அன்புள்ள ஜெயமோகன்,
தாங்களும் தங்கள் குடும்பமும் நலமா? தங்களுடன் தொடர்பு கொண்டு வெகுநாட்கள் ஆகிவிட்டன.
“எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?” என்ற தலைப்பில் நண்பர் அருண் மொழி வர்மன் அவர்களுக்குத் தாங்கள் கொடுத்த ஆலோசனைகள் மிகவும் சிறப்பாக இருந்தன. நல்ல ஆலோசனைகளை முன்வைத்துள்ளீர்கள். அது தொடர்பாக ஒரு சந்தேகம்.
(இணையத்தில் காணும்) “எதிர்வினைகளைப் புறக்கணியுங்கள்” என்று ஆலோசனை கூறியுள்ளீர்கள். ஆராய்ந்து செய்யப்பட்ட எதிர்வினைகளைக்கூடப் புறக்கணிக்க முடியுமா? அப்படிப் புறக்கணித்தால் அது அந்த எழுத்தாளருக்கு அவப்பெயர் இல்லையா?
தாங்களே தரமுள்ள எதிர்வினைகளுக்குப் பொறுமையாக, விவரமாக மறுபடி கொடுக்கிறீர்கள். சில சமயங்களில் எதிர்வினைகளின் நியாயங்களையும் ஒப்புக்கொள்ளவும் செய்கிறீர்கள் அல்லவா? தரமுள்ள எதிவினைகள் சிலசமயம் தங்கள் இணையத்தில் விமர்சகர் இடாமல் போகலாம். அப்படிப்பட்ட ஒரு தருணத்திற்கு தங்கள் ஆலோசனை என்ன என்று தயவு செய்து கூற முடியுமா?
உங்கள் ஒரு இடுகை நல்லசந்தர்ப்பமாக அமைந்ததால் இந்த சந்தேகத்தை முன் வைக்கிறேன்.
தாங்கள் இதை ஒரு பொது சந்தேகமாகவே பொருட்படுத்த வேண்டுமென்று கேட்டுக்க் கொள்ளுகிறேன். நன்றி.
அன்புடன் ராகவன் ராமன்.
அன்புள்ள ராகவன் ராமன்,
எதிர்வினைகளை முழுமையாகப் புறக்கணியுங்கள் என்றல்ல நான் சொல்ல வருவது. ஃபேஸ்புக் பாணி எதிர்வினைகளுக்கு மதிப்பில்லை என்றே
இருவகையில். ஒன்று அவற்றில் பெரும்பகுதி பொய்யான அடையாளங்கள் கொண்டவை. அவற்றுடன் விவாதிப்பது முகமூடியுடன் விவாதிப்பதுபோல. உங்களுக்கு யாரென்றே தெரியாத ஒருவர் ஒரு முகமூடியை போட்டுக்கொண்டு வந்து முன்னால் அமர்ந்தால் எப்படி உரையாடுவீர்கள்?
தன் கருத்துக்களுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளாத ஒருவரின் கருத்துக்களுக்கு என்னதான் அர்த்தம்? நானறிந்த ஒரு நண்பர் சொன்னார். அவர் அதிதீவிர இந்துத்துவராக இரு அடையாளங்களும் அதிதீவிர மார்க்ஸியராக இரு அடையாளங்களும் வைத்திருக்கிறார். ஒரே எழுத்தாளரிடம் இரு அடையாளங்களையும் கொண்டு மாறி மாறிப்பேசுவார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்றேன். என் வாதத்திறமையை வளர்க்க என்றார். பரீக்ஷா ஞாநி அவரிடம் பலகாலம் மாறிமாறி சண்டை போட்டிருக்கிறார். என்ன ஒரு வீண் உழைப்பு இல்லையா?
உண்மையான அடையாளத்துடன் வந்தாலும் ஃபேஸ்புக் விரிவான பொறுப்பான விவாதங்களுக்கு இடமளிப்பதில்லை. ஒற்றைப்பத்தி எதிர்வினைகள்தான். அவையும் உடனடியாக, எந்தச்சிந்தனையும் இல்லாமல் அளிக்கப்படுபவை. ஆகவே உணர்ச்சிகரமானவை. சீண்டக்கூடியவை. அவற்றை பொருட்படுத்தினால் நம் விவாதமும் அப்படியே ஆகிவிடும்
நான் எதிர்வினையாற்றுவது எனக்கு மின்னஞ்சலில் வரும் எதிர்வினைகளுடன்தான். சொந்த அடையாளத்துடன் தன் தரப்பை பொறுப்பாக ஒரு மின்னஞ்சலாகக் கூட எழுத முடியாதவர் இன்னும் அறிவியக்கத்துக்குள்ளேயே வரவில்லை. அவரிடம் விவாதிப்பதே முட்டாள்தனம். அவரது கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.
மின்னஞ்சல் எதிர்வினைகளில்கூட சம்பந்தப்பட்டவர் எனக்கு தெரிந்திருக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. பெரும்பாலும் அவரைப்பற்றி விரிவாக விசாரித்தபின்னரே எதிர்வினையாற்றுவேன். கூடுமானவரை போலி மின்னஞ்சல்களை தவிர்ப்பேன். சிலசமயம் தொலைபேசியிலும் அழைப்பதுண்டு. இது எனக்கு முக்கியம்.
நான் ஏற்கனவே சொன்னதுபோல இணையம் என்பது சுதந்திர வெளி. சுதந்திரம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியது. பலவிதமான உளச்சிக்கல்கள் கொண்டவர்கள் இதை ஒரு வடிகாலாகப் பயன்படுத்துகிறார்கள். சொல்லப்போனால் இலக்கியத்தைப் பொறுத்தவரை இது பெரும்பாலும் தோற்றுப்போன,எழுதமுடியாத எழுத்தாளர்களின் உளச்சிக்கல்களுக்கான கூட்டுசிகிழ்ச்சைக் களமாகவே உள்ளது.
அவர்களின் கசப்புகள், நக்கல்கள், வசைகள், புலம்பல்கள், அசட்டுப்பாவலாக்கள் என இங்கே ஒரு சாக்கடை கொட்டிக்கொண்டிருக்கின்றது. அதை நல்ல வாசகனோ எழுத்தாளனோ இம்மியும் பொருட்படுத்தலாகாது. அந்த வெளிப்பாடு வழியாக இணையவெளி அவர்களை சற்று ஆறுதல்படுத்தும் என்றால் அது நல்லதே என்றுதான் சொல்வேன். அதெல்லாம் எதிர்வினைக்குரிய தரப்புகளே அல்ல
எஞ்சிய எதிர்வினைக்குரிய தரப்புகள் கொஞ்சம்தான். அவை பலவகை. பல கோணங்கள். அவை அனைத்தையும் கவனிக்கவும் முடிந்தால் , தேவை என்றால் எதிர்வினையாற்றவும்தான் நான் முயன்று வருகிறேன். இணையவெளியில் என்னளவு இத்தனை விரிவாக எதிர்வினையாற்றுபவர்கள் வேறு எவர் உள்ளனர்?
எதிர்வினை என்பதற்கும் அப்பால், விவாதம் என்று செல்லவேண்டுமென்றால் சில நிபந்தனைகளை நான் வைத்திருக்கிறேன். இந்த விதிகள் நம் நியாய மரபில் ஈராயிரம் வருடம் முன்னரே இருந்தவைதான்.
1. என்னுடன் விவாதம் செய்பவர் என் மீது அடிப்படை மரியாதை உடையவராக இருக்க வேண்டும். என்னை அயோக்கியன் என்றோ முட்டாள் என்றோ சொல்லும் ஒருவரிடம் என்ன விவாதிப்பது? நான் அயோக்கியன் அல்ல முட்டாள் அல்ல என்றுதான் அவ்விவாதம் அமையும். அது விவாதித்து நிறுவப்படவேண்டிய ஒன்றாக நான் நினைக்கவில்லை
2. எனக்கு நான் விவாதிப்பவரிடம் மரியாதை இருக்கவேண்டும். அவரது கல்வி, நுண்ணுணர்வு, நேர்மை மீதான நம்பிக்கை இருக்கவேண்டும். ஒருவரிடம் நான் விவாதிக்கிறேன் என்றாலே அவரை நான் எனக்கு நிகரானவராகவோ அல்லது என்னை விட மேலானவராகவோ நினைக்கிறேன் என்றுதான் பொருள். மட்டம்தட்டுவதற்கான விவாதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை
3. விவாதம் விவாதப்பொருள் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டும், தனிமனிதர்களைச் சார்ந்ததாக அல்ல.
4 விவாதத்திற்கு ஒரு பொதுமுறைமை இருக்கவேண்டும். ஒன்றை நிரூபிப்பதற்கு கையாளும் வழி முறை இருதரப்புக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.
5 விவாத மொழியில் அந்த தர்க்கத்தன்மை இருக்கவேண்டும். வெற்று உணர்ச்சிகள் அல்லது உணர்ச்சிப்பாவனைகளுடன் விவாதிக்கமுடியாது
5 நல்ல விவாதமென்பது விவாதிக்கும் இருதரப்புக்கும் நலமளிக்கவேண்டும். கவனிப்பவர்களுக்கு பயனளிக்கவேண்டும்
அத்தகைய எதிர்விவாதத் தரப்பு மிக அரிதாகவே அமையும். அதற்காகக் காத்திருக்கவேண்டியதுதான்.
ஜெ