் உளைகள். கழுதைப்புலி முகர்ந்தபடி வருகிறது.)

பீஷ்மர்: போ . . . போ

கழுதைப்புலி: கர்ர் (சீறி பின்வாங்கி பதுங்கி) கர்ர் . . . (பற்களை காட்டி) ஹிஹிஹிஹி!

பீஷ்மர்: இது மிகச் சரியாக வந்துவிட்டது.

கழுதைப்புலி: (தலைதூக்கி) என் வயிற்றுக்குள் மரணம் குடியிருக்கிறது. என் நாசியில் வாயு அதற்கு சேவை செய்கிறது.

பீஷ்மர்: இன்றிரவா ?

கழுதைப்புலி: ஆம், இன்றிரவு. இன்றிரவு உன் உடலை நான் உண்பேன்.

பீஷ்மர்: உனக்கு சாந்தி கிடைப்பதாக!

(நிழல்கள் மெல்ல இணைந்து மரணதேவி பிறந்து வருகிறாள்.)

மரணதேவி: குழந்தை!

பீஷ்மர்: தாயே. . .

மரணதேவி: இன்னும் சில நாழிகைகளுக்குள் உன் ஆத்மா தயாராகிவிடும்.

பீஷ்மர்: தாயே என் மனம் இன்னும் அதே தத்தளிப்புடன் இருக்கிறது.

மரணதேவி: உனக்கு சுற்றும் எப்போதும் விடைகள் கனிந்து காத்திருந்தன குழந்தை. நீ அவற்றை காணவில்லை. ஏனெனில் உனக்குப் பசியில்லை. இன்று உன் பசி கனிந்துவிட்டது.

பீஷ்மர்: தாயே, நீயே ஏன் எனக்கு பதில் கூறக்கூடாது ? நீயறியாத பதில்களா இந்த வாழ்வில் ?

மரணதேவி: (சிரித்து) நான் வாழ்வின் மறுகரை. உன்னைப் பொறுத்தவரை குளிர்ந்த மென்மையான ஒரு தொடுகை. ஒரு இதமான அணைப்பு. அவ்வளவுதான். எனக்கென வடிவோ மொழியோ இல்லை. கணந்தோறும் பிறக்கும் முடிவற்ற தேவதை நான்.

(கலைந்து மறைகிறது)

பீஷ்மர்: விண்மீன்கள் நடுங்குகின்றன. இரவு மூச்சடக்கி காத்து நிற்கிறது. அரங்கு தயாராகிவிட்டது. வரப்போவது யார் ?

(காலடியோசைகள்)

பீஷ்மர்: அவன்தான். விடையே வடிவானவன். விஸ்வரூபன்.

(ஓங்கும் சங்கொலி. மணியோசை. அரங்குக்கு வருபவன் சிகண்டி)

பீஷ்மர்: (அவனை கவனித்து கோபத்துடன்) நீயா, இங்கு ஏன் வந்தாய் ?

சிகண்டி: இங்கு வரவேண்டுமென்று பட்டது. மன்னிக்க வேண்டும்.

பீஷ்மர்: (ஏமாற்றமும் ஆற்றாமையும் வெறிகூட்ட) போ. போய்விடு . . . உன்னைப் பார்க்க நான் விரும்பவில்லை.

சிகண்டி: உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டுமென நான் எண்ண ஆரம்பித்து எத்தனையோ வருடங்களாகின்றன. அன்று ஆற்றின் கரையில் நீங்கள் எனக்கு அம்பு வித்தை கற்றுத்தந்து மீண்ட மறுவருடமே உங்கள் முகத்தை அறிந்து கொண்டேன். அஸ்தினபுரிக்கு வருவது குறித்து கனவு கண்டு கனவு கண்டு நாட்களை கழித்தேன். கால்கள் துணியவில்லை.

பீஷ்மர்: இப்போது மட்டும் ஏன் வந்தாய் ?

சிகண்டி: நேராக களத்தில் உங்களை சந்தித்தேன். உங்களை வீழ்த்தினேன். [தயங்கி ] உங்கள் மீதான அம்புகள் எல்லாமே என்னிலும் எங்கோ வந்து தைத்தன. நான் என் ஆடிப்பாவையுடன் போர் புரிவதுபோன்ற பிரமைக்கு ஆளானேன்.. இங்கு நீங்கள் மரணத்தை எதிர்நோக்கி கிடப்பது அறிந்து சற்று தொலைவில் உங்களை ஒவ்வொரு கணமும் எண்ணியபடி நானும் காத்திருந்தேன். நீங்கள் இறவாமல் நான் இறக்க முடியாது ….இதோ இக்கணம் அமைந்தது. என் கால்கள் என்னை இங்கே கொண்டு வந்தன.

பீஷ்மர்: [எரிச்சலுடன் ] உனக்கு என்ன வேண்டும் ?

சிகண்டி: பிதாமகரே. என் ஆத்மாவை இப்போது அலைக்கழிக்கும் கேள்வி ஒன்று உண்டு. எங்கும் அதன் விடையை நான் கண்டடையவில்லை. இதோ இங்கு உங்களிடமிருந்து மட்டுமே அதை கண்டடைய முடியுமென எனக்குப் பட்டது. . .

பீஷ்மர்: (வெறுப்புடன்) நீ என்னிடம் தாங்கமுடியாத வெறுப்பையே உண்டு பண்ணுகிறாய்.

சிகண்டி: எனக்கும் உங்களைப் பற்றிய எண்ணமே நெருப்பால் சுடுவது போலத்தான் இருக்கிறது. (அருகே வந்து) ஒருவரை ஒருவர் வெறுத்தபடி, அந்த வெறுப்பினாலேயே ஒருவரை ஒருவர் எண்ணிக்கொண்டபடி இத்தனை வருடங்களைக் கழித்திருக்கிறோம் . . . நம் இருவருடைய விதிகளும் இணைத்துக் கட்டப்பட்டுள்ளன.

பீஷ்மர்: உன்னுடைய வீண் பேச்சைக் கேட்க நான் விரும்பவில்லை.

சிகண்டி: நான் விஷயத்திற்கு வருகிறேன் பிதாமகரே . . . நீங்கள் அறிந்திருப்பீர்கள் நீங்கள் களத்தில் வீழ்ந்த அன்றே நானும் கொல்லப்பட்டேன். மாபெரும் வில்லாளியான அஸ்வத்தாமா என்னை தன் முழங்கும் அம்புகளுடன் எதிர்கொண்டார். ஆனால் குருஷேத்திரமே திகைக்கும்படி நான் அவரை எதிர்த்துப் போரிட்டேன். அவரை அம்புகளால் நெளியச் செய்தேன். தேரையும் கொடியையும் உடைத்து வீசினேன். பின்பு அவரது அம்பு என் மார்பைத் துளைத்தது. தேர்த்தட்டில் நின்றிருந்த என்னை பூமியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத கரம் ஒன்று அள்ளி எடுத்து மார்போடு சேர்த்து கொண்டது.

பீஷ்மர்: வீரமரணம்! (இகழ்ச்சியாக) அது எவருக்கும் எளிதுதான்.

சிகண்டி: (கவனிக்காமல்) வீரர்களுக்கான மரணம். அதோ சற்று அப்பால் என் உடல் இன்னமும் கிடக்கிறது. ஏனெனில் இன்னும் என் உடலில் இருந்து முழு உயிரும் பிரியவில்லை.

பீஷ்மர்: ஏன் ?

சிகண்டி: அதமர்களுக்கு ரகசிய உறுப்புகள் வழியாக உயிர் பிரியும் என்று உபவேத விதி. என் உயிர் வழி தேட முடியாது தவிக்கிறது போலும்

.

பீஷ்மர்: சீ நீசா. உன் மொழி நாற்றமெடுக்கிறது.

சிகண்டி: (சிரித்து) பிதாமகரே நீங்கள் பேசும் தர்மங்களும் எனக்கு அப்படித்தான் தோன்றுகின்றன. (சற்று சிந்தனை வயப்பட்டு) மரணம் பரவிய சிவந்த பூமியில் கிடந்தேன். நாயும் நரியும் கடித்து இழுக்கும் பிணங்களுக்கு மத்தியில் பிணமாக. அப்போது என் முன் மரணமூர்த்தி தோன்றியது மனித உடலும், பன்றியின் முகமும், இரு கரங்களிலும் உழவாரமும் கழுமுனையும் கொண்ட ஒரு விபரீத வடிவமாக.

பீஷ்மர்: (வியப்புடன்) மரண தேவதையா ?

சிகண்டி: ஆம், கழிவுகளை அகற்றும் தெய்வத்துக்கு அது உகந்த தோற்றம்தான் என எண்ணிக்கொண்டேன்.

(சிகண்டிக்குப் பின்னால் அந்த தெய்வம் உருக்கொள்கிறது)

சிகண்டி:அதன் வாயிலிருந்து எழுந்த கடும் துர்நாற்றம் என்மீது படர்ந்தது.

(பன்றி போல அந்த தெய்வம் உறுமுகிறது.)

சிகண்டி: (கைகளால் முகம் மறைத்து) பிண நெடி.

தெய்வம்: நூறு நூறு யுகங்களாக செத்து மட்கிய மனிதர்களின் நெடி அது.

சிகண்டி: பிணங்கள் . . .

தெய்வம்: பிணங்களல்ல மூடா. பிணங்களை மண் உண்டு விடுகிறது. உப்பாக மாற்றி மரங்களுக்கும் செடிகளுக்கும் தந்துவிடுகின்றது. அவை மலர்களை நிரப்புகின்றன. நறுமணம் பொழிகின்றன. இது அம்மனிதர்களின் காமமும் குரோதமும் மோகமும் நைந்து மட்கிய சேற்றின் வீச்சம்.

சிகண்டி: என்னை எடுத்துக்கொள். என் பணி முடிந்தது.

தெய்வம்: உன்னிடம் குரோதம் இல்லையா ?

சிகண்டி : இருந்தது.ஆனால் அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை . இப்போது என்னிடம் இருப்பது இலக்கை அடைந்த அம்பின் மெளனம் மட்டுமே

தெய்வம் : நீ வீர மரணம் அடைந்தவன். வீர சுவர்க்கத்துக்கு உரிமை உடையவன் . ஆனால் …. [ குழப்பத்துடன் ] சொற்கம் என்பது என்ன ? நீ என்ன நினைக்கிறாய் ?

சிகண்டி : இன்பங்கள் மட்டுமே நிறைந்த ஓர் இடம்

தெய்வம்: சரி , சொற்கத்தில் நீ அடைய விழையும் இன்பங்கள் என்ன ?

சிகண்டி : இந்த மண்ணில் ஒருபோதும் சாத்தியமாகாத பேரின்பங்கள்….

தெய்வம் :சரியாக சொன்னாய் [நகைத்து] அவை என்ன ? [அவனைக் கூர்ந்து பார்த்து ]உன் ஆசைகள் என்ன ?

சிகண்டி : [திகைத்து ] எனக்குத்தெரியவில்லை .என்னால் எதையுமே எனக்குள்ளிருந்து தொட்டெடுக்க இயலவில்லை .

தெய்வம்: இதுதான் பிரச்சினையே…. நீ இறந்து விழுந்த போது உன்னைத்தேடி வந்த என் முதல் தூதர்கள் அதிர்ந்து போனார்கள். இங்கே அவர்கள் எதையுமே காணவில்லை. அவர்களால் உடலை காணமுடியாது . ஆத்மாவின் ஆழத்தை மட்டுமே காண்பவர்கள் அவர்கள் . இங்கு அவர்கள் சூனியத்தையே கண்டார்கள் …..

சிகண்டி : எனக்கு உன பேச்சு சற்றும் புரியவில்லை…

தெய்வம்: மகனே உனக்கு மனித மனங்களைப் பற்றி தெரியாது. கண்ணற்றவன் அறியும் சமுத்திரம் நீ கண்டது . ஒலிகள் அலைநுரைத் துளிகள் , அவ்வளவுதான். மனிதர்களுக்குள் கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆழியின்மீது சூரியன் உதிப்பதேயில்லை

சிகண்டி: நான் அதை உணர்ந்திருக்கிறேன். சில சமயம் சொற்களுக்கப்பாலிருந்து மெல்லிய கடலிரைச்சல் ஒன்று எழுவதைக் கண்டிருக்கிறேன்…

தெய்வம்: அகங்காரமும் காமமும் இரு பெரும் பாம்புகள் போல முடிவின்றி இணைசேர்கின்றன அங்கு. ஒவ்வொருவருக்கும் அவரவர் அந்தரங்கக் கனவுகளால் தனியாக சொற்கம் உருவாக்கபடுகிறது என நீ அறிந்திருப்பாய். ஏனெனில் இரு மனிதர்கள் ஒருபோதும் ஒரு துளி மகிழ்ச்சியையேனும் விட்டுக் கொடுக்காமல் ஒரு இடத்தில் சேர்ந்து வாழ முடியாது…

சிகண்டி : அங்கு வேறு எவருமே இருப்பதில்லையா ?

தெய்வம்: உண்மையில் இல்லை . இருப்பது அவர்களுடைய ஆசைகள் சூழ்ந்துள்ள ஆடிகளில் பட்டு பெருகும் பிம்பங்கள்தான். ஆனால் அவர்கள் அங்கு தங்களுக்கு பிடித்தமானவர்களெல்லாம் பிடித்தமான விதங்களில் மட்டும் இருப்பதாக எண்ணிக் கொள்வார்கள். சொற்கம் என்பது ஒரு பெரும் பிரமை. உண்மையில் அது மனிதர்கள் இங்கு வாழும் வாழ்க்கையின் மறு பக்கம். இங்கே அவர்களுக்குள் இருக்கும் உலகம் அங்கே வெளியே விரிந்துவிடுகிறது. இங்குள்ள வெளியுலகம் அங்கே உள்ளே துடித்துக் கொண்டிருக்கும்…

சிகண்டி: இத்தனை துக்கங்களும் சிக்கல்களும் கொண்ட இவ்வுலகமா ? ஏன் ?

தெய்வம்: பிரியமானவை மட்டும் பிரியத்துக்குரிய விதத்தில் அமைந்த உலகில் அனுபவம் எப்படி வித விதமான வடிவங்களைக் கொள்ள முடியும். ? மனிதர்களுக்கு வெற்றி தேவை. வெற்றிக்கு எதிரி தேவை. எதிரி மீது வெறுப்பு தேவை . வெறுப்பிலிருந்தே விருப்பத்தை அடையாளம் காணமுடியும் … [ தலை நிமிர்த்தி தீர்க்க தரிசன பாவனையில் ] காமகுரோத மோகங்களை உள்ளிருந்து ஊறவைக்கும் மிக அந்தரங்கமான ஓர் உலகமாக இந்த மண்ணுலகம் அவர்களுக்குள் இருக்கும். அங்கு இம்மண்ணுலகுக்காக அவர்கள் அந்தரங்கத்தில் ஏங்கிக் கொண்டிருப்பார்கள்..

சிகண்டி: மனிதர்களை எண்ணி சிரிக்கத்தான் தோன்றுகிறது.

தெய்வம்: என் கடமை உன்னை உனக்குரிய சொற்கத்துக்கு கொண்டு செல்வது . உன் சொற்கம் எதனால் ஆனது ?

சிகண்டி : நான் இப்போது ஏறத்தாழ ஆண்தான்.

தெய்வம் : ஆண்களின் சொற்கம் மிக எளிமையானது . பெண் உடல்கள் நிரம்பி வழிவது அது . பேரழகிகள் முதல் பெரும் குரூபிகள் வரை எண்ணற்ற பெண்கள் . அங்கு ஒவ்வொரு கணமும் ஒரு பெண்ணுடலால் ஆனது என்றால் நீ நம்பமாட்டாய். முடிவில்லாத புணர்ச்சி. இடைவேளையில் இளைப்பாற ஓர் எதிரி — அவ்வளவுதான். அழகில் ஆபாசத்தையும் ஆபாசத்தில் அழகையும் கண்டு மகிழ்ந்தபடி ….

சிகண்டி : நான் என்னை பெண்ணாகவும் உணர்ந்ததுண்டு .

தெய்வம்: பெண்களின் உலகம் மேலும் எளியது . இருவகை ஆண்கள் . சொல்லை ஆயுதமாக்கிய அழகர்கள். லிங்கத்தை ஆயுதமாகக் பலசாலிகள் . ஒருவரை ஒருவர் இடமாற்றம் செய்து, ஒருவன் சலிக்க மற்றவன் முன்வந்து, அவள் மனதையும் உடலையும் புணர்ந்து புணர்ந்து… சொற்கம் என்பது சில வேட மாற்றங்களிடன் மீண்டும் மீண்டும் நிகழும் ஒரே செயல்தான்..

சிகண்டி : போதும்!

தெய்வம்: உண்மையில் இரு சொற்கங்கள்தான் உள்ளன. அவற்றின் நகல்கள்தான் மாற்றி மாற்றி வினியோகிக்கப்படுகின்றன. ஒன்றில் மனிதர்கள் பிறிதில் நிரம்பிக் கொள்ளத் துடிக்கிறார்கள்… இன்னொன்றில் தங்களை நிரப்பிக் கொண்டேயிருக்கிறார்கள் . என்றாவது பிரம்மாவுக்கு கைத்தவறு நிகழ்ந்து இவை ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டால் இரண்டுமே முடிவின்மையில் ஸ்தம்பித்துவிடும்.

சிகண்டி : என் சொற்கம் இது இரண்டுமல்ல.

தெய்வம் : ஆம் , அதுதான் இங்கே நான் வரக் காரணம் . உனக்கு சில நாட்களை அளிக்கிறேன் . அதற்குள் நீ கண்டடைய முடியுமா உனது சொற்கம் எதுவென ?

சிகண்டி: நான் என் உடலில் இருந்து மட்டும்தான் தொடங்க முடியுமா ?

தெய்வம்: பெரும்பாலும் அப்படித்தான். உன் உடல்தானே நீ ? பிறிதெல்லாம் அதிலிருந்து முளைப்பவைதானே ?

[தெய்வம் மறைகிறது . சிகண்டி திரும்புகிறான் ]

பீஷ்மர் : அருவருப்பூட்டும் ஒரு ஆபாசக்கதை. உன் மனதில் உள்ள நரகலையே உன் தெய்வங்களும் சொல்கின்றன..

சிகண்டி: ஆம், அது எப்போதுமே அப்படித்தானே ? [சிரித்து ] தெய்வங்களிடம் நாம் பொய்சொல்ல முடியாது. தெய்வங்களின் வலிமையே அதில்தான் இருக்கிறது..

பீஷ்மர்: [வெடித்து ] போடா ![ ஆவேசத்துடன்} போ போய்விடு நீசப்பிறவியே …

சிகண்டி : [பொருட்படுத்தாமல் ] ஆகவே நான் முதலில் காலத்தில் ஊடுருவி என் அன்னையைச் சென்று பார்த்தேன் . அது ஒரு சுயம்வரமேடை …..

பீஷ்மர் : மூடா . நிறுத்து. நீ அங்கே நுழையக் கூடாது ….

சிகண்டி: நான் எப்போதுமே அந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன் … [திரும்புகிறான் . அரங்கில் சுயம்வரமேடை உருக்கொள்கிறது. மன்னர்கள் அணிவகுக்கிறார்கள் . வெளியே மெல்ல மங்கல வாத்தியங்கள் ஒலிக்கின்றன]

நிமித்திகன்: ஜய விஜயீபவ!

(அரங்குக்கு வெளியே வாழ்த்தொலிகள் முழங்குகின்றன)

நிமித்திகன்: இன்று சுக்ல பஞ்சமி. மகாமங்கல நாள். பாரத வர்ஷத்தின் சரித்திரத்தில் இந்நாள் ஒரு பொன்னாள் என்று குறிக்கப்படும். ஏனெனில் கங்கையின் முடிவற்ற கருணையால் அமுதூட்டப்பட்ட காசி நாட்டின் அதிபர் தோல்வியறியா பெருங்குலத்து முதல்வர் மாமன்னர் . . பீமசேனரின் புதல்விகள் அம்பைதேவி, அம்பாலிகா தேவி, அம்பிகா தேவி ஆகியோரின் சுயம்வர நாள் என இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாரத நாட்டின் அத்தனை ஷத்ரிய குலங்களிலிருந்தும் இங்கே வீரர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்களை காசிநாட்டு செங்கோல் பணிந்து வரவேற்கிறது.

(முரசொலி: வாழ்த்துக் கூக்குரல்கள்)

சிகண்டி :நான் என் அன்னையின் மிக அருகே சென்றேன். அது வேறு ஒரு வெளி . அங்கே நானும் அவளும் மட்டும்தான். பிற அனைவருமே சுவர் ஓவியங்கள் போல …

[வாழ்த்தொலிகள் எழ அம்பை கோல்காரன் துணைவர கையில் மாலையுடன் அரங்கில் பிரவேசிக்கிறாள்)

சிகண்டி :இதுதான் அவள் சுமந்தலையும் சொற்கம் போலும். இங்கு அவளன்றி அனைத்துமே நிழல்கள்..

[அம்பையை அவள் நிழல் தொடர்கிறது]

அம்பை: [நிழலிடம்] இவர்களில் யார் அழகன் ?

நிழல் :ஆண்களில் அழகற்றவர்கள் இல்லை . அதற்குரிய தருணம் அமையவேண்டும் ….. இவனைப்பார் . பெண்மை கலந்தவன். இவனை வெட்கப்படச் செய்தால் அழகன்..

அம்பை : பாரதவர்ஷமே திரண்டிருக்கிரது…

நிழல் : ஆண் உடல்கள், அவ்வளவுதான்..

அம்பை: எத்தனை மன்னர்கள், எவ்வளவு மெய்கீர்த்திகள்!

நிழல்: தோள்கள்.. மார்புகள்.. புஜங்கள் ..அடிவயிறுகள் ..தொடைகள் … மீசைகள்.. உதடுகள் .. காமம் ஒளிரும் கண்கள்…இவன் கரிய நிறமுள்ளவன், உயர்மானவன்….

[அம்பை மாலையுடன் மன்னர்கள் வரிசையை மிக மெல்ல நடன பாவனையுடன் கடந்து செல்கிறாள் . ஒவ்வொரு மன்னனும் மெல்ல எழுந்து அவளருகே நெருங்கி அவளை தொடாமல் முயங்கி பின் களைத்து மூச்சிளைத்து மெல்ல சரிந்து விழுந்து எழுந்துவந்து பழையபடி நிற்கிறார்கள்]

அம்பை: என் கையசைவுக்கு காத்திருக்கும் உடல்கள். நான் விரும்பினால் பெற்றுக் கொள்ளக்கூடிய அவர்களுடைய குழந்தைகள்….

நிழல்:இவர்கள் உன்னை மட்டுமே புணரமுடியும்…. [சிரித்து] என்னையும் புணர்பவநே உன்னை நிறைக்கமுடியும்…

கோல்காரன்: இவர் வங்க மன்னர் மகாபலன். இவருடைய வலிமை படகுகளில் உள்ளது. கங்கையையே தன் பாய்களால் மூடிவிடுமளவுக்கு படகுகளுக்கு உரிமையாளர். இவரது துறைமுகத்தில் திறைப்பணம் மரக்கால்களால் அள்ளப்படுகிறது என்பர் சூதர்.

நிழல்: வயிறு பருத்தவன் …. குள்ளன்..

அம்பை: உன் உடல் நிழலால் ஆனது. அதை அவன் எப்படி தழுவ முடியும் ? .

நிழல்: ஏன் அவனது நிழல் என்னை அணுகட்டுமே ?

அம்பை:நிழல்களும் நிழல்களும் புணர்ந்து உருவாவது கரிய வெளிமட்டுமே..

ஒரு மன்னன்: இவள் சாதாரணப் பெண் அல்ல. இவள் நடையில் போர்க்குதிரையின் நிமிர்வும் மிடுக்கும் உள்ளது.

இன்னொருவன்: எழுந்து படபடக்கும் தீத்தழல் போலிருக்கிறாள். அந்தபுரத்துக்குள் அடைபடும் பெண்ணல்ல இவள்.

முதல் மன்னர்: அக்கினி ஆக்கவும் செய்யும். அழிக்கவும் செய்யும்…

அம்பையின் நிழல் :நான் இவர்களை அழைக்கிறேன் …

அம்பை:சீ உனக்கு வெட்கமே இல்லை.

நிழல்: நிழல் நிழல்களுடன் சேர விரும்புகிறது .அந்த துடிப்பு மட்டுமே அதில் உள்ளது

[நிழல்கள் போல ஒவ்வொரு மன்னராக எழுந்து சென்று அந்த நிழலை முயங்கிச் களைத்துச் சரிகிறார்கள். ]

நிழல்: உண்டு முடித்த கனிகளின் ஓடுகள்….

அம்பை : உண்டு தீராத கனி உன் உள்ளே பழுத்த காமம்தான் …

நிழல்:காமமே அதுதான்… பசியை அடக்காத பெருவிருந்து…

மன்னன் ஒருவன்: காட்டை உண்டு முன்னேறும் நெருப்பு . . .

இரண்டாம் மன்னன்: அவள் சால்வனையே நெருங்குகிறாள்.

அம்பை: அவன் சால்வன் .அவன் கண்களில் ஆசை கொதிக்கிறது. எனக்கான ஆசை. என் ஆசையை விட என்னைத்தூண்டுவது எனக்கான ஆசைதான்…..

நிழல்: அவன் உன்முன் தன்னை படைக்க காத்திருக்கிறான் .அவன் நிழல் வெறுமையாக நிற்கிறது …

[வெளியே கூக்குரல்கள் எழுகின்றன . உலோகக் கதவுகள் பிளக்கும் பேரோசை ]

வெளியே குரல்கள்: பீஷ்மர்! பீஷ்மர்!

காசிமன்னன் குரல் : பீஷ்மரே தாங்கள் . . .

பீஷ்மரின் குரல் : காசி மன்னரே உன் பெண்களை நான் இராட்சத மணமுறைப்படி கவர்ந்து செல்லவிருக்கிறேன். [அம்பு அம்பையின் கையிலிருந்த மாலையை விழச் செய்கிறது.]

அம்பை : [அதிர்ச்சியுடன் ] இல்லை. இதை நான் அனுமதிக்க மாட்டேன். இது என் உலகம்… இங்கு எவரும் அத்து மீற முடியாது…(கதறியபடி சால்வனை நோக்கி ஓடுகிறாள்) அந்த . . . இதை தடுக்க யாருமில்லையா ? [மயங்கி விழுகிறாள் நிழல் அவளை தூக்கிச் செல்கின்றது ]

சிகண்டி : பிதாமகரே இதுதான் நான் கண்டது .

பீஷ்மர் : காலமே மனிதனுக்கு மிகப்பெரிய ஆடை . [கோபத்துடன்] நீ என்னை நிர்வாணமாக்க முயல்கிறாய்..

சிகண்டி: [சிரித்து ] நிர்வாணமே முக்தி என்பார்கள்.

பீஷ்மர் : உன் இழிபிறவிக்குரிய குரூரம் உன்னிடம் இருக்கிறது.

சிகண்டி :பிதாமரே எழுங்கள். இதோ காலத்தின் சிறிய மாயத்திரை . அப்பால் உங்கள் பழைய நாட்கள் . நான் உங்களை அங்கு காணவிழைகிறேன்.

[பீஷ்மரை அவரது நிழல் எழுப்புகிறது.அவர் உதற முனைகிறார் .ஆனால் நிழல்கள் அவரை வேடம் அணிவித்து இளைய பீஷ்மராக்குகின்றன.அஸ்தினபுரி அரண்மனை. வெளியே அரண்மனைக்குரிய ஒலிகள்.]

பீஷ்மர் : [அமைதியிழந்தவராக உலவி ]யாரங்கே ?

[வீரன் ஒருவன் வந்து பணிகிறான்]

பீஷ்மர் : விசித்திர வீரியன் பள்ளியறைக்கு சென்று விட்டானா ?

வீரன்:ஆம் ஆச்சாரியாரே

பீஷ்மர்: இளவரசிகள்..

வீரன் : ஆம். ஆனால்..

பீஷ்மர்: என்ன ?

வீரன்: மூத்த இளவரசியார் அழுதுகொண்டிருக்கிறார்கள்..

பீஷ்மர் :அழட்டும் .. நீ போகலாம்.

[பீஷ்மரின் நிழல் அவரை தொடர்கிறது ]

நிழல்: அவள் யாரையோ எண்ணித்தான் அழுகிறாள்…

பீஷ்மர்: வெற்றிகொள்ளப்பட்டவர்கள் அழுவதுண்டு..

நிழல் :வெற்றிகொள்ளப்பட்ட பெண் அழுவதில்லை.

பீஷ்மர்: [சற்று துணுக்குற்று ] என்ன சொல்கிறாய் ?

நிழல் ; அவள் உன்ன்னை வெற்றிகொள்ள தன் ஆயுதங்களையெல்லாம் எடுக்கவேண்டும் , அதுதான் உயிர்களின் நாடகம். இவள்… இவள் உன் வெற்றியை சற்றும் பொருட்படுத்தவில்லை …

பீஷ்மர்: அவள் எனக்கு ஒரு பொருட்டல்ல…

நிழல்: தன்னைப் பொருட்படுத்தாத பெண்ணைப்பற்றி அப்படிச் சொல்லத் திராணி கொண்ட ஆண்மகன் எவனுமில்லை…

பீஷ்மர்: சரி நீ போ .இன்றிரவாவது நான் தூங்கவேண்டும்…

நிழல்: இன்றிரவு நீ தூங்க முடியாது …

பீஷ்மர்: நீ போ

நிழல்: நான் நிழலல்லவா ?

பீஷ்மர்: ஆ! என்ன வதை இது.

நிழல்: ஆண்களின் காமம் ஆண்குறியிலும் அகங்காரத்திலும் குடிகொள்கிறது…. நீ …

பீஷ்மர்: நிறுத்து

நிழல்: தனித்த இரவுகளின் எதையும் தடைசெய்யமுடியாது பீஷ்மா. [அழுத்தமாக] உனது காமம் அகங்காரத்தில் மட்டுமே குடிகொள்கிறது. நீ கன்னி உடலில் நுழையும் லிங்கம் போல அந்த சுயம்வரப் பந்தலில் நூழைந்தாய். அப்போது உன் அகங்காரம் உயிர்துடிப்பு கொண்டு நின்றது….

பீஷ்மர்: என்ன அபத்தம் ! நல்லவேளை இச்சொற்களை மூன்றாம் மனிதர்கள் அறிவதில்லை …

நிழல்: அந்தப்போர் ஒரு புணர்ச்சி . நீ வென்றாய் . ஆனால் நீ ஆட்கொண்ட பெண் அமைதி கொள்ளவில்லை…

பீஷ்மர்: [கண்களைமூடிக் கொண்டு] இந்த இரவிலும் என் மனம் பித்துக்குள் செல்கிறது போலும்…

நிழல்: நீ நித்ய பிரம்மசாரி . மகாவிரதன். எனவே உன் காமத்துக்கு முகம் இல்லை . முகமின்மை ஒரு பெரும் சுதந்திரம் அல்லவா ? அதற்கு எல்லைகளே இல்லை .

பீஷ்மர் : [கண்களை மூடி] இல்லை . நான் என் எண்ணங்களை வெல்வேன். என்னை மீட்டெடுப்பேன்…..

நிழல் : கற்பனைகளின் காமம் கட்டுகளற்றது. உனக்குத்தெரியுமா பருவுலகின் மிருககாமம் மட்டுமே அதை கட்டுப்படுத்த முடியும்.கற்பனையுலகில் அடக்கப்படாது திமிறி அலையும் ஆபாசமான அகங்காரத்தை உன்மீது மோதும் பருவுலகு மட்டுமே தடுக்கும்….

பீஷ்மர்: [பொறுமை இழந்து ] ஆ! [தனக்குள்] புண்பட்ட மிருகம் போல அலறுகிறேன். புண் எங்கே ?

நிழல் [அழுத்தமாக] உனது வேடத்தில்

பீஷ்மர்: [குனிந்து முகம் பொத்தி அமர்ந்து ] இந்த இரவில் நான் நூறாயிரம் முறை செத்து பிறக்கிறேன்…

நிழல் : உன்னுள் ஊன் நெடி தேடி காடுமுழுக்க முகர்ந்தலையும் ஆயிரம் வனமிருகங்கள் . இவ்வரண்மனையின் அந்தப்புரங்களின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மணற்பருவும் உன்னை அறியும் .உன் ஆத்மா உழன்றலையும் இடங்கள் அல்லவா அவை ? பெண்கள் பருவமடைந்த மறு கணமே உன் பார்வையை அடையாளம் கொண்டுகொள்கிறார்கள் .பெண்குழந்தைகள் உன் கரங்களின் தொடுகையை தனித்தறிகிறார்கள் …உனது காமம் புற்றிலிருந்து வழிந்திறங்கி ஓசையின்றி பரவும் நாகம். அதன் உறக்கமில்லாத வைரமணிக் கண்கள் இருளில் ஒளிர்கின்றன. சிறு சீண்டலிலும் அது வெருண்டு படமெடுக்கிறது..

பீஷ்மர் [சரேலென எழுந்து அறையை பார்த்து ] யார் ? யார் இதற்குள் ?

நிழல்: யாருமில்லை. நான் உனது நிழல் . உன் ஆத்மா ஓலமிடுகிறது நான் நான் என. நீ அதை தர்மம் தர்மம் என சொல்லக் கற்றுக் கொண்டாய். ஆனால் அந்தரங்கத்தில் அச்சொல் போகம் போகம் என்று ஒலிக்கக் கேட்டாய்…

[பீஷ்மர் பித்து தெரியும் பார்வையுடன் சுற்றி வருகிறார் . பதறுகிறார். தடுமாறுகிறார் ]

நிழல்: உன்னுடைய தேவைதான் என்ன பீஷ்மா ? ஒரு..

[பீஷ்மர் அலறியபடி நிழல் மீது பாய்கிறார். அது சிக்கவில்லை . பிடிக்கு கிடைப்பவன் சிகண்டி]

சிகண்டி: பிதாமகரே என்ன இது ?

பீஷ்மர்: [அடையாளம் காணாமல்] யார் ? [காய்ச்சல் கண்டவர் போல நடுங்குகிறார்]

சிகண்டி: இது நான். சிகண்டி.

பீஷ்மர்: நிழல் நிழல்கள்… [பிரமைகொண்டவர் போல ] நிழல்கள் எங்குமே…அவைதான்

சிகண்டி: பிதாமகரே…

பீஷம்ர்: நீயா ? நீ ? அங்கே , என் இருண்ட சயன அறையில்….

சிகண்டி: நமக்கு இப்போது காலமில்லை, இடமில்லை. நாம் வெறும் கருத்துக்கள் மட்டுமே….

பீஷ்மர்: நீ என்னை இருண்ட பாதாளங்களுக்கு இட்டுச் செல்கிறாய். என் ஆத்மாவில் இருளையும் விஷத்தையும் நிரப்புகிறாய்…

சிகண்டி: அவை ஆத்மாவின் பாதாளங்கள்….[நிமிர்ந்து இருண்ட மூலை ஒன்றை நோக்கி தியான பாவம் கொண்டு நின்றபடி] அவளை நான் மீண்டும் கண்டேன்… அவள் ஒரு ரதத்தில் உங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கூந்தல் அவிழ்ந்து பறக்க, ஆடைகள் படபடக்க…

[அரங்கிற்கு அப்பால் குதிரைகளின் ஒலிகள்.]

சிகண்டி: குதிரைகளின் தசைத்திரட்சிகள் மீதே அவள் பார்வை லயித்திருந்தது. இறுக்கமான திரண்ட தசைநார்கள்…

[அரங்கில் அம்பை ரதத்திலேறியவளாக பிரவேசிக்கிறாள்]

சிகண்டி: அவள் முகம் வியர்த்திருந்தது . அங்கே எந்த பாவனைகளும் இல்லாமல் காமம் சிவந்து ஒளிவிட்டது….

[குதிரை ஒன்று எழுகிறது .தன் முகமூடியை கழற்றுகிறது]

அம்பை : யார் நீ ?

குதிரை: நான் ஹயக்ரீவன். நீ என்னை காமத்துடன் பார்த்தாய்…

அம்பை: [தடுமாறி] இல்லை….

ஹயக்ரீவன்: நீ எதையுமே என்னிடம் ஒளிக்க முடியாது. என் தசைகளைக் கண்டு காமம்கொள்ளாத பெண்கள் எவருமே இன்னும் பிறக்கவில்லை….உனக்கு இக்கணம் வேண்டும் முகம் என்ன [ ஒரு உத்தரீயத்தை வாங்கி அணிந்து ] இதோ நான் சால்வன்…

அம்பை: அவன் எனக்கு ஒரு பொருட்டல்ல. ஏனெனில் நான் பீஷ்மரை அடைந்தபிறகு அவனை பீஷ்மர் என் பாதங்களில் வீழ்த்துவார். அவன் தலையை நான் என் பாதங்களால் தொடுவேன் .அப்போது எனக்கு நான் விரும்பும் போகத்தின் உச்சம் கிடைக்கும்

ஹயக்ரீவன்: [ஏளனமாக] ஆ. உன் மனம் முதிர்ந்துவிட்டது . காமத்தில் தன்னகங்காரம் கலந்துவிட்டது [ தாடியை அணிந்துகொண்டு] அப்படியானால் நான் இப்போது பீஷ்மன்…

அம்பை: நான் வெல்வது வரைத்தான் பீஷ்மர் என் ஆண்மகன் . அதன் பிறகு என்னை சிரிக்கவைக்காத, என் உடலில் அலைகளை விரியவைக்காத , முதியவன்…

ஹயக்ரீவன்: பெண்ணே உனது தேவை என்ன ?

அம்பை: உனது தொடைச் சதைகளில் திமிறும் அந்த வல்லமை மட்டும்… மனித உருக்கொள்ளாத வெற்றுத்தசை….

ஹயக்ரீவன்: ஆம். அதுதான். உயிரின் ஆதிதாகம்…[பயங்கர கனைப்பொலியுடன் குதிரை எழுகிறது . அதன் பின் இன்னொரு குதிரை முகமூடியுடன் வருகிறது .குதிரைகள் சூழ்ந்து நடனமிடுகின்றன. நடுவே விரித்த கூந்தலுடன் நெளிந்தாடும் அம்பை ஆடியபடியே அவர்கள் சென்று மறைகின்றனர்]

சிகண்டி: அவள் ஒரு பயங்கர வனதெய்வம் போலிருந்தாள்…

பீஷ்மர்: [பெருமூச்சுடன்] நாம் காண்பதெல்லாம் நமது விருப்புகளையும் வெறுப்புகளையும்தான்…….

சிகண்டி: உண்மைகளை ஊனக் கண் காண்பதேயில்லை. அகக்கண் தவறவிடுவதுமில்லை…

பீஷ்மர்: [கண்களைப்பொத்தி ] போதும். இதற்குமேல் என்னால் தாங்கமுடியாது….

சிகண்டி: அதன் பிறகு அவள் உங்கள் அரண்மனைக்கு வந்தாள்.

பீஷ்மர்: சால்வன் அவளை ஏற்கமாட்டான் என நான அறிவேன்….அவள் என் முன் வந்தபோது என் மனம் குதூகலித்தது… அன்று அஸ்தினபுரியின் அரண்மனையில்..

[பீஷ்மர் திரும்புகிறார் .ஒளியும் ஒலியும் மாறுகின்றன ]

பீஷ்மர்: அவள் சால்வனை விரும்புவதை என் முன் சொன்னபோது என் ஆத்மாவில் எரியம்பு ஒன்று தைத்தது . அதை அவளுடைய கண்ணீரே அணைத்து மருந்தாக முடியும் என்று அறிந்தேன். வன்மம் முறுகிய மனம் ஒரு கணம் கூட தூங்கவில்லை . அவளிடம் சொல்லவேண்டிய சொற்களை பல்லாயிரம் முறை உள்ளூர மீண்டும் மீண்டும் சொல்லிச்சொல்லி இருநாட்கள் சென்றன. அதன் பின் அவள் வந்தாள்..

[அஸ்தினபுரியின் அரண்மனைத்தோற்றம் உருவாகிறது]

பீஷ்மர்: அமாத்யரே.

அமாத்யர்: [வந்து ] அடியேன்.

பீஷ்மர்: காசிநாட்டு இளவரசி திரும்பி வருவதாகச் சொன்னார்கள். அவளை நேராக இங்கு இட்டுவரச் சொல்லுங்கள்.

அமாத்யர்: உத்தரவு (செல்கிறார்)

பீஷ்மர்: நாடகத்தின் மறுபக்கம் இனிமேல்தான் போலும்.

(வெளியே குரல்: காசி நாட்டு இளவரசி அம்பாதேவி வருகை)

பீஷ்மர்: புயல் வருவது போல! ஆம் அப்படித்தான் . அவள் இயல்பு அது

[கதவு படாரென திறந்து அம்பை வந்து பீஷ்மர் முன் நிற்கிறாள்]

பீஷ்மர்: இளவரசிக்கு வணக்கம்.

அம்பை: [கடூரமாக] நான் வணக்கங்கள் கொள்ள வரவில்லை. [அழுகையும் ஆங்காரமுமாக கைநீட்டி] நீங்கள் தர்மம் என்ற பேரில் அகங்காரத்தை திரையிட்டு மறைத்த கோழை. என்னை தீராத அவமானத்துக்குத் தள்ளிவிட்டார்கள்….என்னை அந்த அற்பன் முன் புழுவென உணரச்செய்தீர்கள்…

பீஷ்மர்: [அமைதியாக] அது நீங்கள் தேர்ந்தெடுத்த பாதை..

அம்பை: [உரக்க] நிறுத்துங்கள்! உங்களுக்கு மிக நன்றாக தெரியும் , பாரதவர்ஷத்தில் எந்த மன்னனும் உங்களை எதிர்க்கத்துணியமாட்டான் என்று . நீங்கள் என் ஆத்மாவை பகடையாக்கி விளையாடினீர்கள். என்னை என் ஒவ்வொரு அணுவையும் அருவருக்கச் செய்தீர்கள்….[கிரீச்சிட்டு கத்தி] நீங்கள் என்னை கொன்று விட்டார்கள்… உங்கள் முன் இக்கணமே செத்துவிழவேண்டுமென்றே இங்கே வந்தேன்..[குறுவாளை உருவுகிறாள்] பலமுறை இறந்து நைந்த என் ஆத்மா இங்கே விடுதலைகொள்ளட்டும். என் பிணம் உங்கள் காலடியில் விழட்டும்…[குத்தப்போகிறாள்]

பீஷ்மர்: [அவள் கரங்களைப்பற்றி தழுவி திடமான குரலில் ] அதற்கு உனக்கு உரிமை இல்லை. ஏனெனில் நீ நான் வென்ற உடைமை.

அம்பை: [மகிழ்ச்சியின் ஆவேசத்துடன் உடல் நடுங்க] என்ன சொல்கிறீர்கள் ?

பீஷ்மர்: ஆம்

அம்பை: [அவர் காலடியில் சர்ந்து] என் தெய்வமே ! என் குருவே! [குமுறி அழுகிறாள்]

பீஷ்மர்: [கம்பீரமாக] எழுந்திரு. இக்கணம் முதல் நீ எதற்கும் அழமாட்டாய் [அவளை தொட்டெழுப்பி கனிவாக சிரித்தபடி ] பேதைத்தனமே பெண்களுக்கு பேரழகைத்தருகிறது…

அம்பை: [வெட்கி சிரித்து] விளையாடும்போதுதான் ஆண்கள் அழகர்களாகிறார்கள்…[இருவரும் சிரிக்கிறார்கள்]

[ஒளி மாறுபடுகிறது. ]

பீஷ்மர்: நான் உன் அடிமை. நீ போடும் கட்டளைகளை நிறைவேற்றுகையில் மட்டுமே முழுமை அடைபவன்.

அம்பை: உங்களுக்கு அஸ்வசாஸ்திரம் தெரியுமல்லவா ?

பீஷ்மர்: நன்றாகவே…

அம்பை: பரிகளில் குறுஞ்சுழியும் நீள்முகமும் கொண்டது ஒருபோதும் சளைப்பதில்லை. ஏனெனில் அது எப்போதுமே தன் முழு சக்தியையும் செலவழித்துவிடுவதில்லை. அது மட்டுமே முதுமையிலும் வல்லமை இழக்காதது .. [வெட்கி] நான் உங்களை அப்படி எண்ணிக் கொள்வதுண்டு..

பீஷ்மர்: ஆகா! [சிரித்து] பெண்களின் உலகில் இப்படிப்பட்ட கற்பனைகள் உண்டென நான் அறிந்ததேயில்லை .

[நிழல் பீஷ்மருக்கு ஒரு குதிரைமுகமூடியை அளிக்கிறது. அதை அவர் அணிந்து கொள்கிறார். குதிரை ஒன்றின் கனைப்பு அப்பால் கேட்கிறது]

பீஷ்மர்: குதிரையின் முதுகு அமரப்படுவதற்காகவே உருவானது தேவி…

அம்பை:[ குதூகலித்து சிரித்தபடி ] வேண்டாம்

பீஷ்மர்: ஏறிக்கொள்!

[அம்பை பீஷ்மரின் தோள்களை அணைத்துக் கொள்கிறாள். தன் முந்தானையால் சுழற்றி வீச சவுக்கு அடிபடும் ஓசை எழுகிறது. பீஷ்மர் சிரிக்கிறார்.அவள் சிரிப்பும் அதனுடன் சேர்ந்துகொள்கிறது]

அம்பை: அங்கே அந்த திசை நோக்கி… உங்களால் முடியுமென்றால் ….

பீஷ்மர்: நீ கைசுட்டினால் தூரங்கள் ஒரு பொருட்டேயல்ல…[சவுக்கொலி . சிரிப்புகள் ]

சிகண்டி: [உரத்த குரலில் வெடித்து ] நிறுத்துங்கள் [கடும் குரோதத்துடன் வாளை உருவி அவர்கள் நடுவே நீட்டி] போதும் இந்த ஆபாச நாடகம்!

[இருவரும் திடுக்கிட்டு பிரிந்து விலகிக் கொள்கிறார்கள்.]

அம்பை: [குழப்பத்துடன்] இது யாருடைய கனவு ? நான் எப்படி இங்கே வந்தேன் ?

பீஷ்மர் :[திடுக்கிட்டு] என்ன நடந்தது ? [கூசி] ஆ !கனவா அது ? நானா ? எத்தனை கீழ்மை!

சிகண்டி: [உடைந்த குரலில் ]நான் யார் என இப்போது தெரிந்துகொண்டேன். காமங்கள் முயங்கும்போது மனிதர்கள் பிறக்கிறார்கள். நான் அகங்காரங்கள் முயங்கிப் பிறந்த அர்த்தமற்ற பிண்டம்….காமங்களினாலானது சொற்கம் . என்னுடையதோ மோதி அசைவற்று காலத்தில் உறைந்த இரு அகங்காரங்களின் சூனிய மையம்… அங்கு சலனமே இல்லை .

அம்பை: மகனே..

சிகண்டி: [அருவருத்து ] சீ விலகு .. நான் உன் மகனல்ல.

பீஷ்மர்: நீ என் மகள்

சிகண்டி: விலகி நில்லுங்கள். இது வெறும் தசை. உங்களில் பாதி,அவளில் பாதி… என் இரு உடல்களின் நடுவே தூர்க்கமுடியாத பெரும்பாழ்வெளி ஒன்றை உணர்கிறேன்.[ சிகண்டி மெல்ல முன்னகர அவனுக்கு பின்னால் நிழல்கள் அணிவகுக்கின்றன] இந்த வெற்றிடம் எது தெரிகிறதா ? கோடானுகோடி ஆண்களும் பெண்களும் இப்பூமியில் அன்றாடம் புணர்கிறார்கள். எங்கே ? தங்கள் தன்னகங்காரங்கள் சமரசம் செய்து கண்டடைந்த சிறுவெளியில். கொந்தளிக்கும் கரியகடல் நடுவே சிறு தீவில் ஒதுங்கிய இருவர்போல. அங்கே ஒருவரை ஒருவர் கண்டு ஒரு கணம் பிரமித்து, அருவருத்து, அஞ்சி, சுருங்கி மீண்டும் தங்கள் அகங்காரங்களின் எல்லைகளுக்குள் வந்து மூடிக் கொள்கிறார்கள் [உரக்க] உங்களுக்கு அந்த வெளி வாய்க்கவேயில்லை. உங்களுக்கிடையே எப்போதுமிருந்தது அந்த தூரம். கரிய இருளால் நிரப்பபட்ட பேரழுத்தம் நிரம்பிய வெறுமை..

[நிழல்கள் மெல்ல நடனமிட ஆரம்பிக்கின்றன]

சிகண்டி: நான் பிறந்த இடம் அதுதான். என் உடலின் நடுவே அது உள்ளது. ஆறாத காயம்போல .எதையும் பார்க்காத துடிக்கும் கண்போல. எதையும் சுட்டாத விரல்போல . ஒரு கரிய இடைவெளி … இந்த உடல் ஒரு புதிர் போல என்னை எப்போதும் வதைக்கிறது….

அம்பை: [துயரத்துடன்] அது என் தவறுதான் குழந்தை. என்னை மன்னித்துவிடு…

சிகண்டி: [ஆங்காரத்துடன் கைகளை உரசியபடி ] யார் நீங்கள் ? நீ பெண்ணாகவில்லை. அவர் ஆணாகவில்லை . சொல்லப்படாத ஒரேஒரு சொல்லால் உடலை ஊமையாக்கிக் கொண்ட இருபால் வடிவங்கள்…

பீஷ்மர்: [கடும் கோபத்துடன்] அடேய்…

சிகண்டி: உங்கள் வில் அதோ கிடக்கிறது… [உரக்க சிரித்து] பிணத்தைக் கொல்ல முடியாதல்லவா ? மறந்து விட்டேன். நீங்கள் சொல்லை ஏவலாம்….

பீஷ்மர்: சீ, விலகு…

சிகண்டி: நீங்கள் உணர்வது என்ன தெரியுமா ? இயலாமை. காலமெல்லாம் நீங்கள் உணர்ந்த இயலாமை. உறுப்பின் இயலாமை அல்ல உங்கள் பால்திரிபுக்கு காரணம். உணர்வுகளின் இயலாமை… பேடி பேடி [ வெறிகொண்டு சிரித்து] பேடிகள் காற்றில் புணர்ந்து பெற்ற பெரும்பேடி…. பேடிகளுக்கென ஒரு சொற்கம் செய்யசொல்வோம் .அங்கு சொல்லப்பட முடியாத சொற்கள் உண்ணப்பட முடியாத உணவுகள் தழுவப்பட முடியாத பெண்கள்… அங்கே நாம் மூவரும் செல்லலாம்…. நமக்காக காத்திருப்பது அதுதான். இதோ எனக்குப் பின்னால்…

[பின்னணியில் நிழல்கள் வெறித்த பார்வையுடன் நடனமிடுகின்றன]

சிகண்டி: [கைநீட்டி] வருக .. இதுதான் தருணம் .இனி இது வாய்க்கப்போவதில்லை …. ஒருபோதும்…..

[நிழல்கள் அழைக்கின்றன. ‘ வருக ! ‘ ‘வருக ! ‘]

அம்பை: இல்லை! [பயந்து பின்னகர ஒரு நிழல் அவளைப் பிடித்து முன்னே தள்ளுகிறது] ஆ! விட்டு விடு!இல்லை…

[நிழல்களால் தள்ளப்பட்ட பீஷ்மர் இணைந்துகொள்ள, ஒரு நடனம் ஆரம்பிக்கிறது . புணர்ச்சியின் நிலைகள் .,பாம்பு நெளிவுகள். உக்கிரமான தாபம் மிக்க அசைவுகள். ஒளி மாறிமாறிவிரிய , பின்னால் பேரண்டங்கள் வெடித்து பிறந்து ஒளிர்ந்து எரிந்தழிய, காலம் நாட்களாக யுகங்களாக ஓடிமறைய , பெருகிப் பெருகி உச்சம் கொள்ளும் சிவசக்தித் தாண்டவம் . பிளந்து சரியும் இடியோசைகள். துடிதுடிக்கும் மின்னல்கள். பின்பு பெருமழை. நனையும் எரிமலைகள். பின்பு ஓயும் அலைகளில் எஞ்சித் தத்தளிக்கும் கரிய சிற்றொளி. பின்பு தூய மணியோசையாக முளைத்தெழும் காலத்தின் முதல் சுழி .

தொலைவில் நரி ஒன்று ஊளையிடுகிறது

நிழல்கள் அடங்குகின்றன.

பீஷ்மரும் அம்பையும் இரு முனைகளிலாக சிதறி விழுகிறார்கள். அரங்கில் இருள் நிறைகிறது. பிறந்த குழந்தையின் முதல் அழுகுரல். மென்மையும் கருணையும் கொண்ட அன்னையின் தாலாட்டு. சொற்களில்லை. ‘ரூரூரூ … லூலூலூ ‘ குழந்தை அழுகை மெல்ல மழலை ஒலிகளாக மாறுகிறது.

அரங்கில் ஒரு மெல்லிய தீபச்சுடர் மட்டும் எழுகிறது.

குழந்தைக் குரல் ‘ அம்மா ‘

தாய்மை மிக்க பதில் ‘ என்னடா கண்ணா ? இங்கே வா ‘

குழந்தைக் குரல் ‘அம்மா எனக்கு பயமாக இருக்கிறது ‘

தாயின்குரல்: அம்மா இருக்கிறேனல்லவா ?என்ன பயன் என் ராஜாவுக்கு ?அருகே வா [கொஞ்சும் ஒலிகள்]

ஒளி விரிகிறது .காலை ஒளி . மரங்களின் கிளைகள் இளங்காற்றிலாடுகின்றன. பறவைகள் கலைசலாக ஒலிக்க நீரில் ஓசை.

பீஷ்மரும் அம்பையும் இரு திசைகளிலிருந்து மரக்கிளைகளை விலக்கி , நீரைத்தாண்டி வருகிறார்கள் .

மென்மையான மணியோசையுடன் அவர்கள் ஒருவரை ஒருவர் கண்டுகொள்கிறார்கள்.]

பீஷ்மர்: [கனிந்த குரலில் ] உன்பெயர் என்ன ?

அம்பை [வெட்கி ] அம்பை .நீங்கள் யார் ?

பீஷ்மர் : நான் பீஷ்மன் .[அவளை நெருங்கி] என் மனதில் வினோதமான ஒரு உத்வேகம் எழுகிறது . நான் உன்னை முன்பே கண்டிருக்கிறேன். உன்னை நன்கு அறிவேன்.. [பெருமூச்சுடன்] இதே இடத்தில் இதேபோல எத்தனையோ முறை நாம் நின்றிருப்பதாக என் மனம் பிரமை கொள்கிறது

அம்பை: [தலைகுனிந்து] ஆம். எனக்கும்தான். இதே சொற்களை நீங்கள் என்னிடம் எத்தனையோமுறை சொன்னதுபோல …

[பீஷ்மர் அவளருகே சென்று மெல்ல அவளை தீண்டுகிறார் .

மரங்களிலெல்லாம் மலர்கள் எழுகின்றன. அவர்கள் தழுவிக் கொள்கிறார்கள். ]

மரங்கள்: நீங்கள் யார் ?

பீஷ்மர்:நான் ஓர் ஆண்

அம்பை:நான் ஒரு பெண்

மரங்கள்: இந்தப்பதிலன்றி வேறு எந்த சொல்லை நீங்கள் சொல்லியிருந்தாலும் நாங்கள் கற்பாறைகளாக மாறி மெளனம் கொண்டிருப்போம் . காலகாலங்களாக இக்கேள்வுக்கு மட்டும் ஒரே விடைதான்

[மரங்கள் விலகி குழந்தைகளாகின்றன. கலகலவென குழந்தைகளின் குரல்கள். சிரிப்பு . ‘ அம்மா ‘ என்று கூவியபடி ஒருகுழந்தை அவள்மீது மோதுகிறது ]

குழந்தை :அம்மா அவன் என்னைபிடிக்க வருகிறான்!

குழந்தை: போடி என்னுடைய அம்மா!

அம்பை :ஓடாதே விழுந்துவிடுவாய்!

குழந்தை: அம்மா பக்கத்திலே நான்தான் நிற்பேன்

குழந்தை: போடி நான்தான்

குழந்தை:அம்மா இவனைப்பார்

அம்பை:[பூரிப்புடன்] இதோபார், சண்டை போடக்கூடாது…

[குழந்தைகள் ஆடி கூத்தடிக்கின்றன. மெல்ல அவ்வொலி மங்கி அகல்கிறது. குழந்தைகள் விலகி மரங்களாகின்றன. பீஷ்மரும் அம்பையும் இரு மரங்களாக மாறி கைகளை காற்றுக்கு வீசி நிற்கின்றனர். அரங்கு மாலை ஒளி கொள்கிறது .

மரக்கூட்டங்களை விலக்கி ஒரு இளஞனும் இளம்பெண்ணும் இரு திசைகளிலிருந்து வருகிறார்கள் . ஒருவரையொருவர் மணியோசை ஒலிக்க கண்டுகொள்கிறார்கள்.]

இளைஞன்:உன்பெயர் என்ன ?

பெண்:அம்பை .நீங்கள் ?

இளைஞன்: என் பெயர் பீஷ்மன்

[பீஷ்மரும் அம்பையும் சிரித்தபடி மலர்களை உதிர்க்கிறார்கள். இளைஞனும் இளம்பெண்ணும் செல்கிறார்கள் ]

அம்பை : [விலகி வந்து ] எத்தனை எளிமையான நாடகம்

பீஷ்மர்: ஆம் . இலைகளைப்போல, சருகுகளைப்போல…

[மரங்கள் கலைந்து மறைகின்றன. அவர்கள் மட்டும் அரங்கில் எஞ்சுகிறார்கள். நிழல்கள் முன்வந்து அவர்களுடைய நரைமுடிகளை முதுமையை அளிக்கின்றன.]

பீஷ்மர்: [அணிந்தபடி ] இலைகளை உதிர்த்துவிட்டு வசந்தத்தை எதிர்கொள்ளும் மரங்கள் போல் ஒவ்வொன்றையும் அப்போதே உதிர்த்துவிட்டு முன்னகர்கையில் முதுமையும் இனிமையாக மாறிவிடுகிறது .

அம்பை: ஆம். [கனிந்து சிரித்து] உதிரும் சருகுகள் புது மலர்களுக்கு உப்பாகும் என்பார்கள் …

[இருவரும் பிரிகிறார்கள். பீஷ்மர் மீண்டு வந்து படுக்கிறார்]

நிழல்: என்ன ஆயிற்று உன் வினாக்கள்…

பீஷ்மர்: [சிரித்து] வினக்களா ? இந்த காடுமுழுக்க கோடானுகோடி மலர்கள் மலர்ந்திருக்கின்றன….எந்த வினாக்களும் இல்லாமல்

[ஒளி மாறுபடுகிறது. இரவு. போர்க்களம். ஊளைகள்.]

பீஷ்மர்: [ அண்ணாந்து ] கரியவெளி ! தானன்றி வேறற்ற பெரும்பாழ் !

நிழல் : இப்போது நீ கிளம்பமுடியும் அல்லவா ?

பீஷ்மர்: ஆம், எனக்கு இப்போது எடையே இல்லை. காற்றுக்கு ஒப்புக்கொடுத்த எளிய சருகு…[ அண்ணாந்து ] உயிர்களும் காலமும் சென்றுசேரும் கடல். எதுவுமே எஞ்சாத இருண்ட பெருவெளி..

[சிகண்டி எதிரே நிற்கிறான், ஆனால் அவன் மீது வேறுவிதமான ஒளி கவிந்திருக்கிறது ]

சிகண்டி: [அமானுடமான ஒரு பெரும் குரலில்] அது தன்னைத் தானுண்டு தனக்குள் பூரணம் பெற்றவனால் மார்பில் தாங்கப்படும் சிறுபதக்கம் .

பீஷ்மர்: நீ ?

சிகண்டி: ஆம், நான்தான்

[ அவனுக்கு பின்னால் நிழல்கள் அணிவகுக்கின்றன. மெல்ல, கச்சிதமான அசைவுகளுடன். ஒன்றுமீது பிறிது ஏறி உயர்ந்து பற்பல தலைகளும் கால்களும் கைகளும் கொண்ட ஒற்றைப் பேருருவத் தோற்றம் கொள்கின்றன. ஒரு கரத்தில் சங்கு மறுகரத்தில் சக்கரம். ஊன்றிய கதாயுதம். இன்னொரு கரத்தில் தாமரை. பல்வேறு ஆயுதங்கள். கடல்நீலப் பேரொளி அவன் மீது சுடர தொலைவில் பாஞ்சஜன்யம் முழங்குகிறது]

ஓங்கி உலகளக்கும் பெருங்குரல்:

அனைத்து தர்மங்களையும் கைவிடுக !

என்னையே சரணடைக!

[பீஷ்மர் மெல்ல எழுந்து கனவில்போல வணங்கியபடி நடந்து சிகண்டிமுன் மண்டியிடுகிறர் . ஒளி மாறுபடுகிறது . நிழல்கள் இறங்கி பிரிகின்றன. தனித்து நிற்கும் சிகண்டி குனிந்து பார்க்கிறான். மூலையில் நிழல்கள் கூடி மிருத்யுதேவி தோன்றுகிறாள் .மெல்ல பீஷ்மரை தூக்கி கொண்டுசென்று அவரது படுக்கையில் கிடத்துகிறாள். அவள் தன் முகமூடியை எடுக்கும்போது அது அம்பை என தெரிகிறது. தலைமாட்டில் அமர்ந்து குழந்தையை தூங்கச்செய்வதுபோல மெல்லமெல்ல தட்டி தூங்கச்செய்துவிட்டு ஓசைகேட்காத காலடிகளுடன் அம்பை வெளியேறுகிறாள்.

அரங்கில் சிகண்டி தனித்து நிற்கிறான். ஆனால் சாதாரணனாக குழப்பம் கொண்ட மனிதனாக ]

சிகண்டி : பிதாமகரே..[அருகே சென்று குனிந்து பார்த்து ] பிதாமகரே….

[பீஷ்மர் இறந்துவிட்டிருக்கிறார் .சிகண்டி அவரை விட்டு விலகுகிறான்.]

சிகண்டி : வானில் தேவர்கள் மலர்மாரி தூவவில்லை. நட்சத்திரங்கள் இடம் மாறவில்லை . ஒரு சருகு உதிர்ந்தது போல…. ஒன்றுமே நிகழவில்லை… மெளனமான இரவு .கோடானுகோடி முந்தைய இரவுகளைப்போலவே இன்னொரு இரவு…[ பெருமூச்சுடன்] ஆனால் நான் ?

[வெகு தொலைவில் ஒரு அழுகை ஒலி. ]

சிகண்டி: [ இருளை நோக்கி ] இ ந்த இருட்டுக்கு அப்பால் என்ன ? . இருட்டுக்கு தெரியுமா ? எங்குள்ளது என்னுடைய சொற்கம் ?

[மெளனம் . அழுகையொலி மட்டும் கேட்கிறது ]

சிகண்டி: அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவனின் கடைசி இடம் எது ?

[ இருளில் ஒரு நரி ஊளையிடுகிறது . சோகமும் தனிமையும் மிக்க குரல் .

ஒரு கணம் அதை கவனித்து ,பெருமூச்சுடன் சிகண்டி இருளில் நடந்து மறைகிறான் . மறுபக்கம் வழியாக கழுதைப்புலி முகர்ந்தபடி அரங்கில் நுழைகிறது]

[முற்றும்] 

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6159/

7 comments

2 pings

Skip to comment form

 1. Ramachandra Sarma

  ரொம்ப குழப்பமா இருக்கு. திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருக்கிறேன்.

 2. MS

  Vadakku Mugam— before I share anything else, “What a storyboard!” I watched the play Sir.

  Long since I had stopped reading fiction-related literature—but read Vadakku Mugam with rapt attention. Not that I claim that I am an intellectual; essays have usurped its place. The play caught my attention for two reasons: one the essence of Mahabaratham is always close to my heart; two, your narrative style, descriptive, yet precise.

  I have always felt somewhat drawn towards the qualities of Vidhurar, Bhishmar, and Karnan. A sense of agony always used to creep in when I read about Vidhurar and Karnan, still feel overwhelmed by their dignity with which they stomach all the humiliations heaped on them.

  Now, Vadakku Mugam bares the yearnings of Bhismar. Yet, you have done that by giving the character a dignified treatment. Numerous Bhishmars we see in our daily life—Bhishmars with halos, armor, shield and what not—some imposed on them yet some they wear out of choice.
  We may call this halo by any name—self respect, dignity, vow, but it is ‘Nature’ that takes the better of everything and proves to be ‘The Ultimate’. Life seems easy and flows like a stream for people who are less presumptuous.

  I owe my gratitude to you—how do I repay? By buying books and reading such literature.

 3. perumal

  நானும் எனது அகங்காரத்தால் பல நல்ல காதலிகளை இழந்த்துள்ளேன்.

  பணிவன்புடன்
  பெருமாள்
  கரூர்

 4. sitrodai

  அற்புதம்…

  இந்த அளவுக்கு சிறப்பான விவரணைகளை இதற்கு முன்பு ஆதவன் கதைகளில் மட்டுமே கண்டு இருக்கிறேன். (நானறிந்த அளவில்).

 5. Ramachandra Sarma

  இது இழக்கப்பட்ட காதலை குறித்ததல்ல என்று நம்புகிறேன். தி.ஜா. அவர்களின் கண்ணீர்விட்டழுத சன்யாசி ஒருவர் குறித்து எழுதிய சிறுகதை நினைவுக்கு வருகிறது.

 6. mmurali

  அன்புள்ள ஜெ
  சிறப்பாக அமைந்துள்ள நாடகம்.

  ‘Last temptation of Jesus Christ’ இன் சாயல் தெரிகிறது. இதனை ஒரு பாராட்டாகவே குறித்து உள்ளேன்

  முதலில், திடீரென முடிந்தது போல தோன்றினாலும், எடுத்து கொண்ட தலைப்பின் பரப்பிற்கு நிறைவாக இருந்தது.

  என்னுள் இருக்கும் எழுதும் ஆவலையும் தூண்டுகிறது.

  nanri marrum paaratugal
  anpudan
  Murali

 7. ஜெயமோகன்

  I have finished reading “vadakku mugam”. It needs couple of more readings to understand the nuances. My statement may be politically and popularly not correct. I do not like the characters of Bhisma and Karna. This is my personal view and I may be wrong. The greatness was imposed on them by others one because he was the Pithamaha and the other because he was deprived. Knowing that Karna was the son of Kunthi why did Bhisma not like him and insult him at every stage, is it because he thought that he was bad influence on Duryodhana more than sakuni. Sakuni was transparently bad. But Karna was clothed in greatness his prowess in bow and his “kodai”. If either Bhishma or Karna (only they) wanted they could have stopped the molestation(near rape) of Drowpathy in the open court. The best characters were of course Krishna,Dharma( a reluctant fighter in a war engineered by others) and Vidura.( a real sage). Even in your play you have given better lines to Dharma than to Bhisma in their encounter. Sorry I can go on and on.

  A very interesting and thought provoking play. Needs more careful readings. congratulations.

  The women characters in Mahabhartha were powerful Dowpathy, Kunthi, Ambai and Sikhandi. Euripedes wrote a play “The Trojan Women”. somebody should write a play on women of Mahabharatha-Drowpathy, Kunthi and Gandhari. Of course I have read series of stories on women of Mahabaratha and I forgot the author’s name was it M.V.Venkataraman?

  Vadakku Mugam may be difficult to enact. needs some pruning for the stage and need of very clever lighting. Only theater experts can say.

  R VENKATARAMAN

 1. மகாபாரதம் சார்ந்த படைப்புகள் « சிலிகான் ஷெல்ஃப்

  […] வடக்கு முகம் – ஜெயமோகன் பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6 […]

 2. மகாபாரத கதைகள் -தொகுப்பு (முந்தையவை)

  […] 1. களம் – http://www.jeyamohan.in/?p=7140 2. நதிக்கரையில் – http://www.jeyamohan.in/?p=82 3. அதர்வம் – http://www.jeyamohan.in/?p=13941 4. பத்மவியூகம் – http://www.jeyamohan.in/?p=43970 5. பதுமை (நாடகம்) – http://www.jeyamohan.in/?p=6999 6. வடக்குமுகம் (நாடகம்) – 1 – http://www.jeyamohan.in/?p=6151 7. வடக்குமுகம் (நாடகம்) – 2 – http://www.jeyamohan.in/?p=6155 8. வடக்குமுகம் (நாடகம்) – 3 – http://www.jeyamohan.in/?p=6156 9. வடக்குமுகம் (நாடகம்) – 4 – http://www.jeyamohan.in/?p=6157 10. வடக்குமுகம் (நாடகம்) – 5 – http://www.jeyamohan.in/?p=6158 11. வடக்குமுகம் (நாடகம்) – 6 – http://www.jeyamohan.in/?p=6159 […]

Comments have been disabled.