ராஜ்கௌதமனின் இரு நூல்கள்

1986ல் சுந்தர ராமசாமியின் காலச்சுவடு இதழுக்கு பேரா. ராஜ் கௌதமன்  ‘தண்டியலங்காரமும், அணு பௌதிகமும்’ என்று ஒரு கட்டுரை அனுப்பியிருந்தார். அன்று அந்த இதழின் படைப்புகளை நான் கைப்பிரதியில் படிப்பதுண்டு. பழந்தமிழிலக்கியம் சார்ந்த அக்கட்டுரை எனக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. அந்தவயதில் புரியாத விஷயங்களை நிராகரிப்பது இயல்பு. நான் நக்கலாக ஏதோ சொன்னேன். கொஞ்சம் கோபம் அடைந்த சுந்தர ராமசாமி ”உங்களை மாதிரி ஒருத்தர் இதை படிப்பார்னு அவர் நெனைச்சிருக்க மாட்டார்” என்றார்

அவரது கோபத்தை உணர்ந்த நான்  அமைதியானேன். ”உண்மையான அறிஞன் யாரா இருந்தாலும் அவன் கிட்ட நாமதான் போகணும்…அவன் நம்ம கிட்ட வரமாட்டான். அவனுக்குன்னு ஒரு பார்வை இருக்கும். அதை பல வருஷமா உருவாக்கிக்கிட்டிருப்பான். அவனை கொஞ்சநாள் பின்னாலே தொடர்ந்து போனாத்தான் நம்மால அவனைப் புரிஞ்சுக்க முடியும்” என்றார்.

அன்று முதல் நான் ராஜ்கௌதமனை கூர்ந்து வாசித்து வருகிறேன். தமிழின் தலைசிறந்த சமகாலச் சிந்தனையாளர்கள் சிலரில் நான் எப்போதுமே ராஜ் கௌதமனைச் சேர்ப்பேன். என்னுடைய திறனாய்வுநூல் ஒன்றை என்னுடைய சிந்தனைகளுக்கு முன்னோடி என்ற நிலையில் அவருக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

பேராசிரியர் ராஜ் கௌதமனின் கட்டுரைகளை இரு போக்குகளாக பிரிக்கலாம். பின்நவீனத்துவச் சிந்தனைகள் சிலவற்றை ஒட்டி அவர் எழுதிய ‘அறம்+அதிகாரம்’ போன்ற கருத்துப் பூசல் நூல்கள். இந்நூல்களில் அவர் பேசும் கருத்துக்களை அவர் சரியாக  உள்வாங்கிக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அவற்றை நான் கடுமையாக நிராகரித்திருக்கிறேன். அவரது இன்னொரு முகம் பழந்தமிழ் மரபுகுறித்து அவரது நுட்பமான ஆய்வுகள். கடந்த இருபத்தைந்தாண்டுக் காலத்தில் பழந்தமிழ் குறித்தும், தமிழ்ப்பண்பாடு குறித்தும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியான மிகச்சிறந்த ஆய்வுகள் என ராஜ்கௌதமனின் நூல்களையே குறிப்பிடுவேன்.

ராஜ்கௌதமன் ஒரு தலித் என தன்னை முன்வைப்பவர். அதனால் தமிழின் நீண்ட பெருமித வரலாற்றுடன் அவர் தன்னை அடையாளம் காண்பதில்லை. அதற்கு வெளியே இருந்து பார்ப்பவராகவே இருக்கிறார். இதன் சாதகமும், பாதகமும் அவரது ஆய்வுகளில் உள்ளன. தமிழர்கள் காண மறுக்கும் தங்கள் பண்பாட்டின் உள்ளறைகளை மனத்தடைகள் இல்லாமல் சுதந்திரமாக திறந்து பார்க்கிறார் ராஜ்கௌதமன். அதே சமயம் அவரது ஆராய்ச்சி தமிழின் கவித்துவ வெற்றிகளையும், தரிசனங்களையும் பொருட்படுத்துவதேயில்லை.

தமிழினி ராஜ் கௌதமனின் முக்கியமான நூல்களை வெளியிட்டிருக்கிறது. சென்ற வருடத்துக்கு முந்தைய வருடம் வெளிவந்த பாட்டும், தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்’ மிக முக்கியமான ஒரு முன்னோடி ஆக்கம். தமிழ்ப் பண்பாடு அதன் அறம் சார்ந்த அதிகாரத்தை எப்படி திரட்டிக் கொண்டு அதனடிப்படையில் தன் சமூகக் கட்டுமானத்தையும் மேல்கீழ் அடுக்கையும்  உருவாக்கிக் கொண்டது என்று அந்நூல் ஆராய்கிறது.

அந்நூலின் வரிசையைச்சேர்ந்தது இப்போது தமிழினி வெளியீடாக வந்துள்ள ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரீகமும்’ தமிழர் பண்பாட்டை ஆராயும்போது தெளிவாக விளக்க முடியாத பல பண்பாட்டு அம்சங்கள் உள்ளன. முதுமக்கள் தாழியில் அடக்கம் செய்வதைப்பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. ஆனால் புதைப்பதும், எரிப்பதும் சமகாலத்திலேயே வந்து விட்டன. எரிபுகுதல் நிகழ்கிறது. அப்படியானால் தாழி நாகரீகம் எது? எதுவரை நீடித்தது?

சங்க இலக்கியத்தில் ஆகோள் பூசல் என்றொரு விசித்திரமான நடைமுறை பேசப்படுகிறது. [ஆ – பசு, கோள்-கொள்ளுதல்]  மாற்று இனக்குழுவின் பசுக்களை கூட்டமாகச் சென்று கவர்ந்து வருவதும் அவர்கள் தேடி வந்து போர் புரிந்து அந்தப் பசுக்களை திரும்ப பெற்றுச் செல்ல முயல்வதும்தான் இந்த நடைமுறை. சங்க காலத்திலேயே இந்த நடைமுறை ஒரு சடங்காக மாறி விட்டிருப்பது தெரிகிறது. அந்தந்த செயல்களுக்குரிய மலர்களைச் சூடிக்கொண்டு ஒரு போர்விளையாட்டாக அதில் ஈடுபடுகிறார்கள். சங்க காலத்தில் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உழிஞை என ஆரம்பிக்கும்  பன்னிரண்டு புறத்திணைகள் பொதுவாக ஆகோள் பூசலின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தச்சடங்கு எங்கிருந்து வந்தது? அது ஒரு அன்றாட வாழ்க்கை முறையாக இருந்த காலம் எது?

சங்க இலக்கியங்களில் பேசப்படும் பரத்தையர் யார்? அவர்கள் எந்த மரபில் இருந்து கிளைத்தவர்கள்? சங்க காலம் ஏன் கற்பு அளவுக்கே களவுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது? சங்ககாலத்துப் பாணர்கள் எந்த மரபைச் சேர்ந்தவர்கள்? ஆரம்பகாலச் சங்க இலக்கியங்களான நற்றிணை குறுந்தொகை முதலியவற்றில் பாணர்கள் மரியாதையுடன் பேசப்படுகிறார்கள். மன்னர்களால் உபசரிக்கப்படுகிறார்கள். பிற்காலச் சங்கப்பாடல்களால கலித்தொகை முதலியவற்றின் பாணர்கள் கூட்டிக் கொடுப்பவர்களாக தரமிழந்து விட்டிருக்கிறார்கள். தலைவியரால் வசை பாடப் படுகிறார்கள். பாணருடன் சேர்வது சமூக இழிவாக கருதப்படுகிறது. பாணர் மரபு ஏன் வீழ்ச்சி அடைந்தது? பாணனின் துணைவியான விறலி யார்? அவளும் பரத்தையா? ஔவையார் தமிழின் பீடுடைய விறலியர் மரபின் கடைசி ஒளி என்று சொல்லப் படுகிறது.

எளிமையாகச் சொல்லப்போனால் சங்க காலத் தமிழ்ப் பண்பாட்டை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று இன்று சில அடையாளங்கள் மூலம் மட்டும் சங்க காலத்தில் இருந்து பிரித்தறியப்படக் கூடிய தொல்மரபு.  அது ஒருவகை பழங்குடி மரபாக இருக்கலாம். அந்த மரபைச் சேர்ந்தவர்கள் பாணனும் விறலியும்.  வேளிர்களும் கடற்சேர்ப்பர்களும் குறவ மன்னர்களும் மலையதிபர்களும் அக்காலத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் பேரரசுகள் உருவாயின. பாணர் போய் புலவர் வந்தனர். காதலும் களியாட்டமும் மறைந்து கவிதை அறத்தையும் அதிகாரத்தையும் பேச ஆரம்பித்தது.

இவ்விரு பகுதிகளுக்கும் இடையேயான உறவைப் பற்றித்தான் இன்றைய தமிழறிஞர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். ஒரு பழங்குடிப் பண்பாடு மெல்ல, மெல்ல நகரியப் பண்பாடாக உருமாறி பழங்குடிப் பண்பாட்டின் பல்வேறு வாழ்க்கைக் கூறுகளை தன்னுள் உருமாற்றி அமைத்துக் கொண்டிருப்பதையே நாம் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். அந்த மாற்றம் ஏன் எவ்வாறு நடந்தது என்பதைப் பற்றிய ராஜ் கௌதமனின் ஆராய்ச்சியும் முடிவுகளும் இந்நூலில் உள்ளன.

ராஜ் கௌதமனின் ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்’ என்ற நூலும் தமிழினியால் வெளியிடப் பட்டிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் உருவான காலகட்டத்தில்தான் அந்த ஆதிக்கத்துடன் ஒத்துழைப்பதன் வழியாக இந்திய முதலாளியம் பிறந்தது. அந்த காலகட்டத்தை ராஜ்கௌதமன் சமூக, இலக்கிய தரவுகள் வழியாக ஆராய்கிறார்.

ராஜ்கௌதமனின் நூல்கள் எளிமையானவை அல்ல. மொழியும் கூறுமுறையும் எளிமையானவை. சொல் மிகையில்லாத திடமான ஆய்வாளானின் உரைநடை அவருடையது. அவர் பேசும் துறைகளில் அக்கறை கொண்ட ஒரு வாசகன் உழைத்துக் கற்க வேண்டிய நூல்கள் அவை.  ஆனால் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுப் பரிணாமத்தை அறிய எண்ணும் ஒரு வாசகன், அதைப் பற்றி ஏதேனும் கருத்துக்களை உருவாக்க முனையும் வாசகன், விவாதித்தே ஆகவேண்டிய நூல்கள்.

முந்தைய கட்டுரைபின் நவீனத்துவம்
அடுத்த கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு