199ல் பின் தொடரும் நிழலின் குரல் முதற்பதிப்பு வெளி வந்த போது வசந்தகுமார் கொஞ்சம் மிகைக் கணக்கு போட்டு விட்டார். அப்போது அவர் பதிப்புத் துறையில் கத்துக்குட்டி. அந்நாவலின் பரபரப்புத் தன்மை காரணமாக நன்றாக விற்கும் என்று நம்பி 3000 பிரதிகள் அச்சிட்டார். அது வழக்கமான அளவுக்கு இரு மடங்கு.
ஆனால் நடந்தது நேர்மாறு. அந்நூலை ஒரே வரியில் நிராகரித்தார்களே ஒழிய மார்க்ஸியர் தரப்பிலிருந்து அந்நாவலுக்கு எதிராக ஆழமான ஆய்வுகளோ, திடமான மறுப்புகளோ எழவில்லை. அந்நாவல் வாசிப்பதர்குச் சலிப்பூட்டுவது என்ற வாய்மொழிப்பிரச்சாரம் மட்டும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டது. சலிப்பூட்டும் ஓர் அரசியல் நாவல் என்ற எண்ணம் பரவலாக வாசகர் மத்தியில் சென்று சேர்ந்தது. முதற்சில வருடங்களில் நாவல் மிக மெல்லத்தான் விற்கப்பட்டது. மேலும் நூலக ஆணை அதற்குக் கிடைக்கவில்லை
ஏறத்தாழ பத்தாண்டுகளில் அந்நாவல் விற்று தீர்ந்திருக்கிறது. ஆச்சரியமான விஷயம்தான். அந்நாவலைப் பற்றி இன்றுவரை தொடர்ச்சியாக விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதைச் சார்ந்த கருத்துப் பரிமாற்றமும், பாராட்டுதல்களும் ஓயவேயில்லை. ஆனால் விஷ்ணுபுரம் இதற்குள் நான்காவது பதிப்பைத் தாண்டிவிட்டிருக்கிறது. பின் தொடரும் நிழலின் குரலின் இரண்டாம் பதிப்பு இப்போதுதான் வருகிறது — கணக்குப்படி மூன்றாம் பதிப்பு என்று சொல்லலாம்.
சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னணியில் இந்தியத் தொழிற்சங்க அரசியல் மற்றும் மார்க்ஸியக் கட்சி அரசியல் சந்திக்கும் அறப் பிரச்சினைகளைப் பேசும் நாவல் இது. ஆனால் இன்னமும் விரிவான தளத்தில் கருத்தியல் என்பது எத்தனை தூரம் நம்மை அடிப்படை மானுட அறத்தில் இருந்து திசை திருப்பிக் கொண்டு செல்ல முடியும் என்பதைச் சித்தரிக்கும் ஆக்கம்.