பகுதி எட்டு: 2. பொருள் ஒன்று
யமுனைக்கரையில் அந்தணர்சேரியில் மதியவெயிலெழுந்த நேரம் திண்ணைகளிலும் அப்பால் ஆலமரத்து நிழல்மேடைகளிலும் ஆண்களெல்லாம் துயில பின்கொல்லைப் படிகளிலும் பசுக்கொட்டில்களிலும் பெண்கள் அமர்ந்து சொக்கட்டான் ஆடியும் சிறுசொல்பேசியும் சிரித்துக் கொண்டிருந்தனர். நெய்க்குடமேந்திய ஆய்ச்சியர் நால்வர் நடமிடும் இடையுடன் தெருவில் வரக்கண்டு “ஆய்ச்சியரே, இங்கு வருக!” என்று ஒருத்தி கூவினாள். “வெயிலெழுந்த பின்னர் நெய்கொண்டு வருகின்றாள். விடிந்தபின்னும் துயிலும் வீண்வழக்கம் கொண்டிருப்பாள்” என்றாள் ஓர் அந்தண முதுமகள்.
நெய்க்குடம் தாழ்த்தி நெடுமூச்செறிந்து முந்தானைச் சுருள்கொண்டு முகவியர்வை ஒற்றி அமர்ந்தனர் ஆய்ச்சியர். “நெய்யுருகும் வாசம் எழ வந்தீர். நன்று! நன்று! நாளை அதில் அனலெழுந்தாட வருவீரோ?” என்றாள் ஓர் இளம்பெண். “ஏது செய்வோம், அன்னையரே. எங்கள் குடிவாழ வந்த கோமகன் என்றெண்ணியிருந்தோம். இன்று அவனே எங்கள் பழிகொண்டு நிற்கும் பாதகனாகிவிட்டான்” என்றனர் ஆய்ச்சியர். “காலை எழுந்து கன்றுகூட்டி பால்கறக்கப்போனோம். தொழுநிறைந்து பால் வழிய நின்ற பசுவைத்தான் அங்கே கண்டோம். காடெல்லாம் தேடி கன்றைக் கண்டடைந்து தொழுசேர்த்து வெண்ணை திரட்டி எழும்போதே வெயிலெழுந்து வெளுத்துவிட்டது!”
“யாரவன்?” என்றாள் புதுமணப்பெண் ஒருத்தி. “நாளை அவனை எண்ணி நீயும் நாணம் கொண்டு நகைப்பாய்” என்றாள் இன்னொருத்தி. “கண்ணன் என்று அவன் பெயர். கருநிற வண்ணன். செய்வதெல்லாம் செய்தாலும் சிரிக்கவைத்து மறக்கவைக்கும் சிறுக்கன். யமுனை நீராடும் இளம்பெண்கள் அனைவருக்கும் அவன் பாதச்சுவடு படிந்திருக்கும் மண்தெரியும். முந்தையநாள் அவன் மூச்செழுந்த வழி தெரியும். அவன் செய்தவற்றைப் பேசி செய்தவற்றை எண்ணி பெண்கள் பொழுதோடும்.”
புன்னகையில் முகம் மலர்ந்து புதுமணப்பெண் சொன்னாள் “ஆம், மணமுடித்து இங்கு வந்து மண்ணில் கால் வைக்கையிலே அவனைக் கண்டேன். நீலக்கடம்பின் கிளையுலுக்கி நீர்மீது பாய்ந்தான். நீர்த்துளிகள் கொண்டு என்னை நனைத்துவிட்டுச் சென்றான்.” எண்ணி விழிமலர்ந்து வாய்பொத்தி நகைத்து “அந்தணர் மகளுக்கு ஆயிரம் நீர்மணிகள். மாந்தளிர் தோளுக்கு நீர்மணிமாலையே அழகு என்றான். அன்னை என் தோள் தொட்டு என்னடி இது வியப்பு. எத்தனையோ முறை நான் என்னுள் எண்ணிய சொல்லல்லவா என்றாள். அவன் விழிகளின் ஒளியை எண்ணி இவ்வூர் புகுந்தேன். அவன் குரலிசை எண்ணி பால்கலம் வைத்தேன். வெண் நுரையெழுந்து பொங்கி வழிந்தவன் அவனே!” என்றாள்.
“இங்கே மனம் மலர்ந்தது இருக்கட்டும். அங்கே உன் கணவனிடம் சொல்மலர்ந்து விடாதே. ஆயர்சிறுவன் அந்தணர் இல்லத்தில் நினைவாகவேனும் நுழையலாகாதென்பார். நெறியொன்றே அறிவெனக் கொண்ட நூலறிந்தோர் இங்குள்ளோர்” என்றாள் அன்னை ஒருத்தி. புதுப்பெண் அனகை நாணி தலைதாழ்த்தி “சொல்லாதவற்றால் ஆனதே உள்ளமென்று அறியாத பெண்ணுண்டோ?” என்றாள். “அடி கள்ளி, அறியாப்பெண் போல முகம் கொண்டிருந்தாலும் அகத்தியன் வயிற்றைப்போல் ஆழியன்றோ கரந்திருக்கிறாள்” என்று கைகொட்டிக் கூவி நகைத்தனர் பெண்கள்.
“பொல்லாங்கே செய்தாலும் பொன்விளைய வைப்பான். அவன் கால்பட்டு எங்கள் குடிபொலியக் கண்டோம். நோயில்லை துயரில்லை. நெஞ்சில் இருளில்லை. தந்தையர் சினத்தாலும் அன்னையர் வசையாலும் அவனை வாழ்த்துவதே அவன் வகுத்த விதி போலும்” என்று நகைத்து நெய்விற்று பணம் பெற்று குடம் எடுத்து விடைகொண்டனர் ஆய்ச்சியர். அவர்கள் செல்வதைக் கண்டபின் சிறுகுரல் கொண்டு “அரசன் என பொலிகின்றான். ஆயர்குலத்து ஏன் உதித்தான்?” என்றாள் ஒருத்தி. “மலையுச்சி மலரின் மணம் செல்லா திசையில்லை” என்று அன்னை அதற்கு விடையுரைத்தாள்.
அன்றறிந்தேன் கண்ணன் என் அகத்துக்கு யாரென்று. அன்றுமுதல் ஒருநாளும் அவனைநான் அறிந்தமுகம் கொண்டதில்லை. அவன் பெயர் சொல்லி பேசிநிற்பார். அவன் சென்ற திசைநோக்கி விழிபிணைப்பார். மந்தணம் பேசி மெல்லச் சிரிப்பார். யாதொன்றும் அறியாத பேதையைபோல் நான் இருப்பேன். ஒரு சொல் சொன்னாலும் ஒரு விழி அசைந்தாலும் என் பாற்குடம் உடைந்து பாதையெங்கும் சிந்திவிடும். மறைவாக நான் வைத்த மயிற்பீலி ஒன்றை இருளுக்குள் எடுத்து என் இருகன்னம் சேர்த்துவைப்பேன். யுகம்கோடி எழும்முன்னே ஒரு இளமயிலாய் தோகைவிரித்து அவனை நான் கண்டதுண்டு. ஆயிரம் விழிகளால் வியந்து அமைந்ததுண்டு. அவன் எழில்கண்ட இவ்விழிகள் இனிக்காண ஏதுமில்லை.
இல்லறத்தாளாக இங்கிருந்து நடிக்கின்றேன். சொல்லுவதெல்லாம் செய்து நிற்கின்றேன். “நீர்கொண்டுவா” என்கின்றார். “நெருப்பெடுத்து வை” என்கின்றார். நீரும் நெருப்புமாகி நின்றிருக்கும் வேளையிலும் நினைத்திருக்கும் ஒன்றுண்டு. நீரறியும் நெருப்பறியும் நெஞ்சமும் அதை அறியும். என்போன்ற பெண்கள் எவரையும் நான் அணுகவிடேன். யமுனை ஒன்றே என் உள்ளம் அறியட்டும் என்றிருந்தேன். என் சிதையில் படர்ந்தேறும் செந்நெருப்பும் அறியட்டும். முள் ஒளித்த கள்ளிப்பழம். கனவுறையும் களவுமனம். அச்சொல் நின்றெரியும் எரிமையம். ஒருபோதும் திரைவிலகா இருளாழம்.
அந்தணர்சேரியில் ஆங்கிரஸ் என்னும் வேள்வியொன்று இயற்ற மதுரை ஆண்ட மன்னனின் ஆணை வந்தது. தெருமூடிப் பந்தலிட்டனர். ஊர்நடுவே மன்றமைத்தனர். வேள்விக்கூடம் எழுப்பி எரிகுளம் அமைத்தனர். வேள்விக்கோல் நட்டு யமுனை நீரூற்றி வளர்த்தனர். வைதிகர் கூடி வேள்விச்செயல் மூட்டினர். விடியலெழா பொழுதுமுதல் இரவணையும் வேளைவரை ஒருகணமும் நில்லாமல் வேலையென விரைந்தேன். நீர்க்குடம் கொண்டுவந்தேன். மாந்தளிர் கொய்து வந்தேன். நெய்க்குடம் எடுத்தேன். நெருப்புக்கு விறகெடுத்தேன். ஓடும் போது உடனோடும் அவன் முகம் பேசும்போது பின்னின்று புன்னகைக்கும். எரிகுளத்தில் எழுந்தாடும் நாவெல்லாம் அவன் பெயரே. எரிமுன்னர் ஒலித்த வேதமெல்லாம் அவன் புகழே.
“அனகை!” என்று கூவி அவளை அழைத்தாள் மாமி. “என்ன செய்கிறாய்? மண்ணில் நடக்கிறாயா, இல்லை உன் மனம் நிறைந்த கனவில் நடக்கிறாயா? பெண்ணுக்கு நிறை அவள் கண்ணுக்குள் உள்ளது என்பார். இனியொரு சொல் என் வாய்சொல்லிக் கேட்கலாகாது நீ” என்றாள். “நெருப்பின் நிறம் நோக்கி நின்றுவிட்டேன் மாமி” என்று அவள் ஓடிச்சென்றாள். “செந்நெருப்பும் கரியுமிழும் என்றறிந்தே நானும் முதிர்ந்தேன்” என்றாள் மாமி. உரக்க “அவியும் விறகும் கொண்டு சென்று வை. அங்கே நீரொழிந்த குடமிருந்தால் கொண்டுவா” என்றாள். அனகை கண்ணனுடன் ஓடினாள். கண்ணனுடன் குனிந்தாள். கண்ணனுடன் குடம் சுமந்தாள். எடையற்ற குடம் நிறைந்து தளும்புவதை அறிந்து மெல்ல நடந்து வந்தாள். அவள் இடைநனைத்து ஆடை நனைத்து அகம் நனைத்த ஈரத்தை உணர்ந்து குளிர்கொண்டாள்.
வேதம் எழுந்து மலைச்சரிவை நிறைத்தது. யமுனையில் சென்ற ஓடங்களில் படகோட்டிகள் பாட்டை நிறுத்தி செவிகூர்ந்து சென்றனர். மரங்களில் நிறைந்த பறவைகள் அவ்வொலியை அறிந்து அலகுபூட்டின. பின் அந்த ஒலியை மிஞ்சி காட்டில் எழுந்தது ஆநிரைகளின் ஓங்காரம். மாறிமாறிக் கூவும் கன்றின் குரலையும் பசுவின் விடையையும் கேட்டு சினந்தெழுந்த வேள்வித்தலைவர் “யாரங்கே? அந்த ஆநிரை மேய்க்கும் அறியாச்சிறுவனிடம் அப்பால் விலகிச் செல்ல ஆணையிடுங்கள். தேவர்கள் வானெழுந்து செவிகூரும் வேதம் இது என்று சொல்லி அவனை துரத்திவாருங்கள்” என்றார்.
மலைச்சாரல் சென்று மீண்டுவந்த இளவைதிகன் “எந்தையே, அங்குள்ளோன் ஓர் ஆயன். கன்னங்கரியோன். கல்வியறிந்தோன். தேவர்களெல்லாம் அங்கே ஆநிரை குரல்கேட்க வந்திருப்பதாகச் சொன்னான். ஆநிரைவேதம் அனைத்திலும் தூயதென்று சொல்லும்படி என்னை ஏவினான்” என்றான். கடும்சினத்தால் இதழ்துடிக்க “என்ன இழிசொல்! வேதத்தைப் பழித்த அந்த ஆயன் சொல் அழிக! அவன் பசுக்கள் நாவழிக! இவ்வெரிகுளத்தில் நின்றாடும் தென்னெருப்பே நீ சான்று” என்றார் வேள்வித்தலைவர்.
அப்போது வந்த குளிர்காற்றில் எரிகுளத்துத் தழல் சுழன்று அணையக்கண்டார். திகைத்து “என்ன நிகழ்ந்தது?” என்றார். “ஏனென்றறியேன் ஆசிரியரே. நெய்விட்டேன். சமித்தை வைத்தேன். வேதச்சொல்லெழுப்பினேன். வெந்தெரிந்து மேலெழுந்தாடும் தழல் என்று எண்ணினேன். புகையெழுந்து அணைந்து கரி விரிந்து கிடக்கிறது” என்றனர் வைதிகர். “என்ன பிழை என்று ஏடெடுத்துப் பாருங்கள். திசைக்குறியும் புள்குறியும் தேருங்கள்” என்று வேள்வித்தலைவர் ஆணையிட்டார்.
அவிபாகம் உணவுக்குவை ஆறிக்கொண்டிருக்க ஆயர்குலத்து மைந்தர் ஐவர் தேடிவந்தனர். ஸ்ரீதமன், அம்சன், சுபலன், ரிஷபன், விசாலன் என்று பெயர் கூறினர். “நந்தகோபன் மைந்தன் கண்ணனின் களித்தோழர் நாங்கள். கன்றுகூட்டி இக்கானகத்தில் மேய்க்கவந்தோம். இங்கே வேள்வி முடிந்தால் அன்னம் இடுவார் என்றான் கண்ணன். பசித்து வந்தோம். உணவருளல் வேண்டும்” என்றனர்.
சினம் கொண்டு நிலைமறந்தார் வேள்வித்தலைவர். அருகே இருந்த தண்டத்தை எடுத்து ஓங்கி ஓடிவந்தார். “விலகிச்செல்லுங்கள் நீசர்களே. தேவர் உண்ணும் அவியை நாய் முகர்ந்து நோக்கியதோ? தெய்வங்கள் அணியும் மாலையை பேய் வந்து சூடலாகுமோ?” என்றார். “உங்கள் கால்பட்ட வேள்விநிலம் கறைபட்டுப் போயிற்று. இங்கே தென்னெருப்பு அணைந்த விதம் ஏனென்று தெளிவாயிற்று” என்றார். அவர் குரல்கேட்ட வைதிகர் எழுந்து கைநீட்டி வசைபாடினர். “இழிபிறப்பாளர் இங்கு எவ்வண்ணம் நுழைந்தார்? மன்னன் கோல் அகன்றதோ? கோட்டை கொடிதாழ்ந்ததோ? வேதச் சொல் வலுவிழந்ததோ?” என்று கூச்சலிட்டனர்.
கண் திகைத்து கால் தளர பின்னகர்ந்து “கண்ணன் சொல் கேட்டு வந்தோம்” என்றான் அம்சன். “ஆநிரைகள் மேய்த்தும் வானிழியும் ஒளியறிந்தும் கைக்குழலில் இசைசேர்த்தும் கானகத்தின் எழில்கண்டும் வாழ்பவர் நாம், வேதப்பொருளுண்ணும் தேவர்களும் நாமும் நிகரே என்றான். அதை நம்பி இங்கு வந்தோம். பிழையெல்லாம் பொறுத்தருள்க!” என்று கைகூப்பி ஸ்ரீதமன் பின்னகர்ந்தான். ஓடுகையில் சுபலன் “ஆயர் உண்ணும் உணவெல்லாம் அனலுண்ணும் அவியாகும் என்றால் இங்குள்ள வேதமறிந்தோர் பொருளறிவார் என்றான். அவன் சூதறியாமல் வந்துவிட்டோம். தீச்சொல் ஏவவேண்டாம்” என்றான்.
“கன்னங்கரியோன். குலமில்லா காட்டுமகன். வேதப்பொருள் நாமறிய தூதனுப்பி உரைக்கின்றான். ஏதறிந்தான்? இனி அவன் இங்குவந்தால் தீதறிவான். நீசன்!” என்றார் வேள்விமுதல்வர். “மூவேதம் ஒலித்த மன்றத்தில் மாடோட்டும் கீழ்மக்கள் விழிபட்ட விழுப்புக்கு வழியென்ன சொல்வீர். இனி நம் எரிகுளத்தில் அனலெழுப்ப என்னதான் செய்வோம்?” என்றார் முதுவைதிகர் ஒருவர். “நூறுமுறை நெய்யூற்றி குங்கிலியம் கூட்டி அனலூதி நோக்கிவிட்டோம். அணைந்த எரி எழவில்லை. அதன் பொருளும் புரியவில்லை” என்றனர் பிற வைதிகர்.
வேள்விக்கூடத்தின் பந்தல்பின் மறைந்து நின்று வந்தவரைக் கண்டேன். சொன்னதெல்லாம் கேட்டேன். ஓசையின்றி பின்னகர்ந்தேன். அடுமனைக்குள் சென்று அன்னம் எடுத்தேன். அறுசுவையும் கூட்டி தொடுகறிகள் கொண்டேன். கைநிறைய அமுதேந்தி காட்டுக்குள் கரந்தோடினேன். என் கால் சுற்றி ஆடை கிழிபடுவதை அறியவில்லை. என் உடலெங்கும் முட்கள் கிழிப்பதையும் உணரவில்லை. காட்டுமரத்தடியில் வேர்க்குவையில் சாய்ந்திருந்த கண்ணன் அருகே சென்று மூச்சிரைக்க நின்றேன். “என்ன இது?” என்றான். “வேள்விக்கு அவி!” என்றேன்.
கரும்பாறை வெடிப்பில் வெள்ளருவி எழுந்ததுபோல் கண்ணன் நகைத்தான். “பசிக்கு உணவாகாது பாழாகும் அன்னம் விடுக்கும் தீச்சொல்லுக்கு வேதமும் விடையல்ல. உங்கள் வைதிகர் வேதச்சொல்லறிவார், பொருளறியார்” என்றான். “நீ மட்டும் எப்படி அறிந்தாய் வேதத்தின் சாரத்தை?” என்றென்னைக் கேட்டான். “கரியவனே, எங்கள் குடிநடுவே மாமரத்தில் குயில் பாடும் நாதத்தில் கேட்டறிந்தேன் வேதத்தை” என்றேன். “இக்குரலா அது? நன்று தேர்ந்து சொல்” என்று தன் குழலெடுத்து இதழ்சேர்த்தான். அக்கானகமே கனவாகி உருகி ஒரு வெள்ளமென ஓடிச்சுழன்று அவனைச் சுற்றிச்சுழிக்கக் கண்டேன். அச்சுழலே நானென்றும் அறிந்தேன்.
காட்டுக்குள் புதரசையும் ஒலிகேட்டோம். எங்கள் அந்தணர்சேரியின் அத்தனை பெண்டிரும் அன்னத் தாலமேந்தி அங்கு வந்துசேர்ந்தனர். “ஆயர்ச்சிறுவர்களே, அமுதுண்டு வாழ்த்துங்கள். எங்கள் குடிவாழ, கொழுநர் நலம் வாழ உங்கள் சொல் நின்று காக்கட்டும்” என்றாள் மூதன்னை ஒருத்தி. “வேதம் தழைக்க உன் வாழ்த்தொன்றே போதும். உன் வாயுரைக்கும் சொல்லெல்லாம் வேதம் கனிந்து சொட்டும் கீதமென்றே முளைத்தெழும். கண்ணா, கரியோனே, உன் விரல் அணிந்த பொடிபட்டு எங்கள் வேள்வித்தூண் பொன்னணிய வேண்டும்” என்றாள் இன்னொரு மூதன்னை.
ஆயர்ச்சிறுவர் அமுதுண்டு மகிழ, அவர் காக்கும் அன்னைப் பெரும்பசுக்கள் சூழ்ந்து கருமணிக் கண்கொண்டு நோக்கி குரலெழுப்பி வாழ்த்த கானகத்தில் இருந்தோம். கரியோன் ஒளிபட்டு கொக்குச் சிறகுகள் மின்னுவதைக் கண்டோம். அவன் விழியருகே வந்த கதிரொளி குன்றுவதை அறிந்தோம். காலடி தேடி கொடிநுனிகள் தவழ்ந்துவந்தன. அவன் கைதொட்டு மீண்ட மண்ணில் விதை முளைத்தெழுந்தது. கன்றுகள் அவன் குரல்கேட்டு நின்று அன்னை அழைப்பதையும் மறந்தன.
ஏதென்று அதையுரைப்பேன்! அன்னைக்கு மகவாக, தோழியரின் தோள்சேர்ந்து, காதலனின் கைபற்றி, கணவனின் உடலணைத்து, மைந்தரின் மார்பறிந்து, பெண் கொள்ளும் நிறைவெல்லாம் அவன் ஒருவன் விழியாலே ஒருங்கறிந்து அங்கிருந்தோம். காலமில்லை. மேலே வானுமில்லை. மண்ணில் நாங்களில்லை. மலைப்பாறை சூடிய மலர்களென உணர்ந்தோம். எங்களை ஒவ்வொன்றாய் உதிர்த்து அவனை வணங்கி நின்ற மலர்மரமே இந்த யுகமென்றறிந்தோம்.
வீட்டில் எங்கும் காணாமல் எங்களை வழிதேர்ந்து தொடர்ந்து வந்து காட்டிலே கண்டுகொண்டனர். “எங்கு சென்று வருகின்றீர்?” என்றனர். “ஆயருக்கு அமுதுடன் சென்றோம்” என்றோம். “கண்ணன் பசி தீர்த்து அவன் கண்ணொளியை கண்டு மீள்கிறோம்” என்றோம். சினந்து முகம் சீறி “என்ன இது? எங்கள் விழியறிவதெல்லாம் மெய்யா? வேதங்கள் உரைப்பதெல்லாம் பொய்யா? உங்கள் நெறியெங்கு சென்றது? அன்னையரே நீங்களுமா அறம் மறந்தீர்? நாண் இழந்து குலம் மறந்து எங்ஙனம் இங்கு வந்தீர்?” என்று கூவினர். “கணவர்களை நீங்கி குழவிகளையும் கைவிட்டு காட்டுக்கு வந்து ஆயர்களுடன் ஆடுகிறீர். கற்பெனும் பெருங்கனலால் இக்கணமே எரிந்தழிவீர்” என்று தீச்சொல்லிட்டார் வேள்வித்தலைவர்.
மழைநனையும் கற்பாறை என முற்றும் குளிர்ந்து அங்கே நின்றோம். “எங்கு சென்றது உங்கள் வேதச் சொல் நெருப்பு?” என்றாள் என் மாமி. “உங்கள் சொல்லெடுத்து இவர்களின் ஒரு கூந்தலிழை பொசுக்கல் ஆகுமோ?” என்றாள் என் அத்தை. வாயிழந்து உடல் தளர்ந்து வைதிகர் நின்றிருக்க மூதன்னை ஒருத்தி ஓங்கி குரலெழுப்பினாள். “வேதமறியோம். வேள்விப்பொருளும் அறியோம். விலகி நின்று நோக்கும் வெறும்பெண்கள் நாங்கள். எங்கள் செவிகளிலே வேதம் ஓதுவதும் கன்றுதேடும் மூதா கூவுவதும் ஒன்றெனவே ஒலிக்கின்றது. வேறாகக் கேட்கும் வெற்றறிவை வேண்டோம்.”
“உங்கள் வேள்வித் தீ அணைந்தமைக்கு நூல் சொல்லும் முறையென்ன?” என்றாள் மூதன்னை. சொல் தயங்கி விழி தாழ்த்தி “கற்புள்ள பெண் வந்து தொட்டால் கனலெழுந்து ஆடும் எங்கள் வேள்விக்கூடத்தில்” என்றார்கள். மூதன்னை கைநீட்டி “இவரில் எவர் வந்து தொட்டாலும் எரியெழும் என்று காண்பீர்” என்றாள். அவள் கைசுட்ட நான் சென்று என் சிறுவிரலால் தீயணைந்த நெய்விறகைத் தொட்டேன். இதழ் எழுந்து நா நீட்டி நடமிட்டது வேள்வித்தீ. திகைத்து என்னைச் சூழ்ந்து “தீதற்ற வடமீனின் திறம் கொண்டோள் குடி வாழ்க!” என்று வாழ்த்தினர் என் குலத்தோர்.
வேதம் எழுந்தது. அப்பால் பசுக்களின் நாதமும் எழுந்தது. கைகூப்பி வணங்கி “கானகன் ஒருவன் காலடியில் மடியும் ஞானம் பழுத்த நிலையனைத்தும் என்று நூலுரைத்த சொல்லறிந்தேன். இனி வேதமென்றாகி நிற்கும் விண்ணளந்த பாதங்கள் அறிந்து பணிந்தெழுவேன்” என்றார் வேள்வித்தலைவர். எங்கள் வேள்விச்சாலையில் சூழ்ந்தமர்ந்து அவர் கூவிய மறைமொழியில் எழுந்த நிறைமொழியை கரியோன் புகழென்று கேட்டு கண்ணீர் உகுத்து நின்றேன்.
கன்னியரே ஏதறிவீர். அலையெழுந்த நதிப்பரப்பில் ஆடி நிற்கும் மலரெல்லாம் வேரூன்றி நின்றிருக்கும் நீராழம் ஒன்றுண்டு. அன்றும் நான் ஆற்றில் இறங்கி ஆழத்தை அடைந்து என் அகத்தை தனித்துணர்ந்தேன். ஆடையின்றி நீந்தும் என் உடல் தீண்டி உருண்டுசெல்லும் நீர்மணிகள் எழுந்து விழிமணிகளாகி ஒரு மாலையென என்மேல் ஓடக்கண்டேன். அவை நீல மலர்மணிகளாகி என் தலைக்குமேல் வெடித்துமலரக் கேட்டேன். ஆழத்தில், இருளாழத்தில், இன்மையின் ஆழத்தில், அதன் எடைமிகுந்த நீலத்தில், பேரழுத்தப் பெருவெளியில் ஒரு சொல்லைக் கண்டுகொண்டேன்.
நானே ஒருபோதும் நாவால் தொடமாட்டேன். என்றோ ஒருநாள் அச்சொல் என்னை கண்டெடுக்கும். தன் பொருளை நானாக்கும். அதுவரை நான் இங்கிருப்பேன். இப்பெயர் கொண்டிருப்பேன். இவையெல்லாம் செய்திருப்பேன். இவையாகி அமைந்திருப்பேன். ஒருசொல்லே அனைத்துமாகும் ஓயாத லீலையென்ன என்றெண்ணி வியந்திருப்பேன்.