வரலாற்றை வாசிப்பதன் விதிகள்

அன்புள்ள ஜெயமோகன்,

வரலாற்றெழுத்தின் வரையறைகள்” படித்தேன். உங்களின் சினமும், ஆதங்கமும் புரிந்து கொள்ளக் கூடியதே. கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழகம் துதிபாடிகளையும், அறிவீனர்களையும் சிம்மாசனத்தில் அமர்த்தி வளர்த்து விட்டுவிட்டது. அவர்களின் வழி வந்தவர்கள் செய்யும் “ஆராய்ச்சி” எப்படி இருக்கும் என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை. நம் தலையெழுத்து அப்படி.

நீங்கள் கூறும் தகவல்களிலிருந்து சிறிது மாறுபட்டு, வேளாளர்கள் பற்றிய நான் படித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பூர்வ வேளாளர்கள் கண்ணணின் வழிவந்தவர்கள் என்றும், அவர்கள் துவாரகையிலிருந்து தென்னாட்டில் குடியேறிய யாதவர்களே என்றும் மு. இராகவையங்கார் அவரது “வேளிர் வரலாறு” என்னும் புத்தகத்தில் விளக்குகிறார். கடையெழு வள்ளல்களும் அவ்வாறு வடக்கிலிருந்து தமிழ்நாட்டில் குடியேறியவர்களின் வழி வந்தவர்களாக இருக்க வேண்டும் என்று ஆதாரங்களுடன் விளக்க முற்படுகிறார். அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை என்னை வியக்க வைக்கிறது. இதையெல்லாம் நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். இது போன்ற ஆராய்ச்சிகள் ஏறக்குறைய தமிழ்நாட்டை விட்டு மறைந்து போய்விட்டது. ஆதாரமில்லாமல் யாரும், எதனையும் எழுதி அது புத்தகமாக வெளிவந்தால் அதுவே உண்மையாக நிறுவப்படுவது எல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது? அதனைக் குறித்து சலிப்படையும் வகையில் நீங்களே தொடர்ந்து எழுதிக் கொண்டுதானே இருக்கிறீர்கள்?

நான் வரலாற்று ஆராய்ச்சியாளனல்ல. ஒரு வாசகன் மட்டுமே என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். சர்ச்சை எதனையும் தூண்டுவது என் நோக்கமல்ல.

#

இனி, இவ்வேளிர் யாவர்? இவர் குலம் யாது? இவர் தமிழ்நாட்டின் பழைய மக்களா? அன்றி இடையில் வந்தேறியவரா? இவர் புராதன நாடு யாது? இவர் வந்தேறிய காலமும் வரலாறும் என்னை? என்பன முதலிய செய்திகளை விசாரிப்போம்.

வேளிர் வரலாற்றைப்பற்றித் தமிழ்நாட்டில் வழங்கிவந்த பழைய செய்திகள் சிலவற்றை, ஆசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரவுரையில், அடியில் வருமாறு குறிப்பிடுகின்றார்:-”

தேவரெல்லாங்கூடி ‘யாம் சேரவிருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர்’ என்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர்…..
துவராபதிப்போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி* வேளிர் உள்ளிட்டாரையும், அருவாளரையுங் கொண்டுபோந்து காடுகெடுத்து நாடாக்கி………. பொதியிலின்கணிருந்தனர்” † – எனக்காண்க.

இவ்வரலாற்றுள், “துவராபதிப்  போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல்$ வழிக்கண்” எனத் துவராபதிக்கும் திருமாலுக்கும் சம்பந்தங் கூறப்படுதலால், அத்தொடர், துவாரகையைப் புதிதாகநிருமித் தாட்சிபுரிந்த கண்ணபிரானைப்பற்றியதென்பது எளிதிற் புலப்படத்தக்கது. இனி, மேற்கூறப்பட்ட செய்திகளுள், ‘அகத்தியமுனிவர் துவாரகை சென்று கண்ணபிரான் வழியினராகிய அரசரையும் வேளிரையும் தென்னாட்டிற் குடியேற்றினர்” என்பதே, நாம் இங்கு ஆராய்தற்குரியது. அகத்தியனார் தென்னாடுபுகுந்த வரலாற்றைப்பற்றிப் புராணங்களிற் சொல்லப்பட்டிருப்பதை ஒத்தே மேற்கூறிய செய்திகள் பெரும்பாலும் அமைந்துள்ளனவாயினும், கண்ணன்வழிவந்தோர் பலரை அம்முனிவர் தம்முடன் கொணர்ந்தாரென்பது அப்புராணங்களிற் கூறப்பட்டிருப்பதாக இப்போது தெரியக்கூடவில்லை. எனினும், இச்செய்தியே, “வேந்துவினையியற்கை” என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் அவதாரிகையிலும்-“இது, மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும்* வேந்தன் தொழில் உரித்தென்கின்றது” (பொருளதி – 32) என, மற்றும் ஒருமுறை எடுத்தோதி வற்புறுத்தப்பட்டுளது
….
….

“நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணொடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே”

எனக் கூறியிருக்கும் அடிகள் புறநானூற்றில் (201) காணப்படுகின்றன. இதன்பொருள்:- நீதான், வடதேசத்து முனிவர் ஒருவரது யாகத்திற்றோன்றி, செம்பால் அழகாகச் செய்யப்பட்ட மிகப்பெரிய கோட்டையுடைய, வெறுப்பில்லாத பொன்மயமாகிய துவாரகையை ஆண்டு, நாற்பத்தொன்பது தலைமுறையாகவந்த வேளிர்க்குள்ளே சிறந்த வேளாய் உள்ளனை-என்பதாம். இப்பழைய மேற்கோளால், வேளிரென்பார் துவாரகையினின்றுவந்து தென்னாடாண்ட சிற்றரச வகுப்பினர் என்பதுமட்டில் நன்கு விளங்கிற்று; விளங்கவே, மேற்கூறிப்போந்த நச்சினார்க்கினியர் செய்திகளிலே, சிறந்த தொன்றற்குப் பிரபல ஆதாரங் காணப்பட்டதாம்.

இனி, வேளிர் துவாரகையினின்று வந்தேறியவர் என்பதற்கு இலக்கியமுள்ளதாயினும், அவர் யாதவகுலத்தவரென்பதை விளக்கவல்ல பிரமாணங்களை முன்னூல்களினின்று அறிதல் இப்போது அரிதாம். ஆயினும், யது வமிசத்தோர் ஆதியிற் கங்கைபாயுந் தேசங்களிற் பல்கிப் பெருகியகாலத்தே, அன்னோர் பகைவர்களாற்* றுன்பமுறாது வாழ்தல்வேண்டி, அக்குலத் தலைவராகிய கண்ணபிரான், மேல்கடற்பக்கத்தே துவாரகையைப் புதிதாக நிருமித்து, அதனைச் சூழ்ந்து கிடந்த காட்டுப் பிரதேசங்களைத் திருத்தி நாடுகளாக்கி எண்ணிறந்த யாதவர்களை ஆங்குக் குடியேற்றித் தாம் அவர்கட்கு இரக்‌ஷகராக நின்று உதவி வந்தனர் – என்ற செய்தி புராணேதிகாசங்களிற் கேட்கப்படுகின்றது. கண்ணபிரான் தன்னடிச்சோதிக்கு+ எழுந்தருளுங் காலத்தே, இவ் யாதவரிற் பலர் தமக்குள் விளைந்த பெருங் கலகத்தாற் போர்புரிந்து மாணடனரென்பதும், அக்காலத்துப் பலர் அவ்விடத்தைவிட்டு வெளியேறினர் என்பதும், அங்ஙனம் வெளியேறியவர் கோதாவரியின் தென்கரைப் பக்கங்களிலும் பரவலாயினர் என்பதும் இதிகாசங்களால் அறியப்படுகின்றன.

இச் செய்திகளால், யாதவ குலத்தார்க்குப் பலதேசங்களிலும் அடுத்தடுத்துக் குடியேறும்படி நேர்ந்துவந்ததென்றும், அம்முறையில், அன்னோர் முதலிற் கங்கை பாயும் நாடுகளினின்று மேல்கடலோரங் குடியேறிக் காலாந் தரத்தில் மஹாராஷ்டிரமெனவழங்கும் தேசமுழுதும் பரவியிருந்தனரென்றும் விளங்கலாம். இவ்வாறாயின், அவ்யாதவர்கள் தாம் பரவியிருந்த நாட்டுக்குந் தெற்கணிருந்த தமிழகத்துக் காடுகளைத் திருத்தி, ஆண்டும் குடியேறினர் என்று கொள்வதிற் புதுமை யொன்றுமில்லை என்க. யாதவர் தெற்கே வந்ததைப்பற்றிய நச்சினார்க்கினியர் எழுத்துக்களை முழுதும் ஆதரிக்கக் கூடிய பிரமாணம் இப்போது கிடைப்பதரிதேனும், அவற்றைக் குறிப்பிக்கக் கூடிய பிரமாணமும் இல்லாமற் போகவில்லை என்பதை இதனால் அறியலாம். யாதவர் தென்னாட்டுங் குடியேறினர் என்ற இவ்வூகத்துக்குப் பிரசித்தரான சரித்திராசிரியர் ஒருவரும் சம்மதமளித்தல் கவனிக்கத்தக்கது:

ஸ்ரீரோமேச சந்த்ர தத்தர் எழுதிய “பழைய இந்திய நாகரீகம்” என்ற அரியநூலின் முதற்றொகுதியில்* யாதவரைப்பற்றி எழுதப் பட்டிருப்பதாவது:-“கண்ணனைத் தலைமையாகக்கொண்ட யாதவர்கள் (வட) மதுரையைவிட்டு நீங்கிக் கூர்ச்சரத்துள்ள துவாரகையிற் குடியேறினார்கள். அங்கே அவர்கள் அதிககாலம் தங்கவில்லை. அவர்கள் தங்கட்குள்ளே பெருங்கலகம் விளைக்க, (அவருட்பலர்) துவாரகையை நீங்கிக் கடல்வழியே பிரயாணித்தனர். அங்ஙனம் பிரயாணித்தவர்கள் தென்னிந்தியாவை அடைந்து ஆங்குப் புதுராஜ்யம் ஸ்தாபித்ததாக நம்பப்படுகிறது” என்பதே. இவ்வாறு தத்தரவர்கள் எழுதுவது நச்சினார்க்கினியர் எழுதிய வேளிர் வரலாற்றோடு சில அமிசங்களில் ஒத்திருக்கின்றமை காணலாம். “வேளிர் யாதவரே” எனக்கண்டு தமிழறிஞர் ஆங்கிலத்தில் வியாசமெழுத, அதனை நோக்கி “யாதவர் தென்னிந்தியாவில் ராஜ்யம் ஸ்தாபித்ததாக நம்பப்படுகின்றது”

புராஜெக்ட் மதுரை இணையதளத்தின் கீழ்க்கண்ட சுட்டியில் “வேளிர் வரலாறு” புத்தகம் இருக்கிறது,

http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0413.html

அன்புடன்,
நரேந்திரன்.

அன்புள்ள நரேந்திரன்,

வரலாற்றை எழுதுவதற்கான விதிகள் என நான் எழுதிய அக்கட்டுரையைச் சொல்லலாம். வரலாற்றெழுத்தை வாசிப்பதற்கான விதிகள் என சிலவற்றை இந்த விவாதம் மூலம் உருவாக்கிக்கொள்ள முடியும்.


1. வரலாற்றெழுத்தை ஒருபோதும் அவை எழுதப்பட்ட காலகட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் வாசிக்கக் கூடாது

மு.இராகவையங்கார் போன்றவர்கள் வரலாற்றை எழுதிய காலகட்டம் என்பது இப்போது கிட்டத்தட்ட முக்கால்நூற்றாண்டுக்கு முந்தையது. அன்றைய வரலாற்றாய்வின் எல்லைகளைத் தீர்மானித்த மூன்று கூறுகள் உண்டு .அ. குறைவான தொல்லியல் சான்றுகள். ஆ. அனைத்து தகவல்களையும் ஒட்டுமொத்தமாகப் பெறமுடியாமை இ. அரசியல், பொருளியல், சமூகவியல், மானுடவியல் போன்ற பிறதுறைகளையும் இணைத்து வரலாற்றைப் பார்க்கும் பார்வை இல்லாமை.

இராகவையங்காரின் காலகட்டத்தில்தான் கல்வெட்டுகள் ஒவ்வொன்றாக படியெடுக்கப்பட்டு பிரசுரமாயின. தொல்லியல் செய்திகள் வெளிவரத்தொடங்கின. உடனடியாக அவற்றை கையிலிருக்கும் இலக்கியச்சான்றுகளுடன் ஒப்பிட்டு ஊகங்களை உருவாக்கும் வேகம் அன்று அதிகமாக இருந்தது.

அவ்வாறு பல திசைகளில் பல வகைகளில் வீசப்பட்ட ஊகங்களில் பல பொய்யாயின, சில உண்மையென்று நிறுவப்பட்டன. ஆனால் எல்லா ஊகங்களும் சிந்தனைக்கான வாயில்களைத் திறந்தன. அந்தகாலகட்டத்தில் இருந்து பிரித்து தனியாக அந்த ஊகங்களைப் பார்க்கக் கூடாது

அதன்பின் ஏராளமான தொல்லியல் தரவுகள் வெளிவந்துள்ளன. பல வகையான பாடங்கள் வெளிவந்தன. அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டபின்னரே அந்த ஊகங்களை இன்று பரிசீலிக்கவேண்டும்.

இன்றைய வரலாற்றாய்வு என்பது பல்வேறு அறிவுத்துறைகளின் ஆய்வுமுறைமைகளைக் கருத்தில் கொண்டு ஊகங்களை பரிசீலிப்பதாகும். ராகவையங்காருக்கு பொருளியல், சமூகவியல் சார்ந்த புரிதல்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியவரலாற்றாய்வே டி.டி.கோசாம்பிக்குப்பின் ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. ஓர் ஊகம் அதற்கான பொருளியல் பின்னணியில், நிலவியல் பின்னணியில்,சமூகவியல் பின்னணியில்தான் ஆராயப்படவேண்டும். அந்த முடிவு அந்த தளங்களிலும் செல்லுபடியாகவேண்டும்.

இந்தியவரலாற்றில் கங்கைசமவெளி, கிருஷ்ணா கோதாவரி சமவெளி இரண்டிலும் ஒரு ‘ மக்கள்தொகை வெடிப்பு’ உருவாகி பிற நிலங்களுக்கு கூட்டம்கூட்டமாக மக்கள் குடியேறியிருக்கிறார்கள். இக்குடியேற்ற வரலாறே இந்திய வரலாறு என்றுகூடச் சொல்லலாம்

தமிழகத்தில் சங்ககாலத்தின் மக்கள்தொகை சில லட்சங்கள் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து கிருஷ்ணா- கோதாவரிப் படுகையில் இருந்து மக்கள் இங்கே வந்தபடியே இருந்தார்கள். அவர்களுக்கும் இங்கிருந்தவர்களுக்குமான முரண்பாடே தமிழகத்தில் சங்ககாலம் முதல் இன்றுவரை தொடர்ந்து இருந்து வரும் அரசியல் பிரச்சினை.

இந்தமக்கள் சங்ககாலத்தில் வடுகர் எனப்பட்டனர். வடுகருக்கும் தமிழருக்குமான போராட்டத்தையே சங்கநூல்கள் பெரும்பாலும் முன்வைக்கின்றன. பின்னர் களப்பிரர், அவர்களும் வடுகரே. பின்னர் பிற்காலச் சோழர்கள். அவர்கள் வடுக நாட்டில் தாய்வழி உறவுகொண்டவர்கள். பின்னர் ஹொய்சாளர் என்னும் வடுகர். பின்னர் இஸ்லாமிய படையெடுப்பு. பின்னர் மீண்டும் வடுகர் – அதாவது நாயக்கர்கள். இதுதான் தமிழக வரலாறு

இந்த நிரந்தர முரண்பாடு வெற்றிகரமாக வரதராஜுலு நாயுடு மற்றும் ஈவேரா நாயக்கர் என்னும் வடுகர்களால் தமிழர் X பிராமணர் என்னும் முரண்பாடாக மாற்றப்பட்டதுதான் தமிழக அரசியல். அதற்காக உருவாக்கப்பட்ட வரலாற்று அடிப்படை அற்ற பொய்யான அரசியல் கோஷமே திராவிட ஆரிய முரண்பாடு.

ஆரம்பகால வரலாற்றாசிரியர்கள் மேலே சொல்லப்பட்ட ஆரிய- திராவிட முரண்பாடு, வடவர் ஆதிக்கம், வடக்கிருந்து குடியேறுதல் போன்ற வாய்ப்பாடுகளை எளிய முறையில் சொல்லிக்கொண்டே இருப்பதைக் காணலாம்.

மேலே குறிப்பிட்ட வரலாற்றுச்சித்திரத்தை வைத்துப்பார்த்தால் இன்றுள்ள தமிழ்மக்களில் 70 சதவீதம் பேரும் சங்ககாலத்திற்குப்பின்னர் பல காலகட்டங்களிலாக இங்கே குடியேறி வந்தவர்களே.

அவர்களில் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப்பின் குடியேறியவர்கள் மட்டுமே தங்கள் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாயிரம் வருட காலநீட்சியில் பலரது வரலாறு தொன்மங்களாகக் குறுகி உருவழிந்திருக்கவே வாய்ப்பதிகம்.

அந்தத் தொன்மங்களைக்கொண்டு அவர்களின் குடியேற்ற வரலாற்றை ஊகிப்பதும் சரி, முடிவுகளை நோக்கிச்செல்வதும் சரி, பிழையாகவே முடியும்

பொதுவாக வேளாண்சாதிகள் மேய்ச்சல் சாதிகளில் இருந்து உருவாகும் என்று சொல்லப்படுவதுண்டு. சமீபகால உதாரணம் ஆந்திர மேய்ச்சல்சாதியான கம்மாக்கள் வேளாண்சாதியாக உருவெடுத்தது. நீர்வசதி கொண்ட நிலத்தை கண்டடையும்போது, பாசனவசதி மேம்படும்போது மேய்ச்சல்நில மக்கள் விவசாயிகளாக ஆகிறார்கள்

ஆகவே வேளாளர்களில் ஒரு சாரார் தங்களை யாதவர்களாக முன்வைக்கும் தொன்மம் கொண்டிருக்கலாம். மேய்ச்சல் குலங்கள் அனைத்துமே கிருஷ்ணனுடனும், துவாரகையுடனும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதும் இந்திய வழக்கம்.

ராகவையங்காரின் ஊகங்களை இந்த விரிந்த பின்புலத்திலேயே பார்க்கவேண்டும். அவர் எழுதிய காலகட்டத்தில் அது ஒரு புதிய ஊகம், படைப்பூக்கம் கொண்ட ஊகம். இன்று அது ஒரு பழைய ஊகம் மட்டுமே.

2. வரலாற்றெழுத்தை துண்டுதுண்டாக வாசிக்கக் கூடாது. முழுமையாகவே அணுகவேண்டும்

சாதாரண வாசகர்கள் மட்டும் அல்ல, முனைவர் பட்ட ஆய்வேடுகளை எழுதுபவர்கள் கூட வரலாற்றை துண்டுகளாக எடுத்து விவாதிப்பதைப் பார்க்கலாம். ஒரு கட்டுரையில் ஒரு கருத்தை பார்க்கையில் அவ்வாசிரியரின் ஒட்டுமொத்த வரலாற்று நோக்கில் வைத்து மட்டுமே அதை விளங்கிக்கொள்ளவேண்டும். அந்த ஆசிரியரை அவர் எழுதிய காலகட்டத்து மொத்த விவாதச்சூழலின் பகுதியாகக் கண்டு புரிந்துகொள்ளவேண்டும். அந்த விஷயத்தில் பிற அறிஞர்கள் சொன்னதையும் கருத்தில் கொண்டு விரிவாக்கம் செய்யவேண்டும்

ராகவையங்காரின் கூற்றையே எடுத்துக்கொள்வோம். வேளாளர் என்ற சாதி சங்ககாலகட்டத்தில் வேளிர் என்று சொல்லப்பட்ட சிறுநில உடைமையாளர்களின் நீட்சி என ஒரு தரப்பு ராகவையங்கார் காலத்திலேயே உண்டு.

பிற்காலச் சோழர் காலகட்டத்தில் தமிழக வேளாண்நிலப்பரப்பு பலமடங்கு அதிகரித்தபோது நிலவரி வசூலை நிகழ்த்தும் பொருட்டு சோழர்களால் உருவாக்கப்பட்ட சாதியே வேளாளர் என்ற தரப்பு உண்டு. முந்தைய நிலவுடைமையாளர்களில் இருந்து இவர்கள் உருவாக்கப்பட்டனர். கூடவே பல்வேறு போர்ச்சாதிகளும் நிலத்தைக் கைப்பற்றி காலப்போக்கில் வேளாளர்களாக ஆனார்கள்.

நிலம் பெருகப்பெருக வேளாளச்சாதி விரிவாகிக்கொண்டே இருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில்கூட பிற சாதியில் இருந்து வேளாளர்களாக ஆனவர்களை சமூகவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உம். கைக்கோள வேளாளர். ஆகவேதான் வேளாளச் சாதிகளில் இத்தனை பிரிவுகள்

இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபடும் விரிவான ஆய்வை எஸ்.ராமச்சந்திரன் எழுதியிருக்கிறார். [வேளாளர் யார்? எஸ்.ராமச்சந்திரன்]

இத்தரப்புகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கருத்தில்கொண்டு ராகவையங்கார் சொன்னதை நாம் பரிசீலிக்கவேண்டும். ராகவையங்காரே சொல்லிவிட்டார் என்ற வகை எண்ணங்களுக்கு வரலாற்றில் இடமில்லை

3 வரலாற்றெழுத்தில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது முடிவுகளை அல்ல, அந்த தர்க்கவழிமுறையை மட்டுமே.

ராகவையங்கார் இப்படிச் சொல்கிறார் என்ற முடிவுக்கு வாசகனைப்பொறுத்தவரை பெரிய முக்கியத்துவம் இல்லை. அவர் ஏன் அந்த முடிவுக்குச் செல்கிறார், அதற்கு என்ன தர்க்கத்தை முன்வைக்கிறார் என்பதுதான் முக்கியமானது

ஒருசில தொன்மங்கள் யாதவர்களே வேளாளர் என்று சொல்கின்றன என்பதுதான் ராகைவையங்காரின் வாதம். அது இன்று பெரிய முக்கியத்துவம் உள்ளது அல்ல. ஏனென்றால் சமூகவியல், பொருளியல் விளக்கம் தேவை

இந்தியப்பெருநிலம் பேரரசுகள் உருவாகி பெரிய பாசனத்திட்டங்கள் வருவது வரை பெரும்பாலும் பேய்ச்சல் நிலமே. ஆகவே இங்கே மேய்ச்சல்நில மக்களே அதிகம் இருந்திருப்பார்கள். மகாபாரதமே மேய்ச்சல்நில மக்களுக்கும் ஷத்ரியர்களுக்குமான முரண்பாட்டின் கதைதான்

புதியநிலம்தேடி மேய்ச்சல் நிலமக்கள் இடம்பெயர்ந்தபடியே இருந்திருக்கலாம். ஆந்திராவில் துங்கபத்ரா நதிக்கரையில்கூட யாதவப்பேரரசு இருந்திருக்கிறது. [ஆனைக்குந்தி] ஆகவே தமிழகத்திலும் அவர்களின் குடியேற்றம் இருந்திருக்கலாம். இப்படி வரலாற்றுக்கு ஒரு தர்க்கமுறை ஆசிரியரால் அளிக்கப்படுமென்றால் அதை மட்டுமே நாம் கொள்ளவேண்டும். அதை பரிசீலிக்கவேண்டும், விரித்தெடுக்கவேண்டும்

4. வரலாற்றெழுத்தின் ஒரு முடிவில், அல்லது கண்டுபிடிப்பில் ஒருபோது உற்சாகம் கொள்வதோ நிறைவடைவதோ கூடாது. அது நமக்குச் சாதகமானதாக இருந்தாலும் சரி, நாமே உருவாக்கினதாக இருந்தாலும் சரி

ஜெ

முந்தைய கட்டுரைதமிழறிஞர்கள் எங்கே?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22