கண்ணன் சில ஐயங்கள்

krishna_radha

வெண்முரசு விவாதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

நான் உங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருபவன் என்ற வகையில் மகாபாரதம் தொடர்பான தங்கள் கருத்துக்கள், வாசகர்களின் வாதப்பிரதிவாதங்கள், வாசகர் கடிதங்களுக்கான தங்கள் விளக்கங்களையும் படித்துள்ளேன். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு என் மனதில் எழுந்த சந்தேகங்களைக் இக்கடிதத்தின் வாயிலாக முன்வைக்கிறேன்.

“மகாபாரதத்தை பக்தி பரவசத்துடன் படிப்பவர்கள் படிக்கட்டும். இலக்கியவாசகன் அதை ஒரு செவ்விலக்கியமாக எண்ணி படிக்க வேண்டும்” எனும் கருத்தைப் பதிவு செய்திருந்தீர்கள். அக்கருத்தை நன் முழுமையாக ஆமோதிக்கிறேன். ஆனால் ஒரு சில இடங்களில் அதை முழுமையான செவ்விலக்கியமாக ஏற்க ஒரு சில சந்தேகங்கள் தடையாக இருக்கிறது. குறிப்பாக அது சில இடங்களில் மாயாஜாலங்களையும் தாங்கி இருக்கிறதே? அது ஏன்? ஒரு வேளை நீங்கள் கூறுவதைப் போன்று ஆன்மீகவாதிகளால் அவை பிற்சேர்கையாகவும் இருக்கலாம். அது பற்றி விரிவான விளக்க முடியுமா?

குறிப்பாக கண்ணனின் பிறப்பு சற்றே மிகைப்படுத்தப் பட்டதோ என்பது என் சந்தேகம். தேவகி – வாசுதேவனுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை மூலம் கம்சனின் மரணம் நிகழும் என்பது அசரீரி. பிறக்கும் ஆறு குழந்தைகளையும் தொடர்ச்சியாக கொல்வதை விடுத்தது அவன் தேவகி – வாசுதேவன் சேராமல் பிரித்தே வைத்திருக்கலாமே? மேலும் ஏழாவது குழந்தை பலராமனை தேவகியிடமிருந்து வாசுதேவனின் முதல் மனைவியின் கற்பத்திற்கு இடமாற்றி இலகுவாக பிரசவிக்க முடியுமெனில் கண்ணனையும் அவ்வாறே பிரசவித்திருக்கலாமே? எதற்காக பெருக்கெடுத்த யமுனை பிரிந்து வழி விட, ஐந்து தலை நாகம் குடை பிடிக்க கஷ்டப்பட்டு நண்பரிடம் வாசுதேவன் கொண்டு போய் சேர்க்க வேண்டும். மேலும் கரு இடமாற்றி பிரசவிக்கும் முறை சாத்தியமெனில் முதலில் பிறந்த ஆறு குழந்தைகளையும் அப்படி பிரசவித்துக் காப்பாற்றி இருக்கலாமே? எதற்காக வீணாக கம்சனுகுப் பலி கொடுக்க வேண்டும்? இது தியாகத்தின் முக்கியதுவத்தை கண்பிப்பதற்காக வலிந்து திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.

இது பற்றி தங்களது அபிப்பிராயம் என்ன?

அன்புடன்,
ப்ரியதர்ஷன்

அன்புள்ள பிரியதர்ஷன்,

1. செவ்விலக்கியம் என்ற சொல்லால் எதை உத்தேசிக்கிறீர்கள் என்று புரியவில்லை. செவ்விலக்கியத்தில் மாயக்கற்பனைகள் கூடாது என எவர் சொன்னது? உலகில் மாயக்கற்பனைகள் இல்லாத செவ்விலக்கியங்கள் எத்தனை உள்ளன?

செவ்விலக்கியம் என்றால் ஒன்று ஒரு மரபின் பண்பாட்டின் அடித்தளத்தை அமைக்கக்கூடியது. அல்லது அம்மரபின் மிகச்சிறந்த படைப்பு. செவ்விலக்கியம் என்பது வாழ்க்கையின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதாகவும் பண்பாட்டை முழுமையாகப்பேசுவதாகவும் இருக்கும். மகாபாரதம் அப்படிப்பட்டது

மாயக்கற்பனைகள் இல்லாத இலக்கியமே இல்லை. உலக இலக்கியத்திலேயே ஒரு நூறுவருடக் காலம்தான் மாயக்கற்பனைகள் இல்லாத யதார்த்தவாத இலக்கியம் இருந்துள்ளது. அதன் போதாமைகளை உடனே க்னடுகொண்டு மீண்டும் மாயக்கற்பனைகளுக்கே இலக்கியம் சென்றுவிட்டது.

மாயக்கற்பனைகள் எதற்காகத் தேவைப்படுகின்றன என்று யோசியுங்கள். நிகழ்வுகளை குறியீடுகளாகவோ உருவகங்களாகவோ ஆக்கவேண்டும் என்றால் மாயக்கற்பனை தேவையாகிறது. அவற்றை நீங்கள் சற்று அழுத்திக்காட்டவேண்டியிருந்தாலே மாயக்கற்பனை தேவையாகிறது

அதோடு மனிதன் வாழ்வது இறுக்கமான யதார்த்ததில். அவன் மனம் திளைக்க விரும்புவது கனவில். கனவை வாழ்க்கையுடன் ஊடாட விடுவதற்காகவே அவன் இலக்கியத்தைப் படைக்க ஆரம்பித்திருப்பான். ஆகவே மாயக்கற்பனை என்பதுதான் இலக்கியத்தின் அடிப்படையாக இருக்கமுடியும்

2.மகாபாரதத்திலோ அல்லது பிறநூல்களிலோ உள்ள ‘மிகைப்படுத்தல்கள்’ என்பவை வெறுமே மூடநம்பிக்கையாகச் சொல்லப்பட்டவை அல்ல. ஒரு வாழ்க்கைத்தருணத்தை உச்சகட்டத்தை நோக்கிக் கொண்டுசெல்லவோ, சாதாரணமாகச் சொல்லப்படாத ஒன்றை குறியீடாகச் சொல்லவோ அவை அவ்வாறு சொல்லப்பட்டுள்ளன.

மிகைப்படுத்தல் ஏன் நிகழ்கிறது என்பதை நாம் ஆராயும்போது அவை ஏன் அப்படி வந்தன என்பதைத்தான் யோசிக்கவேண்டும். அவை எதன்பொருட்டுச் செய்யப்பட்டன, அவை குறிப்பது என்ன என்பதே முக்கியமான கேள்வியாக இருக்கவேண்டும்

3. பழைய நூல்களில் மட்டும் அல்ல, இன்றைய இலக்கியத்திலும் கூட இத்தகைய மிகைக் கற்பனைகள் ஏராளமாக உண்டு. யதார்த்தவாதம் என்ற அழகியல்முறையில் மட்டுமே உள்ளது உள்ளபடி கூறுவதுபோன்ற வழக்கம் உள்ளது. நம் வணிக எழுத்து அதிகமும் அதுவே என்பதனால் பொதுவாசகர் அதிகமும் வாசித்திருக்கமாட்டார்கள். மாயயதார்த்தம், மிகுபுனைவு என்று இன்று கூறப்படும் நவீனக் கதைசொல்லல் முறைகளில் மாயமே மிகுதி. அறிவியல்புனைகதைகளெல்லாமே நவீன புராணங்கள்தான் என்பதை மறக்கவேண்டியதில்லை. நீங்கள் ஒரு ஆண்டில் எத்தனை ஹாலிவுட் அறிவியல்புரானங்களைப் பார்க்கிறீர்கள் என்பதை நினைவுகூர்க

4. கண்ணனின் பிறப்பு முதலிய கதைகள் மகாபாரதத்தில் உள்ளவை அல்ல. அவை பாகவதத்தில் உள்ளவை. பாகவதம் ஒரு பக்திநூல். ஆகவே வீரம், அர்ப்பணிப்பு, பக்தி போன்ற மனநிலைகளை உச்சத்துக்குக் கொண்டுசெல்ல அது முயலும். அவ்வகையிலேயே கிருஷ்ணன்பிறப்பு சொல்லப்பட்டுள்ளது. அந்த உணர்ச்சிவேகமே முக்கியமானது. நடைமுறைத் தர்க்கம் அல்ல.

மகாபாரத அழகியலுக்கு பாகவதம் பொருந்தாது என்பது உண்மைதான். ஆனால் நாம் இன்று, கண்ணன் தெய்வமாக ஆனபிறகு, நின்று வாசிக்கிறோம். ஒரேசமயம் தெய்வமாகவும் மனிதனாகவும் கண்ணனைப் பார்ப்பதற்கு நாம் பழகிவிட்டிருக்கிறோம். ஆகவே பாகவதக்கிருஷ்ணனும் மகாபாரதக் கிருஷ்ணனும் முரண்பாடில்லாமல் ஒன்றாக முடிகிறது.

5 கடைசியாக,, நீலம் அதை நடைமுறைத்தர்க்கம் சார்ந்து விளக்கித்தான் செல்கிறது. நீங்கள் என் மகாபாரத நாவல்களை வாசிக்கவில்லை என்று தெரிகிறது. வாசிக்காதவர்களிடம் நான் விவாதிப்பதில் பொருள் இல்லை. ஆனால் நீங்கள் இளம் வாசகர் என்றும் இனி வாசிக்கலாமென்றும் எண்ணுவதனால் இக்கடிதம்

ஜெ


வெண்முரசு விவாதங்கள்


மறுபிரசுரம்- முதற்பிரசுரம்-  Sep 11, 2014 

முந்தைய கட்டுரைசமணர் கழுவேற்றம் பற்றி இன்னும் ஏன் சொல்லப்படுகிறது?
அடுத்த கட்டுரைநூறுகதைகள்- வாசிப்பு