இரு பறவைகள்

ஜெ,

கிருஷ்ணன் சொல்லும் இந்த வரி முக்கியமானது என படுகிறது. எங்கோ கேட்டிருக்கிறேன்

“ஒன்றுமே செய்யாமல் நீ எப்படி இருக்கிறாய்?” என்றேன். பனிகனக்கும் குவளைமலர்போல் சொல்திரண்ட சிறுமுகத்துடன் என் அருகே வந்து தொடைதொட்டு விழிதூக்கி “தந்தையே, அங்கே நேற்று ஒரு ஆலமரம் கண்டேன். அதில் இரண்டு கிளிகள். ஒருகிளிபோன்றே இன்னொன்று. ஒன்று பழம் தின்றுகொண்டிருந்தது. ஒன்று வெறுமே நோக்கி அமர்ந்திருந்தது” என்றான்.

இந்த வரி எங்கே உள்ளது?

ஸ்டீபன்ராஜ்

அன்புள்ள ஸ்டீபன்

இந்த வரி

ரிக் 1.164.20 & முண்டக உபநிஷதம் 3.1.1 இரண்டிலும் இதே மந்திரம் வருகிறது. ரிக்வேதத்தில் அந்த வரிகளை தொடர்ந்து வரும் வரிகளும் அழகானவை.

இதைப்பற்றிய விக்கிப்பீடியா பக்கம்

கிரிபித்தின் மொழியாக்கம் ரிக்வேதம்

*

द्वा सुपर्णा सयुजा सखाया – समानं वृक्षं परि षस्वजाते।
तयोरन्यः पिप्पलं स्वाद्वत् – त्यनश्ननन्यो अभि चाकशीति॥

த்³வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா²யா – ஸமானம்ʼ வ்ருʼக்ஷம்ʼ பரி ஷஸ்வஜாதே |
தயோரன்ய​: பிப்பலம்ʼ ஸ்வாத்³வத் – த்யனஷ்னன்யோ அபி⁴ சாகஷீதி||

இணைப்பறவைகள் ஒரு மரத்தில் அமர்ந்திருக்கின்றன. ஒன்று அனைத்து இனிய பழங்களையும் உண்டு மகிழ்கிறது இன்னொன்று வெறுமனே நோக்கியிருக்கிறது.

பலவகையான வேதாந்த விளக்கம் கொடுக்கப்படும் வரி இது. செயலாற்றும் பகுதியாகவும் அதை நோக்கும் பகுதியாகவும் தன்னை பிரித்துக்கொள்ளும் ஆன்மாவின் ஆடலை இது சொல்கிறது. ஐந்து நிமிடம் கண் மூடி தன் அகத்தை அவதானித்திருக்கும் எவருக்கும் இது தெரியும்.

ஆனால் கண்ணனை புரிந்துகொள்ள இதுவே சாவி. பதினாறாயிரத்தெட்டு தேவியர் கொண்ட நித்ய பிரம்மசாரியை அப்படித்தான் புரிந்துகொள்ள முடியும்.

ஜெ

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைவரலாற்றெழுத்தின் வரையறைகள் 3
அடுத்த கட்டுரைசு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்