«

»


Print this Post

வண்ணக்கடல் – முரளி


அன்புள்ள ஜெயமோகன் ,

வண்ணக்கடல் படிக்கும் பொழுது சுழற்சியில் சிக்கியவன் போல இருந்தேன் ,படித்து முடித்த பிறகு சுழற்சி நின்று நிரோடத்தின் அடியில் வண்டல் படிவது போல செழுமையான ஒரு அடித்தளம் கிடைத்தது.இளநாகன் உலகம் முற்றிலும் யாதர்த்த நடையும் ,மூலக்கதை மந்திர உலகில் இருபது போல வடிவம் கொண்டுள்ளது ,மேலும் இளநாகன் வரும் பகுதிகள் ஒரு சிறு முன்னுரை போன்றும் ,பாரதத்தின் நில அமைப்பையும் அங்கிருந்த குலக்கதைகளையும் கூறுவது சிறப்பான ஒன்று .வாசகனின் கற்பனைக்கு சவால் விடும் எழுத்து நடை ,அருமையான கதை சொல்லும் உத்தி ,ஆங்கங்கே தொட்டுசெல்லும் நகைசுவை (இளநாகன் பகுதிகளில்) ஒரு அருமையான வாசிப்பனுபவம் இந்த வண்ணக்கடல் பகுதி.

பெரும் வல்லமை கொண்ட அவதார புருஷர்களும் தப்பவில்லை மனிதனிடம் இருக்கும் கீழ்மையில் இருந்து , “தான் ” என்ற சொல் அழியாமல் அந்த அனலை காத்து நிற்கிறது .அதை விட்டு விலகி சென்றாலும் பழகிய நாய் போல வாலாட்டியபடி மனிதனை அவன் “ஆணவம் ” பின் தொடருந்து வந்து கொண்டுதான் உள்ளது.உடல் வலிமையில் ஒரு ஆணவம் ,தான் கற்ற வித்தையால் எழும் ஆணவம் ,உயர்த குடியில் பிறந்ததால் வந்த ஆணவம் ,குருவிற்கு காட்டும் அன்பில் யார் பெரியவன் என்பதில் ஆணவம் , என்று “ஆணவம் ” இல்லாத இடம் இல்லை , மனிதனிடம் தெய்வம் வைத்து அனுப்பிய இணை பிரியா தோழன் ,ஆம் தோழன் தான் ! நெருங்கி பழகும் ஒவ்வொரு நாளும் அவனை நம்மில் நுழையவிட்டு பிறகு நம்மை நாம் அறிய முயன்று கொண்டுளோம் .அவனை பிரியும் கணம் நாம் நம்மை இழக்கிறோம் .அதனால் தான் சூரியன் கொடுக்கும் இடத்தில இருக்கிறான் ,ராவணனிடம் தான் தோற்றுவிட்டதாக ஒப்புகொண்டலும் அந்த கருணையும் ,கொடுக்கும் மனமும் தான் சூரியனின் ஆணவம் அவனை விட்டு பிரியாத தோழன்.அதே நேரத்தில் அந்த தோழனை நாம் நொடி பொழுதும் கவனிக்கிறோம் ,அவன் நம்மை மீறும் கணமும் கோபம் கொள்கிறோம் ,அவன் நம் கட்டுபாட்டில் இருக்க விருபுகிறோம் ,ஆனால் அவன் அப்படியல்ல என்ற கணம் ஏமாற்றம் அடைகிறோம்.

பிறந்த குலத்தால் மனிதனை பிரிதால்வது என்பது இதிகாசம் முதல் இப்பொழுது வரை உள்ளது .இதிகாச காலத்தில் இந்த பிரிவினை இன்னும் பல மடங்கு மேல் உள்ளதாகவே படுகிறது .கர்ணன் முகத்தில் பீமன் உமிழ்த எச்சில் போல ( முகத்தில் எழுந்த அழியா கல்வெட்டென ) அது எபோழுதும் அனலென எரிகிறது .

எந்த ஒரு கலையும் அகம்,புறம் இரண்டையும் இணைக்க வேண்டும் என்பது அர்ஜுனன் துரோணரை சந்திக்கும் முதல் பொழுது “இனி நீ கற்க வித்தைகள் ஏதும் இல்லை ,தனுர்வேதம் உன் அகத்தை முழுமை செய்ய வேண்டும் ” என்று கூறுவார் .

அகங்களுகிடையே ஏற்படும் போராட்டத்தில் ஏன் மனிதன் அறத்தை முற்றிலும் புறம் தள்ளி வைக்கிறான் .கற்றலின் பயன் தான் என்ன ,வேதம் படித்தவனுக்கு ஏன் மானுடம் வேறாக தெரிகிறது நூல் நெறிகள் வகுக்கும் வழிகள் ஏன் துரோணரின் ,கர்ணனின் ,அகத்தை பார்க்க மறுக்கின்றன .

வித்தைகள் கற்பது ஆணவத்தின் உச்சச்தை தொடுவதற்கா ?. கதாயுதமும் ,வில்லும் விழ்த்த மட்டும் தானா ?.என்ற கேள்வியே எங்கும் நிறைந்து உள்ளது .அறத்தை எங்கும் நிறைத்து செல்லும் வண்ணக்கடல் .

பல வரிகள் அற்புதமானவை அதில் சில …..

ஆற்றலை ஒருமுகபடுத்த அளிக்கப்பட்டதே சினம்.

இருளை அறிபவனுக்கு ஒளி துணை நிற்கிறது .

இன்பத்தை நாடுபவன் எதிர்கொள்ளும் மாற்றமில்லா புற உண்மையின் பெயரே துன்பம் .

இருப்பை அறிய இறப்பை அருகில் கொண்டுவந்து நிறுத்த தேவையாகிறது .

மானுட ஆணவம் ஒருபொழுதும் நிறையாது .

ஆணவமளிகும் அறிவே முதன்மையானது .

புகைசுருளென நாம் அறிவது கரும்பாறை மட்டும்தான் .

ஆணவம் மிகவர்களே கொடுக்க முடியும் ,கொடுக்கும் இடத்தில் மட்டும் தான் அவர்களால் இருக்கவும் முடியும் .

வல்லமை என்பது பொறுப்பே என்றறிக.

கருணையே வித்தையை முழுமை செய்கிறது .

எண்ணம் விழியை விட இலக்கை முந்தி செல்கிறது .

மானுட ஞானம் துமி ,உயிர்களின் ஞானம் என்பது துளி .

வித்தை திறனை வளர்ப்பது ,முழுமை செய்யாது ,துயரை அழித்து முழுமை செய்வதே வேதம் .

அகத்தில் பேராற்றல் கொண்டவனுக்கு பெரிய இலக்கு இருக்கவேண்டும் இல்லையேல் பகை வந்து அண்டிகொள்ளும் .

என் கையை விரித்து நான் செய்த வலையே எனகளிக்கும் மீன் ,அது மட்டுமே நான் அறியும் உண்மை

நன்றி,

முரளி

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/61462