ஆணியம்?

ஆசிரியருக்கு ,

“இனிமேல் வெளிநாட்டுப்பயணங்கள், பல்கலை பேருரைகள், கருத்தரங்கத் தலைமை ஏற்புகள் போன்றவற்றில் குட்டிரேவதி, சல்மா, சுகிர்தராணி போன்றவர்களிடம் சபையோர் எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்திற்குள் மட்டுமே கேள்விகளைக் கேட்கவேண்டும் என்றும், மேலதிகமாக அவள் விகடன்,மங்கையர் மலர் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் முன்னரே சொல்லிவிட்டால் என்ன?”

உங்களை ஒரு ஆணாதிக்கர் என கூறுவதில் பொருள் உள்ளது போலத் தெரிகிறது . 15 ஆண்டுகளுக்குள் எழுத வந்த எத்தனை ஆண்களிடம் நீங்கள் முன்வைக்கும் வாசிப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ?

நாஞ்சில் நாடன் முதல் சாரு வரை வைக்கும் குற்றச் சாட்டு இன்றைய எழுத்தாளர்களிடம் வாசிப்பில்லை என்பதே , இதில் ஆண் பெண் பாகுபாடில்லை. நான் அறிந்த உங்களின் சிறந்த இலக்கிய வாசகர்கள் கூட இதே கருத்தை தான் சொல்கிறார்கள்.

நவீன காலத்தில் அறிவுத் தளத்தில் வாசகர் -எழுத்தாளர் இடைவெளி குறுகி தற்போது தீவிர வாசகர்கர்கள் அறிவு சேகரத்திலும், பல்துறை வாசிப்பிலும், சிந்திக்கும் திறனிலும் முந்திச் சென்று கொண்டிருக்கின்றனர். உங்களைப் போல வெகு அரிதான சில எழுத்தாளர்கள் மட்டும் தான் மிஞ்சி இருக்கிறீர்கள்.

15 ஆண்டுக்குள் எழுத வந்த ஆண் எழுத்தாளர் ஒருவர் நீங்கள் முன்வைக்கும் அளவுகோல் படி வாசிப்புடையவர் என ஒருவர் பெயரையாவது உங்களால் குறிப்பிட முடியுமா ? அப்படி குறிப்பிட்டால் தான் மேற்சொன்ன உங்களின் கூற்று ஏற்கத்தக்கது.

கிருஷ்ணன்.

அன்புள்ள கிருஷ்ணன்

நான் சொல்வது வெளிநாட்டுப்பயணங்கள், பல்கலைப்பேருரைகள், கருத்தரங்கத் தலைமைகள் வகிக்கும் பெண் எழுத்தாளர்களுக்கான தகுதிகள். அப்படி எந்த ஆண் இளம் எழுத்தாளருக்காவது வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றனவா? கிடைத்திருந்தால் அதைப்பற்றிப் பேசலாம். மற்றபடி அவரவருக்கு ஆவதை எழுதுகிறார்கள். அதிலென்ன?

மேலும் நனைந்தபின் குளிர் எதற்கு? ஒரு வகுப்புவாத, சாதியவாத, பிற்போக்கு, திரிபுவாத, சனாதன, பூர்ஷுவா, அழகியல்வாத, பாரம்பரியவாத, ஆணாதிக்கவாத, அயோக்கிய, நயவஞ்சக, மலையாளி, மனநோயாளி சொல்லும் வாதமாகவே எடுத்துக்கொள்ளுங்கள். இது ஜனநாயகம் அல்லவா? இதில் எங்களுக்கும் ஒரு குரல் உண்டுதானே? நாங்களும் நாலைந்துபேர் இங்கே இருக்கிறோம் அல்லவா?

ஜெ

ஒரு லண்டன் கூட்டம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33
அடுத்த கட்டுரைமாண்டலின் ஸ்ரீனிவாஸ், சோதிப்பிரகாசம்