இந்துத்துவம்,கிறித்தவம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

இந்துத்துவம்:ஒரு கேள்வி  …… இந்துத்துவம் என்பது இந்து முல்லாத்தனம் அல்ல என்பது எவரையும் விட உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ராமசேது விஷயத்தை பொறுத்தவரையில் அந்த ஆதாரத் தேடல் என்பது மிகவும் அசட்டுத்தனமாக நடந்தது. புனித-சூழலியல் (sacred ecology) மீனவர்களின் வாழ்வியல் பிரச்சனைகள் இத்தகைய பெருந்திட்டங்களின் பயன்பாடுகள் குறித்த கேள்விகள் என பல-பரிணாமம் கொண்ட ஆழமான ஒரு தளத்தை நோக்கி செல்லக் கூடிய ஒரு வாய்ப்பினை தேவையில்லாமல் நாஸா புகைப்படத்தை வைத்து அசட்டுத்தனமான ஒரு கதையாடலை நிகழ்த்தி இந்துத்துவ இயக்கங்கள் இழந்துவிட்டன என நினைக்கிறேன். ராம ஜென்ம பூமியை பொறுத்தவரையில் அன்றைய சூழல் ஒருவித இந்து-எதிர்ப்பு (காஷ்மீரில் இருந்து இந்துக்கள் இன ஒழிப்பு செய்யப்பட்ட போது ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் காட்டிய மாற்றாந்தாய் மனோபாவம்) சிறுபான்மை சலுகை (ஷரியத், ரஷ்டி மு·ப்தி மகள் கடத்தலில் நடந்தது இத்யாதி) அனைத்துமே ராமஜென்மபூமி நிகழ்வை நோக்கி இட்டுச்சென்றன. அப்போதும் கூட பிரச்சாரத்தால் தொழுகையற்ற – இந்து வழிபாடு தினமும் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு கட்டிடத்தை ஒரு மசூதியாக மாற்றியதிலும் அகழ்வாராய்ச்சி தரவுகளை முழுமையாக புறக்கணித்து பொய்மையாக நடந்து கொண்டதிலும் இடது சாரி அறிவுசீவிகள் காட்டிய இரட்டை டம்ளர் நிலைபாடு மிகவும் மோசமானது. 1980களின் இறுதியில் ஆர்.எஸ்.எஸ் பெரிய அளவில் சூ·பி இஸ்லாமிய பண்பாட்டு செழுமையை ஆவணப்படுத்தியது. இதுவே இந்தியாவில் முதன் முதலாக பெரிய அளவில் செய்யப்பட்ட சூ·பி இலக்கிய நிகழ்வு எனலாம். டெல்லி தீன் தயாள் அமைப்பில் இது நடந்தது. மறைந்த ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் மல்கானி இதில் முக்கிய இடம் வகித்தார். இது ஒரு சிக்கலான விஷயம். ஆர்.எஸ்.எஸ் பன்முக இஸ்லாமை இந்தியாவில் பாதுகாக்க முனைந்த அதே காலகட்டத்தில் (இன்றைக்கு அரி·ப் முகமது கான் பாஜகவில் தானே இணைந்துள்ளார்) இடதுசாரி-வகாபியிஸ கூட்டணி ஒன்று பாரத மண் சார்ந்த இஸ்லாமிய பண்பாட்டு ஆன்மிக செழுமைகளை அழிக்க முழு முச்சாக முனைந்தது. என்றாவது இந்திய இடதுசாரி அமைப்புகளின் வரலாற்று தவறுகள் தொகுக்கப்படும் போது அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் இணைந்து நடத்திய மாநாடுகள் ஊர்வலங்கள் அவர்களுக்கு இடதுசாரி அறிவுஜீவிகள் அளித்த கருத்தியல் ஆயுதங்கள் இத்யாதிகள் மிக மோசமான தவறுகளாக கருதப்படும் என்றே நினைக்கிறேன். இந்துத்துவ அமைப்புகள் தவறே செய்யவில்லை என நான் சொல்ல வரவில்லை. ஆனால் அந்த அசட்டுத்தனமான பிற்போக்குத்தனமான தவறுகள் – குற்றங்கள் என்று கூட சொல்லலாம்- இன்னும் இடதுசாரிகள் செய்துள்ள அறிவார்ந்த திட்டமிட்ட வெறுப்பியல் துணை போதலுக்கு இணையாகிடவில்லை. மேலும் இந்துத்துவ அமைப்புகளுக்கு நீங்கள் சொல்லும் ‘பிரம்மாண்டமான பண்பாட்டு இழப்புகளை’ செய்யும் சக்தியோ அல்லது ஒற்றைத்தன்மையோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. இன்னும் சொன்னால் உங்கள் கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினைகளில் நான் அறிய உங்களை – தனிப்பட்ட மனிதராக தாக்காமல்- கருத்து ரீதியில் விமர்சனம் செய்திருப்பவர்கள் ஜடாயு போன்ற இந்துத்துவர்கள்தாம். நீங்கள் கருத்துகளுடன் உடன்படாமல் இருக்கலாம் ஆனால் குறைந்த பட்சம் நீங்கள் இயங்கும் இணைய சூழலில் உங்களுக்கு ஆற்றப்படும் எதிர்வினைகளில் இந்துத்துவர்கள் ‘வெறிபிடித்த பாசிச கும்பலாக’ செயல்படவில்லை என்றே நினைக்கிறேன்.

அன்புடன்

அரவிந்தன் நீலகண்டன்

***

மனிதர்களை அளக்க எத்தனையோ அளவுகோல்கள் இருப்பினும் ஜெயமோகன் எனும் தனிப்பிறவியை யாராலும் அளந்துவிட முடியாது என்பது எனது அபிப்ராயம்.

தங்களது இந்துத்துவம் ஒரு கேள்வி படித்தேன். ஒரு நடுநிலையான சராசரி இந்துவின் மற்றும் இந்தியனின் கனவு தேசத்தை உங்கள் மனப் பிம்பத்தில் காண்கிறீர்கள். நீங்கள் வாழ்வது கூட அங்குதான்.

கட்டுரையை படிக்கும்போது என் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நமது  இந்து தர்மத்தின் பெருமையை அதன் வழிமுறையை ஒரு சில புல்லுருவிகளா சாய்த்துவிட முடியும் சில அவமதிப்புகள் மற்றும் இழிவுபடுத்துவதன் மூலம் ???

உங்களை நீங்கள் வாழும்விதத்தில் வாழ அனுமதிக்கட்டும் இறை. உங்கள் எண்ணமும் எழுத்தும் இப்போதுபோல் எப்போதும் உண்மையின் பாதையில் இருக்கட்டும்.

விஷ்ணுபுரத்தின் சுருக்கிய வடிவத்தை மீண்டும் படித்தது போலிருந்தது இந்தக்கட்டுரை.

எல்லாம் வல்ல இறைவன் உங்களைப் பாதுகாப்பானாக.

அன்புடன், ஜெயக்குமார்

****

ஜெயமோகன்,

உங்கள் கட்டுரை… இந்துத்துவம் பற்றிய கட்டுரை, சிறப்பானமுறையில் உங்கள் தரப்பை சொல்வதாக இருந்தது. ஓர் அகண்ட இந்து மெய்யியலுக்காக நிலைகொள்ளும்போதே நீங்கள் அதை அரசியல் அடையாளமாக ஆக்கும்போக்குகளுக்கு எதிராக இருக்கிறீர்கள். இந்த நிலைபாடு கிட்டத்தட்ட ஜெயகாந்தனின் நிலைபாடு. கடந்தகாலத்தில் அவரளவுக்கு தேசியமறுப்பு பிரிவினைப்போக்குகளுக்கும் மதவாத அரசியலுக்கும் எதிராக வன்மையாக குரலெழுப்பியவர்கள் எவருமே இல்லை. ஆனால் ஜெயகாந்தன் வளள்ளலார் விவேகாந்தர் ஆகியோரை ஒருபோதும் நிராகரித்ததும் இல்லை.  துரதிருஷ்டவசமாக நம்முடைய இடதுசாரிகளால் ஜெயகாந்தனை புரிந்துகொள்ள முடியவில்லை. அவரையே இந்து அடிப்படைவாதி என்று வசைபாடும் குரல்களை நீங்கள் இணையத்தில் முழுக்க முழுக்க பார்க்கலாம். அவருக்கே அந்த நிலை என்றால் உங்கள் கதி இன்னும் மோசம். நீங்கள் எவ்வளவுதான் கத்தினாலும் உங்களை இந்துத்துவர் என்றுதான் சொல்வார்கள். வெளிப்படையாக இஸ்லாமிய தீவிரவாதம், கிறித்தவ மதமாற்றவாதம் ஆகியவற்றை ஆதரிக்காத இந்திய ஒருமைபபட்டை எதிர்க்காத அனைவரையுமே நம்முடைய கம்யூனிஸ்டுகளும் திராவிடர் கழகத்தினரும் இந்துத்துவர்கள் என்றுதான் சொல்வார்கள். இந்தியாவிற்கு இன்றுள்ள மிகப்பெரிய துரதிருஷ்டமே இடதுசாரிகள் [அவர்கள் இந்தியாவின் நேர்மையாக அரசியல்வாதிகள் என்று நான் நினைக்கிறேன்] கொண்டுள்ள இந்த குருட்டுத்தனம்தான். இதை மிக வருத்தத்துடன் சொல்லவேண்டியிருக்கிறது

சண்முகம் குமாரசாமி
மதுரை

அன்புள்ள சண்முகம்

உங்கள் கடிதத்தில் சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்திய இலக்கியவாதிகளில் முக்கியமான அனைவருமே ஜெயகாந்தன் எடுத்த அந்த நிலைபாட்டையே எடுத்துள்ளார்கள். ஓ.வி.விஜயன், எம்.டி.வாசுதேவன்நாயர் அல்லது யு.ஆர்.அனந்தமூர்த்தி அல்லது எஸ்.பைரப்பா… ஆனால் தமிழில் மட்டுமே ஜெயகாந்தன் அவ்வாறு இழிவு படுத்தப்படுகிறார். பிற சூழல்களில் இடதுசாரிகளால் அவர்களை புரிந்துகொள்ள முடிகிறது என்றே நான் நினைக்கிறேன். இதற்குக் காரணம் இங்குள்ள ·பாஸிச அமைப்பான திராவிடர் கழகமும் அதன் தாக்கமும்தான். இங்குள்ள இடதுசாரிகள் முரணியக்க இயங்கியலை முற்றாகக் கைவிட்டு திகவின் வெறுப்பரசியலின் எதிரொலிகளாக மாறி நெடுநாள் ஆகிறது. இன்றுள்ள இடதுசாரிகள் பலர் வெறுமே மேடைப்பேச்சுகளை மட்டுமே கேட்டு வளர்ந்தவர்கள். அடிப்படை வாசிப்புகூட இலலாதவர்கள். இவர்கள் கேட்டு வ்ளர்ந்த மேடைப்பேச்சுகள் வெற்றிகொண்டான் வகையறாக்களின் பேச்சுகள். இவர்களின் அரசியலின் தரமும் அவ்வாறே உள்ளது. இதுதான் துரதிருஷ்டவசமானது

ஜெயமோகன்
***********

அன்புள்ள சகோதரரே,

உங்கள் கட்டுரையில் நீங்கள் இந்துத்துவர்கள் பற்றி சொல்லியிருந்தவற்றை நான் பெரிதும் ஆதரிக்கிறேன். இந்துத்துவவாதிகள் ஒரு வெறுப்பையும் அச்சத்தையும் உருவாக்குகிறார்கள். இந்த வெறுப்பும் அச்சமும் இங்குள்ள கிறித்தவ மேலாதிக்கக்காரர்களால் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக கிறிஸ்தவ சமூகத்தின் நடுவே வளர்க்கப்படுகின்றன. நீங்கள் எங்களை ஏற்று நாங்கள் செய்வதை எல்லாம் கேள்வி கேட்காமல் பணியாவிட்டால் உங்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று கிறிஸ்தவ மதஆதிக்க அமைப்புகள் கிறிஸ்தவ எளிய மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடிக்கு அம்மக்களும்  அடிபணிகிறார்கள். இந்த இருமுனை ஆதிக்கம் தான் இப்போது நடக்கிறது. ஒரு மதத்தைச் சுட்டிக்காட்டி அச்சுறுத்தி இன்னொரு மதத்தின் ஆதிக்க சக்திகள் தங்கள் நலன்களை பேணிக் கொள்கின்றன.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நான் பலகாலமாக சி.எஸ்.ஐ பேராயத்தில் நிகழ்ந்துவரும் ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிராக போராடிவருபவன் [இந்தவிஷ்யங்களைச் சொல்ல வேண்டியதில்லை. செய்தித்தாள்களில் போதிய அளவுக்கு நாறி விட்டது] இங்கே இருக்கும் இரு குழுக்களுமே என்னை இந்துத்துவ சக்திகளின் கையாள் என்று சொல்லி பிரச்சாரம் செய்கின்றன. அதாவது ஒரு பேராயர் பணமோசடி செய்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். நாம் கணக்கு கேட்டால் நம்மை இந்துத்துவ ஒற்றன் என்று சொல்லி வசைபாடி ஒதுக்கிவிடுவார்கள். இது இன்று எல்லா கிறிஸ்தவ சபைகளிலும் நடந்துகொண்டிருப்பது. நீங்கள் போகிற போக்கில் விசாரித்தால்கூட இந்து தெரியவரும். எல்லா கிறிஸ்தவ நிர்வாகக் குழு விசாதங்களிலும் மாறிமாறி ஆர்.எஸ்.எஸ் கையாள் என்று குற்றம்சாட்டி வசைபாடிக் கொள்வதை இப்போது காணலாம். இந்த ·போபியா ஒரு பெரிய ஆயுதமாக நம்முடைய பேராயர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கையில் இருக்கிறது. இந்துத்துவாவின் மோசமான பாதிப்பே இதுதான்.யாரைவேண்டும்னானாலும் நாம் அப்படிக் குற்றம்சாட்டிவிடலாம்.

இந்தச் சூழலில்தான் நீங்கள் இப்போது நடப்பவற்றைக் காணவேண்டும். இன்று சி.எஸ்.ஐ, கத்தோலிக்க திருச்சபை இரண்டுமே அப்பட்டமான ஊழலாலும் எல்லையில்லாத நில மோசடிகளினாலும் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. பலகோடி ரூபாய்கள் வருகின்றன. வந்த சுவடே தெரியவில்லை. அதிகார மையங்களுடன் தொடர்புள்ள பியூன்கள் கூட கோடீஸ்வரர்களாக ஆகிறார்கள். பணத்துக்காக நடக்கும் சண்டைகள் முற்றி தெருவுக்கு வருகின்றன. கைகலப்புகள், ஆள்கடத்தல்கள் எல்லாம் சாதாரணமாக நடக்கின்றன. கிறிஸ்தவ சேவைகள் நாளிதழ்களில் வந்த காலம் இன்று இல்லை. கிறிஸ்தவ சபைக்குள் நடக்கும் வெட்டுகுத்துக்கள் தினமும் செய்தித்தாள்களில் இடம்பெறுகின்றன. போதகர்களை பொதுமக்கள் துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள் என்று நீங்கள் நாளிதழ்களில் காணலாம். இந்த அளவுக்கு சீரழிந்த நிலை திருச்சபைகளின் வரலாற்றில் எப்போதுமே இருந்ததில்லை.

ஒரு சி.எஸ்.ஐ பேரயர் தேர்வுக்கு சராசரரியாக ஐந்துகோடி ரூபாய் வரை வேட்பாளரால் செலவிடப்படுகிறது தெரியுமா? வென்றால் ஒரே வருடத்தில் அந்தப்பணத்தை எடுத்துவிடலாம். கத்தோலிக்க சபைகளில் ‘சரியான’ பங்குகளில் ‘போஸ்டிங்’ போடப்படுவதற்கான ஐம்பதுலட்சம் வரை லஞ்சம் கொடுக்கப்படுகிறது. ஒரு போலீஸ் எஸ்.பியின் இடமாறுதலுக்குக் கூட இந்த அளவுக்கு பணம்செலவிடப்படுவதில்லை!

இந்த ஊழலால் இன்று சி.எஸ்.ஐ, கத்தோலிக்க திருச்சபை இரண்டுமெ இப்போது மதமாற்றம் எதிலும் ஈடுபடுவதில்லை. சொல்லப்போனால் சி.எஸ்.ஐ சபையானது இந்த சபைக்குள் உள்ள நாடார் அல்லாதவர்களை வெளியே தள்ளிவிடுவதில்தான் முனைப்பாக உள்ளது. மதமாற்ற அமைப்புகள் உள்ளன. பணம் செலவாகிறது. ஆனால் வேலை நடப்பதில்லை. இன்று மதமாற்றம் செய்ய தீவிரமாக இருக்கக் கூடியவை பெந்தேகொஸ்தே சபை, யஹோவா சாட்சிகள் போன்ற சிறு அமைப்புகள்தான். அவர்கள் மிரட்டல் மோசடி என்று எல்லா உத்திகளையும் கையாள்கிறார்கள். அந்த சபைகளில் வந்துசேர்வதில் 5 சதமானம் பேர்தான் இந்துக்கள். மிச்சமெல்லாம் பிற கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்கள். அவர்களை எதிர்க்க முடியாமல் சி.எஸ்.ஐ, கத்தோலிக்க திருச்சபை இரண்டுமே அவர்களின் ‘ஹிஸ்டீரியா’ பிடித்த வழிபாட்டுமுறைகளை காப்பியடிக்கின்றன இப்போது.

சி.எஸ்.ஐ, கத்தோலிக்க திருச்சபை இரண்டுமே இப்போது சேவை எதையுமே செய்வதில்லை. சேவைநிறுவனங்கள் அனைத்துமே பணமில்லாமல் முடங்கி பக்கவாதம் பிடித்து கிடக்கின்றன. உண்மையும் அர்ப்பணிப்பும் உள்ள ஏராளமான சேவைக்காரர்கள் இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டு மனம் வெதும்பிப்போயிருக்கிறார்கள். ஏன், சுனாமியையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்து அமைப்புகள் அவர்களுக்கு செய்துகொடுத்ததில் பாதியைக்கூட இவ்வளவுபெரிய சி.எஸ்.ஐ, கத்தோலிக்க திருச்சபைகள் செய்யவில்லை. பலகோடி ரூபாய் வந்து போன இடமே தெரியவில்லை.

இதையெல்லாம் காடாத்துணிபோட்டு மறைக்கவே தோமஸ்கிறித்தவ கோட்பாடு தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் போன்ற மோசடிகளை உருவாக்குகிறார்கள். இதைச்சொல்லி பலகோடி ரூபாய் கறப்பார்கள். இந்துமதம் மேல் வெறுப்பை கக்குவார்கள். அதை எதிர்த்து இந்துக்கள் என்ன சொன்னாலும் அதையெல்லாம் இந்துத்துவ சக்திகள் கிறித்தவர்களை கொல்வதற்காகச் செய்யும் சதிகளாக சர்ச்சுகளில் முன்வைப்பார்கள். சாதாரண கிறிஸ்தவர்கள் அதை நம்புவார்கள். ஒட்டுமொத்தமான ஒரு மோசடியின் சிறு பகுதியாக நிகழும் மோசடிதான் இது. இதை இன்று ஒரு கிறிஸ்தவனும் எதிர்க்க முடியாது. எதிர்த்தால் இந்துத்துவ முத்திரை உறுதி.

வாழ்க இந்துத்துவம். அதன் ஆதரவாளர்களுக்கு அதனால் லாபம். அதன் எதிர்ப்பாளர்களுக்கு அதைவிட பெரு லாபம்.
ஊழியன் 

இந்துத்துவம்:ஒரு கேள்வி

தாமஸ் கடிதங்கள் மீண்டும்

தாமஸ்:மேலும் கடிதங்கள்

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

முந்தைய கட்டுரைகுறளும் கிறித்தவமும்
அடுத்த கட்டுரைதாமஸ்:ஓர் இணையதளம்