மருத்துவமும் சேவையும்

அன்புள்ள ஜெ

நலமா? தங்களது மகத்தான படைப்பான ‘இரவு’ நாவலைச் சமீபத்தில் வாசித்து முடித்தேன். அற்புதம்.விரிவாகப் பின்னர் எழுத நினைத்திருந்தேன்.

அதற்குள் மருத்துவர்கள் பற்றிச் ‘டாக்டர்கள் என்னும் சேவை வணிகர்கள்’ என்ற தங்கள் கட்டுரை படித்தேன். ஒரு விதத்தில் நீங்கள் கூறுவது யதார்த்தமானது. மருத்துவர்க்ள் மேல் புனிதத் தன்மை ஏற்றப் பட்டதால் நோயாளிகள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். மருத்துவருக்கு எல்லாம் தெரியும் என்றும் அவரால் எல்லாம் செய்ய முடியும் என்றும் நினைக்கின்றனர்.இது நிறைவேறாத போது ஏமாற்றம் அதிகமாகிறது. மருத்துவர்களுக்கும் அது நல்லதல்ல.

ஆனால் இன்னொரு புறம் வெறும் வணிகம் தான் என்று ஆகிவிட்டால் மனிதாபிமானம் போன்ற அடிப்படை அறங்கள் தேவையே இல்லை என்று ஆகிவிடுமே? மருத்துவம் மட்டுமன்றி இலக்கியம், அரசியல், சினிமா என்று எல்லாத் துறையினரையும் புனிதப்பிம்பங்கள் இன்றி வெறும் சேவை வணிகராகப் பார்க்க வேண்டுமா? இதில் சில நன்மைகள் இருந்தாலும் சம்பாதித்தல் மட்டுமே லட்சியமாக ஆகிவிட்ட இச்சூழலை உலகமயமாக்கல் , தாராளமயமாக்கல் போன்ற கொள்கைகளின் சாபக்கேடு என்று சொல்லலாமா? இந்த அணுகுமுறைதான் பயனுள்ளது என்று நீங்கள் கூறுவது வேறு வழியில்லை என்ற விரக்தியிலா?

சரவணபவன் உரிமையாளர் அருமையான சேவை வணிகர்தான் என்றாலும் நம் மனத்தில் என்றும் ஆதர்சமாக இருப்பவர் கெத்தேல் சாஹிப் அல்லவா?

“பின் குறிப்பு: நீங்கள் ‘ஒரு டாக்டர்’ என்ற பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த ஆடியோ ஃபைலைக் கடுமையாகக் கண்டித்து நான் முகநூலில் நிலைத்தகவல் இட்டிருக்கிறேன்.”

அன்புடன்
டாக்டர். ஜி, இராமானுஜம்
நெல்லை

அன்புள்ள ராமானுஜம் அவர்களுக்கு,

நான் சொன்னது மீண்டும் மீண்டும் நான் சொல்லிவருவதே. ஒரு தொழில் அது எதுவாக இருந்தாலும் தன்னளவில் தெய்வீகமோ, மதிப்புக்குரியதோ ஆகும் நிலை முதலாளித்துவத்தில் இல்லை. தொழில் லாபநோக்கம் கொண்டது மட்டுமே. எனவே அதற்கு அந்த மதிப்புக்கு அப்பால் ஏதும் வழங்கப்படக்கூடாது. அப்படி வழங்கும்போது அந்த தொழிலின் லாபநோக்கத்தை கட்டின்றி ஆதரித்து வளர்ப்பதாகவே பொருள் உருவாகும். அதன் இழப்பு அதை மிகையாக மதிப்பிடும் நுகர்வோருக்குத்தான்.

இயற்கையில் ஒவ்வொரு விசையும் இன்னொன்றால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புல் வளர்ந்து பூமியை மூடிவிடும். அதைமேயும் உயிர்களும் மழையும் அதை கட்டுப்படுத்தும். அதேபோல முதலாளித்துவம் எதற்கும் அதைக் கட்டுப்படுத்தும் இன்னொரு விசையை கண்டடைந்துள்ளது. அவ்விசை இணையான ஆற்றல் கொண்டிருக்கவேண்டும்.

எந்த வணிகமும் தொழிலும் அதிலுள்ள ஒழுக்கநெறிகளால், அதைச்செய்பவர்களின் அகச்சான்றால் மட்டும் கட்டுப்படுத்தப்படமுடியும் என முதலாளித்துவம் நம்பாது. அதைக்கட்டுப்படுத்தும் விசை அதேயளவுக்கு வல்லமைகொண்டதாக இருக்கவேண்டும் என்றே எண்ணும்.

மருத்துவத்தொழிலை நுகர்வோரின் கவனமும் மருத்துவ ஞானமும் கட்டுப்படுத்தியாகவேண்டிய காலம் வந்துவிட்டது. நுகர்வோர் அமைப்புகள், சட்டபூர்வ பாதுகாப்பு போன்றவை மருத்துவர்களுக்கு எதிரான விசையாகச் செயல்பட்டாகவேண்டும் இன்று. மருத்துவர்களையே சேவை வணிகர்கள் என்று கண்டு அவர்களுக்குள் வணிகப்போட்டி நிகழும்படி செய்தாகவேண்டும்.

அப்போதுதான் முழுக்கமுழுக்க லாபநோக்கு மட்டுமே கொண்ட இன்றைய மருத்துவத்தை முறைப்படுத்தமுடியும். வணிகத்தை தெய்வமாக பூசை செய்தால் அது எல்லையற்ற காணிக்கை கேட்கும். பக்தர் உயிரை பலியாகக் கேட்கும். இவ்வளவுதான் நான் சொல்வது

ஆனால் எந்த ஒரு தொழிலும் சேவையாக ஆக முடியும். அதைச் செய்பவர் லாப நோக்கு கொண்டவரா , அதன் விளைவுகள் சமூகநலன் கருதியவையா என்பதே அளவுகோல். அப்படி தன்னலமற்றுச் செய்யப்படும் எதுவும் யோகமாக ஆகமுடியும். அப்படி பிறதுறைகளில் உள்ள கர்மயோகிகளைப்போலவே மருத்துவத்திலும் சிலர் உருவாகி வரக்கூடும்.

அப்படிப்பட்ட பல மருத்துவர்களை நான் அறிவேன். டாக்டர் தம்பையா போல. தெரிசனங்கோப்பு மருத்துவர் மகாதேவன் போல. கர்மயோகியாகிய காந்தி பற்றிய நூலையே நான் ஈரோடு மருத்துவர் டாக்டர் ஜீவானந்தம் அவர்களுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்

எந்தத் துறையானாலும் அதில்செயல்படுபவர்களின் இயல்பையும் பங்களிப்பையும் மட்டுமே மதிப்பிடுவதற்கான அளவுகோலாகக் கொள்வோம். எழுத்தானாலும் மருத்துவமானாலும்.நான் சொல்லவருவது அதையே. அந்தவேறுபாட்டை கணக்கில் கொள்ளுவதே நாம் உண்மையான சேவையாளர்களுக்குச் செய்யும் மரியாதையும் கூட

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 23
அடுத்த கட்டுரைநினைவஞ்சலி : சு.கிருஷ்ணமூர்த்தி