விவாதங்கள் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,
” எதிர்வினைகள் விவாதங்கள் “ என்ற தலைப்பில் எனது சந்தேகத்திற்கு மறுபடி பகந்ததற்க்கு நன்றி. தங்களது எளிமை என்னைச் சிலிர்க்க வைக்கிறது.

வேறொரு விஷயம் நினைவிற்கு வருகிறது. ” இரு பறவைகள்” என்று ஒரு பதிவு ஏழாம் திகதி இட்டீர்கள் அல்லவா, அந்தக் கோட்பாட்டை மிக விரிவாகத் தாங்களே ” உற்று நோக்கும் பறவை” என்ற தலைப்பில் கொஞ்சம் திரு அனந்தபுர வரலாறும் கொஞ்சம் புனைவுமாக சில வருடங்களுக்கு முன் பதிவு செய்து இருக்கிறீர்கள்.

இரு பறவைகள் குறித்துத் தாங்கள் சொல்வது உண்மைதான். பழம் தின்னும் ஒரு பறவையை வாளாவிருக்கும் ஒரு பறவை காணவேண்டுமென்றால், மனதில் ஒரு நிம்மதி நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த நிம்மதியைத்தன் நாம் என்ன தேடுகின்றோம் என்றே அறியாமல் தேடிக்கொண்டு இருக்கிறோம். அத்தகைய சாந்த நிலை என்று எண்னும்போது எனக்கு எப்போதும் நினைவிற்கு வருவது புறப்பாடு இடுகைகளில் தாங்கள் அறிமுகப்படுத்திய “அருள்சாமி” பாத்திரம்தான்.

மீண்டும் ஒரு முறை நன்றி.

அன்புடன் ராகவன் ராமன்.

அன்புள்ள ராகவன் ராமன்,

நான் விவாதித்துக்கொண்டே இருக்கிறேன். என் மொழி, தர்க்கம் எல்லாமே விவாதித்து உருவானவை. கூடவே விவாதிப்பதன் எல்லைகளையும் உணர்ந்துகொண்டே இருக்கிறேன்

விவாதப்பண்பு குறைவான, வெற்று உணர்ச்சிகள் மேலோங்கிய தமிழில் ஒரு விஷயத்தை சொல்லி புரியவைப்பதன் தீராத போராட்டத்தை ஒவ்வொரு முறையும் உணர்ந்தபடியே இருக்கிறேன். ஒவ்வொரு கருத்தும் நாம் சொன்னதில் இருந்து மிக விலகியே புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் என்ற சோர்வை மீண்டும் மீண்டும் அடைகிறேன். முன்முடிவுகள், அரைகுறை கவனம், கசப்பு, அறிவுத்திறனின்மை என பல காரணங்கள்

ஆயினும் எப்போதும் ஒரு சிறுவட்டத்திலேனும் சென்றுசேர்ந்துகொண்டும் இருக்கிறேன்.அதுவே உற்சாகத்தையும் செயல்படுவதற்கான ஆற்றலையும் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வருடக்காலம் தாண்டி எண்ணிப்பார்க்கையில் பல தளங்களில் ஒரு நகர்வை உருவாக்க என்னால் இயன்றிருப்பதை அறியும்போது நிறைவு எழுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 25
அடுத்த கட்டுரைசாத்தானே அப்பாலே போ! [போன்னா போகணும் கேட்டியா?]