ஒரு ஆசானாகப் பலரை ஆய்வில் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் டாக்டர் ஸ்வாமிநாதனின் மூத்த சகோதரர் சு. கிருஷ்ணமூர்த்தி.
புதுக்கோட்டையில் 1929 ஆம் வருடத்தில் பிறந்த சு. கிருஷ்ணமூர்த்தி, தமது B. A., படிப்பை அங்கேயே ராஜா கல்லுரியில் முடித்தார். அப்போது சம்ஸ்கிருதத்தில் முதல்வராக தேர்வெண்கள் சென்னைப் பல்கலைக் கழக்த்தில் பெற்றவர்.. எம். ஏ டிகிரி நாக்பூர் பலகலைக் கழகத்தில் பெற்றார். தமிழைத் தனது தாய் மொழியாகக் கொண்டு, சமஸ்கிருதம், ஹிந்தி, மற்றும் ஜெர்மன் மொழிகளில் முறையாகத் தேர்ச்சி பெற்றவர். சென்னை மத்திய அரசு ஆடிட் துறையில் சேர்ந்து சென்னையில் முதலில் பணியாற்றிய பின்னர், 1955 ஆம் வருடம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார். அங்கு வங்காளமொழியையும் கற்றுத்தேர்ந்தார். சுமார் 3 வருடங்கள் டெல்லியிலும் பணியாற்றினார். ஒரு I A & A S அதிகாரியாக 1987 ஆம் வருடம் ஓய்வு பெற்றார்.
சிறுகதைகள் பல தமிழில் எழுதி அதன் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். முக்கிய தொகுப்புகள், நன்றிக்கு ஒரு விலை, மனிதம் என்பவை.
ஆங்கிலத்திலும் அவரது கதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவர் தமிழ் படைப்புகளில் முக்கியமானவை, நஸ்ருல் இஸ்லாம், சரத் சந்திர சட்டோபாத்யாய, ப்ரேம்சந்த்,வித்யாசாகர் சரிதைகாளாகும். முதல் சரிதைக்காக இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்றவர்.
வங்காள மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு பலநூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் குருதிப் புனல் நாவலை வங்காள மொழியில் ரக்த போன்யா என்ற தலைப்பில் மொழிபெயர்த்து அதற்காக சாஹித்ய அகாதெமி பரிசு பெற்றவர். வங்காள சாஹித்ய சம்மேளன பரிசும் பெற்றார்.
அவரது magnum opus, ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்த்துள்ள சிலப்பதிகாரம் நூலாகும்.கல்கத்தா தமிழ் சங்கத்தின் முக்கிய அங்கத்தினராக இருந்தார். எனக்கு ஒரு பிரதியை அவர் கொடுத்துள்ளது எனக்குப் பெருமயாக நினைக்கின்றேன்
சமீபத்தில் தான் சென்னைக்குப் புல பெயர்ந்தார். அவர் அப்படி வந்த அன்று அவரை அழைத்துக் கொண்டுவர சென்ற அவர் சகோதரரும் எனது இனிய நண்பருமான ஸ்வாமிநாதன் அவர்களுடன் நானும் விமானநிலையம் சென்றிருந்தேன்.
எனது செம்புலப்பெயனீர் என்ற சிறுகதைத் தொகுதிக்கு அவருடைய முன்னுரை ஒரு அணிகலனாக அமைந்தது.