«

»


Print this Post

பின் தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு


199ல் பின் தொடரும் நிழலின் குரல் முதற்பதிப்பு வெளி வந்த போது வசந்தகுமார் கொஞ்சம் மிகைக் கணக்கு போட்டு விட்டார். அப்போது அவர் பதிப்புத் துறையில் கத்துக்குட்டி. அந்நாவலின் பரபரப்புத் தன்மை காரணமாக நன்றாக விற்கும் என்று நம்பி 3000 பிரதிகள் அச்சிட்டார். அது வழக்கமான அளவுக்கு இரு மடங்கு.

ஆனால் நடந்தது நேர்மாறு. அந்நூலை ஒரே வரியில் நிராகரித்தார்களே ஒழிய மார்க்ஸியர் தரப்பிலிருந்து அந்நாவலுக்கு எதிராக ஆழமான ஆய்வுகளோ,  திடமான மறுப்புகளோ எழவில்லை. அந்நாவல் வாசிப்பதர்குச் சலிப்பூட்டுவது என்ற வாய்மொழிப்பிரச்சாரம் மட்டும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டது. சலிப்பூட்டும் ஓர் அரசியல் நாவல் என்ற எண்ணம் பரவலாக வாசகர் மத்தியில் சென்று சேர்ந்தது. முதற்சில வருடங்களில் நாவல் மிக மெல்லத்தான் விற்கப்பட்டது. மேலும் நூலக ஆணை அதற்குக் கிடைக்கவில்லை

ஏறத்தாழ பத்தாண்டுகளில் அந்நாவல் விற்று தீர்ந்திருக்கிறது. ஆச்சரியமான விஷயம்தான். அந்நாவலைப் பற்றி இன்றுவரை தொடர்ச்சியாக விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதைச் சார்ந்த கருத்துப் பரிமாற்றமும், பாராட்டுதல்களும் ஓயவேயில்லை. ஆனால் விஷ்ணுபுரம் இதற்குள் நான்காவது பதிப்பைத் தாண்டிவிட்டிருக்கிறது. பின் தொடரும் நிழலின் குரலின் இரண்டாம் பதிப்பு இப்போதுதான் வருகிறது — கணக்குப்படி மூன்றாம் பதிப்பு என்று சொல்லலாம்.

சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னணியில் இந்தியத் தொழிற்சங்க அரசியல் மற்றும் மார்க்ஸியக் கட்சி அரசியல் சந்திக்கும் அறப் பிரச்சினைகளைப் பேசும் நாவல் இது. ஆனால் இன்னமும் விரிவான தளத்தில் கருத்தியல் என்பது எத்தனை தூரம் நம்மை அடிப்படை மானுட அறத்தில் இருந்து திசை திருப்பிக் கொண்டு செல்ல முடியும் என்பதைச் சித்தரிக்கும் ஆக்கம்.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6150

2 comments

 1. Arangasamy.K.V

  முதன் முதலாக படித்த உங்கள் நூல் இதுதான் , மீண்டும் மீண்டும் இன்னும் படிக்கும் நூலும் … வீரபத்திரனும் அருணாச்சலமும் இன்னும் என்னை பின் தொடர்கிறார்கள் ,

  குட்டி கவுரியை பற்றிய கெகெம்மின் வார்த்தைகள் இன்னும் மறக்க முடியாதவை.,கவிதைகளை தவிர மற்ற எல்லாமும் மனப்பாடம்தான் ,

  உங்கள் மொழி இந்த புத்தகத்திலேயே அணுக்கமாகிவிட்டதால் அப்புறம் எதையும் படிக்க தடை இல்லாமலாயிற்று .
  ஜோணியும் கதிருமே எனக்கு நெருக்கமாக தோன்றினார்கள் அப்போது ,

  அந்த அங்கத நாடகம் …

 2. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ;
  வணக்கம். பின்தொடரும் நிழலின் குரல் மூன்றாம் பதிப்பு வரப்போவது குறித்து மகிழ்ச்சி. நான் பின்தொடரும் நிழலின் குரல் குறித்து உங்களுக்கு எழுதிய விமர்சனம் நினைவுக்கு வந்தது. அது தான் நான் இரண்டாவதாக படித்த மிக சிக்கலான நாவல் அதன் பல பகுதிகளை உள்வாங்கும் திறன் அப்போதில்லை. குறிப்பாக ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படிக்க துவங்கிய காலம் வேறு.

  அதன் பிறகு ஒரு ஆவேசத்தில் விஷ்ணுபுரம். அப்போது விஷ்ணுபுரம் மனதுக்கு மிக நெருக்கமான நாவலாக இருந்தது. ஆனால் இன்று பின்தொடரும் நிழலின் குரலை மீண்டும் மீண்டும் படிக்க நீங்களே சொல்லிருப்பதை போல உங்களின் ஆகச்சிறந்த ஆக்கம் அதுவே. அய்யன்காளி பாபுஜியிடம் ‘ஜெயிக்கும் பொது இருக்கும் திடம் தோற்கும் போதும் உங்களிடம் இருக்க வேண்டும்’ என்று கூறும் இடத்திலும் ‘இது வரை நீங்கள் கேட்ட குரல் சொர்கதிலிருந்து வந்தவை இது நரகத்திலிருந்து வரும் குரல்’ என்று கூறிய பின் பாபுஜி சர்க்கவை தளர விடும் இடம் அதன் பின் பாபுவின் மனம் போகும் விதத்தை நீங்கள் வார்த்தைகளில் காட்டும் உங்களின் வித்தகம் … ஜோனியின் மூலமாக நீங்கள் எழுப்பும் அந்த கேள்விகள்? அதில் வெளிப்படும் ஞான தரிசனம் உங்களை மிக மிக நெருக்கமானவராக உணர வைத்தது. அதன் பல வாசல்கள் இன்னமும் எனாகு திறக்கவில்லை திறக்கும் என்ற நம்பிக்கையிலேயே மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.

  சென்னை புத்தக கண்காட்சியில் உங்களின் பெரும்பானமையான புத்தகங்களை வாங்கினேன். உங்களின் முழுமையான சிறுகதை தொகுப்பை வாங்கி மீண்டும் மண் சிறுகதை தொகுப்பையும் வாங்கி அடடா என என்னைய நொந்து கொண்டேன்.

  அன்புடன்
  சந்தோஷ்

  அன்புள்ள சந்தோஷ், நலம்தானே?

  பின் தொடரும் நிழல் போன்ற ஒரு நூலுக்கு ஓர் எல்லை உள்ளது — ஏற்கனவே அந்த அரசியல் சார்ந்த, அறம் சார்ந்த வினாக்கள் நம் நெஞ்சில் எழுந்திருக்க வேண்டியிருக்கிறது. அரசியலற்ற ஒருவருடன் அந்நூல் உறவாடாது.

  அதன் வடிவம் ஒழுக்கான ஒற்றை பேச்சு அல்ல. அது வாசகனிடம் ஒன்றை சொல்கிறது. வாசகன் அதற்குச் சொல்லக்கூடிய பதிலை ஊகித்துவிட்டு அதற்கான தன் பதிலை மீண்டும் சொல்கிறது. ஆகவே அது ஓர் உரையாடலாக உள்ளது. அதனுடன் உரையாடும் வாசகனுக்கு உரியது அது. அப்படி உரையாடாமல் வாசித்துச் சென்றால் அது துண்டுத்துண்டுக் கதைகளாக தெரியும்

  ஜெ

Comments have been disabled.