வடக்குமுகம் [நாடகம்] – 4

[பீஷ்மரது  நிழல் அவர் தோளைத் தொடுகிறது.)

நிழல்: உன் உடைகள். உன்னுடைய முகம் இதோ.

பீஷ்மர்: உம் (பெருமூச்சுடன் கை நீட்டுகிறார்)

நிழல்: எந்த வேடங்களும் சீக்கிரமே நம் இயல்புகளாக மாறி விடுகின்றன.

(பீஷ்மர் பதில் கூறாமல் மெல்ல தன்னுடைய உத்தரீயம் கச்சை ஆகியவற்றை களைந்து நிழலுக்கு தருகிறார். இன்னொரு நிழல் அவரது நரை முடியையும் தாடியையும் அளிக்கிறது. வயோதிக நடையுடன் மீண்டும் வந்து தன் அம்புப்படுக்கைமீது படுத்துக் கொள்கிறார். நிழல்கள் கலைந்தாடுகின்றன. போர்க்களத்து ஒலிகள் தொலைவில் முழங்குகின்றன.]

பீஷ்மர்: கனவுகள்! அல்லது பிரமைகளா ? ஒரு கணத்தில் ஒரு முழு வாழ்வே நிகழ்ந்து முடிந்துவிடுகிறது.(பெருமூச்சுடன்) அப்படியென்றால் மொத்த வாழ்வே ஒரு கணநேரப் பிரமைதானா ? யாருடைய பிரமை ? முடிவற்ற காலப்பிரவாகம் . . . அதுவும் ஒரு கணம்தான் ? தேங்கி உறையும்போது காலத்தின் பெயர் என்ன ? என் மனத்தில் எதுவுமில்லை இந்த அர்த்தமற்ற சொற்கள் தவிர. எண்ணங்கள் எல்லைமீறும்போது மொழி இல்லாமலாகிறது. மொழியற்ற வெளியில் நாமறிந்த எதுவுமே இல்லை…

(நிழல்கள் மிக மெல்ல அசைந்தாடுகின்றன.]

பீஷ்மர் : ஆனால் ஒரு முகம் . . . ஒரு சொல் . . . கரையாமல் எஞ்சுகிறது . . .

நிழல்கள்: [ கிசுகிசுப்பாக ] அம்பை . . . அம்பை . . .

பீஷ்மர்: கோடானுகோடிமுறை நெஞ்சுக்குள் சொல்லிக் கொண்டாயிற்று. ஆனால் உதடுகள் அச்சொல்லை மறுக்கின்றன.

நிழல்கள்: அம்பை . . . அம்பை . . .

பீஷ்மர்: இது என்ன நாள் ? விடியப் போகிறது போலும் நட்சத்திரங்கள் இடம் மாறிவிட்டனர். ஆனால் நாள் என்றால் என்ன பொருள் ? இந்தப் படுக்கையில் . . .

(ஒலிகள் மாறுபடுகின்றன. மணியோசை முழங்க ஒரு புரவிவீரன் செந்நிறக் கொடி பறக்க அரங்கை மெல்ல கடந்து செல்கின்றான். பறவைகளின் ஒலிகள். கோழி கூவும் ஒலி. புலர்காலைச் சங்கொலிகள். முரசங்களின் ஒலிகள். பின்பு மஞ்சள் நிற கொடியுடன் ஒரு குதிரைவீரன் அரங்கை கடந்து செல்கிறன். போர் வீரர்கள் போடும் பலவிதமாக ஒலிகள் எழுகின்றன. ஆயுதங்கள் தயாராகின்றன. குதிரைகள் கனைத்தும் யானைகள் பிளிறியும் ஒலியெழுப்புகின்றன. குதிரைவீரன் ஒருவன் வெண்கொடியுடன் செல்கிறான். போர்முரசு தம் தம் என ஒலிக்கிறது. சங்குகள் இரைகின்றன. கொம்புகள் பிளிற போர்க்களப் பேரோசை எழுந்து உச்சத்தை எட்டி அரங்கை நிரப்புகிறது.]

பீஷ்மர்:அத்தனை ஒலிகளும் இணைந்து ஒற்றைப்பேரொலியாக .. ஒரே குரல் என வீரிடுகின்றன… எதையோகூவிச்சொல்கின்றன… எதை ? எதை ?

(ஒலிகள் குவிந்து ஒரே ஒலியாக மாறி, ஆனால் இனம் தெரியாமல், கூச்சல் போல ஒலிக்கின்றன)

பீஷ்மர்: எங்கேயோ கேட்ட குரல் . . . நன்கு பழக்கமான வார்த்தை

(ஒலி உருவம் பெறுகிறது. அந்த ஒலிக்கு நிதானமாக நிழல்கள் நடனமிடுகின்றன)

குரல்: ரத்- தம்! ரத் – தம்! ரத் – தம்! [ நிழல்கள் வெறிநடனமாடுகின்றன. நடனம் லேகம் பெற்று ஒரு தருணத்தில் பின்னணிகூடக் குரல்களை வெல்கிறது ] ரத்- தம்! ரத் – தம்! (மெளன மந்திரமாக) ரத் – தம்! ரத் – தம்!

பீஷ்மர்: நிழல்களின் குரல் (பெருமூச்சுடன்) கேட்ட குரல். கூரிய அம்புகளின் நுனிகளில் இச்சொல் ஒளிர்வதை கண்டதுண்டு. ராஜதந்திர உரைகளின் மென்மையில் இது மின்னுவதைக் கண்டதுண்டு. வேள்விப் புகையிலும், களஞ்சியத்தின் தானியங்களின் ஆவியிலும் இச்சொல்லே மணக்கிறது . . . பொன்னில், பெண் விழியில் . . . எத்தனை பயங்கரமான சொல்!

நிழல்கள்: (மெளன மந்திரமாக) ரத் – தம்! ரத் – தம்!

பீஷ்மர்: சமாதான காலங்களில்கூட கொல்லரின் உலைகள் ஓய்வதில்லை. துருத்திகள் சீற சம்மட்டிகள் அறைபட இரும்பு கூர்மை கொண்டபடியே இருக்கிறது. மண்ணின் ஆழத்தில் கொதிக்கும் எரிகுழம்பு அது. ரத்தத்தில் மூழ்கிச் சிவக்கும்போது அதன் பயணம் நிறைவு பெறுகிறது போலும். உலைச்சுடரின் செஞ்சீறலை இப்போது நினைவுறுகிறேன். எத்தனை குரோதம்! எத்தனை வேகம்! யாருடைய குரோதம் அது ? யார் மீது ?

(நிழல் ஒன்று பீஷ்மரின் அருகே நெருங்கி குனிந்து நடனமிடுகிறது)

நிழல்: நான்! நான்! நான்!

பீஷ்மர்: என்ன சொல்கிறாய் ?

நிழல்: நான் உயிருடனிருந்தபோதும் சரி நிழலாக மாறிய பிறகும் சரி இந்தச் சொல்லை என் அகம் ஓயாது சொன்னபடியே இருந்தது.

பீஷ்மர்: அது மனதின் இயல்பு. ஆனால் இதோ கூத்தாடும் மற்ற நிழல்கள் . .

.

நிழல்: அத்தனை பேரும் ஒரே சொல்லையே சொல்கிறோம். நான்! நான்! நான்! (சிரித்து) ஆனால் அவை இணையும்போது ரத்தம் ரத்தம் என்று ஒலிக்கின்றன.

பீஷ்மர்: உன்னால் எப்படி என்னுடன் உரையாட முடிகிறது ? நானும் நிழலாகி விட்டேனா ?

நிழல்: இன்னமும் இல்லை. (உரக்கச் சிரித்து) ஆகவேதான் உனக்கு இத்தனை கேள்விகள்.

(அலறியபடி ஒரு நிழல் ஓடிவருகிறது)

பீஷ்மர்: யார் அது ?

ஓடிவந்த நிழல்: நான் என் உடலில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன். இதோ சற்றுமுன்புதான். என் உடல் அங்கே மண்ணை அணைத்து குப்புறக் கிடக்கிறது.

முதல் நிழல்: ஏன் கூவுகிறாய். நிழலாட்டத்தில் எந்த நிழலுக்கும் தனியடையாளம் இல்லை தெரிந்துகொள்!

ஓடிவந்த நிழல்: நண்பர்களே, உடலின்மையின் எடை என்னை அழுத்துகிறது. என் ஆசைகள் கோபங்கள் குரோதங்கள்பற்றுகள் அனைத்தும் அங்கே விழுந்து கிடக்கின்றன. இனி எனக்கு என்ன பொருள் இருக்கிறது ?

இன்னொரு நிழல்: நீ எஞ்சுவதே ஒரு பொருள் இருப்பதற்கான ஆதாரமல்லவா நண்பனே ?

ஓடிவந்த நிழல்: ஆம். (குழம்பி) நான் என்று எப்போதுமே என்னை உணர்ந்த ஒரு பிரக்ஞை . . . அதுதான் இப்போது மிஞ்சியிருக்கிறது. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி . . .

முதல் நிழல் : அது எப்போதுமே வேடிக்கைதான் பார்த்தது. அதற்கு வேறெதுவுமே தெரியாது.

ஓடிவந்த நிழல்: ஏன், நண்பர்களே ஏன் ?

முதல் நிழல்: இன்னும் சில கணங்கள் தான் பிறகு நீ கேள்விகள் கேட்க மாட்டாய். நிழல் என்றால் என்ன என்று எண்ணுகிறாய். ? இந்த அரங்கில் சிறு பகுதியிலேயே ஒளி விழுகிறது. இந்த நாடகம் நடக்கிறது. மீதியெல்லாம் நிழல். முடிவேயில்லாத நிழல்….

(பின்னணியில் பேரொலி. வாழ்த்துக்கள். அலறல்கள். . .)

பீஷ்மர்: என்ன ? என்ன அது ?

நிழல்: ஒரு மகாரதன் வீழ்ந்திருப்பான். அவன் சற்று நேரத்தில் இங்கு வந்து விடுவான். அவன் சடலம் மட்டும் உங்கள் மொழியில் அழுகாமல் மிதந்து கிடக்கும்.

(கலகலவென்ற ஒலியுடன் பறவைகள் சில கடந்து செல்கின்றன)

நிழல்: (அண்ணாந்து) அவை என்ன தெரிகிறதா ?

பீஷ்மர்: பறவைகள் – ஆனால் கண்ணுக்குத் தெரியவில்லை.

நிழல்: நீங்கள் தொடுக்கும் அம்புகளின் ஆத்மாக்கள் அவை. காலகாலமாக அவை கட்டுண்டு கிடந்தன. ஒற்றை இலக்குக்காக தவம் கிடந்தன. இலக்கு என்ற பெரும் சுமையில் அவற்றின் சிறகுகள் நசுங்கின. இலக்கை எட்டியவை எட்டாதவை அனைத்துமே இப்போது விடுதலை பெற்றுவிட்டன. இலக்கின்றிப் பறத்தலின் இன்பத்தில் அவை திளைக்கின்றன.

பீஷ்மர்: ஆமாம். இலக்கின்றி . . .

நிழல்: என்ன சொல்ல வருகிறாய் ?

பீஷ்மர்: ஒன்றுமில்லை.

(சிவப்புக் கொடிபறக்க ஒரு குதிரைவீரன் கடந்து செல்கிறான். நகரா முழங்குகிறது. கொம்புகள் ஆர்க்கின்றன.)

பீஷ்மர்: இன்று முடிவது எத்தனை நாளின் போர் ?

நிழல்: உனக்கென்ன நாளும் கணமும் ? நீ மரணத்தை தொட்டாயிற்று.

(போர் ஓயும் ஒலிகள். ஒரு குதிரை வீரன் கரிய கொடியுடன் செல்கிறான்.)

பீஷ்மர்: இரவு செல்கிறது. காலத்தின் கரியகடலுக்கு ஒரு சிற்றோடை போல

நிழல்: நிழல்களின் உலகு!

(பெண்குரல் ஒன்று வலியுடன் முனகுகிறது)

பீஷ்மர்: யார், யாரது ?

நிழல்: (நகைத்து) கேட்டதில்லையா இந்த ஒலியை ? தாலாட்டை யார் நினைவில் வைத்திருக்கிறார்கள் இல்லையா ?

பீஷ்மர்: யார் ?

நிழல்: பிரித்வி. உன்னை தாங்குவதனால் தரித்ரி. பூமாதேவி . . . (வலிமிக்க முனகல்)

பீஷ்மர்: ஏன் ?

நிழல்: இக்களத்தில் இலக்கு தவறிய எத்தனை லட்சம் அம்புகள் அவள் உடலில் தைத்தன என்று யோசித்துப்பார் . ..

.

பீஷ்மர்: உண்மை.அதை நான் எண்ணியதேயில்லை

நிழல்: பாண்டவர்களும் கெளரவர்களும் இப்போது போரிட்டுக் கொண்டிருப்பது அவளுடன்தான். பெற்று முலையூட்டி தென்றலாய் தழுவி நறுமணங்களால் தாலாட்டி வளர்த்த பூமியுடன். ஆண்கள் விண்ணையே பார்க்கிறார்கள். மண்ணைப்பார்ப்பவர்கள் பெண்கள் மட்டும்தான்.

(அரங்கின் ஒலிகள் மாறுபடுகின்றன. இரவுக்குரிய ஒலிகள். கழுதைப்புலிகளும் நாய் நரிகளும் எழுப்பும் ஒலிகள். நிழல்கள் இருளில் கரைகின்றன.)

பீஷ்மர்: விண்மீன்கள் வெளிவரத் தொடங்கி விட்டன. மின்னும் கோடானு கோடி விழிகள். வானம் இன்று தெளிவு போலும். வானம் தெளிவுற தெளிவுற அவை வந்தபடியே உள்ளன. (சற்று நேர இடைவெளிக்குபின்) வானமே ஒற்றைவிண்மீனின் ஒளிபரப்பாக மாறக்கூடிய பூரணத்தெளிவு என ஒன்று உண்டா என்ன ?

(காலடிகள்)

பீஷ்மர்: அஞ்சலி செலுத்த வருகிறார்கள் போலும்.

(இரவின் ஒலிகளை மீறி ஒரு தொலைதூரக் கதறல் எழுகிறது. பெண் குரல். இழந்துவிட்ட மகனுக்காக அது மனம் சிதறிக் கூவி அரற்றுகிறது.)

பீஷ்மர்: கெளரவர்களும் பாண்டவர்களும் சேர்ந்து போர் தொடுத்தது இந்த அன்னையரிடமும் தான்.

நிழல் :மண்ணை மட்டுமே பார்க்கும் பேதைகள்; இல்லையா ?

(கர்ணன் அரங்கில் நுழைகிறான்)

[மேலும்]

முந்தைய கட்டுரைஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவடக்குமுகம் [நாடகம்] – 5