விசிஷ்டாத்வைதம் ஓர் அறிமுகம்

நகைச்சுவை

காசிரங்கா காட்டில் இருந்து விசிஷ்டாத்வைதியான பிரதிவாதி பிரியங்கரம் ஸ்ரீரங்கம் வரதாச்சாரியார் நேராக மதுரா போய் கள்ளக்காதலிசமேத கிருஷ்ணனை சேவித்துவிட்டு டெல்லிக்குச்சென்று தன் மருமான்கள் பாச்சாவையும் கிச்சாவையும் பார்த்துவிட்டு மெதுவாகத்தான் திரும்பி வந்தார். மருமான்களுக்கு டெல்லியின் அதிகாரச் சதுரங்கம் அன்றி வேறெதுவும் தெரியாது. மற்ற எல்லா கிச்சா பாச்சாக்களையும்போலவே ”எங்க அண்டர் செகரடரி ஒரு வேஸ்டு. ஒரு மண்ணும் தெரியாது. ரிசர்வேஷனிலே வந்துட்டான்…”என்ற முதல்வரியுடன் தங்களின் ஆபீஸ் விளையாடல்களை பற்றி ஓயாமல் பேசுவார்கள். அவர்களின் மனைவிமார்களுக்கு பாலிகாபஜாரில் பேரம்பேசும் கலை மற்றும் சினிமா நுண்தகவல்கள் ஆகியவை மட்டுமே தெரியும். ஆகவே ”இங்க அசாமிலே ஒரு சின்ன தத்வ ஸதஸ¤க்காக வந்தேன்பா” என்று சொல்லி வரதாச்சாரியார் நிறுத்திக் கொண்டார். ஏதோ கூட்டுபஜனை என்று அவர்களும் நினைத்துக் கொண்டார்கள்.

விசிஷ்டாத்வைதியான பிரதிவாதி பிரியங்கரம் ஸ்ரீரங்கம் வரதாச்சாரியார் ரயிலில் வரும்போது வேறு ஒன்றும் செய்வதற்கில்லாமல் வெளியே நகர்ந்த பொட்டல்காடுகளைக் கண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தபோதுதான் அவர் ஒரு பெரிய விஷயத்துடன் ஊர்திரும்பும் விஷயம் அவருக்கே தெரியவந்தது. அவரருகே இருந்த மனவாடு ஒருவரின் கையிலிருந்த புளிசாதம் கட்டிய ஈநாடு நாளிதழில் ஜாங்கிரி வரிசையாக தெரிந்த எழுத்துக்களின் நடுவே கோனேரி லட்சுமிநரசிம்மையா எண்ணையூறிய மஞ்சள் பருக்கை ஒட்டியிருக்க ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு அமர்ந்து ‘பீரோமேலே இருந்து தலையணையை எடுடா’ என்னும் பாவனையில் அக்குள் ரோமம் தெரிய கைநீட்டுவதைக் கண்டார். என்ன விஷயம் என்று கேட்டபோது காசிரங்கா காட்டில் நடந்த தத்துவ விவாதத்தில் அவர் லட்டுவை புட்டு வைப்பதுபோல தத்துவங்களை விளக்கி அனைவரையும் வென்ற தகவலை புளிசாத வாயால் எக்குண்டி சுப்பையா நாயுடுகாரு சொன்னார்.

வரதாச்சாரியார் சென்னையில் இறங்கி கையிலிருந்த பணத்துக்கு நல்லியில் நாலைந்து பட்டுச்சால்வைகளும், சரவணாஸில் ஒரு பொற்கங்கணமும் வாங்கிக் கொண்டார். அடுத்த ரயிலில் ஸ்ரீரங்கம் கிளம்பியபோது அவர் முகத்தில் தேஜஸ் இருந்தது. தனக்குத்தானே மெல்லிய மந்தஹாசமும் புரிந்துகொண்டார். ரயிலை விட்டு இறங்கியதுமே அவரை கூட்டிக்கொண்டு போக வந்திருந்த எதிர்வீட்டு அம்பி கோபாலனிடம் ”§க்ஷமமா இருக்கியோ?” என்று கேட்டு ஆசியளித்தார். அவன் கவலைக்குறியுடன் ”ஆட்டோலே போலாம் மாமா”என்றதும் ”நமக்கென்ன? சர்வஜனோ சுகினோ ·பவந்து” என்று சொல்லி தெய்வீகமாக புன்னகை செய்தார். அவனுக்கு பீதி கிளம்பி அவரைப்பார்த்துவிட்டு நாலு பக்கமும் பார்த்தான்.

வெளியே வரும்போது,” காபி சாபிடுறேளா மாமா?” என்றான் கோபாலன்.”சாப்பிட்டா போச்சு . ஆயுஸத்வ·பலாரோக்ய சுஹப்ரீதீ விவர்த்தனஹ!ரஸிய ஸ்னித்த ஸ்திர ஹ்ருத்வ ஆஹாரா ஸாத்விகப்ரியா” என்றார் வரதாச்சாரியார். அவன் திகிலடைந்து அவரைப்பார்த்துவிட்டு பெட்டியுடன் முன்னால்நடந்தான். காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ”என்னடாது கூட்டம் ஜாஸ்தியாயிடுத்து? சம ஸத்ரௌ ச மித்ரே ச ததா மானாபமானயோஹ…”

கோபாலன் மறித்து உள்ளே நுழைந்து ”மாமா, இந்தமாதிரி சுலோகம்லாம் சொல்லாதீங்கோ. ஆட்டோக்காரன் வண்டிச்சத்தம் ஜாஸ்தியா கேட்டுரப்போறான்… போனமாசம் மூணாம் வீட்டு எஞ்சீனியரை தஞ்சாவூரிலேருந்து கொண்டாந்ததுக்கு மூவாயிரம் கேட்டுட்டன். அவரு காரோட ஸீட்டை கிழிச்சுட்டருண்ணு சொல்றான். அது ஏற்கனவே கிழிஞ்சிருந்துண்ணு சொன்னா வக்காளிண்ணு மதுரைப்பக்கம் ஒரு கெட்டவார்த்தை இருக்கே அதை வாய்கூசாமச் சொல்றான் நீசன். அவரு அப்டி ஸீட்டையெல்லாம் கிழிக்கமாட்டார் மாமா, சும்மா அவர் பாட்டுக்கு கிரிக்கெட் கமெண்டிரி சொல்ற ரேடியோ மாதிரி அவரே பேசிண்டிருப்பார். வாங்கோ ” என்றான்.

ஆட்டோவில் ஏறும் முன்பு வரதாச்சாரியார் தன் கையை மார்பில் வைத்து கணீரென்று,”சர்வ ·பூதெஷ¤ யேனைகம் ·பாவமவியயமீக்ஷதே அவி·பக்தம் வி·பக்தேஷ¤ தத்ஞானம் விதி ஸாத்விகம்!” என்றார். ஆட்டோக்கார டில்லிபாபு திரும்பி சற்றே கூர்ந்து நோக்கியபின்,”சந்துக்கு உள்ரயெல்லாம் போவ முடியாது சாமி, வெளியெ எறக்கிவிடுறேன்” என்றான் ”போதும்பா. மாமா ஏறுங்கோ” என்றான் பாபு. ”அஸம்ஸயம் மகாபாஹோ! மனோ துர்நிக்ரஹம் சலம்” என்றார் வரதாச்சாரியார். ஆட்டோ பாபு மீண்டும் திரும்பிப் பார்த்தான். சாவடி தாண்டும்போது அவன் மெல்ல திரும்பி நோக்கி ”சாமிக்கு மெட்ராஸா?” என்றான். ”இல்லே, இங்கேதான். மெட்ராஸ் போயிட்டு அவரே, தனியா, கூட யாருமே இல்லாம,ரயிலிலே வரார்”என்றான் கோபாலன். ”இப்பல்லாம் மொட்டைப்பாட்டிகள் தனியா அமெரிக்கா போயிட்டு வராங்க….போனவாட்டி இப்டித்தான் பாத்தீங்கன்னா…” என்று ஆட்டோ பாபு ஆரம்பிக்க வரதாச்சாரியார் ”குலக்ஷயே ப்ரணயஸ்யந்தி குலதர்மா சனாதனா” என்றார்.

ஆட்டோபாபு சரிந்து அமர்ந்து பாதி கண்ணை பின்னால் திருப்பிப் பார்த்து ”சாமி இப்ப சொன்ன பாட்டுக்கு என்ன அர்த்தம்?”என்றான்..”அதாண்டா, பொம்பிள சிரிச்சா போச்சு” என்றார் வரதாச்சாரியார்.  ஆட்டோ பாபு பரவசமாகி ”இதெல்லாம் பாட்டில சொல்லியிருக்கா சாமி?”என்றான். ”பின்னே இல்லியா? ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய நரகாய ஏவ” என்றார் வரதாச்சாரியார் ”அதாவது சங்கரனைக் கும்பிடுறவங்க குலத்தோட நரகத்துக்குத்தான் போவாங்கன்னு கீதையிலே பகவான் சொல்றார்”. ஆட்டோபாபுவின் பின் கழுத்து புல்லரித்தது. ”நாங்கள்லாம் வீரமுனியசாமியத்தான் கும்பிடுறோம் சாமி” என்றான். ”§க்ஷமமா இருங்கோ” என்றார் வரதாச்சாரியார்.

ஸ்ரீரங்கத்தில் இறங்கியதும் ஆட்டோபாபு அப்படியே புழுதியில் விழுந்து அய்யங்காரை வணங்கினான். அவர் ”ஸ¤கினோ·பவந்து”என்று ஆசீர்வாதம் அளித்தார். கோபாலன் பணம் கொடுத்தபோது ”இருக்கட்டும் சின்ன சாமி.பெரியசாமிய கொண்டாந்துவிட்டது பெரிய ஆசீர்வாதமுல்ல? சாமி, கும்பிடுறேன்” என்று சொல்லி அவன் கிளம்பிபோனான். கோபாலனால் வாயை மூட முடியவில்லை. தெருவில் சில கணநேர ஸ்தம்பிப்பு ஏற்பட்டது.

அலமு மாமி முந்தானையில் கை துடைத்தபடி வந்து ”வந்தாச்சா? ஏது தாக்கலே இல்லியேண்ணு பாத்தேன்… வண்டி லேட்டாடா கோபாலா?”என்றாள். அவள் தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக விசிஷ்டாத்வைதியான பிரதிவாதி பிரியங்கரம் ஸ்ரீரங்கம் வரதாச்சாரியார் கம்பீரமாக காத்து நின்றார். ”என்னடாது, காசைக்கீசைத் தொலைச்சுட்டாரா? ஒருமாதிரி முழிக்கிறார்?” என்றாள் மாமி. ”இல்லே மாமி, எல்லாரும் இப்ப மாமா காலிலே விழுந்து கும்புடுறா”. ”இவா காலிலயா?” என்றாள் மாமி ஐயமாக ”தடுக்கி விழுந்திருப்பா”. ”இல்ல மாமி.நானே நேர்ல பாத்தேன். நம்ம ஆட்டோபாபுவே இப்பதான் கும்பிட்டுட்டு போறான்…” ”தெரியாம கும்பிட்டிருப்பாண்டா…அதான் இப்டி எண்ணைய குடிச்ச எருமை மாதிரி முழிக்கிறாரா..?.உள்ர வரச்சொல்லு. வெந்நி போடுறேன்”

”அலர்மேல் மங்கை” என்றார் வரதாச்சாரியார் ஸ்பஷ்டமாக. மாமி கிட்டத்தட்ட அசரீரி கேட்டதுபோல பிரமித்துப்போனாள். ”ஆச்சரியோ வக்தா குஸலோஸ்ய லப்தாஸ்சரியோ ஜ்ஞாதா குஸலானுசிஷ்டஹ” என்ற வரதாச்சாரியார் இளம் மந்தஹாசத்துடன் ”கடோபநிஷத்தில சொல்லியிருக்கு ஆத்மாவைப்பத்தி தெரிஞ்சு ஞானம் அடைஞ்சவன் ஆச்சரியத்துக்குரியவன்னுட்டு… சேவிச்சுக்கோ” மாமி முகவாயில் கைவைத்து ஒரு கணம் நின்றாள். கோபாலன் தழுதழுத்தகுரலில் ”மாமா,மன்னிச்சுக்குங்கோ நான் நீங்க பழைய ‘மோருஞ்சா’ வரது மாமான்னு நெனைச்சுண்டுட்டேன்..”என்று சொல்லி பாய்ந்துவந்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றான்

மாமி திறந்து விடப்பட்ட எலிபோல நான்குபக்கமும் தத்தளித்து ”இருங்கோ…தோ வந்துடறேன்…கிருஷ்ணா, பெருமாளே, நேக்கு கையும்காலும் ஓடலையே….ஜானகீ இங்கபார்…உங்கப்பாவுக்கு ஞானம் கெடைச்சுடுத்தூ”என்றபடி உள்ளே ஓடினாள். அவள் தாம்பாளத்தில் நீருடனும் மலருடனும் வந்து அவருக்கு பாதபூஜைசெய்து உள்ளே கொண்டு போகும்போது தெருவே அவரைப்பார்க்க கூடிவிட்டது. ஊஞ்சலில் அமர்ந்து ‘தூத்தம்’ சாப்பிட்டு வந்தவர்களை வரிசையாக சம்ஸ்கிருதத்தில் ஆசீர்வாதம் செய்தார். அன்றைக்கென அவர் வாயில் கீதையும் உபநிஷத்துக்களும் பீரிட்டுவந்தபடியே இருந்தன.

மாலைக்குள் ஸ்ரீரங்கம் பிராந்தியத்தின் சகல அய்யங்கார்களும் கலைவேறுபாடின்றி அவருக்கு ஞானம் கிடைத்த விஷயத்தை தெரிந்துகொண்டார்கள். வரதாச்சாரியாரின் தென்கலை சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் உடனே அவருக்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்துவிடலாமென்று எண்ணி சித்ரா டூட்டோரியல்ஸ் மாடியை கேட்டுப்பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஸ்ரீலஸ்ரீ அழகியசிங்க மணவாள வேதாந்த மகாதேசிக  மடத்திலிருந்து அழைப்பு வந்துவிட்டது. வரதாச்சாரியார் தன் சால்வைகள், கங்கணம் எதற்கும் இருக்கட்டுமென எடுத்துக்கொண்ட பழைய நூல்கள் எல்லாமுமாக கிளம்பிச் சென்று பாறையில் ஏணி சாத்தி வைத்ததுபோல நடு உச்சிவரை சென்ற பிரம்மாண்டமான நாமம் தரித்து இருந்த கிழவரை வணங்கினார். ராணுவத்தில் மேஜர் ஆக இருந்து ஓய்வுபெற்று எட்டுபெண்களுக்கு கல்யாணம்செய்துவைத்து பதிமூன்று பேரன்பேத்திகளை பார்த்தபின் துறவு பூண்டு முப்பதுவருடங்களாக ஜீயராக இருந்தார்.

கிழவரின் உடலெங்கும் நாமங்கள் இருந்தமையால் ஏகப்பட்ட அய்யங்கார்களை ஒன்றாகக் குவித்து வைத்திருந்தது போலிருந்தது. காதும் சுத்தமாக கேட்காது என்று தெரிந்திருந்தமையால் வரதாச்சாரியார் நேராகச் சென்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சேவித்தார். ”ராமானுஜமாடா?”என்றார் கிழவர். ராமானுஜம் வரதாச்சாரியாரின் நாற்பது வருடம் முன்பு காலம்சென்ற தந்தை. ”ஆமா” என்றார் வரதாச்சாரியார், சொல்லிப்புரியவைக்க அவருக்கு திராணி இல்லை. ”§க்ஷமமா இரு…ஆச்சாரியன் அனுக்ரஹம் இருக்கட்டும்…” என்ற கிழவர் ”என்ன குடுத்தாங்கோ?”என்றார் ”சால்வை?” ”என்னது,தேவலையா? நோக்கு உடம்பு முடியாம இருந்துச்சா என்ன? அதான் போர்வையால போத்திக்கறயா? இதென்ன கம்பிளியா?சேப்பா இருக்கு?”. ”இது, கங்கணம்…கங்கணம் குடுத்தா…கங்ங்ங்க்கணம்!” ”என்னாது? மங்கையா? அவ போய்ட்டாளே? இந்த கால்தண்டை அவளுதா? பாச்சாட்ட குடுத்துரு…அவன் குடுத்திருவான்”

ஒருவழியாக ஒரு சால்வையும் ஆசியும் பெற்று வெளியே வரும்போது பின்னால்வந்த கணக்குப்பிள்ளை ராகவாச்சாரி ”பணம்லாம் நெறைய குடுத்தாங்களோ? பார்க்க தேஜஸ் தெரியறதே” என்றார்.”போங்காணும்…நானே வெடிச்சத்தம் கேட்ட கோழிமாதரி கெறங்கிப்போய் இருக்கேன். ஓய், இதுட்ட பேசறதுக்கு நேரடியா பெருமாளிட்டயே  பேசிடலாம் போல இருக்கே” என்று சலித்துக் கொண்ட வரதாச்சாரியார் ”அங்க போயி தர்க்கத்திலே ஜெயம் பண்ணிண்டு வந்திருக்கேனாக்கும்…கீதையிலே சொல்றது மாதிரி.. ஸ்ரேயோ ஹி ஞானமப்யாஸா..’ அதற்குள் கூப்பிடாத குரலுக்கு ”தோ…”என்று பதில்கொடுத்து ராகவாச்சாரி நகர்ந்தார்.மேற்கொண்டு என்ன செய்வதெனத்தெரியாமல் வரதாச்சாரியார் சற்றே தயங்கி நின்றபின் எதிரே நின்ற காவல்கார உப்பிலியிடம் ”பன்னிரண்டாம் அத்யாயம் பன்னிரண்டாம் சுலோகம். அதாவது சாஸ்திரப்பயிற்சியை விட ஞானம் மேல்னு சொல்றார் பகவான். ஆம, நீ என்ன கண்டே?” என்று  வெளியே வந்து வீடுதிரும்பினார்.

தெருவழியாக அவர் குடுமியின் கீழே நடந்துசெல்வதை பாரத்மாதா இண்டர்நெட் பிரவுசிங் – பிரிண்ட் அவுட் ரூ 2 மட்டுமே – சென்டரில் இருந்த நாணா பார்த்து அவசரமாக குறுகிய படி வழியாக இறங்கி ஓடிவந்தான்.” மாமா நில்லுங்கோ…சேவிச்சுக்கறேன்…” என்று அவன் குனிய நெரிசலில் ஒரு சைக்கிள் அவன் பின்பக்கம் பட்டு அவன் மண்டையை வரதாச்சாரியார்ரின் இடுப்புக்குக் கீழே அபத்திரமாக முட்டவைத்தது. அவர் பின்னால் விலகி ” ஆயுஷ்மான் ·பவ”என்றபின் ”சொல்ரா” என்றார். ”டெல்லிக்குப் போயி தர்க்கத்திலே ஜெயிச்சுண்டு வந்திருக்கேள்….உங்களைப் பாத்ததுமே எல்லாரும் ஓடிட்டான்னு கேழ்விப்பட்டேன்….அதான்”என்றான்

”பாத்ததுமே பொத்திண்டு ஓடறதுக்கு நான் என்னடா குளிக்காமலா போனேன்?டேய் சாஸ்திரம் பேசி ஜெயிச்சு வந்திருக்கேண்டா” ”சரி மாமா…இப்ப என்ன? நம்ம ஹிந்து தர்மத்த ஜெயிக்க வைச்சுட்டேள்” ”நான் விசிஷ்டாத்வைதத்தைன்னா ஜெயிக்க வைச்சேன்?” ”ஆமா மாமா…அது ஹிந்து தர்மம் தானே?”  ”மத்தவாளும் ஹிந்துக்கள்தானே?” ”அப்ப இன்னும் நல்லது மாமா…அவாளும் ஜெயிச்சுண்டுதானே போயிருப்பா?” ”அதெப்டிடா?” ”மாமா, பேசாதீங்கோ. ஹிந்துதர்மம் என்னிக்குமே தோக்காது…” ”சரிடா அம்பி… அதுபாட்டுக்கு §க்ஷமமா இருந்துண்டு போறது…. வரட்டுமா, நேக்கு இன்னிக்கு பல ஜோலி இருக்கு… ”

நாணா, ”மாமா நம்ம வக்கீலாத்து மாடியிலே உங்களுக்கு ஒரு நல்ல பாராட்டுக்கூட்டம் ஏற்பாடு செய்யலாம்னு இருக்கேன்.. ஒரு சால்வை போத்தி மாலைபோட்டு மங்களபத்ரம், வாசிச்சு…” ”டேய் ஏற்கனவே நம்மாளுக சொல்லியிருக்காங்களே” ”அப்டி கலைபிரிச்சு பண்ணா நல்லாருக்காது மாமா…இதிலே எல்லாரும் வரட்டும்..ஹிந்து தர்மத்தை சேர்ந்த எல்லாருமா கூடி விழா எடுக்கணும்… ” ”அப்டீன்னா நானா ஜாதியும் வருமோடா? அவா கிட்டே நாம ப்ரசாதம் குடுக்கலாம், ஞானம் குடுக்கலாமோ? பகவான் என்ன சொல்றார்னா, குலஸ்ய–” ”படுத்தாதீங்கோ மாமா… நம்ம ரெண்டு குரூப்புதான்… நாயக்கர்போர்வெல்ஸ் முதலாளிட்டே ஸ்பான்ஸர் மட்டும் கேட்டிருக்கேன்…சாயரட்சை வீட்டுக்கு வந்து மிச்சத்தைச் சொல்றேன்…ஜானகி இப்பல்லாம் மெயில் பாக்க வரதேயில்ல…”

மறுநாள் வக்கீல் ஆளவந்தார் வீட்டு மாடியில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் நாற்பது அய்யங்கார்கள் கூடி அமர்ந்து கேஸரியும் பஜ்ஜியும் காப்பியும் சாப்பிட்டார்கள். ”பத்மா, பஜ்ஜியிலே சோடா உப்பு கலந்தியோ? புஸ்ஸ¤ன்னு இருக்கு?”என்றார் உபய வேதாந்த கானசாகரம் பார்த்தசாரதி அய்யங்கார். ”ஆமா மாமா, அவளே சோடாப்புட்டி போட்டுண்டு புஸ்ஸ¤ன்னுதான் இருக்கா” என்றான் கிருஷ்ணசாமி. அவனுக்கு ரெயில்வேயில் எஞ்சீனியர் வேலை. ஒழிந்தவேளைகளில் குமுதத்தில் கதைகள் எழுதுவான். ரங்குமாமாதான் ஆதர்சம்.

”நாலு பஜ்ஜியை எவ்ளவுநேரம்தான் தின்பேள்? கொஞ்சம் பாருங்கோ..விழாவை ஆரமிச்சுடலாம்…ஓய் ரங்காச்சாரி கவனியும்…என்ன பார்வை அங்க? ”என்றார் வக்கீல் ஆளவந்தார். ”அட் திஸ் திவ்ய முகூர்த்தம், வென் த ஹோலி ப்ளெஸ்ஸிங்ஸ் ஆ·ப் அரங்கன் இஸ் போரிங் ஆன் அஸ், வி ஆர் அஸெம்ப்ள்ட் டு கன்கிராஜுலேட் அவர் ஹானரபில் மாமா…”என்று ஆரம்பித்து கூட்டத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். பிரதிவாதி பிரியங்கரம் ஸ்ரீரங்கம் வரதாச்சாரியார் அவர்கள் காசிரங்கா காட்டில் நடந்த தத்துவ விவாதத்தில் மாயாவாதம்பேசி வந்தவர்களையும் சித்தாந்தம் பேசிவந்தவர்களையும் ஓட ஓடத் துரத்தி பட்டுச்சால்வையும் கங்கணமும் பரிசாகப்பெற்று வந்ததை விளக்கி ”ஆன்ட் நவ் இட் இஸ் அகெய்ன் ப்ரூவ்ட் தட் த வைஷ்ணவ தத்துவம்  ஆ·ப் அவர் ஆசாரியன் இஸ் த ஒன் ஆண்ட் ஒன்லி ·பிலாச·பி இன் த ஹோல் வர்ல்ட்..”என்று முடித்ததும் விவாதம் ஆரம்பித்தது.

”மாமா நீங்க அங்க என்ன சொன்னேள், அதைச்சொல்லுங்கோ மொதல்லே” என்றான் நாணா. ”ஆமா அதுக்கப்றம் பேச ஆரமிக்கலாம்”என்றார் வெங்கடரமண தாத்தாச்சாரியார் [உவே]. வரதாச்சாரியார் தொண்டையைக் கனைத்து,”…அதாவது சங்கரன் என்ன சொல்றான்னா…”என்று ஆரம்பிக்கவும் ”…மாமா நம்ம வைஷ்ணவதத்துவம் ராமானுஜர் உண்டுபண்ணினதில்லையோ?சங்கரன்ங்கிறேள்…” என்றான் கிருஷ்ணசாமி. ”…யார்ராவன்? சங்கரனை வெய்யாம எப்டிரா விசிஷ்டாத்வைதத்தப் பத்தி பேச ஆரமிக்கிறது? சுத்தப் புளியோதரையான்னா இருக்கன்?”என்றார் கானசாகரம் பார்த்தசாரதி அய்யங்கார்.”நீங்க சொல்லுங்கோ…”

”அதாகபப்ட்டது நீச சங்கரன் என்ன சொல்றான்னா எல்லாம் ஒரே ஆத்மா, அதுவே பரமாத்மான்னு ஏகான்மவாதம் பேசறான்…  அதை அங்க ஒரு வடக்கத்தியான் குர்த்தா போட்டுட்டு வந்து சொல்றான். ஒரே ஆன்மான்னா நீயும் நானும் ஒண்ணாடான்னேன். ஆமான்னான். அப்டீண்ணா நான் சொல்றது நீ சொல்றதான்னேன்…”

”விடமாட்டானெ?”என்று தாத்தாச்சாரியார் குதூகலித்தார். வரதாச்சாரியார், ”…அவனுக்குத்தான் பிரதிபிம்பவாதம் இருக்கே… பரமாத்மாங்கிற சூரியனோட பிம்பம்தான் ஜீவாத்மாங்கிறான். டேய் அப்ப நீ ஷாக்கடையிலே தெரியற சூரியனைப்பாத்து ஸந்த்யாவந்தனம் செய்வியாடான்னேன். ஆமான்னானே பாக்கணும்” என்றார்

”அப்றம்?” தாத்தாச்சாரியார் கிளுகிளுத்தார். ”விடுவேனா? சரி, எல்லா சூரியபிம்பமும் ஒண்ணுதான் ஷாக்கடையும் தூத்தமும் வேற வேற தானே? தூத்தத்துக்கு பதில் ஷாக்கடையை குடிப்பியான்னேன். சரீன்னு சொன்னா ஒடனே ஒரு கிண்டி ஷாக்கடைய அள்ளி குடுத்துடலாம்னு பாத்தா அவன் அப்டியே ஜர்தாபீடாவை வாய்க்குள்ள போட்டுண்டுட்டானே பாக்கலாம்…ஹெஹெஹெ”

”ஆசாரியன் சொல்றது என்னான்னா…”என்றார் பேரா. மணவாளன் எம்.ஏ.டி.லிட் ”பரமாத்மாவே ஜீவாத்மான்னா ஜீவாத்மா பன்ற சகல மொள்ளமாரித்தனமும் பரமாத்மா பண்றதா ஆயிரும். சீட்டுபோடுறது ஏமாத்தறது பொய்கணக்கு எழுதறது இதெல்லாம் பரமாத்மா செய்றதுண்ணா அப்றம் அயோக்கியனுங்க தப்பிச்சுருவானுக. ஸ்வாமி நான் எங்க பண்றேன்,பெருமாள்னா பன்றார்னு..”

”சீட்டுபத்தி நேரில பேசுவோம்…இங்க வாணாம்”என்றார் ராமசாமி அய்யங்கார். ”இங்க நாம மாமாவுக்கு துண்டுபோத்துறதுக்காக வந்திருக்கோம்”. கானசாகரம் பார்த்தசாரதி அய்யங்கார் ”பிரம்மஸ்வரூபத்தை நாம ஈஸியா தெரிஞ்சுக்க முடியறதில்லை.பாக்கறதெல்லாம் பிரம்மம். ஆனா பிரம்மம்  பிரபஞ்சத்தைவிட இன்னும் பெரிசு…” என்றார். கிருஷ்ணசாமி ரகசியமாக மணவாளனிடம் ”அதுக்கு அவாபோட்டிருக்க சொக்காயே உபமானம். பாதி தொப்பை வெளியே வழிஞ்சிருக்கு” என்றான். ”… எதுக்குச் சொல்றேன்னா உடையவர் அப்பிரதக்ஸித்தின்னு இதைச் சொல்றார். பிரம்மம் ஜீவாத்மா பிரபஞ்சம் மூணும் ஒண்ணு. ஒண்ணிலேருந்து ஒண்ணை பிரிக்க முடியாது…”. ”யாராவது டிரை பண்ணி பாத்திருக்காளா?”என்று கிருஷ்ணசாமி அறிவியல்தாகத்துடன் கேட்டான். சற்று நேரம் அமைதி நிலவியது.

”மாயையை எம்பிரானோட குணாதிசயமா காட்டுறது தப்புன்னு உடையவர் சொல்றார்…”என்று மணவாளன் மீண்டும் ஆரம்பித்தார். ”அவன் சகல கல்யாண குண கோலாஹலன். அவன்கிட்ட மாயை எப்டி தங்கும்? மாயை இருக்கறது நம்ம மனசிலே…நம்ம ஆத்மாவோட யவனிகைன்னா அது? அதை இழுத்துப்போட்டுண்டு உள்ள உக்காந்து சீட்டுப்பணத்துக்கு கள்ளக்கணக்கு எழுதிண்டிருக்கோம்” . ராமசாமி அய்யங்கார் ”சீட்டு பத்தி பேசற எடமில்ல இது…”என்றார்.

”ஸ்வேதாஸ்வேதரோபநிஷதிலே என்ன சொல்லியிருக்குன்னா அபாணிபாதோ ஜவனோ க்ரஹீதா பஸ்யத்யக்ஷ¤ ஸ ஸ்ருணோத்யகர்ணஹ. அதாவது பரமாத்மா கையில்லாம எடுத்துக்கறது. காலில்லாம நடக்கறது. கண்ணில்லாம பாக்கறது. காதில்லாம கேக்கறது.” என்றார் வரதாச்சாரியார். ”கிட்டத்தட்ட இப்ப இருக்கிற ஜீயரை மாதிரியே இருக்குமோன்னு படறது”என்றான் கிருஷ்ணசாமி. அவையில் எச்சில் விழுங்கும் ஒலிகள் கேட்டன. ”சுருக்கமாச் சொல்றதுண்ணா எம்பிரான் முமுட்சுகக்ளில் ஞானமாகவும் பக்தர்களில் ப்ரபத்தியாகவும் புஷ்பங்களிலே சுகந்தம் போலவும் ஜலத்திலே ப்ரகாசம்போலவும் வாக்கிலே அர்த்தம்போலவும் ஸங்கீதத்திலே ·பாவம்போலவும் வாஸம் செய்கிறான்”என்று வரதாச்சாரியார் சொல்வதை பலமாக ஆமோதித்து கிருஷ்ணமாச்சாரியார் ”ஆமா…அதைத்தானே ஆழ்வார் மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்று எவர்க்கும் அதுவே காயமும் சீவனும்தானே காலுமெரியும் அவனே’ன்னு சொல்றார்” என்றார்

”அதெப்டி சொல்லப்போச்சு? மற்று எவர்க்கும்னா எல்லாத்தையும் சேத்து சொல்லிடரதா? ஒரு பேதம் இருக்குல்ல? பரமாத்மாவா இருந்தாலும் அதையெல்லாம் பாத்துன்னா வாஸம் பண்ணணும்?” என்றார்  அதுவரை பேசாமலிருந்த ஸ்ரீனிவாஸன். அவர் வடகலை. ”ஸரீரம் ஸ்ர்வவியாபியான பரமாத்மா வாஸம்செய்கிற கிருஹம்னு சொல்லியிருக்கு.. கிருஹஸ்பதி சும்மா கண்ட கண்ட வீடுகளிலே குடியேறிப்பிடுவானா, வாசல் இருக்கா சன்னல் இருக்கா, கோலம்போட்டிருக்கா சமையல்உள் ஆசாரமா இருக்கான்னு பாக்காமாட்டானா? என்ன பேச்சுபேஷறேள்?”

”அப்ப என்ன சொல்றீர் ஸ்வாமி?”என்றார் தாத்தாச்சாரியார். ஸ்ரீனிவாசன் ”சும்மா நீசபாஷைகளிலே ஏதோ சொல்லியிருக்கிறதை கொண்டுவந்து சொல்லிக்காட்டவேணாம். வைஷ்ணவம்னா மணிப்பிரவாளத்திலேதான் இருக்கும். ஆயிரம் வர்ஷமா கஷ்டப்பட்டு பிராக்டீஸ் பண்ணிடு வர்ர பாஷை அது. என்னத்துக்கு பெரியவா அதை கண்டுபிடிச்சா? நாம வைஷ்ணவா பேஷறது மத்தவாளுக்குப் புரியப்படாது. நமக்கும் கொஞ்சமாத்தான் புரியணும்… நாம பேஷறதை தமிழன் கேட்டான்னா அவன் மண்டைய பிச்சுக்கணும். சம்ஸ்கிருதம் படிச்ச வடக்கன் கேட்டான்ன வேஷ்டிய அவுத்துண்டு வடக்கயே ஓடிப்பிடணும்…இந்த டெக்னிக்கை வச்சுத்தான் நம்ம முன்னோடிகள் ஞான சதஸ¤களிலே ஜெயம் பண்ணி ஸால்வையோட வந்தாங்க…சும்மா அதை விட்டுட்டு ஆயிரம்படி பதினாயிரம் படிண்ணு அளந்து விட்டா எப்டி வைஷ்ணவம் வளரும்? ஓய் நீர் இப்ப ப்ரபந்தம் சொன்னேரே, எவனாம் தமிழ்பண்டிதன் வந்து கேட்டா அர்த்தம் சொல்லிருவீரா ஓய்?” என்றார்

”அதெப்டி? அது ஸமுத்ரமாக்குமே…ஆழம் காண முடியாது.நாம ஏதோ கரையிலே நின்னுண்டு காத்து வாங்கிண்டிருக்கோம்…” ”கரெக்ட். அதாவது காத்துவாங்கறோம்… அப்ப ஒரு நல்ல ஸால்வையை போத்திண்டிருமே….அந்தப்போர்வைதான் மணிப்பிரவாளம். தமிழ்படிச்சவன் வந்தான்னாக்க ஸால்வையாலே முகத்தை மூடிண்டு தப்பிச்சுண்டுடலாம். எதுக்குச் சொல்றேன்னா பிருஹதாரண்யக உபநிஷதத்திலே சொல்லியிருக்கு, அதோ கல்வாஹ¤ காமாய ஏவாயம் புருஷஹ…அதாகப்பட்டது மனுஷாளோட ஆசையும் காமமும் எவ்விதமோ அவ்விதத்திலே மற்ற குணகர்மாதிகள் நிலைகொள்கின்றன…சாந்தோக்ய உபநிஷதத்திலே சொல்லியிருக்கு அதோ கலு க்ருதுமயா புருஷாஹ. என்னன்னா, புருஷன் சிந்தாமயமானவன்…”

இதுவே நொறுக்குத்தீனிக்கு ஏற்ற இடம் என்பதை அனுபவத்தில் புரிந்துகொண்ட வக்கீல்மாமி முறுக்கு அதிரசம் ஆகியவற்றை கூட்டத்தில் பரிமாறினாள். ஸ்ரீனிவாசன் வாயோரம் எச்சில் நுரை ததும்ப பேசி முடித்து ஒரு மெதுவடை எடுத்துக் கொண்டார். சற்றுநேரம் அமைதி நிலவியது. ஸ்ரீரங்கம் வரதாச்சாரியார் துணிந்து பாஷ்யங்களுக்குள் புகுந்துவிடுவோமா என்று சிந்தித்தார். வசமாக சந்து எதுவும் மாட்டவில்லை. மெல்ல கனைத்துவிட்டு ”…அதனாலே நீச சங்கரன் சொல்ற விவர்த்தவாதம் பொய்யிண்ணு சொல்லிப்புட்டேன். பரமாத்மாவிலிலுருந்து பசுவிலிருந்து பால் வர்ரது மாதிரி பிரபஞ்சம் வந்துண்டிருக்கு. ஐந்து முலைக்காம்புகளும் பஞ்சேந்த்ரியங்கள்…” ”நாலுதானே?” என்றார் தாத்தாச்சாரியார் ஐயமாக. ”நாலுதான் கண்ணுக்கு தெரியும்.அஞ்சாவது இந்த்ரியமான மனஸ் சூக்ஷ்மரூபி”என்று விளக்கிய வரதாச்சாரியார் ”…அப்டி பாலை கறந்துக்கறது நம்மளோட மாயைன்னு சொன்னேன். வாயை மூடின்னுட்டான்”

”சிலபேர் அதைக்கடைஞ்சு வெண்ணையே எடுக்கறா”என்றான் நாணா. அது அத்தனை ஆழமாக தோன்றியதால் அதை அவன்தான் சொன்னானா என்ற ஐயம் அறிஞர்களுக்கு ஏற்பட்டு அவனை முற்றாக தவிர்த்துவிட்டார்கள். ராமசாமி ”பரமாத்மா அசல், பிரபஞ்சம்லாம் அதன் வட்டீன்னு ஏன் சொல்லப்படாது? ஜனங்களுக்கு புரியறாப்ல இருக்குமே?” என்றார். மணவாளன் ”அதிலயும் கள்ளக்கணக்கா? கிழிஞ்சது”என்றார் ”சீட்டுப்பணம் பத்தி பேசற எடமில்ல இது.நாம மாமாவுக்கு வஸ்த்ரதானம் பண்ண வந்திருக்கோம்” என்றார் ராமசாமி

கிருஷ்ணசாமி ”என்னமோ சிலந்தியிலேருந்து வலை வர்ர மாதிரீண்ணு சொல்வாங்களே”என்றான். அதற்கும் எதிர்வினை இல்லாது போகவே ”…இப்ப பிரபஞ்சம் ஹார்ட்வேர்னா பிரம்மம்தான் சா·ப்ட் வேர்னு ஏன் சொல்லப்படாது?” என்றான். மேலும் உற்சாகமடைந்து ”நாம பாக்கிறதெல்லாம் அப்டியே விண்டோஸ் விண்டோஸா தெறக்கறது பாருங்கோ…பாபத்தை வேணுமானா வைரஸ¤னு சொல்லிடலாம்…”. ”சொல்லிட்டுபோங்கோ…இப்ப என்ன கெட்டுபோச்சு”என்று தாத்தாச்சாரியார் சொன்னார். ”எதுக்குச் சொல்றேன்னா நம்ம பசங்களுக்கு இப்ப இதெல்லாம்தான் புரியறது…”

”பேஷா சொன்னேள்”என்றார் ஸ்ரீனிவாஸன். ”பரிணாமவாதம் தான் நம்ம ஸம்ப்ரதாயத்தோட ஆதார ஸ்ருதி. ஆனா வெள்ளைக்காரன் சொல்ற பரிணாமத்லே சின்னது பெரிசாறது. நம்ம தத்வத்திலே பெரிசிலேருந்து சின்னது வரது. பிரம்மம் பிரபஞ்சமா ஆறது. ஜீவாத்மாக்களா ஆறது.அப்டித்தான் வடகலையிலேருந்து தென்கலை வந்திருக்கு…” தாத்தாச்சாரியார் ஏதோ சொல்ல வர ஸ்ரீனிவாசன் வேகமாக அதை தாவிக்கடந்து சொல்லிக் கொண்டே சென்றார் ”அதாகப்பட்டது அஹங்காரமும் அதோட சேந்த மமஹாரமும் அக்னியிலே ஸமித்துமாதிரி ஞானத்திலே பொசுங்கின பிறகு தென்கலை வந்து வடகலையோட கால்களிலே பணிஞ்சு இல்லாம போயிடறது…அதை முக்தீண்ணு ஆபஸ்தம்ப ஸ¥த்ர பாஷ்யம் சொல்லுது”., ”யாரோட பாஷ்யம்?” . ”நானே எழுதின பாஷ்யம். அச்சில இருக்கு”

”மாமா அப்டிச் சொல்லாதீங்கோ. நாமெல்லாம் ஹிந்துக்கள். பேதமில்லா ஹிந்துஸ்தானத்தோட பிரஜைகள்…அதனாலே– ”என்றான் நாணா. ”ஆமா…எதுக்கு அந்த பேதம்லாம்?”என்றார் தாத்தாச்சாரியார். ஸ்ரீனிவாசன் கோபத்துடன் ” ஓய், அப்ப பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ரெண்டா ஒண்ணா?” என்று  கேட்டார் . தாத்தாச்சாரியார் ”நம்ம சம்பிரதாயப்படி ரெண்டு…ஆனா” ”ஆனாலாவது ஒண்ணாவது. அதனால வடகலையும் தென்கலையும் ரெண்டுதான். சாஸ்திரத்த மாத்தப்பிடாது….”

வரதாச்சாரியார் ”ஆனா…இப்ப வைஷ்ணவ ஸம்பிரதாயத்லே…” என்று ஆரம்பிக்கவும் ஸ்ரீனிவாசன் எகிறி ”என்னய்யா சொல்றீர்? அப்ப பிரம்மமும் பிரபஞ்சமும் ஒண்ணா? நீச சங்கரனை மாதிரியா நீரும் பேசுறீர்?” என்றார். ”அப்டிச் சொல்லலை” ”பின்ன?” ”இல்ல அதுவேற இது வேறன்னா? ஆழ்வார் சொல்றார் , குறிக்கொள் ஞானங்களால் எனையூழி செய்தவமும் கிறிக்கொண்டிறப்பே சிலநாளில் எய்தினன் யான்…” ”தப்பு தப்பு ”என்றார் ஸ்ரீனிவாஸன். ”ஏன்?”என்றார் வரதாச்சாரியார் குழம்பி. ”தமிழ்லன்னா இருக்கு..அதான்”என்றார் ஸ்ரீனிவாசன் ”ஞானம் வந்தவனுக்கு ஏது இறப்பு? அதான் சொல்றேன், முண்டகோபநிஷதத்திலே என்ன சொல்லியிருக்கு? ந சக்ஷ¤ஷா கிருஹ்யதே நாபி வாசா… பிரம்மம் அதி சூக்ஷ்மமானது.அதை அவிவேகிகள் அறிஞ்சுக்கறது ஸாத்யமில்லை. அவிவேகிகள்னா யாரு?” ”யாரு?”என்றார் வரதாச்சாரியார் பரிதாபமாக. ”அதைத்தான் வடகலை தென்கலைண்ணு அப்பவே பிரிச்சு வைச்சா…” ”அதெப்டி?” என்றார் தாத்தாச்சாரியார் அதிர்ந்து. ”பிரம்மத்தை அறிஞ்சவன் பிராமணன்.வடகலைன்னா பிராமணாள்” என்றார் ஸ்ரீனிவாசன். ”அப்ப தென்கலை? ” . ”அவாள்லாம் தென்கலை, அவ்ளவுதான்”

”ஓய் வடக்கபோயி எவனையெல்லாமோ ஜெயிச்சு வந்தீரே…இவன் வாயை மூடும் ஓய்”என்று தாத்தாச்சாரியார் ரகசியமாகச் சொல்லி வரதாச்சாரியாரின் இடுப்பில் குத்தினார். ”நேக்கு ஒண்ணுமே புரியலை…கொழப்பமா இருக்கு” என்றார் வரதாச்சாரியார் , தன் தேஜஸையெல்லாம் இழந்து பரிதாபமாக. ”நீர் இப்ப பேசலைண்ணா வெளிய போனதும் நான் உம்ம குடுமிய பிச்சு கொப்பரைய வெளிய எடுப்பேன்” ”நேக்கு ரொம்ப கொழப்பமா இருக்கே” ”பேசும் ஓய்”. வரதாச்சாரியார் தொண்டையைக் கனைத்து ” வேதம் வேற ப்ரபந்ந்தம் வேற இல்லை…ஆக்சுவலி, நாதமுனிகள் சொல்றார், வேறொன்றும் நானறியேன்…வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன் ..”என்று ஆரம்பிக்க ”அதைத்தான் ஓய் நானும் சொல்றேன். வேற ஒண்ணும் தெரியாதுல்ல? அப்ப வாய மூடிண்டிரும்…” என்று ஸ்ரீனிவாசன் சொல்லி தன் நண்பர்களைப் பார்த்தார் .அவர்கள் முறுவலித்தார்கள். ”பேசும் ஓய்” என்று தாத்தாச்சாரியார் இடுப்பில் இடிக்க ”என்னை விட்டிருங்கோ.. நேக்கு ஒண்ணுக்கு வருது”என்றார் வரதாச்சாரியார் கண்ணீருடன்.

”சண்டைவேணாம்…நாம இப்ப மாமாக்கு போத்திவிடுறதுக்கு வந்திருக்கோம்…”என்றார் ராமசாமி அய்யங்கார். ”நாணா துண்டை எடுரா…” நாணா சால்வையை எடுத்து ஸ்ரீனிவாசனிடம் அளிக்க அவர் எழுந்து ”வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தோட புகழை உலகத்துக்கு காண்பிச்சிருக்கேர்…உம்மை எப்டி பாராட்டறதுன்னே தெரியல்லை” என்று சொல்லி சால்வையை போர்த்தினார். ”எந்திரிங்க மாமா… வக்கீல்வாள் சமக்காளம் போத்துறார்ல?” கைகூப்பி கண்ணீர் மல்கி அதை பெற்றுக் கொண்டபோது மனசுக்குள் இந்த சால்வை அவரே நல்லியில் வாங்கிக் கொண்டுவந்ததல்லவா என்று வரதாச்சாரியார் எண்ணிக் கொண்டார். எல்லாரும் கைதட்டி மிக்சர் பொருக்கைகளையும் சுத்தம் செய்துகொண்டார்கள். மணிப்ரவாள மங்களபத்ரத்தை நாணா நாலைந்துவரி வாசித்துவிட்டு ஸ்ரீனிவாசனிடமே கொடுத்துவிட்டான்.

மேலும் சற்று நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும்போது நாணாவிடம் வரதாச்சாரியார் ரகசியமாக ”ஏண்டா, இந்த சால்வை ஏதுடா உனக்கு?” என்றார். ”ஜானகி குடுத்தாள்….கிளம்பறேளா மாமா…இந்தாங்கோ கேஸரி…ஜானகிக்கும் மாமிக்கும் குடுங்கோ. காலம்ப்ற வர்ரேன்…ஜானகி ஒரு ஸி.டி கேட்டிருந்தா ”’என்றான் நாணா.
=====================================================================

[மறுபிரசுரம்- முதற்பிரசுரம் 2005ஆகஸ்ட்]

சைவசித்தாந்தம் ஒரு விவாதம்

இந்திய இலக்கியம் ஒரு விவாதம்

இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்

மேலைத்தத்துவம் ஓரு விவாதம்

முந்தைய கட்டுரைஇந்திய நகரங்கள்
அடுத்த கட்டுரைசெண்பகம் பூத்த வானம்