கிணறு

பத்மநாபபுரத்தில் நான் தெற்குத்தெருவில் குடியிருந்தேன். 1997 முதல் 2000 வரை. அரண்மனையின் பெரிய உப்பரிகையில் நின்றால் தெற்குத்தெரு தெரியும். அகலமான கம்பீரமான தெரு அது. அதில் ஒரு ஓய்வுபெற்ற காவலதிகாரியின் பாரம்பரியமான வீடு. 1912 ல் அவரது அம்மாவன் கட்டியது. அவர் தென் திருவிதாங்கூர் நாயர் பிரிகேடில் ஒரு காவலராக இருந்தார்.

பழைமையான ஆனால் உறுதியான வீடு. அக்காலக் கணக்கில் பங்களா. அகலமான கூடம். உள்கூடம். சாப்பிடும் அறையும் கூடமே. சிறியதோர் பக்கவாட்டு அறையை நான் என் வாசிப்பறையாக வைத்துக்கொண்டேன். குளிர்ச்சியாக சிமிண்ட் போடப்பட்ட தரை. வீட்டைச்சுற்றி தென்னைமரங்கள் அடர்ந்திருந்தமையால் எப்போதும் காற்று. ஓட்டுக்கூரை, கீழே தேக்குமர சீலிங் போடப்பட்டு மிக உயரமாக இருந்ததனால் வெயிலே தெரியாது. பெரிய சன்னல்கள். நான் விரும்பிய வீடுகளில் ஒன்று.

அந்த வீட்டுக்கு தெற்குபக்கமாக என் வீட்டு வளைப்புக்குள்ளேயே குலதெய்வக்கோயில் ஒன்று உண்டு. ஓட்டுக்கூரை போடப்பட்டது. மேலாங்கோட்டு அம்மன். அவள்தான் எனக்கும் குலதெய்வம். பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும் கருவறைக்குள்  சுவரோவியமாக எழுந்தருளியிருந்தாள். அந்த கோயில்முன்னால் அகலமான கரிய சிமிண்ட் திண்ணை உண்டு. அமர்ந்து வாசிக்க படிக்க மிக இனிய இடம். சுற்றிலும் பூச்செடிகள். அரளி, மந்தாரை, சங்குபுஷ்பம், செம்பருத்தி… சி.மோகன்  அந்த வீட்டுக்குள் நுழைந்ததுமே ”என்ன பெரும் சொத்தெல்லாம் வச்சிருக்கீங்க… ராஜா மாதிரி வாழறீங்க!” என்றார்.

வீட்டுக்கு வந்த அத்தனை பேருமே அந்த வீட்டை புகழ்ந்திருக்கிறார்கள். அந்த கோயில் திண்ணையின் குளிர்ச்சியில் படுத்துக்கொண்டு நானும் பிரேமும் ரமேஷும் நிறைய உரையாடியிருக்கிறோம். பாவண்ணன் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்திருக்கிறார்.  தேவதேவன் பலமுறை வந்திருக்கிறார். நாஞ்சில்நாடன், சூத்ரதாரி,  வேதசகாயகுமார், யூமா வாசுகி தியடோர் பாஸ்கரன் அ.கா.பெருமாள், க.பூரணசந்திரன் எல்லாரும் அங்கே வந்திருக்கிறார்கள்.

பதமநாபபுரம் திருவிதாங்கூர் மன்னர்களின் பழைய தலைநகரம். எந்தக்கோடையையும் தாக்குப்பிடிக்கும் வாய்ப்பான இடத்தில்தான் ஊரை அமைத்திருந்தார்கள். இயற்கையான ஊற்றுகளால் அங்குள்ள குளங்களும் ஏராளமான நீராழிகளும் எப்போதும் நிறைந்து வழிந்துகொண்டிருக்கும். வேளிமலையின் மாபெரும் சுவர் அதன் ஒரு பக்கத்தை முற்றாக சூழ்ந்திருக்கும். முற்றத்துக்கு வந்தாலே மௌனமாக ஓங்கிய மலைச்சிகரங்களைக் காணமுடியும்.

கோட்டைசூழ்ந்த பத்மநாபபுரம் ஒரு அழகிய ஊர். சுற்றுலாப்பயணிகள் வந்து குழுமும் அரண்மனை முற்றம் தவிர்த்தால் எப்போதுமே அமைதியில் மூழ்கிக் கிடக்கும். அகலமான பெரிய தெருக்கள் தினமும் கூட்டப்பட்டு அதிசுத்தமானவை. தோட்டம் சூழ்ந்த பெரிய ஓட்டு வீடுகள். மூன்று பெரிய கோயில்களும் இரு பெரிய குளங்களும் உண்டு. ஊரெங்கும் சின்னச் சின்னக்கோயில்கள். அவற்றுக்குள் மாபெரும் ஆலமரங்கள். ஊரே மரங்கள் அடர்ந்து பச்சை மூடியிருக்கும். வேளிமலையின் மடிப்பில் இருப்பதனால் தென்றல் ஓடிக்கொண்டிருக்கும். அந்த வீட்டில் நான் மின்விசிறியை போட்டதேயில்லை.

அங்கு குடிநீருக்கு கிணறுதான். நல்ல ஆழமான கிணறு. ஆனால் நான்கு கை ஆழத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும். தினமும் தண்ணீர் இறைப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. செடிகளுக்கு தேவையில்லை என்றாலும் தண்ணீர் இறைத்து விடுவேன். பெரிய பித்தளை உருளி ஒன்று இருந்தது. அதற்குள் அன்று ஒருவயதான குட்டிச் சைதன்யாவை அமரச்செய்து நீர் இறைத்து விட்டு உட்கார வைத்தால் நிம்மதியாக வேறு வேலை பார்க்கலாம். ‘னன்னி’ என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். ‘நன்னிக்குள்ர கையி’ என்ற விளையாட்டு அவளுக்கு வாடிக்கை.

கிணற்றடிதான் குளியல். சுற்றுமதிலுக்குள் கொல்லைப்பக்கம் தனியாக இன்னொரு மதில்சூழ்கை. அதற்குள் கிணறு தனிச் சுவர்சூழ்கை. அது ஒரு திறந்த குளியலறை. தண்ணீரை இறைத்து ஊற்றிக்கொண்டே இருக்கலாம். நண்பர்கள் வந்தால் அனேகமாக குளத்துக்குத்தான் கூட்டிச்செல்வேன். மழையில் குளத்தில் குளிக்க முடியாது. அப்போது கிணற்று நீர்தான், இளஞ்சூடாக இருக்கும் அது. அவர்களுக்காக  கிணற்று நீரை இறைத்து நிறைத்து வைப்பேன்.

நீர் இறைப்பது ஓர் உற்சாகமான உடற்பயிற்சியாக இருந்தது. 1998ல் வசந்தகுமார் வீட்டுக்கு வந்திருந்தார். ‘பின் தொடரும் நிழலின் குரல்’ எழுதி அதன் செப்பனிடல் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அவருக்காக நான் நீர் நிறைக்கும்போது  இந்த புகைபப்டத்தை எடுத்தார். இதில் நான் ஆழ்ந்த கவனத்துடன் நீர் இறைப்பது தெரிகிறது. நீர் ஒளியுடன் சரிந்து விழுவதில் மனம் ஈடுபட்டிருக்கிறது.

சென்றகாலங்களை ஆழமான ஊற்று அறாத ஒரு கிணற்றில் இருந்து ஒளியுடன் இறைத்து ஊற்றிக்கொண்டே இருக்கிறோம்.

மறுபிரசுரம். முதற்பிரசுரம் Jan 31, 2010

முந்தைய கட்டுரைகொற்றவை -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89