சாலமோனின் நீதிமொழிகள்தான் குறளில் உள்ளன என்று http://xavi.wordpress.com/
**
அன்புள்ள …
உங்கள் கடிதம்.
நீங்கள் சொன்ன கட்டுரையை படித்தேன்.
பொதுவாக உலகமெங்கும் நீதிநூல்களுக்குள் பொதுமை காணப்படுகிறது. ஏனென்றால் குடிமைநீதி என்பது வேறு வேறல்ல. மானுடகுலம் முழுக்க கிட்டத்தட்ட அது ஒன்றே. தங்கள் நூல்களில் மட்டுமெ நீதி இருக்கமுடியும், நீதி என்பதே தங்களிடம் மட்டும்தான் உள்ளது என்று நம்பாதவர்கள் எல்லா நீதிநூல்களிலும் அடிபப்டை நீதியை கண்டுகொள்ளலாம்.மெசபடோமிய களிமண் கட்டளைகளுக்கும் குறளுக்கும் உள்ள ஒப்புமை கூட தமிழில் எழுதப்பட்டுள்ளது. மெசபடோமிய நீதியின் நீட்சியே சாலமோன்.
அதேபோல கன்பூஷியஸின் சிந்தனைகளுக்கும் குறளுக்கும் சமானத்தன்மை நிறையவே உண்டு. இவ்வாறு உலகத்து நீதிநூல்களில் எல்லாம் பொதுத்தன்மை உண்டு. பிளேட்டோ சிந்தனைகளுக்கும் குறளுக்கும் சாம்யங்களைக் காணலாம். உலகம் முழுக்க உள்ள பழமொழிகளில் பொதுவானவையே அதிகம். உலகம் முழுக்க உள்ள ஐதீகங்களில் பொதுத்தன்மைகள் அதிகம். பிற உலக தொடர்பே இல்லாத பழங்குடிகளுக்கு இடையேகூட இந்த பொதுத்தன்மைகள் உள்ளன.
இந்த ஒப்புமைகள் அவை ஒன்றில் இருந்து பிறிது பெற்றுக்கொண்டது என்பதற்கான ஆதாரம் அல்ல. அவை நிற்கும் உச்சம் ஒன்றே என்பதற்கான ஆதாரங்கள் மட்டுமே. ஒரு நூல் இன்னொன்றைச் சார்ந்தது என்பதற்கு பொதுவான கருத்துக்களை ஊகித்து வாசிக்க முடிகிறது என்பது ஒரு ஆதாரமே அல்ல. திட்டவட்டமாகவே காணப்படும் பொதுவான சொல்லமைப்புகள், பொதுவான உவமைகள், பொதுவான கட்டமைப்புகள் ஆகியவை தேவை.
குறளின் அமைப்பில் இந்து தொல்மரபுசார்ந்த நீதிகளான யம ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி ஆகியவற்றின் நேரடியான செல்வாக்கு உண்டு. சதுர்வித புருஷார்த்தம் [தர்ம, அர்த்த, காம, மோட்சம்] என்ற கருதுகோள் அவற்றில் இருந்து பெறப்பட்டதே. அவையே அப்படியே அறம்பொருளின்பமாக உள்ளது. ஆனால் வீடுபேறை முழுமையாகவே விட்டுவிட்டது குறள்.
அதைவிட ஜைனசூத்ரங்களின் நேரடியான மொழியக்கம் என்று சொல்லத்தக்க வரிகள் குறளில் மிக அதிகம். குறளில் உள்ள பல புராண குறிப்புகளை ஜைனபுராணங்களில்தான் தேடமுடியும். ஆகவே குறளின் நேரடி முன்னோடிநூல் ஜைன சூத்ரங்கள்தான். இவற்றை நான் ஆழ்ந்து பலவருடம் கற்றுள்ளேன். ஆகவே என்னால் உறுதியாகவே சொல்ல இயலும்.என்றாவது ஒரு விரிவான தனிநூலாகவே எழுதுவேன்.,
ஆனால் குறள் ஒருபோதும் வழிநூல் அல்ல. நீதி என்பது காற்றில் விளையும் கனி அல்ல. அது வழிவழி வந்த நீதிகளின் வளர்ச்சிநிலையே. ஆகவே குறளும் முன்னோடிநீதிநூல்களில் இருந்து பிறந்ததுதான். ஆனால் அந்நீதியை வாழ்க்கையில் வைத்து விளக்குவதற்காக குறள் கடைப்பிடிக்கும் கவித்துவமும் தியானவிவேகமும் இணைகலந்த மகத்தான அணுகுகுறை மிகமிக தனித்தன்மை கொண்டது. அதை ‘குறள்நீதி’ என்ற தனித் தரிசனமாகவே சொல்லத்தக்கது.
குறளை ஒப்பாய்வு செய்வது சிறந்த விஷயம். அது குறளையும் உலக நீதிநூல்மர¨ப்பம் உய்த்தறிவதற்கான வழிமுறையாக இருக்க வேண்டும். நம்முடைய மதத்தில் குறளைக் கொண்டுசென்று கட்டும் முயற்சியாக இருக்கலாகாது. குறள் எதன் வழிநூல் என்றவகையான ஆராய்ச்சியே அடிப்படையில் குறளை நிராகரிக்கும் நோக்கம்கொண்டது. தமிழர் ஒருபோதும் தாங்களாகவே சிந்திக்க இயலாது, கடன் மட்டுமே கொள்ள முடியும் என்ற எண்ணத்தின் விளைவு அது.
குறளை ஒருநாளும் சாலமோன் நீதிகளில் இருந்து பெறப்பட்டது என்று நான் எண்ணவில்லை. நான் இரு நூல்களையும் தொடர்ந்து கற்றுள்ளேன். பைபிள் எனக்கும் ஒரு வழிகாட்டி நூலே. சாலமோன் நீதிகள் புராதனமான நீதியுணர்வை மட்டுமே காட்டுகின்றன. அவை அரச நீதிகள். கண்டிப்பாக அவை மானுடத்தின் சொத்துக்களே.
ஆனால் குறள் அதைவிட இன்னொரு கோணத்தில் பலமடங்கு ஆழமும் நுட்பமும் மிக்க ஆக்கம் என்பதை நான் உறுதியாகவே சொல்ல முடியும். அது அழகியல் மொழியில் சொல்லப்பட்ட ஒரு நீதிநூலும் மெய்ஞானநூலும் ஆகும்.