‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22

பகுதி ஏழு: 3. அதுவாதல்

கொல்லும் குழல். கல்லைத் தொட்டெழுப்பி பெண்ணாக்கும் கழல். காரிரும்பின் உள்ளே கனிவெழுப்பும் தழல். காற்றாகி உருகி இசையாகிப் பெருகி நிறைந்திருக்கும் இருளே. குருதியுமிழ்ந்து இவ்வண்டப்பெருவெளியை ஈன்றிட்ட அருளே. என் ஐம்புலன்களும் குழவிகளாகி முட்டிமுட்டி மோதிப்புரளும் முலைகிளர்ந்த பன்றி. பசித்த வாய்திறந்து ஈன்ற மகவை மென்று நாசுழற்றும் சிம்மம். தின்று தின்று தானே எஞ்சி தன் வாலை தான் விழுங்கும் நாகம். நாகமணி நீலம்.

என் நெற்றிப்பொட்டில் விழுந்த எரிவிண்மீன். விண்ணிழிந்து மண் நிலைத்த ஒற்றை மழைநூல். குழலே, கொல்லும் குழலே. குழலாகி வந்ததுவே, எரிந்து எரிந்து இப்புவியை அழிக்கும் அழலே! அனலாகி கதிராகி தழலாகி கரியாகி ஒளியாகி வெம்மையாகி நின்றிருக்கும் இருளே. அழியாதெழுக நீ. அதிவிதுவென தீண்டி அனைத்தும் ஆளவென மூண்டு இங்கெழுந்து ஆடுக! ஸ்வாகா! சுவைதேடும் உன் ஒளி நாவுக்கு ஸ்வாகா! உன் அணையாப்பெரும் பசிக்கு ஸ்வாகா! நீ உண்ட அகிலங்களுக்கு ஸ்வாகா! நீ எழுந்த ஆயிரம் நெய்க்கடல்களுக்கு ஸ்வாகா!

என் இருள்சுருண்டு நிறை திரண்டு பாறையென்றாயிற்று. நிலையழிந்து உருண்டுவந்து இம்மலைவிளிம்பு நின்றேன். காலடியில் ஓடி தொலைவெளியை தொட்டெழுந்தது நீலவானம். சொல்லிச் சொல்லி உலைகின்றது என் கால்சதங்கை. இங்கே சொல்லாத அனைத்துமாகி அமர்ந்தேன். மன்று எழுந்த சொல்லும் அன்னை நெஞ்சுரைத்த மொழியும் என் குலத்து மரபுரைத்த நெறியும் உருகிவழியும் எரிபீடம். கனல்கொண்டு சிவந்த கருபீடம். எந்தையரும் என் மைந்தரும் சிரமற்று துடிக்கும் குருதிப் பலிபீடம். அதில் தழலாடி நிற்பது நானல்ல, நீ.

ஆதலென்று இங்குள்ளன அனைத்தும். பெருங்காதலென்று கரந்துள்ளதோ நான்! வெறும் போதமென்ற வெண்நுரை. கோதறிந்த தும்பியென என் சித்தம் துளைத்ததோ நீ! சாதலென்றும் வாழ்தலென்றும் இல்லை. தீதறிந்து விலக்கலாகுமோ? நன்றறிந்து நிற்கலாகுமோ? கண்ணழிந்து காலழிந்த வெளியிருள்! ஒரு சொல்லெழுந்து விரிந்த விண்மீன் வெளி. அவை கண் கனன்று எரிந்துதிரும் சாகரப் பெரும்பாழ். இங்குளேன் இங்குளேனென்று ஆயிரம் கரைப்பாறைகளில் அறைந்து அறைந்து சிதறித் துளித்துத் துமித்து அலறியாடும் பெரும்பித்து நான்! மேலே அசைவற்ற வடவிண்மீனின் அழியாப் புன்னகை நீ!

ராதை ஏதும் அறியவில்லை. அவளைச்சூழ்ந்து பேசி நகைத்து உண்டு அமர்ந்து கிடந்து அமைந்தவர் அவளையும் அறியவில்லை. மாலை வெயிலெழுந்ததும் மணமகன் இல்லத்தார் மூத்தாரை வணங்கி விடைகொண்டனர். “என் இல்லத்து விளக்கை நான் கொண்டுசெல்ல ஒப்புங்கள்” என்று கைகூப்பி கேட்டாள் ஜடிலை. “மங்கலநாண் கொண்டு மணமகன் கைப்பற்றியதுமே அவள் உங்கள் மகள்” என்றாள் கீர்த்திதை. துர்மதர் சென்று இந்துவின் கைதொட்டு வணங்கி விடைகொண்டார். மைந்தர் சூழ மகிபானு எழுந்து வாயில் வரை வந்து வழியளித்தார். குடிலை ராதையின் கரம்பற்றி “எழுக, நம் இல்லம் சேரும் நேரம் அமைந்தது” என்றாள்.

கண்ணீர்விழிகளுடன் கீர்த்திதை ராதையின் தோள்பற்றி இதழசைத்து சொல்லசையாது நின்றாள். கீர்த்திமதி “மூதன்னையர் வாழும் மூன்றாமுலகில் உன் ஒவ்வொரு சொல்லுக்கும் கணக்குண்டு. உன் ஒவ்வொரு அடிக்கும் அளவுண்டு. இக்குடி நிறைந்து வளர்ந்தாய். அக்குடி நிறைய வாழ்வாய்” என்றாள். லலிதையும் விசாகையும் ராதையின் இரு கைகள் பற்றினர். லலிதை “மீன்கொத்தி ஒன்று மின்னி கடக்கும் தொலைவுதானடி. அங்கிருந்தாலும் நீ இங்குமிருப்பாய்” என்றாள். விசாகை புன்னகையில் கண்ணீருடன் “சென்றுவருக தோழி. இளமையென்பது காலையிளவெயில் என்பார்கள். மாலையிலும் பொன்னொளிரும் வெயிலெழும். அப்போதும் நாம் சேர்ந்திருப்போம்” என்றாள்.

அன்னையரை அடிதொழுது குடிமூத்தார் சொல்பெற்று ராதை கிளம்பினாள். உருளும் விழிகளுடன் ஒரு சொல்லும் பேசாமல் கணவன் கைபற்றி காலெடுத்து வைத்து அவள் இல்லம் நீங்கக் கண்டு ரிஷபானு விழிநீர் வழிய உதடுபூட்டி நின்றார். கொழுநன் குடைநிழலில் அவள் செல்வதைக் கண்டு உயிர்நீங்கிச் சென்றதை உடல் நோக்கும் நிலையிது என்று அறிந்தார் ரிஷபானு.

“என் மகளே” எனக்கூவி அவள் பின்னால் எழுந்தோடிய அன்னையை ஆயர்மகளிர் கைபற்றி நிறுத்தி “என்ன வினை செய்தாய்? மங்கலம் கொண்டு மகள் செல்லும்போது பின்னால் அழைக்கும் பெரும்பிழை ஆற்றலாமா?” என்றனர். “என் நெஞ்சில் பூத்தமலர் நீங்கியது இன்று” என்று கூவி உடல்சோர்ந்து தரைசேர்ந்தாள் அன்னை. அவள் தங்கை அருகமர்ந்து “மணம்கொடுத்த மங்கை கடன்கொடுத்த செல்வம் என்பார் மூத்தோர். வட்டியுடன் திரும்பிவந்து நம் கையில் சேர்வாள்” என்றாள்.

கண்மறையும் வரை நோக்கி நின்ற லலிதை கால்சலங்கை ஒலிக்க கைவளைகள் குலுங்க அவர்களை தொடர்ந்தோடினாள். அவளுடன் கோபியர்குழாம் சேர்ந்தோடியது. யமுனைக்கரைமேட்டில் நின்று படகேறும் ராதைக்கு கைவீசி விடைகொடுத்தனர். நீர்ப்பரப்பில் படகெழுந்து விலக அங்கே நின்ற புன்னைமரத்தின் கிளைகளில் ஏறி நின்று கூவினர். பெண்பூத்த புன்னை நீர் தொட்டு தாழ்ந்து ராதையை வழியனுப்பியது.

இல்லம் சேர்ந்ததை ராதை அறியவில்லை. அவள் விழியிருளக் கண்டு ஜடிலை “என்ன பார்க்கிறாய்?” என்றாள். “அங்கே குழலிசைப்பது யார்?” என்றாள் ராதை. அன்னையும் மகளும் அரைக்கணம் விழிதொட்டு மீண்டனர். “ஆயர்ச்சிறுவர் கன்றுசூழும் காடுள்ளது அங்கே” என்ற ஜடிலை “வலக்கால் வைத்து வாழ்த்துமொழி சொல்லி எங்கள் மனைநிறைக்க வருக” என்றாள். குத்துவிளக்கேந்தி மாமங்கலை ஒருத்தி மஞ்சள்நீரும் மலரும் காட்டி வரவேற்க இடையில் பாற்குடமும் வலக்கையில் நெய்ச்சுடரும் ஏந்தி ராதை நுழைந்தாள்.

புதுக்கலத்தை அடுப்பிலேற்றி பால் பொங்கவைத்தபோது நுரை எழுந்து நுனி தொட்டு காற்றில் பறக்கும் நேரம் திகைத்தவள்போல் ஒரு கணம் நோக்கி தவிப்போடு கூடத்தை திண்ணையை முகப்பை நோக்கி உள்ளே மீண்டாள். உள்ளறைகளை கொல்லையை தொழுவத்தை நோக்கி ஏக்கத்துடன் வந்தாள். பின் மீண்டும் முற்றத்துக்கு ஓடி வாயில் கதவுபற்றி நின்றாள். அப்பாலெழுந்த பாதைச்சுருளின் நுனியை, அங்கே இறங்கி ஒளிர்ந்த வானை, இளங்காற்றில் ஆடிய மரக்கிளைகளை, இலைநுனி ஒளித்துளிகளை நோக்கி விழிமலர்ந்து நெஞ்சுலைந்து கால்தளர்ந்து கை குழைய நின்றாள்.

“என்ன பார்க்கிறாய்?” என்று ஜடிலை கேட்க “யார் வந்தது?” என்றாள். “யாரை நீ எதிர்நோக்கினாய்?” என்று ஜடிலை கேட்டாள். “எவரோ அறியேன். என் முற்றம் தீண்டும் காலடி ஒன்றை எப்போதும் அறிகிறேன். அப்பால் ஒரு குழல்நாதம் எழுந்து சுழலக்கேட்கிறேன். எங்கிருந்தாலும் என்னுடனிருக்கும் இருப்பொன்றை உணர்கிறேன். ஆடைநுனியென என் அகம் பறக்கச்செய்யும் இளங்குளிர்காற்று. என் ஆத்மாவை படமெடுத்தாடச்செய்யும் மகுடி. நான் அறிந்து மறந்து மீளமறுக்கும் இளமாலைப் பண். முற்பிறப்பில் விலகி இப்பிறப்பில் எனைத்தேடும் பழைய உயிர்.” ஜடிலை குடிலையை நோக்கி “அறிந்தது அல்லவோ அனைத்தும்? ஆவன செய்யடி” என்றாள். ராதையை உள்ளறைக்குக் கொண்டு சென்று அமரச்செய்த குடிலை கதவை மூடி வெளியே தாழிட்டாள்.

மாலைசூழ்ந்ததும் மணமகனை ஆயர் புடைசூழ ஆற்றில் நீராட்டி அழைத்து வந்தனர். வெண்ணிற ஆடை அணிவித்து மலர்மாலை சூட்டி புனுகும் சவ்வாதும் பூசினர். “புதுமலரை கொய்பவன் பூமுள்ளை விரும்புவான். இளங்கன்றை வெல்பவன் தானும் துள்ளியாக வேண்டும்” என்று சொன்ன ஆயரிளைஞன் ஒருவன் நகைத்து அவன் தோள்தழுவினான். “வண்ணத்துப்பூச்சி இறகை வண்ணம் விரல் படாமல் பற்றும் கலை அறிக. தழலாடும் நெருப்பை கைசுடாமல் தீண்டும் கலை அறிக” என்றான் இன்னொருவன். “இலைநுனிப் பனித்துளி மெழுகிட்ட கைகளில் மணியாகும் என்பார் மூத்தோர்” என்றான் மூத்தோன் ஒருவன். நகைப்பொலியுடன் அபிமன்யுவை அறைசேர்த்தனர்.

குடிலை அறைதிறந்து நோக்க ராதை விழித்தெழுந்து “வந்துவிட்டானா?” என்றாள். “ஆம், இன்று உன் அறைமங்கல நன்னாள்” என்றாள் கூடவந்த ஆய்ச்சி ஒருத்தி. ராதையை நீராட்டி மெல்லுடை அணிவித்து நறுமலர் சூட்டி வாசநீர் தெளித்து கைப்பிடித்து கொண்டுசென்றனர். “ஊறிப் பெருகி எழுந்து ஊழிப்பெருக்காகி மூழ்கடிக்கும் கலையறிந்தது நீர். நதிசெல்லும் வழியை மண் அமைத்த தெய்வங்கள் வகுத்துள்ளன தோழி” என்றாள் அறைமங்கலத் தோழி. “சொல்லின்மை என்பதோர் பெருவல்லமை பெண்ணுக்குண்டு. வெல்லும் சொல் அறிக. மலர் கனியாகுக” என்று சொல்லி ராதையை கதவு கடந்து கால்வைக்கச் செய்தாள்.

மஞ்சத்தருகே எழுந்து நின்று மயங்கும் விழிகொண்டு தன்னை நோக்கிய அபிமன்யுவை ராதை புன்னகையுடன் பார்த்து “வேய்குழலை எங்கு வைத்தாய்? வேணுவனமே நீயாகி எழுந்த இசைகேட்டேன். உன் காலடிக்காய் என் பாதை காத்திருந்ததை அறிந்தேன்” என்றாள். விழியொளி அணைந்து அகமுனை கூர்கொள்ள “எவரைச் சொல்கிறாய்?” என்றான் அபிமன்யு. “உன் குழலோசை கேளாத ஒரு கணமும் செல்லவில்லை. என் அகமும் ஆடைமூடிய உடலும் என்னைச்சூழ்ந்த பொருள்வெளியும் அதில் நிறைந்த வான்வெளியும் அதிலூறும் ஒளியும் உன் இதழ்நாத ஏழ்வண்ணம் மட்டுமே. பண்ணெனும் சிறுவிரல் தொட்டுத்தொட்டு வரைந்தெடுத்த ஓவியம்! நலுங்கியசையும் வெண்பட்டுத்திரை!” என்றாள்.

மூச்சிரைக்க முகம் மலர அவள் சொல்லிறைத்துச் சென்றாள். “சிறுமொட்டுகளை முட்டிமலரச்செய்யும் கருவண்டு எழக்கேட்டேன். நீரோடைகளில் வேர்நுனிகள் அள்ளும் குளிரை தொட்டேன். வான்பறக்கும் சிறகுகளை அளையும் விரல்களை கண்டேன். எங்கிருக்கிறேன் நான் என்று உன்னைக் கேட்டேன். என்னுடன் என்று நீ சொன்னாய்.” விழி ஒளிர நகைத்து “ஆம், அறிவேன், என்றும் எப்போதும் நான் தனித்திருந்ததில்லை என்று சொன்னேன். நீ நடந்த புல்நிமிரும் முன்னே என் பாதம் பட்டு விடும். நீ தொட்ட பண் எழும் முன்னே என் செவிகள் கேட்டுவிடும்!” என்றாள். மஞ்சத்தில் சென்றமர்ந்து “நான் இங்கு வரும் வழியை அமைத்த அத்தனை காற்றுகளையும் அறிந்திருந்தேன்!” என்று சொல்லி நெஞ்சில் கைசேர்த்து “எத்தனை எளிய வழி. பறவைகளின் சிறகறியும் வழி அல்லவா அது?” என்றாள்.

“ராதை, உன் சொற்களை நீ அறிகிறாயா? பிச்சியா நீ?” என்றான் அபிமன்யு. மெல்ல அவள் அருகே வந்து இருகைவிரல்களையும் தன் கையில் எடுத்து “என் விழிகளைப்பார். நான் உன்னை மணம் கொண்ட ஆயன். என் பெயர் அபிமன்யு” என்றான். அவள் அவனை ஏறிட்டு நோக்கி “நான் இங்கிருக்கிறேன். இது மிக ஆழம். இருள். ஆனால் இசை இங்கே வரும்” என்றாள். “ராதை நான் உன் கைப்பிடித்தவன். உன் தாலி என்னுடையது” என்று அவன் சொன்னான். “நெடுந்தொலைவு! ஆனால் சென்றுவிட முடியும். எல்லா தொலைவும் சுருண்டு சுருண்டு ஒரு நூல்கண்டாகி சுற்றியிருக்கும் உன் குழல்!” என்றாள்.

பெருமூச்சுடன் அவன் பின்னகர்ந்து அவளைநோக்கி நின்றான். முகத்தசைகள் மெல்ல தணிந்தன. பின் அவன் கைகளும் தோள்களும் முறுக்கவிழ்ந்தன. ஈரத்துணி போல குளிர்ந்து கனத்த உடலை அசைத்து அறைமூலையில் இட்ட மரப்பீடத்தருகே சென்றான். அக்கணம் எழுந்த ராதை நடுங்கும் கைநீட்டி உரத்த குரலெழுப்பி “யார் நீ?” என்றாள். “என் அறைக்குள் எவ்வண்ணம் வந்தாய்? யார்?” உலர்ந்த உதடுகளை அசைத்து “ராதை!” என்று சொல்லத்தொடங்கிய அபிமன்யுவை நோக்கி அருகிருந்த குவளையை எடுத்து வீசி அஞ்சிய சிறுபறவையென ஓலமிட்டு “போ, வெளியே போ. என் இல்லத்துக்குள் எப்படி வந்தாய்?” என்றாள்.

விஷநீல நாகங்கள் என அவள் உடலெங்கும் முறுகி எழும் நரம்புகளை, தீப்பட்ட பச்சைக்கொடி போல புரண்டு நெளியும் தசைகளை, மழைசொட்டித் துடிக்கும் இலைநுனிகள் போன்ற விழிகளை, விழுந்துடைந்த ஆடியின் பாவையென கலங்கிய முகத்தைக் கண்டு அவன் அஞ்சி மூச்சிறுகி நின்றான். கைகளால் தன் அருகே அறைந்தும், கிழிபட்டுப் பறக்கும் குரலெழுப்பிக் கூவியும் ராதை துடித்தாள். “யார் நீ? எங்கு வந்தாய்? யார் நீ?” என்றாள்.

கதவைத் தட்டும் ஒலிகேட்டு திறந்த அபிமன்யு விழிதாழ்த்தி “அவள் என்னை அறியாள் அன்னையே” என்றான். “பிச்சி என்றார்கள். இவள் பேய்ச்சியென்றல்லவா தோன்றுகிறது!” என்றாள் ஜடிலை. குடிலை பின்னிருந்து வந்து அறைநுழைந்து “செல்க. நான் இவளை நோக்குகிறேன்” என்றாள். குடிலை அறைக்கதவை மூடி “செல்க. இன்று அஞ்சியிருப்பாள். இது புதிய இடம். நாளை விடிந்து இவ்வூரை இல்லத்தை அவள் அகம் அறிந்தபின்னர் அமைவாள்” என்றாள். அவள் விழிகளை நோக்கி “அன்னையே, தங்கள் அகம் அறிந்து அவ்வண்ணம் எண்ணுகிறீர்களா?” என்றான் அபிமன்யு.

விழிவிலக்கி “நாம் தேடியது நம் குடிவாழ ஒரு மணமகளை அல்ல. நாம் கொண்ட இழிவை வெல்ல ஒரு குலமுத்திரையை. இவள் வயிற்றில் இரு குழவிபிறக்கட்டும். அது நம் குடிக்கொரு கொடியாகும். அதுவரை பொறுத்தாகவேண்டும் நீ” என்றாள் ஜடிலை. “உள்ளே சென்று அவள் விழிகளைப்பாருங்கள். குடல்மாலை சூடி குருதிகுடிக்க எழும் கொற்றவை போலிருக்கிறாள்” என்று சொல்லி வெளியே சென்றான் அபிமன்யு. மெல்ல வெளிவந்த குடிலை கதவை மூடித்தாழிட்டு “சின்னாளென்றாலும் இவள் நம் இல்லத்திலிருந்தாகவேண்டும் அன்னையே. சிறைகொண்ட பறவை போல சிறகடித்துக்கொண்டே இருக்கிறாள். எங்குசெல்வாளென்று தெரியவில்லை” என்றாள்.

மெல்ல சாளரம் திறந்து உள்ளே நோக்கிய ஜடிலை மஞ்சத்தருகே மண்ணில் அமர்ந்து முழங்காலில் முகம்சேர்த்து கருங்குழல் வழியும் இளந்தோள்கள் அதிர்த்துகொண்டிருந்த ராதையை கண்டாள். அவள் உள்ளங்கால்கள் மண்ணில் நெளிந்து அவள் உள்ளம் ஓடும் விரைவைக் காட்டின. “நாம் காணும்போது இவள் இத்தனை பிச்சியென்றிருக்கவில்லை. இன்று என்னாயிற்று இவளுக்கு?” என்று ஜடிலை நெடுமூச்செறிந்தாள். “நம் நல்வினை சூழ நாளை நன்று நிகழுமென்று எண்ணுவோம்” என்றாள் குடிலை.

நள்ளிரவில் ஏதோ ஒன்று தொட்டெழுப்ப குடிலை எழுந்து அன்னையை தொட்டழைத்தாள். “அன்னையே, அறைக்குள் அவள் இருக்கிறாளா என்ன?” ஜடிலை எழுந்து “எங்குசெல்வாள்? கதவுத்தாழ்கள் அப்படியே உள்ளனவே” என்றாள். “இல்லை, அவ்வறைக்குள் இன்மையின் ஒலியைக் கேட்கிறேன்” என்றாள் குடிலை. “என் கனவில் அவள் பொன்னிறச் சிறகு விரித்து யாழென இன்னிசை எழுப்பி எழுந்து பறந்துசெல்லக் கண்டேன்.” ஜடிலை குழலை சுருட்டிக்கட்டி “என்னடி சொல்கிறாய்?” என்றபடி எழுந்து மெல்ல கால்வைத்து நடந்து அறையை அணுகி பிறைக்கண் சாளரம் வழியாக உள்ளே நோக்கினாள்.

“அய்யோடி, அவள் இங்கில்லை” என்று ஜடிலை கூவ “குரலெழுப்பவேண்டாம் அன்னையே. நம் குடிக்கன்றோ வீண்பெயராகும்” என்ற குடிலை கதவுத்தாழ் நீக்கி உள்ளே சென்றாள். மஞ்சத்தில் மரவுரியும் பீடத்தில் பழத்தட்டும் அவ்வண்ணமே இருந்தன. அறைக்குள் நிறைந்த காற்றில் கரைந்தவள் போல அவள் வாசம் மட்டும் எஞ்சியிருந்தது. “அன்னையே நோக்குக” என்றாள் குடிலை. தலைதூக்கி நோக்கிய ஜடிலை புல்கூரை துளைத்து ராதைசென்ற வழியை கண்டாள். அதனூடாக வெளித்த கருவானில் நின்றதிர்ந்தது ஒரு செவ்விண்மீன்.

விழவில் வழிதொலைந்த மகவின் செவிதேரும் அன்னை மொழி நீ. கைநீட்டி கண்ணீர்வார ஓடிவந்து என்னை அள்ளி முலைசேர்க்கும் பெருங்கருணை. நான்குதிசைமுனையும் ஒளிநூலால் இணைத்து வலையாக்கி நடுவே உடலென்னும் விழிகொண்டு அமர்ந்திருக்கும் விஷச்சிலந்தி. விஷநீலம் விரியுமிந்த இரவில் விண்மீன்கள் நடுங்குகின்றன. யமுனை கருமைகொண்டு சுழித்தோடுகிறது. கூந்தல் பெருக்கில் எழுந்த விண்மீன்கள். அலைவளைவுகளிலாடும் நிலவொளி. நிலவு கரையும் நீரலைகள். நீரின் பேரொலி. குனிந்து முகமென்று இருள்நோக்கும் கரைமரங்கள். இந்த இரவு இனிநிகழாது. இது அறியும் சொல் இனி மீளாது. கரந்துறையும் ஒன்று கண்டுகொண்டது களவை.

ஆடும் மரங்களெனும் குவையிருள்கள். அதனூடே ஓடும் பாதையெனும் நீளவடு. என் கால்கொண்ட விழியறியும். என் விழிகொண்ட இருளறியும். நீலவிஷமெழுந்த இரவில் எங்கோ சுடர்ந்து உதிர்கின்றது ஒரு எரிவிண்மீன். யமுனையில் நிலவின்மேல் நீந்துவது யார்? ஆம், அவளை நானறிவேன். பித்தெழுந்த பாவை. ஆயர் குடிமுளைத்த பேதை. யமுனை சுருங்கி ஓர் கருநீல ஓடையாகியது. எந்தக்குழல் எழுப்பும் கருநாதம் நீ? எந்தப் பண்ணின் ஏழு சுரம்? அலையலைகள். ஆடும் நிலாமலரின் இதழலைகள். இன்றிரவில் நான் அன்னையை அணையும் கன்று.

பிருந்தாவனத்தின் பாதை வழியாக ஈர உடை உடலொட்டி இழுபட்டு ஒலிக்க ஓடிக்கொண்டிருந்தாள். எங்கு எங்கென்று ஏங்கும் சிந்தைக்கு இங்கு இங்கென்று விரல் சுட்டின ஒவ்வொரு புதரும். ஆநிரைகள் செவிநிலைக்க பறவைகள் விழிமயங்க மேகக்குவைகள் மோனமலைகளாகி நிற்க எவரிசைக்கும் பேரிசை இப்பிரபஞ்சம்? என் இளநெஞ்சே எத்திசைநோக்கி உருகி வழிந்தோடுகிறது அது? குழலே, வேய்குழலே, உன் முன் விழிமயங்கி நிற்கும் இப்புடவியை என்ன செய்ய எண்ணுகிறாய்?

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

குழலிசையின் இனிமையை நுனிநாக்கில் உணர்ந்தாள். உடலே ஒரு நாவாகி சுவைத்தாள். பண்ணெழுப்பிய வண்ணங்களைக் கண்டாள். ஈரக்குளிராக அந்த இசை சூழ்ந்தணைக்க சிலிர்த்தாள். ஏழுமணம் எழுந்த மலர்வெளி. பனியீரம் நனைந்த முழுநிலவு. அது தொட்டு வருடி சொட்டி வடியும் இலைப்பாளங்கள். ஒளிகொண்ட ஓடைகள். வெள்ளித்தகடான சுனைகள். மணியாகி சுடர் எழுந்த கூழாங்கற்கள். மண்ணில் வழிந்தோடிய பெருமோனம். நடுவே அசைவழிந்த அன்னைப்பசுவின் உடல்சாய்ந்து பொற்குழலை முத்தமிட்டு விரல் மீட்ட இசையாகி நின்றிருந்த ராதையை நோக்கி இல்லம் உதறி ஈர உடையுடன் கண்ணீர் துளி எரிய புன்னகை ஒளி மின்ன ஓடிவந்துகொண்டிருந்தான் கண்ணன்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைவரலாற்றை வாசிப்பதன் விதிகள்
அடுத்த கட்டுரைஜல்லிக்கட்டு தீர்ப்பு